ரிஷி மூலம்

இப்போதைய எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் நீண்ட நேரம் யோசிக்க வேண்டியிருக்கும்.  அந்த அளவுக்கு சமகாலத் தமிழ் எழுத்து சோர்வடையச் செய்வதாக உள்ளது.  இருந்தாலும் நல்ல எழுத்து வரும் போது நான் அதைப் படிக்கத் தவறுவதில்லை.  அப்படி நான் வேண்டி விரும்பிப் படிக்கும் ஒருவர் தேவி பாரதி.  அவருடைய காந்தி என்ற நீண்ட சிறுகதையை காலச்சுவடில் படித்த போது அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினேன்.  அவருடைய கிராமமான வெங்கரையாம்பாளையத்துக்கு நேரில் சென்று அவரோடு தங்கியிருந்து நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். 

“ஆத்துக்குப் போவும்போது நீங்க யாருன்னு கேட்டா உடனே வாத்தியார் வீடுன்னு சொல்லிடுங்க, இல்லேன்னா அடிச்சுப் போட்ருவானுங்க” என்று அவர் சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது.  Xenophobia என்பது தமிழர்களின் வியாதிகளில் ஒன்று. அதுவும் கிராமங்களில் சொல்லவே வேண்டாம்.

தினம் ஒன்று என்ற ரீதியில் தொலைக்காட்சி சேனல்கள் ஆரம்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இந்த நிலையில் 24 நேரமும் செய்திகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செய்தி சேனல்கள் வேறு.  அதனால் தமிழ்நாட்டில் கடுமையான விஐபிக்கள் பஞ்சம் நிலவுகிறது.  சேனல்காரர்களும் விஐபிக்களை வலை வீசித் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஃபேஸ்புக்கில் நாலு போஸ்ட் போட்டு விட்டாலே அவர்களை சிறப்பு விருந்தினராக பிரபலமான டாக் ஷோக்களில் பார்க்க முடிகிறது.  இந்த நிலையில் அடியேனையும் ஒரு விஐபியாகக் கருதி தினமுமே சேனல்களில் பேசச் சொல்லி அழைப்புகள் வருகின்றன.  இதிலிருந்து தப்பிக்க நான் கண்டு பிடித்த ஒரு சிறந்த வழி, காசு கேட்பது.  பேசினா காசு தருவீங்களா?  அப்படிப் பழக்கம் இல்லியே சார்.  ஓ, அப்படியா, நானும் காசு வாங்காம பேசுறது பழக்கம் இல்லீங்க.  சரி சார், தேங்க்ஸ்.

சுலபம்.  ஆனால் தேவி பாரதி கேட்ட போது அப்படிச் சொல்லவில்லை.  எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் அந்த இடம் சிறக்கும் என்று நம்புபவன் நான்.  அதற்கு தி இந்துவே சாட்சி.  அடித்துப் பட்டையைக் கிளப்புகிறார்கள்.  வஞ்சிரம் மீன் பற்றியெல்லாம் தலையங்கம் வருகிறது.  ஆனால் அமெரிக்க வஞ்சிரம்தான்.  இன்னும் இந்து இந்திய வஞ்சிரத்துக்கு வராவிட்டாலும் உயிர்மையையும் காலச்சுவடையும் ஒரு தினசரியாகப் பார்க்கும் போது எனக்கு எல்லையற்ற சந்தோஷம் உண்டாகிறது. 

புதிய தலைமுறை சேனலில் பல இலக்கியவாதிகள் உள்ளனர்.  அது அந்த சேனலின் நிகழ்ச்சிகளிலிருந்தே தெரிவதாக நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  (என்னிடம் டிவி கிடையாது).  புதிய தலைமுறையிலிருந்து புது யுகம் என்று ஒரு புதிய சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அதில் ஒரு புதிய நிகழ்ச்சி ரிஷி மூலம்.  அதன் முதல் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன்.  படப்பிடிப்பின் போது தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான நிகழ்ச்சியான நீயா நானாவுக்கு சரியான போட்டி என்று நினைத்துக் கொண்டேன்.  நிகழ்ச்சியைத் தொகுத்தவர் விருமாண்டி ஹீரோயின் அபிராமி.  தமிழ் பிரமாதமாகப் பேசுகிறார். கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லை. மேட்டுக்குடிப் பெண்கள் அப்படித் தமிழ் பேசி நான் பார்த்ததில்லை என்பதால் எப்படி இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறீர்கள் என்று கேட்டேன். சிரித்துக் கொண்டே நான் மலையாளி என்றார்.  என் ஆச்சரியம் இன்னும் அதிகமாயிற்று.  மலையாளிகள் எவ்வளவு நன்றாகத் தமிழ் பேசினாலும் அவர்களின் உச்சரிப்பில் மலையாள ஈரம் தெரியும்.  உத்தமத் தமிழ் எழுத்தாளர் ஒரு உதாரணம்.  அவருடைய தமிழில் அந்த ஈரம் அதிகமாகவே இருக்கும்.  நிகழ்ச்சியை மிக சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிராமி.  முதல் நிகழ்ச்சியிலேயே கோபிநாத் அளவுக்குத் திறமையாகச் செய்தது பாராட்டுதலுக்குரியது.  இந்த முதல் நிகழ்ச்சி இளைஞர்கள் பொறுப்பவர்கள் என்று பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறதே, அது சரியா? தவறா?  நான் “பொறுப்பற்றவர்கள்” என்ற பகுதியில் அமர்ந்திருந்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.  அது politically correct நிலைப்பாடு அல்ல.  ஆனால் நான் எப்போதுமே political correctness பற்றிக் கவலைப்படுவது கிடையாது.  நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளன் நான் என்பதிலிருந்து உங்களுக்கு அது தெரிந்திருக்கும். 

ரிஷி மூலம் இன்று இரவு பத்து மணிக்கு புது யுகம் சேனலில் ஒளிபரப்பாகும்.   

Comments are closed.