கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…

குமுதத்தில் நான் எழுதிய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் தொடர் இப்போது நூலாக வர இருக்கிறது. தொகுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வாரத்தில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரத்தின் வெளியீடாக வெளிவரும். குமுதத்தில் எழுதினாலும் உயிர்மையில் எழுதினாலும் ஒரே விஷயத்தைத்தான் எழுதுவேன். பின்வரும் கட்டுரை கனவு கேப்பச்சினோ தொடரில் வந்தது.

இதன் முதல் பிரதி யாருக்கும் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

முதல் பிரதிக்கு நீங்கள் செலுத்தக் கூடிய தொகை எவ்வளவு  என்பதை நீங்களே தீர்மானியுங்கள். அடுத்த ஆண்டு நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அநேகமாக மார்ச்சில் சீலே பெரூ செல்வேன். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

தமிழின் மூத்த கவிஞர் அவர். 78 வயது. சென்னையிலிருந்து கிளம்பி கோலாலம்பூரில் உள்ள தன் மகன் வீட்டுக்கு வந்திருக்கிறார். வந்து மூன்று மாதங்கள் இருக்கும். தினமும் காலை ஆறு மணி அளவில் வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு வருவது வழக்கம். அப்படி ஒருநாள் வந்த போது ஒரு குயில் வரேண்யம் வரேண்யம் என்று கூவியது. ஆகா, குயிலுக்கு எப்படி காயத்ரி மந்திரம் தெரிந்தது என்று கவிஞருக்கு ஆச்சரியம். நமக்குத்தான் ஊர் ஞாபகம் வந்துவிட்டது, அதனால்தான் குயிலின் பாட்டெல்லாம் காயத்ரியாகக் கேட்கிறது என்று நினைத்துக் கொள்கிறார். மறுநாளும் குயிலின் வரேண்யம் வரேண்யம். திரும்பவும் உன்னிப்பாகக் கேட்கிறார். சந்தேகமே இல்லை. வரேண்யம் வரேண்யம். மலேஷியத் தலைநகரின் குயில் எப்படி காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க முடியும் என்று யோசித்தபடி வீட்டுக்கு வந்து விடுகிறார். மூன்றாம் நாளும் வரேண்யம் வரேண்யம். அப்போதுதான் அவருக்கு மண்டனமிசிரர் வீட்டுக் கிளி ஞாபகம் வருகிறது. ஆதி சங்கரர் தேச யாத்திரை செய்து கொண்டிருந்த போது மகிஷ்மதி என்ற ஊருக்கு வருகிறார். அந்த ஊரில் வசிக்கும் மண்டனமிசிரர் வீட்டுக்குப் போக வேண்டும். வழியில் இரண்டு கிளிகள் ரிக் வேத மந்திரம் ஒன்றை சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்கிறார். ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத். ரிக் வேதத்தில் வரும் காயத்ரி மந்திரம்.

ரிக் வேதம் யார் எழுதியது? யாருக்கும் தெரியாது. ஆதி மனிதன் சூரியனைத் தொழுதான். அதுதான் காயத்ரி மந்திரம். ஆதி மனிதனுக்கு இயற்கையிலிருந்தே சப்தம் கிடைத்தது. அதுதான் மொழியின் துவக்கப் புள்ளி. மனிதனிடமிருந்து பறவைக்குச் சென்றதா? பறவையிடமிருந்து மனிதன் பெற்றதா? மண்டனமிசிரர் வீட்டுக் கிளி காயத்ரி சொன்னதைப் போலவேதான் கோலாலம்பூர் குயிலும் காயத்ரி சொல்கிறது என்பதை உணர்ந்தார் கவிஞர்.

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்

என்ற பிரபலமான கவிதையை 43 ஆண்டுகளுக்கு முன்னே எழுதிய தமிழின் மூத்த கவியான ஞானக்கூத்தனே கோலாலம்பூர் குயில் காயத்ரி சொல்லக் கேட்டவர். ஞானக்கூத்தனின் சிறப்பு என்னவென்றால், இலக்கியப் பரிச்சயமே இல்லாத சராசரி மனிதருக்கும் அவர் கவிதை புரியும். அதே சமயம் சங்கக் கவிதைகளின் இன்றைய தொடர்ச்சியாகவும் வாரிசாகவும் அவரை நாம் பார்க்க முடியும். அவர் கவிதையில் சந்தம் இருக்கும். தாலாட்டு போல, அல்லது மலையடிவாரத்தில் தவழும் தென்றல் போல நம் உணர்வுகளை வருடும் அவர் கவிதைகள் அதே சமயம் பாலைவனப் புயலாய் நம் சிந்தையையும் உலுக்கக் கூடிய ஆற்றல் படைத்தவை.

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீ பட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு
ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்
மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்
கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்
காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான் அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்
யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்
நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு

ஸ்ரீலஸ்ரீ என்ற இந்தக் கவிதையை ஞானக்கூத்தன் எழுதிய ஆண்டு 1971. எந்த விஷயமும் வெறுமனே வித்தையாகவும் சடங்காகவும் மாறினால் என்ன ஆகும் என்பதை உணர்த்தும் கவிதை. வாய் விட்டுப் படித்துப் பாருங்கள். லயம் தெரியும்.