’உத்தமத் தமிழ் எழுத்தாளர்’ சொல்லும் பொய்களுக்கும் செய்யும் ஏமாற்று வேலைகளுக்கும் அளவே இல்லாமல் போய் விட்டது. இமயமலையைப் பார்த்த போது எங்கள் குழுவில் இருந்த அத்தனை பேரும் சொல்லையும் செயலையும் இழந்து கடவுளின் முன்னே நிற்பது போல் உணர்ந்தோம். நானோ அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து விழுந்து கும்பிட்டேன்.
ஜிஸ்பா என்ற இடத்தில் சுமார் முப்பது குடும்பங்கள் இருந்தன. அங்கேயும் மூச்சு விட சிரமம்தான். ஒரு பெண் என்னைப் பார்த்து எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். உடனே பக்கத்திலிருந்த எஸ்.பி. என்ற நண்பர் டமில் நாடு என்றார். அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை. இவர் சண்டிகரில் நான்கு ஆண்டுகளாக வசிப்பவர். என்ன சொன்னால் அந்தப் பெண்ணுக்குப் புரியும் என்பது கூடத் தெரியவில்லை. நான் மதறாஸ் என்றேன். புரிந்து கொண்டு, சிறியதொரு புன்முறுவலை வழங்கி, இந்த இடம் எப்படி இருக்கிறது? என்று கேட்டார். கடவுள் வாழும் இடம், சொர்க்கம் என்றேன். இன்னும் பெரிய சிரிப்புடன், ஆமாம், ஆனால் குளிர்தான் வாட்டி எடுக்கிறது என்றார்.
ஆனால் உ.த.எ.வுக்கோ அந்தப் பிரம்மாண்டத்தைப் பார்க்கும் போது கூட நான் என்ற அகந்தையை அழிக்க முடியவில்லை. நான் தான் இந்த இடத்தை முதலில் பார்க்கும் தமிழன் என்று உணர்கிறார். திரும்பி வந்து அந்த இடத்தைப் பற்றி எழுதும் போது தமிழில் அந்த இடத்தைப் பற்றி எழுதப் படுவது இதுவே முதல் முறை என்று கூசாமல் பொய் எழுதுகிறேன். இவர் செல்வதற்கு முன்னமே நாங்கள் சென்று வந்து ஆயிரக் கணக்கான புகைப்படங்களையும் இந்தத் தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறேன். அதையும் பார்த்து விட்டு என்ன ஒரு புளுகுணி ஆட்டம் பாருங்கள். கொடுமை. கடவுளின் முன்னால் நிற்கும் போது கூடவா மனிதனின் அகந்தையும் கீழ்மை புத்தியும் முன்னால் வந்து நிற்கும்? ஆச்சரியமாக இருக்கிறது.
நான் அப்படிச் சொல்ல மாட்டேன். சன்ஸ்கர் சமவெளியில் மனித நடமாட்டம் குறைவுதான். மக்கள் அங்கே வாழவில்லைதான். ஆனால் ராணுவ வீரர்கள் அங்கே கூடாரம் அமைத்து க்ரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இடையர்கள் நூற்றுக் கணக்கான மறி ஆடுகளை மேய்க்கிறார்கள். நாங்கள் அங்கே ஒரு தமிழ்ப் பெண் தனியாக மோட்டார் பைக்கில் செல்வதைப் பார்த்தோம். லே வரை அவர் எங்களோடுதான் வந்து கொண்டிருந்தார். இன்னொரு தமிழர் பெங்களூரிலிருந்து தனியாக பைக்கில் அங்கே சுற்றிக் கொண்டிருந்தார். இப்படி நிறைய பேர். முதல் குரங்கே தமிழ்க் குரங்குதான் என்று புதுமைப்பித்தன் கிண்டல் அடித்தது ஞாபகம் வருகிறது.
இன்னொரு அயோக்கியத்தனம் என்னவென்றால், விக்கிபீடியாவில் உள்ளதைத்தான் உ.த.எ. மொழிபெயர்த்து பயணக் கட்டுரையாக எழுதிக் கொண்டிருக்கிறார். வேண்டாம் என்று சொல்லவில்லை. உதவி விக்கிபீடியா என்று எழுத வேண்டும் அல்லவா? இந்தக் கட்டுரையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் காறித் துப்புவார்கள்.
இமயப் பயணம் பற்றி நிறைய நிறைய எழுதலாம். எக்ஸைல் எடிட்டிங் இன்னும் கொஞ்சூண்டு பாக்கி இருக்கிறது…
இதோ கணேஷ் அன்புவின் இமயமலைத் தொடரின் இணைப்பு:
http://anbueveryone.blogspot.in/2013/09/5.html
Comments are closed.