நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் எனக்கு மிக நெருக்கமான நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என்னைப் பிடிக்காத ஒரு மூத்த தமிழ் விமர்சகர் அங்கே வந்தார். அவர் என்னைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு சபையில் தீண்டத் தகாதவனைப் போல் நடத்தப்படுவது எனக்குப் புதிது அல்ல என்பதால் நானும் அதை சகஜமாகவே எடுத்துக் கொண்டேன். அந்த அறையில் நாங்கள் மூன்றே பேர்தான். விமர்சகரும் என் நண்பரும் பேசிக் கொண்டிருந்தனர். விமர்சகர் என் பக்கமே திரும்பவில்லை. அப்போது விமர்சகர் Michel Houellebecq என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளரைப் பற்றிக் குறிப்பிட்டார். என் நண்பர் உலக இலக்கியத்தை நன்கு படித்தவர் என்பதால் அவரும் விமர்சகரோடு சேர்ந்து வெல்பெக் பற்றிப் பேசினார். இதற்கு முன்னரே நான் வெல்பெக்கின் Atomised என்ற நாவலைப் படித்து விட்டு உயிர்மையில் அது பற்றி எழுதியிருந்தேன். அவர்கள் இருவரும் என் கட்டுரையைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை என்பதும் எனக்குத் தெரியும்.
வெல்பெக் என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் உங்களைப் போல் எழுதுகிறார்; படித்திருக்கிறீர்களா என்று ஒரு நண்பர் என்னைக் கேட்டதால்தான் வெல்பெக் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. படித்த பின்னர் இதெல்லாம் ஜுஜுபி என்று எனக்குத் தோன்றியது. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள், நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்கள் போன்ற சிறுகதைகளிலேயே நான் இதையெல்லாம் தாண்டி விட்டேன்.
வெல்பெக் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவருடைய முதல் நாவல் whatever ஃப்ரான்ஸில் மிகவும் பேசப்பட்டது. ஆபாசம் என்று பலரும் சொன்னார்கள். கவனியுங்கள்… திட்டவில்லை. சொன்னார்கள். அடுத்து Atomised என்ற நாவல் வந்தது. விமர்சனங்களில் extravagantly filthy and very funny என்று Independent பத்திரிகை எழுதியது. உடனே அதை எடுத்து அந்த நாவலின் அடுத்த பதிப்புகளில் அட்டையிலேயே போட்டு விட்டார்கள். டப்ளின் இம்பாக் விருதும் அந்த நாவலுக்குக் கிடைத்தது. அதை அங்கே யாரும் போர்னோ நாவல் என்று சொல்லவில்லை. explicit sex என்றே எழுதினார்கள். அவர் எதைச் சொன்னாலும் அது பரபரப்புக்குரிய விவாதமாயிற்று. சிந்தனையிலும் எழுத்திலும் அவர் anti communist ஆகவும், பழமைவாதியாகவும் இருந்தார். இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் அதை அவரது தனிமனித உரிமை என்று சொல்லி விட்டது. ஆனாலும் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் அயர்லாந்துக்குப் போனார். பிறகு, இப்போது, ஸ்பெய்னில் வாழ்கிறார். இது எப்படி சாத்தியமாகியது என்றால், ஃப்ரான்ஸில் புகழ் என்றால் பணம். டப்ளின் விருது அவருக்கு ஒரு கோடி ரூபாயை அளித்தது. அவருடைய மொழிபெயர்ப்பாளருக்கும் பெரும் பணம் கிடைத்தது. புத்தகங்கள் லட்சக் கணக்கில் விற்று வெல்பெக் ஒரு கோடீஸ்வரராக ஆனார். தன் கவிதைகளைத் தானே படித்து குறுந்தகடுகளாக வெளியிட்டார். சினிமா எடுத்தார். வயது 57. எழுதியது மிகவும் கொஞ்சம். சிகரெட்டோடுதான் புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பார்.
இதை நான் இங்கே எழுதியது எதற்காக என்றால், நேற்று மாலை எக்ஸைல் மூன்றாவது பாகத்தையும் எழுதி முடித்து விட்டு (எக்ஸைல் முடிந்து விட்டது; இனி அடுத்த நாவல்தான்) ஓய்வாக Atomised நாவலை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். பிறகு வெல்பெக் பற்றி இணையத்தில் பீராய்ந்ததில் அவரைப் பற்றி அவருடைய வாசகர் ஒருவர் எழுதியிருந்ததைப் படித்தேன். அதன் இணைப்பை இறுதியில் கொடுத்திருக்கிறேன். தமிழில் மட்டும் ஏன் இப்படி நடப்பதில்லை? என் எழுத்தைக் கொண்டாடும், மிக நன்றாக ஆங்கிலம் எழுதக் கூடிய ஒரு டஜன் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். சட்டென்று ஞாபகத்துக்கு வருவது ராஜேஷ், வெரோனிகா, ஷிவா, ஆஸம் துரைராஜ். இவர்கள் யாரும் இப்படி எனக்காக ஆங்கிலத்தில் ஒரு இணைய தளம் உருவாக்கி மற்றவர்களுக்கு என் எழுத்தை அறிமுகப்படுத்தினால் என்ன? ராஜேஷிடம் கேட்டால் கிண்டல் செய்கிறீர்களா, உங்களுக்கு அறிமுகமா என்பார். டப்ளின் இம்பாக் விருது வாங்கியவருக்கே இப்படி ஒரு அறிமுகம் இணையத்தில் கிடைக்கிறது என்றால் எனக்கு வேண்டாமா ராஜேஷ்? இதற்காக ஒருவர் ஒரே மணி நேரம் செலவு செய்தால் போதும். இதைத்தான் நான் அடிக்கடி சொல்கிறேன். இங்கே எழுத்தாளர்களைக் கொண்டாடத் தெரியவில்லை என்று. சரி, பெண்கள்தான் வேலையில் துடிப்பும், அன்பில் தாராளமும் கொண்டவர்கள். எனவே என் எழுத்தைக் கொண்டாடும் வெரோனிகாவிடம் கேட்டுக் கொள்கிறேன். தமிழ், ஃப்ரெஞ்ச், ஆங்கிலம் என்று மூன்று மொழியும் தெரிந்த நீங்களாவது இது பற்றி யோசிக்க வேண்டும்.