(2)

விருந்தோம்பலில் கொங்கு நாட்டு மக்களுக்கு நிகராக யாருமே வர முடியாது என்பது என் அனுபவம்.  அதனால்தான் அடிக்கடி அங்கே சென்று கொண்டிருக்கிறேன். முதலில் ஈரோடு ஆடிட்டர் ரமேஷ்.  ஒரு குழந்தையைப் போல் பழகுவார். அராத்துவுக்குப் பிறகு, அன்பை செயலிலும் காட்டுபவர்.  பொள்ளாச்சிக்கு அருகில் கேரளா எல்லையில் ஆம்பராம்பாளையம் என்ற ஊர் உள்ளது.  இங்கே உள்ள Ambrra River Resort-இல் ஒரு நாள் தங்கினோம்.  ஒரு மாபெரும் தென்னை வனத்தின் நடுவே கட்டப்பட்டுள்ளது இந்த விடுதி.  அதைத் தோப்பு என்று சொல்ல மனம் வராததால் வனம் என்றேன்.  நல்ல வசதியான விடுதி.  ஆனால் ஒரே ஒரு குறை, அங்கே உள்ள உணவுப் பொருள் எதையுமே வாயில் வைக்க முடியவில்லை.  அவ்வளவு உப்பு.  உப்பை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.  ஓட்டல்காரர்கள் அத்தனை பேரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரத்தக் கொதிப்பை அதிகமாக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்களா என்று தெரியவில்லை.  உயர்தரமான ஆர்கானிக் உணவு விடுதியான மைலாப்பூர்  மஹாமுத்ராவிலும் எல்லா உணவிலும் உப்பை அள்ளிக் கொட்ட ஆரம்பித்து விட்டார்கள்.  பலமுறை புகார் செய்து விட்டேன்.  கேட்பதாக இல்லை.  எனக்குத்தான் அப்படி இருக்கிறதோ என்று பக்கத்தில் மேஜையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்மணியிடம் கேட்டேன்.  அவரும் நான் சொன்னதையே சொன்னார்.  யாரோ ஒரு பெண்மணி அவர்.  என் அருகில் அமர்ந்திருந்த அவந்திகாவும் அதையே சொன்னாள்.  அவள் இதைப் பல காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

சரி, போகட்டும்.  இப்போது மஹாமுத்ராவில் காஃபியோடு நிறுத்திக் கொள்கிறேன்.  காஃபியில் உப்பு போட முடியாதல்லவா?

ஆம்ப்ரா விடுதியின் உரிமையாளர் அருணுக்கும் நாகுவுக்கும் நண்பர்.  நாகு, எனது பொள்ளாச்சி நண்பர் விஜி என்கிற விஜயகுமாரின் சகலை. இந்த நாகு தான் எங்கள் எல்லோருடைய host.  நாகு பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். எல்லோரும் தரையில் அமர்ந்திருப்பார்கள்.  நான் நின்றபடி ஏதேனும் நாகுவிடம் கேட்டால், எழுந்து நின்றுதான் பதில் சொல்வார். இப்படி ஒரு அடக்கமான, அன்பான ஒரு இளைஞரை நான் இதுவரை பார்த்ததில்லை.  இந்த அடக்கம் பொய் இல்லை.  அவரது ரத்தத்தில் ஊறியது என்பதும் நமக்குப் பார்த்தாலே தெரியும்.

அருண் நாகுவின் நண்பர்.  2000 ஏக்கருக்குச் சொந்தக்காரர்.  இளைஞர்.  இவருக்கு ஆம்பராம்பாளையத்துக்குப் பக்கத்தில் கேரளத்தில் பல நூறு ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன. இதிலிருந்து கள் இறக்கி கேரளத்தில் உள்ள கள்ளுக் கடைகளுக்கு விநியோகம் செய்கிறார் அருண். கேரளத்தில் தொழில் செய்வதாலோ என்னவோ இவர் பார்ப்பதற்கு மலையாளியைப் போலவே இருக்கிறார்.  அருண் சொன்ன கதைகளை ஒரு நாவலாக எழுதலாம் என்பதால் இன்னும் இரண்டொரு வாரத்தில் ஆம்பராம் பாளையம் சென்று ஒரு வாரம் தங்கி குறிப்புகள் எடுத்து வரலாம் என்று இருக்கிறேன்.  சப்பைக்காடு என்று ஒரு இடம் இருக்கிறது.  அது என்னுடைய இடத்தை விட நன்றாக இருக்கும்; அங்கே நீங்கள் தங்கி எழுதலாம் என்றார் அருண்.

ரமேஷின் நண்பர் ஸ்ரீதர் இன்னொரு உபசரிப்புத் திலகம்.  ரமேஷைப் போல் அதிகம் பேச மாட்டார்.  ஆனால் அடிக்கடி சிரிப்பார்.  உபசரிப்பில் ரமேஷைப் போல்.  இன்னும் இருவர், விஜி, சந்த்ரு.  விஜி ஒரு குழந்தையைப் போல.  எல்லோருடனும் சண்டை போட்டுக் கொண்டு போய் விடுவார்.  ஐந்து நிமிடம் கழித்துப் பார்த்தால் நமக்காக ஏதேனும் ஒரு பணியைச் செய்து கொண்டிருப்பார்.  எவ்வளவு வேகமாகப் போனாரோ அதே வேகத்தில் திரும்பி இருப்பார்.  இவரிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் என்னவென்றால், ஒரு முறை சொன்னதையே சுமார் 30 முறையாவது சொல்வார்.  சந்த்ரு இதற்கு நேர் எதிர்.  வாயையே திறக்க மாட்டார்.

ஆம்ப்ரா விடுதியின் உரிமையாளர் நாகுவின் நண்பர் என்பதால் எங்களுக்கு மட்டும் அறையிலேயே சமைத்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டது.  அதற்கான மின்சார அடுப்பு மற்றும் ஏராளமான சாமான்களை எடுத்து வந்திருந்தார் ரமேஷ்.  கட்லா மீன் மட்டும் நான்கு கிலோ.  அதை எங்கள் அனைவருக்கும் வறுத்துக் கொடுத்தார் ரமேஷ்.  ரமேஷ் ஒரு சமையற்கலை விற்பன்னர். அவர் சைவம்.  ஆனால் அசைவம் பிரமாதமாக சமைப்பார்.  அசைவம் மட்டும் அல்ல; எதைச் செய்தாலும் அதில் ரமேஷின் கை மணம் தெரியும்.  யோசித்துப் பாருங்கள். பத்துப் பதினைந்து பேருக்கு சமைக்க வேண்டும்; சமைப்பது மட்டும் அல்ல; அவர்களுக்கு வேண்டிய தின்பண்டங்களையும் தயார் செய்ய வேண்டும்.  உதாரணமாக, காய்கறி ஸலாத்.  அதில், தக்காளி, வெங்காயம், கொத்துமல்லிக் கீரை, கேரட், ஸுக்னி என்ற வெள்ளரிக்காய், Capsicum போன்ற பல காய்கறிகளையும் நறுக்கி அளவாக உப்பு சேர்த்து அதில் எலுமிச்சையைப் பிழிந்தால் ஸலாத் தயார்.  ஆனால் யார் செய்வது?  பத்துப் பேருக்குத் தயாரிப்பார் ரமேஷ்.  சந்த்ரு உதவி செய்வார்.  ஒரு சமயம், வேர்க்கடலை கொடுத்தார் ரமேஷ்.  எப்படி?  வேர்க்கடலையில் கேரட்டையும் வெங்காயத்தையும் துருவிப் போட்டு அதில் கொஞ்சமாய் பச்சை மிளகாய் போட்டு எலுமிச்சை பிழிந்து கொடுத்தார்.

அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் ஆறரை மணிக்கே பசியில் ரெஸ்டாரண்ட் போய் இட்லி சாப்பிட்டு விட்டேன் நான்.  பிறகு ரமேஷ் எழுந்து எல்லோருக்கும் சப்பாத்தி போட்டார்.  அந்தக் காட்சி தான் எப்பேர்ப்பட்ட அற்புதம்! தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார் ரமேஷ்.  பக்கத்திலேயே மின்சார அடுப்பு.  அதன் மேல் சப்பாத்தி சுடுவதற்கு வேண்டிய கல்.  ரமேஷின் எதிரே சப்பாத்தியை உருட்டுவதற்கான தளவாடங்கள்.  அதற்குப் பக்கத்தில் ஸ்ரீதர் கோதுமை மாவைப் பிசைந்து உருட்டி உருட்டித் தருகிறார்.  ரமேஷும் உருட்டி உருட்டிப் போட்டு எடுக்கிறார்.  பதினைந்து பேருக்கு சப்பாத்தி தயாராகிக் கொண்டிருந்தது.  நான் ரமேஷ் பக்கத்தில் அமர்ந்து ஒரு மூன்று சப்பாத்தி சாப்பிட்டேன்.  தொட்டுக் கொள்ள காய்கறி ஸலாத். இது போல் ஏகப்பட்ட பண்டங்கள் தயார் செய்து கொடுத்தார் ரமேஷ்.

மறுநாள் அருணின் பண்ணைக்குச் சென்றோம். பண்ணையில் புதிதாக இறக்கிய கள்ளைப் பருகினேன்.  கள் என்பது தாய்ப்பாலைப் போன்றது.  பக்கத்திலேயே இருந்த ஆம்பராம்பாளைய நதியில் நான்கு மணி நேரம் குளித்தோம். சிறிய நதியாக இருந்தாலும் அதிக வேகம் இருந்ததால் நிதானமாக இல்லாவிட்டால் பாறையில் தடுக்கி விழுந்து அடிபட அதிக வாய்ப்பு இருந்ததால் நான் ஒரு பாறை இடுக்கில் வாகாக அமர்ந்து கொண்டேன்.

அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

அதை விவரிப்பதற்கு முன்னால் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்ல வேண்டும்.

தில்லியில் பஸ்ஸில் ஐந்து பேர் சேர்ந்து ஒரு பெண்ணைக் கற்பழித்துக் கொன்ற நிகழ்ச்சிக்கு இந்தியப் பொதுஜனம் வெளிப்படுத்திய கடுமையான கோபத்தை நாம் அறிவோம்.  அந்த மனித மிருகங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து.  ஆனால் பெரும்பான்மையான இந்தியர்கள் பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ அந்தக் கற்பழிப்பையும் கொலையையும் செய்த ஐந்து பேரைப் போல் தான் மற்றவர்களை சித்ரவதை செய்து கொண்டிருக்கிறார்கள். தெரியாமல் செய்கிறார்கள் என்ற வாதம் ஏற்புடையது அல்ல.  இதில் படித்தவர்கள் என்று அறியப்படுகின்றவர்களுடைய வன்முறை தான் அதிகமாக உள்ளது.  வன்முறை என்றால் அடுத்தவர் மீதான வன்முறை.

எனக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு போன் வந்தது.  தெரியாத எண்.  வேலை மிகுதியால் எடுக்கவில்லை.  தொடர்ந்து வந்ததால் எடுத்தேன்.  ஒரு அன்பர் என்னை சந்திக்க விரும்பி செய்த போன்.  அப்போது நான் எக்ஸைல் வேலையில் மூழ்கியிருந்த நேரம்.  உறங்கப் போவது நள்ளிரவு 12 மணி.  எழுந்து கொள்வது காலை நான்கு மணி.  அதனால், என் வேலை முடிந்த பிறகு நானே தொடர்பு கொள்கிறேன், அதுவரை உங்கள் எண்ணைப் பாதுகாத்து வைத்துக் கொள்கிறேன் என்று விளக்கிச் சொன்னேன்.

அடுத்து ஒருநாள் அவரிடமிருந்தே போன் வந்தது.  அப்போதும் என் நிலையில் மாற்றமில்லை என்பதால் போனை எடுக்கவில்லை.  பிறகு முந்தாநாள் அதே நபரிடமிருந்து போன்.  அப்போது நான் ஆம்பராம்பாளையம் நதியில் இருந்தேன்.  கரைக்குத் திரும்பிப் பார்த்த போது அதே நபர்.  ஆனால் அவர் அதோடு விடவில்லை.  நான் போனை எடுக்கவில்லை என்றதுமே ஒரு மெஸேஜும் கொடுத்திருந்தார்.  Too rude.  Sorry for the pestering.  Henceforth, nevermore.  இதுதான் மெஸேஜ்.

உண்மையில் எனக்கு மட்டும் நேரம் இருந்தால் இந்த நபர் மீது பத்து லட்ச ரூபாய்க்கு வழக்குத் தொடுத்திருப்பேன்.  அந்த அளவுக்கு இந்த மெஸேஜால் மன உளைச்சலுக்கு ஆளானேன் நான்.

நான் செய்த தவறு என்ன?  தெரியாத நம்பரை எடுத்து என் நிலையை விளக்கிச் சொன்னதா?  அந்த நபர் யார் என்றே எனக்குத் தெரியாது.  அவர் பெயரையும் நான் முன்பின் அறிந்ததில்லை.  என் போன் நம்பர் கிடைத்து விட்டது என்ற ஒரே காரணத்தினால் எனக்கு என்ன ஒரு டார்ச்சர் கொடுக்கிறார் பாருங்கள்.  Too rude.  யார்?  அவரா, நானா?  இதேபோல் அவர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அனுப்ப முடியுமா?  ஒரு இயக்குனரையோ ஒரு நடிகரையோ அவர் இப்படி அணுகி விட முடியுமா?  எழுத்தாளன் என்றால் கேணக் கூதி என்று நினைத்து விட்டீர்களா இந்தத் தமிழர்கள்?  பெரும்பாலான ஆட்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.  அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகி.  அவருடைய இரண்டு வரி மெயிலுக்கு நான் பதில் எழுதவில்லை என்று you are too rude என்று எழுதியிருந்தார்.  அவரையும் எனக்கு முன் பின் தெரியாது.  அவர் மெயிலுக்கு நான் பதில் எழுதவில்லையாம்.  உடனே too rude.  சரி, பெண்ணாயிற்றே?  அதுவும் too rude என்று எழுதியிருக்கிறாரே, நான் அவரை செக்ஸுக்கு அழைத்தேன் என்று ஒரு செக்ஸ் சாட் தயார் பண்ணி ந்யூயார்க்கர் பத்திரிகையில் கொடுத்துத் தொலைத்து விட்டால் என்ன செய்வது என்று நான் கொஞ்சம் பிஸி மேடம், அதனால்தான் பதில் எழுதவில்லை, மன்னித்து விடுங்கள் என்று எழுதினேன்.  எந்த ஊரில் இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தமிழர் என்றால் எழுத்தாளனை அவர்களுடைய எடுபிடி என்றுதான் நினைக்கிறார்கள்.  இதில் அமெரிக்க எழுத்தாளர்கள் இவ்வளவு rude இல்லை; மெயில் போட்டால் உடனே பதில் போட்டு விடுவார்கள் என்று எழுதியிருந்தார் அந்தப் பெண்.

தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மொழி எழுத்தாளரும்- அதாவது, நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவிகித எழுத்தாளர்கள், வாசகர்களின் மெயிலுக்குப் பதில் எழுதுவதில்லை.   எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்ளவே முடியாது என்பதுதான் மேற்கத்திய நாடுகளில் எதார்த்தம்.

எப்பேர்ப்பட்ட வன்முறை பாருங்கள்.  இரண்டு முறை அவருடைய போனை நான் எடுக்கவில்லை என்றதும் too rude என்று என் மீது வன்முறையைப் பிரயோகிக்கிறார்.  உங்களிடம் என் போன் நம்பர் இருந்து நீங்கள் அழைத்தால் நான் எடுத்தாக வேண்டுமா?  எடுக்கா விட்டால் நான் முரடன்?  என்ன ஒரு அயோக்கியத்தனம்?

இதேபோல் ஒரு சம்பவம்தான் அந்த நதியில் அன்றைய தினம் நடந்தது.

 

Comments are closed.