பற்று… பற்று அற…: செல்வகுமார் கணேசன்

தேசம், மொழி, இனம், மதம் – இவற்றின் மீது சாருவின் பற்றற்ற தன்மை நமக்குத் தெரியும். இவற்றை முன்னிட்டு மனிதன் வேறுபடக்கூடாது என்பதே அவர் எழுத்தின் அடிப்படை.

அதேசமயம், மொழியின் சிதைவை, பிரதேசத் தனித்தன்மைகளின் சிதைவை, பழைமை கலாச்சாரங்களை மறப்பதை அவர் கண்டித்தும், சுட்டிக்காட்டியும் வருகிறார். உதாரணமாக தீபாவளி வாழ்த்துகள் கட்டுரையில் அவர் சுட்டுகிற விஷயங்களை சற்றே கவனித்தால் இது புரியும்.

நான் நீண்ட காலம் இதை முரண் என்றேக் கருதி வந்திருக்கிறேன். மொழிப்பற்று இல்லாதவன் மொழிச்சிதைவை ஆதரிக்கத்தானே வேண்டும் என்றும், நாட்டுப்பற்று இல்லாதவன் நாடுகள் அழிவதை உவப்பாக கருதுவான் என்றும் ஒரு சமயம் கருதியிருக்கிறேன்.

சகலருக்கும் பீட்சாவும், ஜீன்சும், பெப்சியும் கிட்டுவதே உலகின் உன்னத சுபிட்சம் என்று நான் கருதிய காலங்களில், கூழும், இளநீரும், கள்ளும் எவ்வளவு அற்புதம் என்று எழுதுவார். (எழுத்தில் இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாக அனுபவிப்பார்) இது போன்ற புரிதல்களின் மூலமே சாருவை முக்கியமானவராக கருதவும், அவருடனான நட்பில் பொருந்தியிருக்கவும் முடிகிறது.

வெறி இல்லாமல், எதிலிருந்து நாம் விலகி நின்று கவனிக்கிறோமோ அப்போதுதான் சரியாக புரிந்துகொள்ள முடியும் என்பது சாருவின் எழுத்தில் எனக்கு பாலபாடம். நம்மை தமிழ் மொழி வெறியர்கள் என்று வைத்துக் கொள்வோம். தமிழின் எந்த நல்ல விஷயமும் நம் கண்ணில்படாது. தமிழின் உச்சங்களை தரிசிக்க முடியாமல், எந்த மொழியிலாவது ‘ழ’ இருக்காடா என்று கருவிகொண்டிருக்க வேண்டியதுதான். ஒரு முறை தாம்பரம் அருகில் இருக்கும் 600 வருடங்கள் பழமையான கோயிலுக்கு என் நண்பர் அழைத்துச் சென்றிருந்தார். சிவலிங்க மூலவர், கைப்பிடி அளவுதான் இருப்பார். பசுமாடு மிதித்த தடம் தெரியும் வகையில், லிங்கத்தின் மேல் காயம் இருக்கும். அந்த கோயிலைச் சுற்றித் தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் அழகிய வேலைபாடுகளில் மிளிரும். அந்த கோயில் தொல்லியல் துறையின் கீழ் உள்ளதால், எந்தச் சிலையையும் வழிபாடு என்ற பெயரில் சிதைக்க அனுமதி இல்லை. ஆணி அடித்து மாலை சாற்ற முடியாது. வெண்ணை, மசி போன்ற எண்ணை, கற்பூர புகை இவற்றை வைத்து அழுக்கு செய்ய முடியாது. ஆனால், நண்பர் இவ்வாறு செய்து வழிபட முடியவில்லையே என்று வருந்தினார். வழிபடுகிறேன் என்ற பெயரில் இவர்கள் சிற்பத்தை அழுக்காக்கி, பூஜை என்ற பெயரில் அதை மூடியே வைத்திருப்பார்கள். ஆனால், தொல்லியல்துறை அனுமதிக்காததால் நாம் கண்குளிர சிற்பங்களை கண்டுகளிக்க முடிகிறதே என்று நினைத்துக் கொண்டேன். வழிபாடுகள் நம்மை கொண்டு செல்லும் இடம் இதுவே.

எந்த அற்புதங்களையும் நம் மீது அதிகாரம் செலுத்த அனுமதிக்காமல், அதேசமயம் அந்த அற்புதங்களை அனுபவிக்க கற்றுகொள்வதே வாழ்க்கை. மாறாக, அற்புதங்களை சிதைத்து, அவற்றை இல்லாமல் ஆக்கி சூன்யத்தை உருவாக்குவது அல்ல.

இப்போது தங்லிஷில் எழுதுவது எவ்வளவு சுலபம், ஏன் செய்யக்கூடாது என்று இன்னொரு எழுத்தாளர் கேட்கிறார். செய்யுங்கள். தமிழ் என்று ஒரு மொழியே இல்லாமல் போனால்தான் என்ன? தன்னை மொழித்திறன் மிக்க தமிழ் எழுத்தாளன் என்று பெருமையுடன் பேசிகொண்டிருந்தவரின் வீழ்ச்சியாகவே இதைப் பார்க்கிறேன்.

செல்வகுமார் கணேசன்

goodlandsurveys@gmail.com

Comments are closed.