விழா : சிறுகதை

என்னுடைய வாசகர் வட்டத்தின் உள் அமைப்பில் உள்ளவர் அந்த நண்பர்.  பெயர் ராஜா என்று வைத்துக் கொள்வோம்.  ஜனவரி இறுதியில் போன் செய்தார்.  மார்ச்சில் எங்கள் நிறுவனத்தின் திறப்பு விழா உள்ளது;  நீங்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டார்.  ஏதோ ஒரு தேதி சொன்னார்.  21 என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  காலண்டரைப் பார்த்தேன்.  அந்தத் தேதியில் வேறு எதுவும் நிகழ்ச்சி இல்லை.  சரி, வருகிறேன்; ஆனால் ஒரு விஷயம் ராஜா என்றேன்.  என்ன சாரு?  எனக்குப் பல ஆண்டுகளாகக் கிடைத்துக் கொண்டிருந்த பண உதவி நின்று விட்டது.  இனிமேல் என் லௌகீக வாழ்க்கையை நானேதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அதனால் எந்த விழாவுக்குப் போனாலும் பத்தாயிரம் ரூபாய் கேட்டு வாங்குகிறேன்; உங்களால் தர இயலுமா என்று கேட்டேன்.  அதுக்கென்ன சாரு; தாராளமா குடுத்துர்லாம் என்றார்.  அதற்குப் பிறகு நாலைந்து பேர் மார்ச் 21-இல் கலந்து கொள்ள தேதி கேட்டார்கள்.  இல்லை; அன்று வேறு நிகழ்ச்சி இருக்கிறது என்று மறுத்து விட்டேன்.  ராஜாவிடமிருந்து அதற்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லை.  நானும் விட்டுவிட்டேன்.  மார்ச் 15 வாக்கில் போன் செய்த ராஜா, திறப்பு விழாவை ஏப்ரல் 12க்குத் தள்ளி வைத்து விட்டோம்; அந்தத் தேதியில் நீங்கள் ஃப்ரீதானே என்று கேட்டார்.  அதற்கென்ன; ஃப்ரீ பண்ணிக்கிறேன் என்று சொல்லி விட்டு ஏப்ரல் 12-ஐ காலண்டரில் சுழித்துக் கொண்டேன். ராஜா பேசிய போது பணத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.  நானும் அது பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை.  ஒருமுறைதான் சொல்லி விட்டோமே; பிறகு என்ன என்றது ஒரு மனம்.  அதே சமயம் அவர் மறந்திருந்தால் ஞாபகப்படுத்துவது நம் கடமை இல்லையா என்றது இன்னொரு மனம்.  அதுசரி; ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு மேனேஜர் ஞாபகப்படுத்திய பிறகா காசு கொடுக்கிறோம்?  நாம்தான் தெளிவாகச் சொன்னோமே?  இப்படி ஏகப்பட்ட யோசனைகள் எனக்குள்.  பிறகு ஏப்ரல் 2 வாக்கில் போன் செய்த ராஜா வீட்டுக்கு வர வேண்டும்; எப்போது ஃப்ரீயாக இருப்பீர்கள் என்று கேட்டார்.  வீடு என்பது என்னைப் பொறுத்தவரை நான் வேலை செய்யும் இடம்.  என்ன வேலை?  பிராணிகளைப் பராமரிக்கும் வேலை.  சமையல் வேலை.  எழுத்து வேலை.  எல்லா வேலையும்தான்.  பிராணிகளை என்ன நானா தேடிப் போனேன்?

இந்த அபார்ட்மெண்ட்டுக்குக் குடி வந்த புதிதிலேயே கார்கள் நிற்கும் பகுதியில் நாலைந்து பூனைகள் இருந்தன.  இங்குள்ள வாட்ச்மேன்கள் அவைகளுக்குத் தாங்கள் சாப்பிடும் உணவில் கொஞ்சத்தை அதுகளுக்கு வைப்பதைப் பார்த்திருக்கிறேன்.  பிறகு அந்த சிஸ்டம் எப்படி நின்றது, எப்படி அந்தப் பூனைகளுக்கு நானும் அவந்திகாவும் சாப்பாடு வைக்க ஆரம்பித்தோம் என்பதே எனக்கு ஞாபகம் இல்லை.  ம்ம்ம்… யோசித்துப் பார்த்தால் ஞாபகம் வருகிறது.  வாட்ச்மேன்கள் அந்தப் பூனைகளுக்கு தினமும் சாப்பாடு வைப்பதில்லை.  வீட்டிலிருந்து மீன் குழம்பு கொண்டு வந்தால் வைப்பார்கள்.  மற்ற நாட்களில் பூனைகள் பட்டினிதான் கிடக்கும்.  அப்படிக் கிடந்த நாள் ஒன்றில் எல்லா பூனைகளும் சேர்ந்து கோரஸாக என்னிடம் பிலாக்கணம் பாடின.  பிலாக்கணம் என்றா சொன்னேன்?  ம்ஹும்.  அருமையான பாடல் அது.  பூனைகளின் பாடல். எனக்கு சாப்பாடு கொடு.  பசியில் உயிர் போகிறது.  இதை அந்த நான்கு பூனைகளும் சேர்ந்து ராகமாக பூனை பாஷையில் பாடலாகப் பாடின.  கெய்ரோ மாடி வீட்டுப் பூனை.  அதாவது, மேட்டுக்குடி.  எங்கள் வீட்டிலேயே பதவிசாகச் சாப்பிட்டு விட்டு மற்ற பூனைகளின் துயரப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தது.  அப்போதுதான் மேலே வந்து whiskas cat food-ஐ அள்ளிக் கொண்டு போய் அந்தப் பூனைகளுக்குப் போட்டேன்.  அந்த க்ஷணத்திலிருந்து அவை நான்கும் என்னை அப்பனாகவும் அவந்திகாவை அம்மையாகவும் வரித்துக் கொண்டு விட்டன.  சொல்லத் தேவையில்லை; அந்த க்ஷணத்திலிருந்தே அவை வாட்ச்மேன்களின் சாப்பாட்டைத் தங்கள் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி விட்டன.

இதுதான் பூனைகள் என்னோடு வந்து ஒட்டிக் கொண்ட கதை.  எங்கள் வீடு முதல் மாடியில் உள்ளது.  அதனால் கெய்ரோவைப் போலவே அவைகளும் மேலே ஏறி எங்கள் வீட்டிற்கு வர ஆசைப்பட்டன.  மாடிப்படிக் கதவைத் திறக்கும் போது ரௌடி படியில் ஏற முயற்சிக்கும்.  (நான்கு பூனைகளில் ஒன்றின் பெயர் ரௌடி).  வேண்டாம் குட்டி என்றதும் நின்று விடும்.  ஏறாது.  இத்தனை பூனைகளையும் வீட்டில் வைத்துக் கொண்டால் மற்ற குடித்தனக்காரர்களுக்குப் பிரச்சினை.  கீழே இருந்தால் அது நம் தலையில் வராது.  ஏனென்றால், நாங்கள் வருவதற்கு முன்பே அவை இங்கே இருந்தன.  ஒருநாள் வாட்ச்மேன்களைக் கட்டி மேய்க்கும் மேனேஜர் வசந்தன் இனிமேல் பூனைகளுக்கு சாப்பாடு போடாதீர்கள் சார் என்றார்.  அப்போது பூனைகளுக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தேன்.  வாயில்லா ஜீவன்களுக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் போது போடாதே என்று சொல்வதைப் போன்ற கொலைக்காரத்தனம் வேறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.   மூன்றாம் மாடியிலிருந்து நாயைத் தூக்கிப் போடுவது, மூன்று வயதுக் குழந்தையை பாலியல் வன்முறை செய்து கொல்வது, பெற்ற தாயைத் தீ வைத்துக் கொல்லுவது… என்ன காரியமாகவும் இருக்கட்டும்.  எல்லாவற்றையும் விட கொலைக்காரத்தனம் பசித்த ஒரு ஜீவனுக்கு உணவிடும்போது தடுப்பதுதான் என்று மனதில் தோன்ற வசந்தனிடம் ஏன் என்று கேட்டேன்.  ஒரு நல்ல காரியத்துக்குப் போகும்போது பூனை குறுக்கே போகிறதாம்; அதனால் மற்ற குடித்தனக்காரர்கள் ஆட்சேபணை செய்கிறார்கள் என்றார் வசந்தன்.  அது யார் என்று தயவுசெய்து சொல்லுங்கள்;  வெட்டிக் கூறு போட்டு விட்டு ஜெயிலுக்குப் போகிறேன் என்று பதில் சொன்னதும் வசந்தன் பேசாமல் போய் விட்டார்.  அதற்கு அடுத்த நாளே நான்கு பூனைகளில் ஒன்று மர்மமான முறையில் காணாமல் போய் விட்டது.  கேட்டபோது கார் அடிச்சு செத்துடுச்சு என்றார் வசந்தன்.  உடலைக் கூட நாங்கள் பார்க்கவில்லை.  ஆனால் அவந்திகா தெளிவாகச் சொல்லி விட்டாள்.  இனிமேல் எந்தப் பூனைக்காவது ஏதாவது ஆனால் இந்தக் குடியிருப்பே எரிந்து போய் விடும்.  அவர்களும் அவளிடம் பயப்பட்டார்கள் என்பதால் அதற்கு மேல் பூனைகள் காணாமல் போகவில்லை.  அவந்திகாவிடம் அவர்கள் பயப்படக் காரணம் எங்கள் வீட்டுப் பணிப்பெண்.  அடிக்கடி அவந்திகா நேற்று மஹந்தாவிடம் பேசினேன் சாரு என்று தொடங்கி ஏதாவது ஒரு செய்தி சொல்லுவாள்.  ஓ, என்ன என்று சொல்ல வேண்டுமா?  சரி, சொல்கிறேன்.  2017 அக்டோபர் வாக்கில் ”இனிமேல் உன் புத்தகங்களைப் பற்றிக் கவலைப்படாதே.  தொடர்ந்து வரிசையாக உன் புத்தகங்களை ஒரு பதிப்பகம் வெளியிடும்” என்றாள்.

“எப்படிச் சொல்கிறாய் அம்மு?  நேற்று மஹந்தாவிடம் பேசினேன்.  மஹந்தா சொன்னார்.”

அதற்குள் குறுக்கே புகுந்த பணிப்பெண் மஹந்தா என்றால் யார் அம்மா என்றாள்.  அவந்திகா பின்பற்றும் ஆன்மீக வழியின் குருமார்.  இதைப் பணிப்பெண்ணுக்குப் புரிகிறாற்போல் சொன்னாள் அவந்திகா.

அன்றைய தினம் நான் வெளியே போகும் போது வாட்ச்மேன்களோடு பேசிக் கொண்டிருந்த எங்கள் வீட்டுப் பணிப்பெண் ”ஜோசப் அண்ணே, ஒங்களுக்கு விசியம் தெரிமா?  நான் வேலை செய்ற வூட்டம்மா இருக்காங்கள்ள அவங்க சாமி கிட்டேல்லாம் பேசுவாங்க.  நானே பாத்துருக்கேன்…” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.  அப்போதுதான் ஆரம்பம் போல.  நான் அப்படியே திரும்பி பின் கேட்டு வழியாக வெளியே போனேன்.

சரி, என் புத்தகங்கள் பற்றி அக்டோபர் 2017-இல் சொன்னாள் இல்லையா? ஜனவரி 2018-இல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஆரம்பமாயிற்று.  என் புத்தகங்களும் அந்தப் பதிப்பகம் மூலம் தொடர்ந்து வெளிவரலாயிற்று.  இந்த விஷயம் மட்டுமல்ல; இதுபோல் பல விஷயங்களை அவள் தீர்க்கதரிசியிடம் பேசி வெளிப்படுத்தியிருக்கிறாள்.  அதனால் அவந்திகா சொன்னதும் வாட்ச்மேன்கள் உண்மையிலேயே பயந்துதான் இருக்க வேண்டும்.  அது பூனைகளுக்குப் பாதுகாப்பாயிற்று.

சரி, இதோடு விட்டிருக்கலாம்.  ஒருநாள் எதிர்வீட்டிலிருந்து ஒரே அழுகுரல்.  எதிர்வீடு பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.  எங்கள் அபார்ட்மெண்ட் கிழக்கு மேற்காக உள்ளது.  வீட்டுக்குப் பின்னே கடல்.  மொட்டை மாடியில் போய் நின்றால் படகுகளையும் அலைகளையும் பார்க்கலாம்.  குடியிருப்பின் பக்கவாட்டில் ஒரு சந்து.  டுமீங் சந்து என்று பெயர்.  சாந்தோம் நெடுஞ்சாலையையும் டுமீங் குப்பத்தையும் இணைக்கும் சந்து.  அந்த சந்தில் இரண்டு வீடுகள் ஆள் அரவமற்றுக் கிடக்கின்றன.  ம்ஹும்.  அரவங்கள் இருக்கலாம்; ஆட்கள் இல்லை.  எல்லாம் லிட்டிகேஷன் பிரச்சினை.  வீடு உன்னுடையதா என்னுடையதா?  வீடு விஷயமாக லிட்டிகேஷன் என்றாலே குறைந்தது 50 வருஷம் ஆகும் இல்லையா?  இதில் ஒரு வீட்டை மறந்து விடலாம்.  அந்த வீட்டுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை.  அதற்குப் பக்கத்திலேயே இன்னொரு வீடு உள்ளது.  மூன்று மாடிகள் கொண்ட வீடு.  அதில் இதற்கு முன்னால் ஏதோ காலேஜ் இருந்ததாம்.  நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்னமோ வரும்.  இப்போது அந்த வீட்டில் நூற்றுக் கணக்கான ஜீவராசிகள் வசிக்கின்றன.  தேள் பூரான் எலி போன்றவை தவிர ஏராளமான பறவைகள்.  காரணம், மொட்டை மாடியில் ஒரு பெரிய அரச மரம்.  என்னால் இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது கூட நம்ப முடியாமல் ஒருமுறை மொட்டை மாடிக்குப் போய் பார்த்து விட்டு வந்தே தட்டச்சு செய்கிறேன்.  வெறும் கட்டாந்தரையில் அத்தனை பிரம்மாண்டமான அரச மரம்.  எப்படித்தான் வேர் பிடித்ததோ?  அந்த மரத்தில்தான் அத்தனை பறவைகள்.  கிளிகளும் ஏராளமாய் இருந்தன.  எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அந்த அரச மரத்தையும் கிளிகளையும் வேடிக்கை பார்ப்பதுதான் எனக்கும் அவந்திகாவுக்கும் மாலைநேரப் பொழுதுபோக்கு.  அந்த வீட்டிலிருந்துதான் ஒருநாள் இரவில் ஒரு பூனைக்குட்டியின் அழுகுரல் கேட்டது.  காலையில் போய் பால் வைத்தாள் அவந்திகா.  தாய்ப் பூனையால் கைவிடப்பட்ட குட்டி.  பிறகு பாலிலிருந்து தேறித்தேறி இப்போது சூரை மீன் ஜெல்லி.   காலையில் இரண்டு பாக்கெட்.  இரவில் இரண்டு பாக்கெட்.

நானா கேட்டேன்?  உன்னை யார் போடச் சொன்னது என்று கேட்கிறீர்களா?  அது எப்படி ஒரு பூனைக்குட்டி பசியில் கதறும் போது எனக்கென்ன என்று போக முடியும்?  ஆக, ஐந்தாவது பூனையாக ஸிஸ்ஸியும் எங்கள் வாழ்வில் சேர்ந்து கொண்டது.

பார்த்தீர்களா, வேலைக்கு மேல் வேலை எப்படிச் சேர்கிறது என்று?  என்னை வீட்டில் சந்திப்பது என்பது 150 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகளைப் போய்ப் பார்ப்பதற்குச் சமமாகும்.  காலையில் வாக்கிங் போய் விட்டு வீட்டுக்கு வர ஒன்பது மணி.  அதற்குள் கீழே ரௌடியும் மற்ற பூனைகளும் பசிப் பாட்டை ஆரம்பித்திருக்கும்.  ஓடிப் போய் அதுகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்.  அதற்கு ஒரு பதினைந்து நிமிடம்.  ஆமாம்.  பூனைகளுக்கு உணவு கொடுக்கும் போது அவற்றின் அருகிலேயே இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் ஓடி விடும்.  இல்லாவிட்டால் காகங்கள் பூனைகளைத் துரத்தி அவை மேய்ந்து விடும்.  அதனால் பூனைகளுக்குப் போட்டு விட்டு அருகிலேயே காகங்களுக்கும் அதே உணவைப் போடுவேன்.  பார்ப்பதற்கு மிக்ஸர் மாதிரி இருக்கும்.  காகங்களும் விரும்பிச் சாப்பிடும்.  சாப்பிட்ட பிறகு அங்கே ஒரு நிமிடம் நிற்காது. ஓடி விடும்.  வந்து பப்புவுக்குச் சாப்பாடு போட வேண்டும்.  பிறகு கெய்ரோவுக்கு.  பிறகு எங்கள் காம்பவுண்டைச் சுற்றிக் கொண்டு டுமீங் சந்துக்கு வந்து ஸிஸ்ஸிக்குப் போட வேண்டும்.

ஸிஸ்ஸியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு குகைகளில் தவமிருக்கும் துறவிகளைப் பற்றிய ஞாபகம் வரும்.  பூனை என்றால் பூனைகளோடுதானே இருக்கும்?  ஆனால் ஸிஸ்ஸி அந்தத் தனீ வீட்டில் தனியாகவே வாழ்கிறது.  டுமீங் சந்திலும் அதையொட்டிய சந்துகளிலும் நாய்கள் அதிகம் என்பதால் ஸிஸ்ஸி அந்த வீட்டை விட்டு வெளியிலேயே வருவதில்லை.  அந்த வீட்டில் ஒரு பாழடைந்த கார் ஷெட் உள்ளது.  அதுதான் ஸிஸ்ஸியின் வாழ்விடம் என்று நினைக்கிறேன்.  ஏனென்றால், உள்ளே என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது இல்லையா?  மொத்த வீடும் ஸிஸ்ஸிக்குத்தான்.  டுமீங் சந்தில் நுழைந்து ஸிஸ்ஸீ என்று குரல் கொடுத்த உடனேயே ஷெட்டை விட்டு வெளியே வந்து விடும்.  டுமீங் சந்து வெறும் எட்டு அடி அகலம் உள்ள சந்து.  எந்நேரமும் இரு சக்கர வாகனங்கள் சென்றவண்ணமே இருக்கும்.  காது கிழிகிறாற்போல் ஹாரனை அடித்தபடிதான் போவார்கள்; வருவார்கள்.  ஒவ்வொரு ஹாரன் சத்தத்துக்கும் ஷெட்டின் உள்ளே ஓடி விட்டு சத்தம் குறைந்ததும்தான் வெளியே வரும் ஸிஸ்ஸி.  சாப்பிட்ட வாய்க்குக் கொஞ்சம் தண்ணீரும் வைத்து விட்டுத்தான் வருவேன்.

ஒருநாள் ஆதன் தொலைக்காட்சியில் பதினொன்றரைக்கு ஒரு நேர்காணல் நிகழ்ச்சி இருந்தது.  ஏற்கனவே அதற்கு முதல்நாள் வருவதாகச் சொல்லிவிட்டு என்னால் போக முடியாமல் போனது.  வீட்டு வேலை.  வீட்டு வேலை.  மறுநாள் எப்படியும் வந்து விடுவதாகச் சொல்லியிருந்தேன்.  ஆனால் மறுநாளும் ஏதேதோ வேலைகள்.  அவந்திகாவுக்கு ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ் செய்ய வேண்டி வந்தது.   ஆதன் அலுவலகம் வந்தபோது நேரம் பனிரண்டரை.  அப்படியும் ஸிஸ்ஸிக்கு உணவு கொடுக்க முடியவில்லை.  அவந்திகாவினாலும் போக முடியாது.  அவளுக்கு உடல்நிலை சரியில்லை.  வீட்டுக்குத் திரும்பி வர மாலை நான்கு மணி ஆகி விட்டது.  அதுவரை ’ஸிஸ்ஸி பசியோடு இருக்குமே’ என்ற ஒரே சிந்தனை மட்டுமே எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.  நாலு மணிக்கு வீட்டுக்குத் திரும்பின பிறகுதான் ஸிஸ்ஸிக்கு உணவிட முடிந்தது.

இந்தச் சூழ்நிலையை நூறு முறை விளக்கி எழுதியும் அதைப் படிக்காமல் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்ன ராஜாவின் மீது எரிச்சல் வந்தது.  ”ஆமா ஏன் பார்க்கணும்?”  என்று கேட்டேன்.  இன்விடேஷன் கொடுக்க என்றார்.  அது ஏங்க இவ்ளோ கஷ்டப்பட்றீங்க?  வாட்ஸப்ல அனுப்பிடுங்க என்றேன்.  இல்ல சாரு, நேர்ல வந்து குடுக்குறதுதான் மரியாதை என்றார்.  ’அடப்பாவி.  பணத்தைப் பற்றி சொன்னோம்.  அதைப் பற்றி வாயையே திறக்கக் காணோம்.  இதில் மரியாதை வேறு கிழிகிறதா?’ என்று நினைத்தபடி ”இல்லிங்க, வீட்ல ரொம்ப வேலையா இருப்பேன்.  வேணும்னா காலைல எட்டு மணிக்குள்ள நாகேஸ்வர ராவ் பூங்கா வாங்க.  அது கூடத் தேவையில்லை.  வாட்ஸப்ல அனுப்புனா போதும்” என்றேன்.  ஐயோ, நான் எழுந்துக்கவே காலைல எட்டு ஆய்டுமே சாரு என்றார் ராஜா.

”அப்படீன்னா ஒன்னும் பிரச்சினை இல்லை; வாட்ஸப்லயே அனுப்பிடுங்க போதும்.”

ம்ஹும்.  ராஜா கேட்பதாக இல்லை. நேரில் வந்து கொடுப்பதுதான் மரியாதை என்றார்.  பத்தாயிரம் பணம்?  அதைப் பற்றிய பேச்சே இல்லை.

”இல்லிங்க.  வீட்டுல பாக்குறது சாத்தியமே இல்ல.  விட்ருங்க…”

“சரி சாரு… பார்க்குக்கே வர்றேன்.”

பேசி முடித்ததும் அழைப்பிதழை வாட்ஸப்பிலும் அனுப்பினார்.  அதில் என் பெயர் தவறாக அச்சிடப்பட்டிருந்தது.  அதுவே செம கடுப்பானது எனக்கு.  Charu Nivedita என்பதற்குப் பதிலாக Charu Niveditha என்று இருந்தது.  சென்ற ஆண்டு ந. சிதம்பர சுப்ரமணியன் எழுதிய மண்ணில் தெரியுது வானம் நாவல் வெளியீட்டு விழாவை அவரது புதல்வர்கள் நடத்தினார்கள்.  அதில் பேசுவதாக இருந்தேன்.  அப்போது எனக்குப் பணப் பிரச்சினை இல்லை என்பதால் அதைப் பற்றி அப்போது பேச்சு எழவில்லை.  ஆனாலும் அழைப்பிதழைப் பார்த்த பிறகு அவர் புதல்வர் சுந்தரத்தை அழைத்து வர மாட்டேன் என்று தெரிவித்தேன்.  ஏனென்றால், அச்சிடப்பட்ட அழைப்பிதழிலேயே ந. சிதம்பர சுப்ரமணியம் என்று வந்திருந்தது.  பிறகு அவசர அவசரமாக மீண்டும் ஒரு அழைப்பிதழ் அச்சிட்டுக் கொடுத்த பிறகே போனேன்.  ஆனால் ராஜாவின் அழைப்பிதழ் பற்றி நான் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை.  பணத்தைப் பற்றி அவர் பேசவே இல்லாததால் நானும் அந்த விழாவுக்குச் செல்வதை ரத்து செய்து விடலாம் என்றே யோசித்து வைத்திருந்தேன்.  ஒருவேளை இவர் நேரில் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துவது பணம் கொடுக்கத்தானோ என்றும் தோன்றியது.  அது என்ன அத்தனை பெரிய விஷயமா?  இப்போதுதான் சொடக்குப் போட்டால் போன் மூலமாகவே பணம் அனுப்பி விடலாமே?  அதற்கு மேல் அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்கவில்லை.

பேசியது போலவே இரண்டு நாட்களுக்கு முன் காலை எட்டு மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு வந்து பார்த்து அழைப்பிதழைக் கொடுத்தார் ராஜா.  கூடவே மேலும் இரண்டு நபர்களையும் அழைத்து வந்திருந்தார்.  அவர் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள்.  எல்லோரும் இளைஞர்கள்தான்.  ராஜா உட்பட.  வாருங்கள் சாப்பிடப் போகலாம் என்றார் ராஜா.  எனக்கு வழக்கம் போல் கொலைப்பசி.  ஆனாலும் ராஜாவின் அழைப்பை மறுத்து விட்டேன்.  பக்கத்தில் சென்று கொண்டிருந்த ராகவனையும் ராமசேஷனையும் காண்பித்து அவர்களோடு சாப்பிடப் போக வேண்டும் என்று சொல்லிக் கிளம்பி விட்டேன்.  ரெண்டு நிமிடம் கூட அவரோடு பேசவில்லை.

அவ்வளவுதான் சந்திப்பு.  இதற்காகத்தான் தன்னோடு சேர்த்து இன்னும் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு அண்ணா நகரிலிருந்து நாகேஸ்வர ராவ் பூங்கா வரை வந்திருக்கிறார் ராஜா.  அந்த க்ஷணமே விழாவுக்குப் போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.  ”சேச்சே.  பத்திரிகைல பேர் போட்டுருக்கே சாரு” என்றார் ராகவன்.  அதற்காக?  ராகவனிடம் நான் சொல்லவில்லை.  என்னை இதற்குள் அந்த ராஜா கிட்டத்தட்ட ஒரு பைத்தியத்தைப் போல் ஆக்கியிருந்தார்.  பணம் கிடக்கிறது பணம்.  மயிருக்குச் சமானம்.  ஆனால் ராஜா அதைப் பற்றிப் பேசியிருக்க வேண்டாமா?  எப்படி அதைப் பற்றி மட்டும் கண்டு கொள்ளாமல் மரியாதை பற்றியே பேசுவது?  இந்த விஷயம் எனக்குப் பெரிய மன உளைச்சலையே கொடுத்து விட்டது.  தூக்கத்திலிருந்தெல்லாம் விழித்துக் கொண்டு இது பற்றி யோசிக்கிறேன்.  பணம் முக்கியமே அல்ல.  பணம் இல்லை சாரு;  ஆனாலும் நீங்கள் வர வேண்டும் என்று சொன்னாலே போய் விடுவேன்.  ஆனால் பணத்தைப் பற்றி எப்படிப் பேசாமலேயே தவிர்க்கிறார்?  வெறும் அன்பினாலும் மரியாதையினாலும் வாழ்க்கையை நடத்தி விட முடியுமா?  ராஜாவை நான் ஐந்தாறு ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறேன்.  கூடப் போய் சாப்பிடக் கூட முடியாத அளவுக்குச் செய்து விட்டாரே என்று கோபம் கோபமாக வந்தது.  பணம் அல்ல; பணத்தைப் பற்றிய பேச்சைத் தவிர்த்ததுதான் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.

எங்கள் ஊரில் ஒருத்தன் இருந்தான்.   அவன் தந்தை அவனை கொத்தனார் வேலை செய்து காப்பாற்றினார்.  அவருக்கு மனைவி இல்லை.  அவரேதான் அவனுக்குத் தாய் தந்தை எல்லாம்.  அவன் இளைஞனாகி வேலைக்குப் போனதும் அவரைத் தெருத் தெருவாகப் பிச்சை எடுக்க விட்டான்.  அவன் ஒன்றும் வெளியூரில் இல்லை.  அந்த ஊரிலேயேதான் வசதியாக வாழ்ந்தான்.  அந்த ஆள் வயதான காலத்தில் ஒவ்வொரு வீடாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.  ங்கோத்தா.  ”எனக்குப் பணவரத்து நின்று போய் விட்டது;  பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் வருகிறேன்” என்று தெளிவாகச் சொல்லியும் பத்து முறை மரியாதை பற்றிப் பேசுகிறான்; பணத்தைப் பற்றிய பேச்சே காணோமே என்று ஆயிரம் முறை ஓடியது சிந்தனை.  ங்கோத்தா எங்கேர்ந்துடா வர்ரீங்க எல்லாரும்?  நாகேஸ்வர ராவ் பூங்காவில் ராமபத்ரன் என்று ஒரு நண்பர் இருக்கிறார்.  அவர் ஒரு அனாதைக் குழந்தைகள் இல்லம் வைத்திருக்கிறார்.  அது ஒரு வித்தியாசமான இல்லம்.  பெண் குழந்தைகளை மட்டுமே சேர்ப்பார்.  ஏனென்றால், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் இல்லங்களிலேயே பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது அவர் கருத்து.  எனக்குத் தெரியாது.  அவர் கருத்து அது.  அதிலும் உடல் ஊனமுற்ற குழந்தைகளையே வளர்க்கிறார் அவர்.  அதற்காக அவ்வப்போது அவர் பூங்கா நண்பர்களிடம் பணம் வசூல் பண்ணுவார்.  நானும் அவர் இல்லத்துக்கு அவ்வப்போது போயிருக்கிறேன்.

எனக்கு ஒரு நண்பர் சொல்லித்தான் இந்தப் பண விஷயம் பற்றியே கண் திறந்தது.  அவர் ஒரு பிரபலமான நடிகர்.  ஒரு விழாவுக்கு என்னை அழைத்தார்கள்.  அந்தத் தேதியில் எனக்கு வேறு நிகழ்ச்சி இருந்தது.  விழா அமைப்பாளர்கள் என் நண்பர்கள் என்பதால் அந்த நடிகரைக் கேட்டுப் பார்க்கச் சொன்னார்கள்.  நடிகருக்கு போன் போட்டேன்.  ஓ, வர்றனே.  ஃபீஸ் அம்பதாயிரம் என்றார்.  ”என்னது?” தூக்கிவாரிப் போட்டது எனக்கு.  நடிகர் என் ஆச்சரியத்தைப் புரிந்து கொண்டார்.  இப்போது அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது போல.

”ஆமா, நீங்க என்னா இதுவரைக்கும் ஓசிலதான் கூட்டத்துக்குப் போய்க்கிட்டு இருக்கீங்களா சாரு?”

“ஆமாங்க.”

“அது சரி.  அப்பன்னா நாம வளர்க்கிற நாய் பூனைக்கெல்லாம் எவன் சோறு போடுவான்?”

அப்போதுதான் என் கண் திறந்தது.  நடிகரும் ஆறு ஏழு நாய்களும் பூனைகளும் வளர்க்கிறார்.  அதற்குப் பிறகும் நான் பண விஷயத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை.  ஜனவரியிலிருந்து பண வரத்து நின்று போனதால் மட்டுமே பணம் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் அதற்கு முன்னாலிருந்தே எனக்குப் பணம் பற்றி ஒரு யோசனை இருந்தது.  என்னைப் பொறுத்தவரை அது வெறும் காகிதம்.  ஆனால் நடைமுறை வாழ்வுக்கு அந்தக் காகிதம் தேவைப்படுகிறது.  அவ்வளவுதான்.  இதே ரீதியில் பல மணி நேரம் ராகவனிடம் பேசியிருக்கிறேன்.  அவரோ அதெல்லாம் Atlas Shrugged நாவலில் இருக்கிறது என்று சொல்லி அதை ப்ரிண்ட் அவ்ட் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.  சரிதான்.  அந்த நாவலின் ஹீரோக்களில் ஒருத்தனான ஃப்ரான்ஸிஸ்கோ பணம் பற்றிப் பேசுவதும் நான் பேசுவதும் ஒன்றுதான்.  அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.  பப்புவுக்கும் இந்த ஐந்து பூனைகளுக்குமாக மாதம் 20000 ரூபாய் செலவு செய்கிறேன் என்று.  பப்புவின் செலவைக் குறைக்க முடியாது.  அவனுக்கு ஆர்த்ரிட்டிஸ் பிரச்சினை என்பதால் ஒரு விசேஷ உணவுதான் கொடுக்க வேண்டும்.  அதற்கே மாதம் பத்தாயிரம் ரூபாய்.  சரி, செலவைக் குறைப்போம் என்று ஒருநாள் முடிவெடுத்தேன்.  ஸிஸ்ஸிக்கு தினமும் மூன்று ட்யூனா ஜெல்லி பாக்கெட்.  ஒரு பாக்கெட் விலை 35 ரூ.  ஆக, ஒரு நாளைக்கு 100 ரூ.  அதனால் அதற்கு ட்யூனா ஜெல்லியோடு விஸ்காஸ் கேட்ஃபூடும் போட்டேன்.  அடடா.  அந்த உணவு அதன் தொண்டையில் அடைத்துக் கொண்டு மூச்சு விடவே திணறியதும் பயந்து போய் ட்யூனா ஜெல்லியோடே நிறுத்திக் கொண்டேன்.

ஸிஸ்ஸிக்கு உணவு கொடுக்கப் பத்து நிமிடம் ஆகும்.  அந்தப் பத்து நிமிடத்தில் டுமீங் சந்து வழியாக நடந்து செல்லும் பெண்கள் அத்தனை பேரும் ஒருக்கணம் நின்று ஸிஸ்ஸியைப் பார்த்து புன்னகைத்து விட்டுத்தான் போவார்கள்.  இந்தப் பகுதி முழுக்கவும் கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதி என்பதால் நிறைய கன்னிகாஸ்த்ரீகளும் போவார்கள்.  அவர்கள் சற்று அதிக நேரமே நின்று பார்ப்பார்கள். ஆண்களுக்கு என்ன கேடோ?  ஒருத்தரும் ஸிஸ்ஸியைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.  எனக்குப் பல சமயங்களில் பெண்கள் மீது கோபம் கோபமாக வரும்.  ஆனால் ஸிஸ்ஸி சம்பவத்துக்குப் பிறகு பெண்களை நான் வேறு விதமாகப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.  என்னதான் ஆணும் பெண்ணும் சமம் என்று பேசினாலும் அன்பு என்ற விஷயத்தைப் பொறுத்தவரை பெண்கள் வேறு ரகம்தான்.

ஆமாம், இந்தக் கதைக்கும் அனாதைக் குழந்தைகள் இல்லம் வைத்திருக்கும் ராமபத்ரன் என்பவருக்கும் என்ன சம்பந்தம்?  அந்த அனாதைக் குழந்தைகள் மாதிரிதான் நானும் பிராணிகளை வளர்க்கிறேன் என்று சுட்டிக் காட்டவா?  சேச்சே.  அவர் செய்வதோடு இதையெல்லாம் ஒப்பிடும் அளவுக்கு மோசமானவன் இல்லை நான்.  அந்த ராமபத்ரன் வேறு ஒரு விஷயத்தைச் சொல்லி அடிக்கடி வருத்தப்படுவார்.  அவருக்கு ஒரு சீமந்த புத்திரன் இருக்கிறான்.  மாதம் அஞ்சு லட்சம் சம்பாதிக்கிறான்.  ஆனால் தந்தைக்கு ஒரு பைசா அனுப்புவதில்லையாம்.  நான் என்ன அவன் பணத்தை வைத்து வீடா கட்டப் போகிறேன்?  கிடைக்கிற காசெல்லாம் இல்லத்துக்குத்தானே?  ஒருவேளை அவனுக்கு அந்த இல்லமே பிடிக்கவில்லையோ?  ம்ஹும்.  அவனுக்கு அதெல்லாம் ரொம்ப இஷ்டமாம்.  ஒருமுறை இல்லத்துக்கு வந்து பார்த்து விட்டு, இன்னும் கொஞ்சம் போஷாக்கான சாப்பாடு போடலாமே அப்பா என்று சொன்னானாம்.  ஆனால் இதையெல்லாம் விட என்ன வேதனையாக இருக்கிறது என்றால் – அவர் அடிக்கடி சொல்லுவார் – இருங்கள்… அதற்கு முன்னால் நிறைய பெண்கள் என்னிடம் சொன்ன ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.  தன் பிரச்சினைகளைத் தங்கள் கணவரிடம் சொல்ல மாட்டார்கள்.  ஏன் சொல்ல மாட்டீர்கள் என்று கேட்பேன்.  உதாரணமாக, ஒரு தலைவலி.  அதை ஏன் கணவரிடம் சொல்லக் கூடாது?  தலைவலியோடு பெரிய திருகுவலியும் வந்து சேரும்.

“என்னா பெருசா தலவலி தலவலின்னு.  எப்பப் பாத்தாலும் தலவலி.  நான் சொல்றதக் கேக்குறியா நீ?  ம்?  காலைல எழுந்ததும் தெனமும் நிலவேம்புக் கஷாயம் குடிக்கிறதுக்கு என்ன?  எங்கம்மா அப்படித்தான் குடிப்பாங்க.  ஒருநாள் கூட அவங்க தலைவலீன்னு படுத்தது இல்ல…”

அதற்கு ஏதேனும் பதில் சொன்னால் முடிந்தது கதை.  இதைவிட தலைவலியையே பொறுத்துக்கொண்டு போய் விடலாமே என்பது பெண்களின் வாதம்.  அதைப் போலவே ஒரு விஷயம் சொன்னார் ராமபத்ரன்.   இல்லம் நடத்துவதற்குப் பணம் போதாத ஒரு காலகட்டத்தில் – ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு – உன்னால் முடிந்தால் எனக்கு மாதம் அஞ்சாயிரம் பணம் அனுப்பு என்று சொன்னாராம்.  அவனும் கேட்டுக் கொண்டான்.  ஆனால் அனுப்பவில்லை.  அஞ்சு லட்சம் மாதச் சம்பளம் வாங்குபவனுக்கு அப்பனுக்காக மாதம் அஞ்சாயிரம் பணம் அனுப்ப முடியவில்லை.

உங்களுடன் பேச்சு வார்த்தை இருக்கிறதா? பாசமாக இருக்கிறானா?

ஆஹா ஆஹா.  பாச மழை பொழிவான்.

ராஜாவைப் பற்றி நினைக்கும் போது ராமபத்ரனின் மகன் ஞாபகம் வந்தது.

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai