பயணம் முடிந்து சென்னை வந்து சேர்ந்து விட்டேன். ராமனாதபுரத்தில் டிமிட்ரியின் திருமணம் இனிதே முடிந்தது. தம்பதியர் தேன் நிலவுக்குக் கிளம்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். மதுரையில் என்னை கவனித்துக் கொண்டவர் பூர்ணசந்திரன். ராணி மங்கம்மாள் சத்திரத்தில் தங்கியிருந்தோம். நல்ல வசதியான இடம். பல நண்பர்கள் வந்து பார்த்தனர். இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். மதுரையில் எனக்கு சபரீஸை விட கௌரி கங்கா உணவகம் தான் பிடித்திருந்தது. முந்தின இரவு வெறும் பழங்கள்தான் சாப்பிட்டிருந்தேன்; அதுவும் ரொம்பக் கொஞ்சமாக என்பதால் காலையில் ஆறு மணிக்கே கொலைப்பசி. ஆறரை மணிக்கு கௌரி கங்காவில் சுடச் சுட இட்லி, தோசை, மற்றும் அருமையான ஃபில்டர் காபி சாப்பிட்டேன்.
ரமேஷ் என்ற நண்பர் எங்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். மதுரைக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் மீனாட்சி அம்மனை தரிசித்தது இல்லை. ஒரே கூட்டம் களேபரமாக இருக்கும். வெறுமனே கோவிலைப் பார்த்து விட்டுத் திரும்பி விடுவேன். இந்த முறை அப்படி இல்லாமல் அம்மனின் அருகிலேயே நீண்ட நேரம் நின்று தரிசிக்க முடிந்தது.
ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த கடம்ப மரம் இப்போது உயிரோடு இல்லை. அதன் அடிப்பகுதி மட்டுமே இரும்புத் தூணைப் போல் இருந்தது.
மதியம் வத்தலக்குண்டிலிருந்து டேய் மனோ அவரது காரில் வந்து எங்களை (என்னோடு அராத்துவும் கருப்பசாமியும் சென்னையிலிருந்து வந்திருந்தனர்) மதுரையிலிருந்து ராமனாதபுரம் அழைத்துச் சென்றார். மதுரையிலிருந்து ராமனாதபுரம் செல்லும் வழியில் இரண்டு முக்கியமான சம்பவங்கள். ஒன்று, திருப்பூவனத்தில் மதுரையிலிருந்து ராமனாதபுரம் செல்லும் சாலையின் வலது கைப்பக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான மருத மரம் நிற்கிறது. காரை நிறுத்தி விட்டு அந்த மரத்தையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எந்த ஊருக்குப் போனாலும் அங்கே எல்லோருமாகச் சேர்ந்து ஒரே குரலில் ஒருவரைக் காண்பித்து “இவர் உங்களுடைய தீவிரமான வாசகர்” என்று குறிப்பிடுவதை ஆர்வத்துடன் கவனித்திருக்கிறேன். அப்படி, திருப்பூவனத்தில் ஒருவர் இருக்கிறார் என்றார் மனாசே ராஜா. அவர் பெயர் கஜேந்திரன். அவர் அந்தப் பிரதான சாலையிலேயே ஒரு முடிதிருத்தகம் வைத்திருக்கிறார். ”ராஸ லீலாவை இரண்டு முறை படித்திருக்கிறார்; அவருடைய நண்பர்கள் அனைவரிடமும் உங்கள் எழுத்து பற்றியே விவாதித்துக் கொண்டிருப்பார்” என்றும் சொன்னார் மனாசே. ஒருசிலர் என் எழுத்தை அதிதீவிரமாக வெறுத்தாலும் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் என் எழுத்துக்கு வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட போது உண்மையிலேயே மகிழ்ந்தேன்.
கஜேந்திரனின் முடி திருத்தகம் சென்று அவரைச் சந்தித்து அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று காரை நிறுத்தி விட்டு இறங்கினால் மனாசே ராஜா எனக்கு முன்னே சென்று கஜேந்திரனை அழைத்துக் கொண்டு வந்து விட்டார். கஜேந்திரனால் நம்ப முடியவில்லை. கஜேந்திரனுடன் அவரது கடைக்குச் சென்றேன். அப்போதுதான் தெரிந்தது, ஒருவருக்கு முடி திருத்திக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே விட்டு விட்டு வந்து விட்டார் என்பது. அந்த அன்பரின் முகத்தில் எரிச்சல் தெரிந்தது. அவர் பக்கத்தில் ஒருவர் முகத்தில் ஃபேஷியல் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். ம்… திருப்பூவனத்தில் கூட ஃபேஷியல் எல்லாம் வந்து விட்டது. அரசியல்வாதிகள் சொல்வது போல் இந்தியா முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது போல!
திருப்பூவனம் கோவிலுக்கும் சென்றோம். இந்தக் கோவிலின் விசேஷம் பற்றிப் பிறகு எழுதுகிறேன்.
மதுரையில் தங்கியது இனிய அனுபவம். பல நண்பர்கள் வந்தார்கள். ஒவ்வொருவரின் பெயரும் ஞாபகம் இல்லை. அவ்வளவு பேருக்கும் நன்றி. பூர்ண சந்திரனுக்கு விசேஷமான நன்றி.
Comments are closed.