நுண்ணுணர்வும் மற்றும் சில நற்பண்புகளும்…

http://www.youtube.com/watch?v=zRvhQ5Rf6-U

இந்த பியானோவைக் கேட்டுக் கொண்டே பின்வருவதை நீங்கள் படிக்கலாம்.

”அவர் உங்களை வெறுக்கிறார்; நீங்களும் அவரை வெறுக்கிறீர்கள். ஆனால் இரண்டு பேரும் எப்படி நெருங்கிய நண்பர்களாக இருக்கிறீர்கள்?” என்று மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் கேட்டார். இதை யார் சொன்னது உங்களுக்கு என்று கேட்டேன். அவர் தான் சொன்னார் என்றார் நண்பர். ”தெரியவில்லை, அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்” என்றேன்.

போன மாதம் இன்னொரு நண்பர் ”அவர் உங்களை வெறுக்கிறார்; நீங்களும் அவரை வெறுக்கிறீர்கள். ஆனால் எப்படி இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். யார் சொன்னது என்று கேட்டால் அவர் தான் சொன்னார் என்றார். 

மூன்று நாட்களுக்கு முன்பு துரோகி என்ற குமாருடன் பேசிக் கொண்டிருக்கும் போதும் அவர் மேற்கண்ட வசனத்தைச் சொன்னார். யார் சொன்னது என்று கேட்கவில்லை. அவர்தான் சொல்லியிருப்பார்.

’சரி, இது போன்ற அராத்து வேலைகளைச் செய்வதால்தானே புனைப்பெயரே அப்படி அமைந்திருக்கிறது? என்ன செய்வது? நம் தலையெழுத்து’ என்று விட்டு விட்டேன். கடைசியில் பார்த்தால் என் தலையிலேயே கையை வைத்து விட்டார்.
நேற்று அராத்துவிடம் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது, “இதோ பாருங்கள் சாரு… இப்போ நீங்க என்னை வெறுக்கிறீங்க… நான் உங்களை வெறுக்கிறேன். ஆனாலும் நாம எப்படி நெருங்கிய நண்பர்களா இருக்கோம்? ஒருத்தருக்கு ஒருத்தர் தொந்தரவு பண்ணிக்கிறது இல்லை. அவ்வளவுதானே? இது கூட ஒரு முட்டாப் ——க்கும் தெரியறது இல்லை” என்ற போது நான் ஒருக்கணம் ஆடிப் போய் விட்டேன்.

ஒருவேளை, இவர் என்னை வெறுப்பது வேண்டுமானால் நியாயமாக இருக்கலாம். இளம்பெண்களிடம் மட்டுமே பழக வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளும் நடைமுறையும் கொண்ட அவருக்கு என்னோடு பழகுவது வெறுப்பைத்தானே தரும்? ஆக, அந்த வெறுப்பை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் நான் அவரை வெறுக்கிறேன் என்று இவரிடம் யார் சொன்னது?

மதியம் பதினோரு மணி வரை தூங்குவது, டாய்லட்டில் தம் அடிப்பது, நம் காது கேட்கவே காதலிகளிடம் போனில் கொஞ்சுவது, ஆண்களிடம் போனில் பேசும் போது மட்டும் போன் இல்லாமலேயே அவர்கள் காதில் கேட்கும் அளவுக்குத் தொண்டை நரம்புகள் வெடிக்கக் கத்திப் பேசுவது போன்ற நல்ல பண்புகளை வேண்டுமானால் வெறுக்கலாமே தவிர அந்த நற்பண்புகளைக் கொண்ட நண்பரை வெறுக்க முடியுமா? சமயங்களில் நம்முடைய சில பழக்கவழக்கங்களையே நம்மால் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் போது மற்றவர்களின் பழக்கவழக்கங்களை சகித்துக் கொள்ள முடியாதா என்ன?

இன்னமும் எனக்குப் புரியவில்லை, அராத்துவை நான் வெறுக்கிறேன் என்று அவர் ஏன் சொன்னார் என்று.
இனி வருவது அராத்து:

கொஞ்சம் விரிவாகப் பேசலாம். நானும் சாருவும் எதிரெதிர் துருவங்கள். நான் காலை 11 மணிக்கு எழுந்து கொள்வேன். இதை சாரு மதியம் 11 மணி என எழுதுவார். மாலை 4 மணிக்கு ஓரிடத்தில் சந்திக்க வேண்டும் என்றால், நான் 4 மணிக்குதான் ஜட்டி போடுவேன். அவர் 3.45க்கே வந்து ஒற்றைப் பாக்கெட்டில் கை விட்டபடி காதலியுடன் ….சரி வேண்டாம் …தூய நட்பு பாராட்டும் தோழியுடன் போனில் பேசியபடி காத்துக் கொண்டிருப்பார்.

கலை டிஃபனே எனக்கு மறந்து விட்டது. அவர் காலை ஏழு மணிக்கு இரை தேடி அலையும் புலி போல முகத்தை வைத்துக் கொண்டு டிஃபன் தேடி அலைந்தபடி இருப்பார்.

நான் எகிடு தகிடான ஆள். போகிற போக்கில் எது கிடைத்தாலும் சமாளித்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பேன். சாரு மிகவும் organized ஆக இருப்பார்.

நான் விமான நிலையத்திலிருந்து கொஞ்ச தூரம் நடந்து ஐந்து ரூபாய்க்கு டீ குடிப்பேன். சாரு வேறு வழியில்லாமல் என்னுடன் வருவார். இல்லையெனில் 100 ரூபாய்க்கு உள்ளேயே காபி குடிப்பார்.

சாருவுடன் பழகும் மற்றவர்கள் வீட்டிலெல்லாம் சாருதானே விரோதி? சாரு வீட்டில் நான் தான் விரோதி.

இதைப் போல பலதையும் எழுதிக்கொண்டு போகலாம். விஷயம் என்னவென்றால்….

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பிடித்து ஒத்த மனதுடன் உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டிருக்கும் போதே இருவருக்குள்ளும் செம சண்டை வருகிறது . ஏனென்றால், ஒருவருக்கொருவர் ஸ்பேஸ் கொடுத்துக் கொள்வதில்லை. அடுத்தவருக்கு கம்ஃபர்ட்நெஸ் கொடுக்கத் தெரியவில்லை. இருவருக்கும் வெவ்வேறு வகை குறி இருப்பதால் பேலன்ஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது.

வெவ்வேறு வகையான நற்பண்புகளைக் (!) கொண்டிருந்தாலும் அந்த நற்பண்புகளை ஒருவருக்கொருவர் வெறுத்தாலும், அடுத்தவரைத் தொந்தரவு செய்யாமல் (உதவி கூட செய்ய வேண்டியதில்லை) கம்ஃபர்ட் கொடுத்தால் அவரிடம் உள்ள நற்பண்புகளை வெறுத்துக் கொண்டே சிக்கல் இல்லாமல் இருக்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம், கம்ஃபர்ட்நெஸ் என்பது ஒருவழிப்பாதை அல்ல !

பி.கு : நான் ஆண்களிடம் அதிக பட்ச அன்பு காட்டுவதே வெறுப்பதுதான். பெண்களிடம் குறைந்த பட்ச அன்பே காதலிப்பதுதான்.

இனி வருவது நான்:

அராத்து comfort லெவல் பற்றி எழுதியிருக்கிறார்.  அராத்து தொந்தரவு இல்லாதவர்.  ஆனால் என்னைப் போலவே இரவு பனிரண்டுக்குப் படுத்தாலும் காலை ஆறு மணிக்கு எழுந்து இஞ்சி சாப்பிட்டு, வாக்கிங் போக தயாராக இருந்து, என்னைப் போலவே இசை கேட்டு… மறந்து விட்டேன், கக்கூஸில் சிகரெட்  குடிக்காமல் – இப்படி படு comfort ஆன நண்பர்களும் எனக்கு உண்டு.  ஆனால் அவர்களோடு ஒரு நாள் பூராவும் அல்லது நான்கு ஐந்து மணி நேரம் அமர்ந்து பேச முடியுமா என்று யோசிக்கிறேன்.  ஆண்கள் என்றால் இரண்டு பேர் சந்திப்பதே ரொம்ப சலிப்பாக இருக்கிறது.  மூன்றாவது ஆள் இருந்தால்தான் கொஞ்சமாவது நன்றாக இருக்கும்.  நான்கு ஆள் என்றால் உத்தமம்.  எங்கேயாவது பாரில் இரண்டு பேரை மட்டும் பார்க்க முடிகிறதா?  மிகவும் அரிது.  ஆனால் நானும் அராத்துவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலடி என்ற ஊரில் 15 நாட்கள் ஒரே அறையில் தங்கியிருந்தோம்.  Rejuvenation-க்காகப் போயிருந்தோம்.  தண்ணி அடிக்கக் கூடாது.  புகைக்கக் கூடாது. அந்த இடத்தை விட்டு வெளியே போகக் கூடாது. இப்படியே 15 நாள்.  ஒரு நாள் கூட அவருக்கு நானோ எனக்கு அவரோ பிரச்சினையாக இல்லை.  இதுதான் மிக முக்கியமான விஷயம்.  இப்படி பல மனிதர்களிடம் ஐந்து நிமிடம் கூட ஒன்றாக இருக்க முடியவில்லை. 

பொள்ளாச்சியில் அம்ரா விடுதியில் ஒரு நண்பரை ஐந்து நிமிடம் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியாமல் போனது.  அறைக்குள் நுழைந்தவுடன் – அந்த விஸ்தாரமான அறையில் நான்கு பேர் தங்கியிருந்தோம் – தொலைக்காட்சியைப் போட்டார் அந்த அன்பர்.  இரண்டு நிமிடம் சகித்து விட்டு, அதை நிறுத்தி விடச் சொன்னேன். அவர் சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்கவில்லை.  என்னுடைய இன்னொரு நண்பர்தான் அதை எடுக்க வேண்டியிருந்தது.  இதுபோல் என்னை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார் அந்த நபர். இனிமேல் அவர் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று நினைக்கும் அளவுக்கு அராஜகம் செய்து கொண்டிருந்தார். அதாவது பல மனிதர்கள் தனிமையில் செய்ய வேண்டிய விஷயங்களை பலர் முன்பு செய்கிறார்கள்.  கையடிப்பது, மலஜலம் கழிப்பது, மூக்கு நோண்டுவது போன்ற காரியங்களை மற்றவர் முன்பா செய்கிறோம்?  அந்த நபர் என் திருப்பூர் நண்பர் சதீஷ் என் அனுமதியில்லாமல் அழைத்துக் கொண்டு வந்தவர்.

சரி, அராத்து விஷயத்துக்கு வருகிறேன்.  ஒருவருக்கொருவர் தொந்தரவு கொடுத்துக் கொள்வதில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம்தான்.  ஆனால் அதையும் மீறி, intellect என்ற ஒரு விஷயம் இருக்கிறது.  நமக்குச் சமமாக அல்லது நம்மையும் மீறிய ஒரு ஆளாக இருக்க வேண்டும்.  இதற்குப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  பொள்ளாச்சியில் சந்தித்த அருண் என்ற நண்பர் அவ்வளவு பெரிய படிப்பாளி அல்ல.  ஆனால் அவர் பேசுவதைக் கேட்க எனக்குக் குறைந்த பட்சம் பத்து நாட்களாவது வேண்டும்.

அருண். பொள்ளாச்சி பக்கத்தில் கேரளத்தில் கள் இறக்கி கள்ளுக்கடைகளுக்கு கள் விநியோகிக்கும் தொழில். அவரும் நானும் மற்ற நண்பர்களும் பாறைகளில் தாவித் தாவி ஏறி இறங்கி குதித்து நதியில் குளிக்கச் சென்று கொண்டிருக்கிறோம்.  அப்போது அருண் திடீரென்று நின்று, ஒரு பாறையைத் தொட்டு “இது எத்தனைக் காலமாக இங்கே இருந்து கொண்டிருக்கும்?  இதில் நம்மைப் போல் எத்தனை பேர் நடந்து சென்றிருப்பார்கள்?” என்றார். அப்போதுதான் நான் சொன்னேன், நான் எழுதுவதை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று.

எந்த வேலையாக இருக்கட்டும்.  Intellect முக்கியம்.  இதை எப்படித் தமிழில் சொல்வது? நுண்ணுணர்வு என்று சொல்லலாம்.  எனவே அராத்து, comfort level அல்ல; நுண்ணுணர்வு முக்கியம்.  அது உங்களிடம் தாராளமாக இருக்கிறது.             

Comments are closed.