இன்று ஒன்று நன்று : அராத்து

மோட்டார் விகடன் பத்திரிகையில் அராத்து ஒரு தொடர் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  அதே பத்திரிகையின் இன்று ஒன்று நன்று என்ற தொலைபேசிப் பேச்சு பகுதியில் அராத்து செப்டம்பர் மாதம் முழுவதும் தினமும் பேசுகிறார்.  044-66802916 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் அவர் பேச்சைக் கேட்கலாம்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பேசுகிறார்.  எழுத்தில் தான் வளைத்துக் கட்டி அடிக்கிறார் என்றால் பேச்சிலுமா என்று நினைத்துக் கொண்டேன்.  நானெல்லாம் பேச்சில் ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி.  எல்லாப் புகழும் இறைவனுக்கே ரகம்.

சில பேர் யாருமே படிக்க முடியாத கவிதைகளை எழுதி எனக்கு அனுப்பி வைத்து அது பற்றி கருத்து வேறு கேட்பார்கள்.  ஆனால் அராத்து அப்படி அல்ல.  இந்த விஷயத்தை அவர் என்னிடம் சொல்லவே இல்லை.  போன் செய்த போது ஆறு மணி நேரம் கழித்துக் கூப்பிட்டார்.  என்ன ஆச்சு என்று கேட்டதற்கு ரெகார்டிங் விஷயத்தைச் சொன்னார்.  ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை என்று கேட்டேன்.  இதையெல்லாமா போய் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்றார்.  இந்த அடக்கம் ஏன் எனக்கு இல்லை என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.