கடவுளின் கவிதை…

நேற்று காலையில் பாபா கோவிலுக்குப் போய் விட்டு வந்து வீட்டிலேயே ”எட்டு” போட்டுக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் பிரம்மாண்டமான ஒரு கார் வந்து நின்றது.  முகப்பில் அதிமுக கொடி.  அதிமுக செங்கோட்டையன் என் பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் அவர் வீட்டுக்கு வந்த வண்டியாக இருக்கும் என்று விட்டு விட்டேன்.  சற்று நேரத்தில் பார்த்தால் வாசலில் உள்ள கேட் தட்டப்படும் ஒலி.  என் வீட்டுக்குத்தான்.  யார் அது இந்தக் காலை நேரத்தில், அதுவும் அதிமுக கொடியோடு என்று போய்ப் பார்த்தால் பொள்ளாச்சியில் சந்தித்த கௌரி ஷங்கர்.  ஈரோடு ஆடிட்டர் ரமேஷின் நண்பர்.  அதோடு செங்கோட்டையனுக்கும் நெருங்கிய நண்பராம்.  சுமார் ஐந்து ஆண்டுகளாக நான் பப்பு, ஸோரோவோடு வாக்கிங் போவதைப் பார்த்திருக்கிறாராம். 

வந்த விஷயம் என்னவென்றால், ரமேஷ் ஈரோட்டிலிருந்து எனக்காக கடம்ப மரக் கன்றும், செண்பக மரக் கன்றும் கொடுத்து அனுப்பியிருந்தார்.  கடம்ப மரம் செடியாக இருக்கும் போதே அதன் ஆகிருதி இலைகளில் தெரிந்தது.  என்ன ஒரு அற்புதமான இலை!  அந்த இலைகளில் எனக்கு ரமேஷின் அன்பு தெரிந்தது.  இந்த உலகில் பூக்கும் ஒவ்வொரு மலரிலும் ஒவ்வொரு இலையிலும் கடவுள் தன் கவிதையை எழுதி எழுதி அனுப்புகிறார்.  மனிதன் தான் அதை கவனிப்பதே இல்லை.   

கௌரி ஷங்கரும் இந்தக் கன்றுகளை தான் தங்கியிருந்த அறைக்கே எடுத்துச் சென்று ஏஸியில் வைத்துப் பாதுகாத்துக் கொண்டு வந்ததாகச் சொன்னார்.  இலைகளின் பசுமையைப் பார்த்த போதே அது தெரிந்தது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த கடம்ப மரம் எப்போதோ மரித்து விட்டது. அதன் அடிப்பகுதி மட்டுமே இரும்புத் தூணைப் போல் நின்று கொண்டிருந்தது.  பிறகு ஈரோட்டிலும் கடம்ப மரத்தைக் காண நேரம் இல்லாமல் போய் விட்டது. 

நான் இருப்பது வாடகை வீடுதான்.  ஆனாலும் இந்த வீட்டில் முன்பு இருந்த புண்ணியவான் இங்கே மா, கொய்யா, வாழை, தென்னை, செம்பருத்தி என்று ஏராளமான மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார்.  அதன் பலனை நாங்கள் அனுபவிக்கிறோம்.  நேற்று கூட மா மரத்தில் ஏழெட்டு கிளிகள் வந்து அமர்ந்து மாம்பழத்தைத் தின்று ஏக ரகளை செய்து கொண்டாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.  யாருக்குக் கிளிகளை இப்படிப் பார்க்கக் கிடைக்கும்?  அதற்கு முந்தின நாள் ஒரு பழந்தின்னி வவ்வால் நீண்ட நேரம் தொங்கிக் கொண்டிருந்தது.  அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்போதாவது குரங்கும் வரும்.

இன்று நானும் அவந்திகாவும் தோட்டத்தில் குழி வெட்டி கடம்ப மரக் கன்றையும் செண்பக மரக் கன்றையும் நட்டோம்.  முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மண்வெட்டி பிடிக்கிறேன்.  நாகூர் தவிர, தில்லியில் இருந்த போதும் தோட்டம் போட்டிருக்கிறேன். நாய் வளர்க்க ஆரம்பித்ததிலிருந்து தோட்டம் போடுவது மறந்து விட்டது.  நாய்களின் மூத்திரத்தில் செடிகள் பட்டுப் போய் விடுகின்றன.  அதனால் இப்போது கடம்ப மரத்துக்கும் செண்பகத்துக்கும் சிறிய வேலி கட்டி விட்டோம்.    

ரமேஷின் அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது.  அதை பத்திரமாக ஈரோட்டிலிருந்து எடுத்து வந்து கொடுத்த கௌரி ஷங்கருக்கு விரைவில் மந்திரி ஆகி மக்கள் தொண்டு செய்ய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். 

பின்குறிப்பு: இதை எழுதி முடித்ததும் ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வந்தது.  நான் சின்மயா நகர் என்ற பகுதியில் இருந்த போது இக்னேஷியஸ் என்ற வாசக நண்பர் என் வீடு தேடி வந்து இரண்டு பரிசுப் பொருட்களைக் கொடுத்தார்.  ஒன்று, அவர் வீட்டில் தயாரித்த வைன்.  ருசி அற்புதமாக இருந்தது.  இன்னொன்று, கிறிஸ்துமஸ் மரக் கன்று.  எட்டு ஆண்டுகளாக அந்த கிறிஸ்துமஸ் மரம் என் வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறது.  இக்னேஷியஸ் இதைப் படித்தால் மகிழ்வேன்.

charu.nivedita.india@gmail.com   

  

 

Comments are closed.