அறம் தொலைத்த சமூகம் (1)

பொதுவாக நான் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களிடம் பேசுவதில்லை; பழகுவதும் இல்லை.  அந்த விதியை மீறினால் எனக்கும் பிரச்சினை; அவர்களுக்கும் பிரச்சினை.  என்ன பிரச்சினை?  ஒரு சில உதாரணங்களைச் சொல்கிறேன்.  20 ஆண்டுகளுக்கு முன்பு என் தங்கை கேட்டாள், ”ஏன்ணே இன்னும் வீடே வாங்கல?”  இந்தத் தங்கையையே நான் ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பார்க்கிறேன்.  முதல் கேள்வியே இதுதான்.  கடைசிக் கேள்வியும் அதுதான்.  அதற்கு மேல் அவளை நான் சந்திக்கவே இல்லை.  இந்தக் கேள்வியில் என்ன தவறு என்று உங்களுக்குத் தோன்றலாம்.  ஆனால் எனக்கு இது தவறு மட்டும் அல்ல; கோவணத்தை உருவி நிர்வாணப்படுத்தும் செயல்.  ஏனென்றால், எழுத்தாளன் என்பவன் துறவி என நம்புபவன் நான்.  குறைந்த பட்சம் நான் அப்படித்தான்.  இதுகூடத் தெரியாமல் என்னிடம் பேசலாகாது.  அதுவும் என் தங்கை.  சரி, ஒரு பெண்ணைப் பார்த்து நான் ஏம்மா நீ விபச்சாரம் செய்யக் கூடாது என்று கேட்கலாகுமா?  அப்படிப்பட்டதுதான் அந்தக் கேள்வியும்.  ரமண மகரிஷியிடம் போய் ஒருவர் ”ஏன் சாமி, கோமணத்தோடு அலைகிறீர்கள்; ஒரு கோட்டு சூட்டு அணிந்து கொள்ளலாகாதா?” என்று கேட்டால் அவனை என்னவென்று சொல்வது?  அதே மாதிரிதான் ஒரு எழுத்தாளனிடம் போய் ”ஏன் நீங்கள் வீடு வாங்கவில்லை?” என்று கேட்பதும்.    அதாவது சராசரி மனிதர்களுக்கு பணம் சம்பாதிப்பதும் சம்பாதித்த பணத்தில் வீடு கட்டுவதும்தான் வாழ்க்கையின் அர்த்தம்.  என் தம்பி தங்கைகளுக்கு ஆளுக்கு நாலு வீடு இருக்கிறது.  அதைப் பற்றி நான் கேள்வி கேட்டேனா?  விமர்சித்தேனா? இன்னும் நாலு வீடு கூடக் கட்டிக் கொள்ளுங்கள்.  அது உங்கள் விருப்பம்.  ஆனால் என்னிடம் வந்து உங்களுடைய மதிப்பீடுகளைத் திணிப்பதும் இரக்கப்படுவதும் அயோக்கியத்தனம்.

ஒருவனின் காலையையும் கையையும் கட்டிப் போட்டு விட்டு ஓடு ஓடு என்று சொன்னால் அவன் எப்படி ஓடுவான்?  வீடு வாங்குவதற்கு எழுத்தாளனுக்கு ஏது காசு?  நேற்று நடந்த ஒரு விஷயத்தைக் கேளுங்கள்.  வரப் போகும் என்னுடைய புத்தகத்துக்கு என் பதிப்பக நண்பர்கள் இருவரும் விலை நிர்ணயம் செய்து கொண்டிருந்தார்கள்.  200 பக்க புத்தகம்.  இது போன்ற விஷயங்களில் நான் மூக்கையே நுழைப்பதில்லை.  ஒருத்தர் சொன்னார், 200 ரூ போடலாம்.  இன்னொருத்தர், வேண்டாம், 150 போடலாம் என்றார்.  என் மனதுக்குள் 350 என்று ஓடியது விலை.  வாயையே திறக்கவில்லை.  எதற்கு வம்பு?  எத்தனை பிரதிகள் தெரியுமா?  200.  மற்ற பதிப்பகங்களில் 50!!!  விற்க விற்கப் போடுவார்கள்.  Print on demand.  ஆனால் எப்போதுமே புத்தகங்களுக்கு டிமாண்ட் இருப்பதில்லை.  சூழல் இப்படி இருந்தால் சங்க காலப் புலவனைப் போல் எழுத்தாளன் வாழ்நாள் பூராவும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.  இல்லாவிட்டால் இயக்குனர் ஷங்கரை ஷேக்ஸ்பியர் கம்பர் என்று புகழ்ந்து அவருடைய அடுத்த படத்துக்கு வஜனம் எழுதலாம்.  வஜனம் எழுதினாலும் யாரும் முழுசாகக் காசு கொடுப்பதில்லை என்பது பொதுஜனத்துக்குத் தெரியாது.  அஞ்சு லட்சம் பேசி விட்டு அரை லட்சம் தருவார்கள்.  எனக்கு ஷங்கரைத் தெரியும், ரஜினியைத் தெரியும் என்று சொல்லிக் கொள்ளலாம்.  அவ்ளோதான்.  ஒரு பிரபலமான இயக்குனரின் மிகப் பிரபலமான படத்தின் வசனத்தை ஒரு நண்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தார்.  அந்தப் படத்தின் இந்தி வடிவத்துக்காக.  பேசப்பட்ட ஊதியம் ஒரு லட்சம்.  அந்த நண்பர் நேர்மையான ஒரு அரசு அதிகாரி.  அரசு அதிகாரி என்றால் அஞ்சு ஆயிரத்துக்கு ஒரு பொருள் வாங்கினாலும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.  இன்னும் பிரிட்டிஷ் காலத்து சட்டத்தையே வைத்துக் கொண்டு மாரடிக்கிறான்கள்.  அதை விடுங்கள்.  இந்த நண்பர் இந்த விஷயத்தை அரசுக்குத் தெரியப்படுத்தினார்.  சரி.  மொழிபெயர்த்தும் கொடுத்து விட்டார்.  காசு வரவில்லை.  500 கோடி ரூபாயோ என்ன எழவோ பட்ஜெட் படம்.  ஆனால் வேலை செய்தவருக்குப் பேசிய ஒரு லட்சம் வரவில்லை.   நண்பரும் தொலைங்கடா என்று விட்டு விட்டார்.  ஆனால் அரசாங்கம் விடவில்லை.  யோவ், ஒரு லட்சம் சம்பளம் வாங்கப் போகிறேன் என்று சொன்னாயே, வாங்கி விட்டு ஏன் அதைச் சொல்லவில்லை; துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கலாமா என்று தாக்கீது.  இவர் அடித்துப் பிடித்துக் கொண்டு இன்னும் பணம் கைக்கு வரவில்லை என்று சொல்ல, மேலிடத்திலிருந்து வாரா வாரம் வாங்கினாயா, இல்லையா, ஏன் இன்னும் விவரம் சொல்லவில்லை என்று டார்ச்சர்.  என் நண்பரான அதிகாரி இயக்குனரின் காரியதரிசியிடம் எங்கேம்மா காசு என்று கேட்கிறார்.  அதை அக்கவுண்ட்ஸில்தான் கேட்க வேண்டும்.  சரி, அக்கவுண்ட்ஸ் நம்பர் குடுங்க.  அதிகாரி அக்கவுன்ட்ஸில் பேசுகிறார்.  சார், இயக்குனர் ஒன்னும் சொல்லல.  அவர் சொல்லாம எங்களால எதுவும் சொல்ல முடியாது.

அதிகாரியான என் நண்பர் மீண்டும் இயக்குனரின் காரியதரிசிக்கு போன்.  அம்மா, நான் இயக்குனரிடம் பேச வேண்டும்.  சினிமாத் துறையில் இயக்குனரிடம் பேச நினைப்பது கடவுளிடம் பேசுவதைப் போல.  முடியுமா?  அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சியாகி விட்டது.  சாஆஆஆஆஆஆர்… டைரக்டரிடமெல்லாம் பேச முடியாது சாஆஆஆஆஅர்…

ஹலோ, நான் யார் தெரியுமா?  பி.எம்.ஓ.விலிருந்து பேசுகிறேன்.  டைரக்டர்கிட்ட நான் பேசணும்னு சொன்னேன்னு சொல்லுங்க.

பி.எம்.ஓ.ன்னா என்ன சார்?

ப்ரைம் மினிஸ்டர்’ஸ் ஆஃபீஸ்.  நான் இங்கே ஆஃபிஸர்.

(நண்பர் பொய் எதுவும் சொல்லவில்லை.  அப்போது அவர் பி.எம்.ஓ.வில் அதிகாரியாகத்தான் இருந்தார்.)

அப்புறம்தான் இயக்குனர் பேசியிருக்கிறார்.  எத்தனை வார்த்தை தெரியுமா?  நாலு வார்த்தை.  சார், பேமண்ட் எல்லாம் என் பார்வையில வராது.  ப்ரொட்யூசர் கிட்ட சொல்றேன்.

இந்த ஒன்பது வார்த்தைகள்தான்.  பிறகு ஒருவழியாக பணம் வந்ததாம்.  இதுதான் சினிமாத் துறை.

எனக்கெல்லாம் ஒத்து வராது.  பைத்தியம் பிடித்து விடும்.

சரி, மெய்ன் விஷயத்துக்கு வருவோம்.  150 ரூ விலை வைத்து, 200 பிரதி அச்சிட்டு விற்றால் எழுத்தாளன் பிச்சைதான் எடுக்க வேண்டும்.   இல்லாவிட்டால் அவனுக்கு இருக்கும் ஒரே இடம் சினிமா.  அங்கேயும் கூலி வாங்குவதற்கு ப்ரைம் மினிஸ்டர் வரை சிபாரிசுக்குப் போக வேண்டும்.  ஆனால் இந்த மேம்பட்ட சமூகம் மற்ற விஷயங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா?

இன்று காலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் என் நண்பர்கள் கைகளில் கத்தை கத்தையாக ஏதோ டாலர் நோட்டு போல் பார்த்தேன்.  என்ன இது ஜென்மங்கள், டாலரை இப்படிக் கத்தை கத்தையாக வைத்துக் கொண்டு அலைகிறதுகள் என்று பார்த்தால் இன்றைய கிரிக்கெட் மேட்ச் டிக்கட்டாம்.  ஒரு டிக்கட் என்ன விலை என்று கேட்டேன்.  அதோடு நிறுத்தியிருக்கலாம்.  ஒரு டிக்கட் என்ன விலை நூர் ரூவாயா என்று கேட்டுத் தொலைத்து விட்டேன்.  எல்லோரும் என்னை அடிக்காத குறை.  ஒரு டிக்கட் 2500 ரூபாயாம்.  ஒவ்வொருத்தரும் அஞ்சு ஆறு வைத்திருந்தார்கள்.  நாலு பேர் பார்த்தால் பத்தாயிரம்யா என்றேன்.  சீச்சீ, அதோடு போகாது; உள்ளே தண்ணி பாட்டில் எதையும் விட மாட்டான்.  அதுக்கு வேறு ரெண்டாயிரம் ஆவும்.

அடப் பாவிகளா, கிரிக்கெட் மாட்ச் பார்க்க 12000 ரூபாய் செலவு செய்வீர்கள்.  ஆனால் புத்தகம் வாங்க 150 ரூ செலவு செய்ய மாட்டீர்கள்?  கேட்டால் உங்கள் புத்தகம் கிடைக்கும் பதிப்பகத்தில் புக்ஸ் வெலை கூடுதலா இருக்கு?  அடக் கடவுளே!

சரி, ஆரம்பித்த இடத்துக்கு வருவோம்.  ஏன்ணே வீடு வாங்கலெ?  வீடு பணம் வீடு பணம் வீடு பணம்.  இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.  நல்லது.  அதோடு நிறுத்திக் கொள்ளுங்களேன்.  ஏன் ரமணரிடம் போய் கோட்டு சூட்டு போடவில்லை என்று கேட்கிறீர்கள்?

யோவ் நீர் ரமணரா?

ரமணர் மகான்.  நான் தெருவில் திரியும் நாடோடி.  ஆனால் வாழ்க்கை முறை ஒன்றுதான்.  ஒரு துறவியைப் போலவே எனக்கும் குடும்பம் கிடையாது.  உறவு கிடையாது.  பணம் கிடையாது.  வீடு கிடையாது.

நைனா செத்துட்டாங்கண்ணே.

அப்டியா சரி, எப்போ பாடி எடுக்கிறாங்க?

ரெண்டு மணி.

ஓ.  நான் ஒரு பத்திரிகைக்கு அவசரமா எழுதிக்கிட்டு இருக்கேன்.  முடிக்கவே ரெண்டு மணி ஆய்டும்.  வந்து சேர மூணு மூண்ரை ஆகும்.  பாடிய எடுத்துடுங்க.

இப்படி பதில் சொன்னவன் நான்.  ஏனென்றால், என் கட்டுரைக்காக ஐந்தாறு பக்கங்களை காலியாக விட்டு வைத்திருந்தார் ஆசிரியர்.  பத்திரிகை அன்றைய மாலையே அச்சுக்குப் போக வேண்டும்.

மேற்படி விஷயத்தை நான் நூறு முறை எழுதி விட்டேன்.  எழுதியும் அதைப் படிக்காமல் மீண்டும் மீண்டும் வந்து மோதி மண்டை உடைபடுகிறார்கள் நண்பர்கள்.  இப்போது ஒரு நண்பர் வந்து மோதியிருக்கிறார்.  கீழே உள்ள இரண்டு கடிதங்களையும் – முக்கியமாக அவை எழுதப்பட்ட தேதிகளையும் கவனியுங்கள்.

Dear Charu,

Hope your doing good. Long time no talk. I’ve started reading your articles in dinamalar every Monday. Still the fan. I know we talked about translating some more of your work.

After finishing Marginal man I want to translate your kamaroopa kadhaigal. I know your style so I wont make an ‘academic translation’. I think you know that.  But this time I am going to ask for something in return. Please let me know if you are interested.

Also please tell me how was the reception for the ——————. Was there any favorable reviews on my translation? I don’t know. Would love to know. I put my best efforts for that. I think you know that too.

Thank you and wishing you the very best as always.

Raghu

27 March 2019

***

So you dont even want to ask me what I want? Thats what you want to do me as a return favor?

It’s OK. May be thats what a lifetime of rejection has made you into. Otherwise I know Charu to be a good and kind person. But this has ended our relationship in a note where I am the one who did a favor and you owed me one. That’s what I like about Americans/Europeans. The moment you help them out with something they wont just say thanks. They will say ‘I owe you one’

Now you will die owing me one if you dont come back. May be that’s what you want.

Good luck. And see you on the other side

Raghu

3 April 2019

தொடரும்…

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai