இமயமலைப் பயணக் குறிப்புகள் : அன்பு

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த கணேஷ் அன்பு இமயமலைப் பயணக் குறிப்புகளை எழுதத் துவங்கி விட்டார்.  எக்ஸைல் வேலையில் நான் மூழ்கிக் கிடப்பதால் அதை எழுத முடியாமல் இருந்தது.  கணேஷ் என் சுமையைக் குறைக்கிறார்.  அவர் எழுத விட்டதை நான் எழுத முயல்கிறேன்.  இன்னும் இரண்டு நாளில் எக்ஸைலை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.  எனக்கு யாரையும் அன்பு, பாசம், அறிவு, நட்பு, தமிழ், விடுதலை, புரட்சி, தியாகம், சுதந்திரம், அழகு என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்க முடியாது.  அது என்னவோ அப்படி அழைப்பது என்னவோ போல் இருக்கும்.   ஒரு பெண்ணின் பெயர் பேரழகி.  முந்தாநாள் ஒரு பழைய சிறு பத்திரிகை நண்பர் என்னை அறிவழகன் தானே பேசுறது என்று அழைத்தார்.  யார் என்று எனக்குத் தெரியவில்லை.  வங்கியில்  மட்டுமே அந்தப் பெயரில் அழைக்கப்படுகிறேன்.  அது கூட தாஸ்தாவேஜுகளில்தான் இருக்கிறது.  அழைக்கும் வேலை கிடையாது.  விமானநிலையத்தில் நான் பாட்டுக்கு நேரம் தெரியாமல் பாரில் வைன் அருந்திக் கொண்டிருக்கும் போது என் தந்தை பெயரான கிருஷ்ணசாமி கிருஷ்ணசாமி என்று கத்துவார்கள்.  நானோ யாரையோ அழைக்கிறார்கள் போலிருக்கிறது, இவ்ளோ தடவை கூப்புடுறான், குடிச்சுப்புட்டு எங்கெ வுளுந்து கெடக்குதோ அந்த கிருஷ்ண சாமி ஜென்மம் என்று நினைத்துக் கொண்டு இன்னொரு க்ளாஸ் வைன் ஆர்டர் செய்வேன்.  பிறகு தான் யாராவது நேரில் வந்து யு அர் கிருஷ்ணசாமி அரிவாஸ்கன் என்று கேட்கும் போது அடித்துப் பிடித்துக் கொண்டு அவனோடு அல்லது அவளோடு ஓடுவேன்.  எனவே அறிவழகன் என்று கேட்டதும் எனக்குக் கடுப்பு வந்து விட்டது.  யாரோ பழைய சக ஊழியர் போல என்று நினைத்தேன்.  ஆனால் குமாஸ்தாக்களுக்கு அவ்வளவு தில் கிடையாது.  அறிவழகன் தானே என்று கேட்டு விட்டு நான் தான் சாஆஆஆர் தட்சிணாமூர்த்தி பேசுறேன் என்று சொல்லி விடுவார்கள்.  ஆனால் இந்தத் தறுதலையோ “அறிவு… என்னா அறிவு …  இவ்ளோ சீக்கிரம் என்னெ மறந்துபுட்டே” என்றது.  நானோ கொலைவெறியுடன் போனை வைத்து விட்டேன்.  யார் என்று ஊகிக்கவும் எனக்கு நேரம் இல்லை.  உடனே அந்த நம்பரை டார்ச்சர் 98 என்று குறிப்பிட்டு ஸேவ் செய்தேன்.  97 நம்பர்கள் டார்ச்சர் பட்டியலில் உள்ளன.  கொஞ்ச நேரத்தில் டார்ச்சர் 98 இலிருந்து அழைப்பு.  நான் கடும் வேலையில் இருந்தாலும் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் போனை எடுத்தேன்.  “நான் தான் சாரு…   ———————- பேசுறேன்” என்றது குரல்.  அடப் பாவி… பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அழைக்கும் போது கூட கத்தியை எடுத்துக் குதத்தில் குத்தி ஒருவனை அலற விட்டு விட்டுத்தான் ஹலோவே சொல்கிறான்கள் பார் என்று நினைத்துக் கொண்டு “அப்புறம் அழைக்கிறேன்” என்று சொல்லி பட்டென்று போனை வைத்து விட்டேன்.

ரத்தம் தலைக்கு ஏறி விட்டது.  ஒருவனை என்ன சொன்னால் கொலைவெறிக்குத் தள்ளலாம் என்று தெரிந்து கொண்டு டார்ச்சர் கொடுப்பதில் சிறுபத்திரிகைக்காரர்களை யாராலும் விஞ்ச முடியாது.  போலீஸையே அழ வைத்த சிறுபத்திரிகைக்காரர் எல்லாம் இருக்கிறார்.

டேய் போலீசு… அடிடா என்னை… அடிடா…  சாவடிக்கணுமா … சாவடி…  சாவறதுக்கு நான் தயார்டா…  என்று சொல்லி தன்னை லத்தியால் அடித்த இன்ஸ்பெக்டருக்கு டார்ச்சர் கொடுத்த ஒரு கவிஞரை எனக்குத் தெரியும்.  இந்த விஷயத்தில் இவர்கள் டெரரிஸ்டுகளைப் போல.   பத்து ஆண்டுகள் கழித்து எனக்கு போன் செய்யும் ஒருவருக்கு என்ன சொன்னால் எனக்கு ரத்தக் கொதிப்பு உண்டாகும் என்று தெரிந்திருக்கிறது.  ஆனால் பாருங்கள், அவருடைய நோக்கம் என்னை அவமானப்படுத்துவது அல்ல; எனக்கு டார்ச்சர் கொடுப்பது அல்ல.  அவர் அன்பாகத்தான் அழைத்திருக்கிறார்.  ஆனால் அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்.  நான் உன்னை செருப்பால் அடிப்பேன்; நீயும் என்னை செருப்பால் அடி.  பிறகு இருவரும் தண்ணி அடித்து இலக்கியம் பேசி விட்டு, அடித்துக் கொண்டு உருளுவோம்.    ஒரு திருமண வைபவத்தில் கவிஞர்கள் சிலர் – இவர்கள் உ.த.எ.வின் நெருங்கிய சிநேகிதர்கள் – மது அருந்தி விட்டு அடித்துக் கொண்டு புரண்ட ஆபாசக் கதையை பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  எங்கள் வாசகர் வட்டத்தில் மது அருந்துவோம்.  ஆனால் ராணுவ ஒழுங்குடன் நடக்கும் அந்தக்  கொண்டாட்டம்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  அன்பு, பாசம் என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பது லஜ்ஜையாக உள்ளது.  ஆனாலும் கணேஷ் அன்புவை எல்லோரும் அன்பு என்றுதான் அழைக்கிறார்கள்.  பொதுவாக அன்பு என்று பெயர் இருந்தால் அவர் பெரும் ரவுடியாகவும் ஸேடிஸ்டாகவும் இருப்பார்.  ஆனால் அன்பு அன்பின் வடிவம்.  போரூரிலிருந்து எனக்கு விரால் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பவர்.  ஆனால் இமயமலைப் பயணத்துக்கு எந்த உடல் பயிற்சியும் செய்யாமல் வந்து ஆரம்பத்திலிருந்து முடிவு வரை வாந்தி எடுத்துக் கொண்டே வந்தார்.  அதையும் பயணக் குறிப்பில் எழுதுவார் என்று நினைக்கிறேன்.  ஆனாலும் எவ்வளவு வாந்தி எடுத்தாலும் போட்டோ எடுக்கவும் பைக்கில் போகவும் சளைக்கவில்லை.  5000 புகைப்படங்கள் மொத்தம்.  இனி அவர் எழுதுவதைப் படியுங்கள்…

 

http://anbueveryone.blogspot.in/2013/08/1.html

http://anbueveryone.blogspot.in/2013/08/2.html

http://anbueveryone.blogspot.in/2013/08/3.html

http://anbueveryone.blogspot.in/2013_09_01_archive.html

 

Comments are closed.