தீபாவளி வாழ்த்துக்கள்…

நாம் மேற்கத்திய நாகரீகத்தை அரைகுறையாகக் காப்பியடித்துப் பின்பற்ற ஆரம்பித்ததிலிருந்து வாராவாரம் சனிக்கிழமை செய்யும் எண்ணெய்க் குளியலை அடியோடு மறந்து போனோம்.  ஒரு ஆடவனுக்கு இளமையில் தாயும், பிற்பாடு தாரமும் எண்ணெய்க் குளி செய்விப்பார்கள்.  இதில் ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.  தலைக்கு செமத்தியான மஸாஜ் கிடைத்தது.  தலைக்கு மஸாஜ் செய்து கொள்வது தேக நலத்துக்கு எவ்வளவோ நல்லது.  இதையெல்லாம் நம் முன்னோர் ப்யூட்டி பார்லர் வைத்து மஸாஜ் செய்து கொள்ளவில்லை.  தானாக, வெகு இயல்பாகவே அது நம்முடைய அன்றாட வாழ்வினூடாகவே நடந்து கொண்டிருந்தது.  நல்லெண்ணையை சுட வைத்து பிறகு அது பக்குவமாக ஆறியதும் இளம் சூட்டுடன் தலையில் வைத்துத் தேய்ப்பாள் அம்மா.  நல்லெண்ணையை வெறுமனே சுட வைக்கக் கூடாது.  வீட்டுக் கொல்லைப்புறத்தில் செடிகளோடு செடியாக ஓடிக் கொண்டிருக்கும் வெற்றிலை ஒன்றைப் பறித்து அதையும் நல்லெண்ணையோடு போட வேண்டும்.  கூடவே ஒரு தேக்கரண்டி ஓமத்தையும் போட்டுச் சுட வைத்துத் தேய்த்துக் கொண்டால் எண்ணைய்க் குளியால் ஏற்படும் ஜலதோஷம் போன்ற பிரச்சினைகள் இருக்காது.  உடம்பும் குளிர்ச்சி அடையும்.  ஓமம் என்பதெல்லாம் இப்போது நம் வாழ்வில் இல்லாமலே போய் விட்டது இல்லையா? 

எண்ணெய்க் குளியலால் நமக்குக் கிடைத்த மற்றொரு நன்மை என்னவென்றால், ஆண்களுக்குப் பெண்களின் ஸ்பரிஸம் கிடைத்தது.  என்னைப் பெற்றெடுத்து, தன் முலைப்பால் கொடுத்து வளர்த்த என் தாயின் ஸ்பர்ஸத்தை பதின் பருவத்திலும் நான் அனுபவித்திருந்த காரணத்தால் பெண்ணின் தேகம் என்பது ஒரு மாயப் புதிராக எனக்குள் சேகரம் ஆகியிருக்கவில்லை.  என்னால் வெகு இயல்பாக பெண் என்ற இன்னொரு சக மானுட ஜீவியை எதிர்கொள்ள முடிந்தது.  இதில் பல்வேறு உளவியல் விஷயங்கள் உள்ளன.  நீங்களே யோசித்துப் பாருங்கள்.   

நான் மைலாப்பூரில் குடியிருப்பதற்கு முக்கியமான காரணம் இதெல்லாம்தான்.  இந்த இடத்தில் மட்டும்தான் 1950-இல் வாழ்ந்தது போலவே வாழ முடிகிறது.  எனக்குத் தெரிந்து கடற்கரை ஓரமாக – அதாவது, சென்னையின் கிழக்குப் பகுதியில்  வாழ்ந்த  எல்லா எழுத்தாளர்களுமே மேற்குப் பகுதிக்கோ அல்லது இன்னும் தூரமாக திசையே சொல்ல முடியாத மடிப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கோ குடியேறி விட்டார்கள்.  ஞாநி சென்னையின் இதயப் பகுதியில் – ராயப் பேட்டை, அதிலும் மவுண்ட் ரோடின் பின்பக்கம், புதுக் கல்லூரியின் எதிரே – பல ஆண்டுகள் இருந்தார்.  பிறகு திருவான்மியூர்  சென்றார்.  அதுவும் கடற்கரைதான்.  ஆனால் பிறகு கே.கே. நகர் என்ற இடத்துக்குப் போய் விட்டார்.  ஞாநியோடு எனக்கு எத்தனையோ கருத்து முரண்பாடுகளும் அதே சமயம் அன்பும் உண்டு.  ஆனால் அவர் கே.கே. நகர் போனதை என்னால் மன்னிக்கவே முடியாது.  அதிலும் திருவான்மியூரில் சொந்த வீட்டை விற்று விட்டுப் போனார்.  கொடுமை.  கொடுமை.  அந்தக் கடல் காற்றை கோடி ரூபாய் கொடுத்தாலும் கே.கே. நகரில் பெற முடியுமா ஞாநி? 

இப்படி கடல் பக்கத்திலிருந்து மேற்குத் திசை நோக்கி நகன்ற இன்னொருவர் ந. முத்துசாமி.  மவுண்ட் ரோட்டிலேயே தான் அவர் வீடு இருந்தது. கலைவாணர் அரங்கத்து எதிரே.  அங்கே அவர் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு புராதனமான சினிமா தியேட்டர் கூட இருந்தது.  பெயர் மறந்து விட்டது.  அவர் இருந்த அந்த வீடு எழுத்து கால கட்டத்து எழுத்தாளர் ஒருவர் வாழ்ந்த வீடு.  பெயர் மறந்து விட்டது.  அவர் தான் அதை ந.முத்துசாமிக்குக் கொடுத்ததாக முத்துசாமி ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார்.  பல ஆண்டுகள் அந்த வீட்டில் வாழ்ந்த முத்துசாமி சின்மயா நகருக்குப் போய் விட்டார்.  கலைவாணர் அரங்கம் ஒரு துருவம் என்றால் சின்மயா நகர் இன்னொரு துருவம். 

இதேபோல் அசோகமித்திரன் தி. நகரில் இருந்தார். சொந்த வீடுதான்.  ஆனால் அவரும் அங்கிருந்து மடிப்பாக்கம் போய் விட்டார்.  இதெல்லாம் அவர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்த இடம்.  நான் தில்லியில் இருந்த போது வருடத்துக்கு ஒருமுறை தமிழ்நாடு வரும் போது அசோகமித்திரனைத் தவறாமல் பார்த்து விடுவேன்.  அந்த வீடே அற்புதமாக இருக்கும்.  தி. நகர் பஸ் நிலையத்துக்கு எதிரே தான் என்றாலும் அவர் தெரு மட்டும் எந்த சத்தமும் இல்லாமல் நிசப்தமாக இருக்கும்.  ஒரு பெரிய இடத்தின் நடுவே தனியாக ஒரு வீடு.  சுற்றி வர நிறைய இடம்.  அவர் வீட்டில் நான் போகும் போதெல்லாம் ஒரு பூனை இருக்கும்.  அந்தப் பூனையோடு அவர் பேசிக் கொண்டிருப்பார்.  எனக்கு அப்போது வயது 27 அல்லது 28 இருக்கும்.  அப்போது அவர் ஆஸ்த்மா பிரச்சினையால் ரொம்பவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலம்.  அவரும் மடிப்பாக்கம் போய் விட்டார். 

அடுத்தது சி. மோகன்.  கடற்கரை அருகிலேயே அதுவும் மைலாப்பூரிலேயே வாழ்ந்தவர்.  அவரும் சின்மயா நகர் போய் விட்டார்.

நான் பிறந்ததிலிருந்தே ஊரின் மேற்குக் கோடியில் வாழ்ந்தவன்.  சென்னையிலும் சின்மயா நகரில்தான் பல ஆண்டுகளைக் கழித்தேன்.  அது ஒரு நரகம்.  அதனால்தான் பிடிவாதமாக மைலாப்பூர் வந்து விட்டேன்.  இனிமேல் எக்காரணம் கொண்டும் இங்கிருந்து நகர்வதாக இல்லை.  வீட்டைச் சுற்றிலும் அவ்வளவு நாட்டு மருந்துக் கடைகள் இங்கே உண்டு.  “உலகப் புகழ்” பெற்ற டப்பாச் செட்டிக் கடையும் இங்கேதான் இருக்கிறது.  நாட்டு மருந்துகளை விற்ற செட்டியார் டப்பா டப்பாவாக மருந்துகளை வைத்திருந்ததால் அவர் பெயரே டப்பா செட்டியாக மாறி விட்டது.  இப்போது அவருடைய புதல்வர்கள் ஒரு கடையை மூன்று கடையாக பாகம் பிரித்து விட்டார்கள்.  கடை மூன்றாக இருந்தாலும் மூவரின் முகங்களும் அச்சில் வார்த்தது போல் ஒரே சாடைதான். மூத்தவர் மட்டும் கொஞ்சம் சிடுமூஞ்சி.   

உங்கள் ஏரியாவிலும் நாட்டு மருந்துக் கடைகள் இருக்கும்.  ஓமத்தை வாங்கி நல்லெண்ணையில் வெற்றிலையைப் போட்டு சூடு பண்ணி ஆற வைத்துத் தேய்த்துக் குளியுங்கள்.  உடல், மன ஆரோக்கியத்துக்கு நல்லது.

இதை சம்ஸ்கிருதத்தில் அப்யங்கம் என்று சொல்வார்கள். நான் கடந்த பத்து ஆண்டுகளாக இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்து கொண்டிருக்கிறேன்.  ஒரே ஒரு சமரசம்தான்.  அப்யங்கம் செய்து விட்டு மது அருந்தக் கூடாது என்பதால் புதன் கிழமை, சனிக் கிழமைகளில் திடீரென்று யாரேனும் அழைத்தால் செல்வதில்லை.  இதைத் தொடர்ந்து செய்து வருவதால்தான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு குடிக்க முடிகிறது.  இல்லாவிட்டால் நான் சாப்பிடும் இஞ்சிக்கு நாக்கெல்லாம் வெந்து விடும். 

இஞ்சிச் சாறு ஐந்து மணிக்குக் குடித்து விட்டு, ஆறு மணிக்கு வேப்பிலைச் சாறும் மஞ்சள் பொடியும் ஒவ்வொரு கிளாஸ் அருந்துகிறேன்.  ஒரு தேக்கரண்டி வேப்பிலைப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது, உடனே மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து அதையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விடுவது.  வேப்பிலைப் பொடியைக் குடிக்கும் போது குமட்டிக் கொண்டு வரும்.  இருந்தாலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேப்பிலை ஒரு அருமருந்து என்பதால் சகித்துக் கொண்டு குடித்து விடுவேன்.  பிறகு ஏழு ஏழரை வாக்கில்தான் அட்டகாசமான ஒரு ஃபில்டர் காஃபி. 

நான் சொன்ன முறையில் நாளை எண்ணெய் ஸ்நானம் செய்யுங்கள்.  அதோடு விட்டு விடாமல் வாரம் ஒருமுறையாவது அதைத் தொடருங்கள்.  வாழ்த்துக்கள்.     

Comments are closed.