Digimodernism – First footprint

 

தோள் வலிக்கிறது; கொஞ்சம் அமுக்கி விடு என்று என் வாழ்நாளில் இதுவரை என் மனைவியிடம் கூடக் கேட்டதில்லை. ஆனால் என்னுடைய ஒரு நண்பனிடம் கேட்டிருக்கிறேன்.  25 வயதான அவனை என் வளர்ப்பு மகனாகவே கருதுகிறேன். அந்த அளவுக்கு நான் உரிமை எடுத்துக் கொள்ளக் கூடிய நெருங்கிய நண்பன்.   போன வருஷம் ஒரு கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து படித்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள் என்றான். அவன் எழுதிய முதல் நாவல்.  திட்டினாலும் பரவாயில்லை என்றான்.  அதைச் சொல்லவும் வேண்டுமா?  மிகவும் வாஞ்சையோடு படிக்க ஆரம்பித்தேன். என்ன ஒரு அதிர்ச்சி! பத்து பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை.  அட, திட்டுவதற்காகவாவது படிக்க முடிய வேண்டும் இல்லையா?  பத்து பக்கத்துக்கு மேல் முடியவில்லை.  என்ன செய்ய?  அதையே சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டேன்.  எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு fanatic.  வேண்டியவர் வேண்டாதவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது.  இதைப் புரிந்து கொண்டு மேலே படியுங்கள்.  அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் நாவலைப் படித்த பிறகு ஒரு முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  வரும் புத்தகத் திருவிழாவில் உயிர்மை வெளியீடாக வரும்.  அந்த முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன். 

***

மனித வரலாற்றில் கவிதை/பாடல் வடிவம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்றாலும் 1000 ஆண்டுகளுக்கு முன்புதான் உலகின் முதல் நாவல் எழுதப்பட்டது.  எழுதியவர் Murasaki Shikibu என்ற ஜப்பானியப் பெண்.  அந்த நாவலின் பெயர் The Tale of Genji.  அதிலிருந்து தான் ’நாவல்’ என்ற ஒரு புதிய genre இலக்கியத்தில் வழக்கத்துக்கு வந்தது. (அதற்குப் பிறகு 600 ஆண்டுகள் கழித்து செர்வாந்தெஸ் எழுதிய தோன் கெஹோத்தே-வும் (Don Quixote) இன்று உலகப் பிரசித்தி பெற்ற நாவலாகத் திகழ்கிறது.)

பெருங்கதையாடல் (grand narratives) என்பது பன்முகத்தன்மையை மறுத்து எல்லா வித்தியாசங்களையும் உள்ளடக்கிய ஒரு முழு முற்றான உண்மையை (Absolute Truth) – எல்லோருக்கும் பொதுவான பிரபஞ்ச உண்மையை –   முன்வைக்கிறது. ஆனால் எதார்த்த உலகில் அப்படி எதுவும் இல்லை.  உலக வாழ்க்கை குழப்பத்தில் (chaos) இருக்கிறது; ஒழுங்கற்று இருக்கிறது.  ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டவனாக இருக்கிறான். அவர்களின் மொழி, கலாச்சாரம், உணவு, கடவுள், காமம் எல்லாமே வேறு வேறாக இருக்கிறது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமலும், அங்கீகரிக்காமலும் போவதால்தான் மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள்; கொலை செய்து கொள்கிறார்கள். மனித சிந்தனையின் வரலாற்றில் பின்நவீனத்துவம்தான் இதை  மிகச் சரியாக சுட்டிக் காட்டி விளக்கியது. (பார்க்கவும்: Jean-Francois Lyotard எழுதிய The Postmodern Condition: A Report on Knowledge.) இந்த அர்த்தத்தில்தான் பின்நவீனத்துவம் என்பது ஒரு இலக்கிய வகை (genre) அல்ல;  மனிதர்களுக்குள் நிலவும் அதிகார அமைப்பை விளக்கும் ஒரு சிந்தனை முறை என்று சொல்லப்படுகிறது. இதை உள்வாங்கிக் கொண்டு புனைகதைகளை எழுதியவர்களே நவீனத்துவ காலகட்டத்தைத் தாண்டியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.  ஆனால் இங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. எண்பதுகளில் தமிழில் சிலர் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை மட்டும் படித்து விட்டு புனைகதைகளை எழுத முயன்ற போது அது வெறும் விபத்தாகவே முடிந்தது.  பின்நவீனத்துவம் குறித்து எதுவுமே தெரியாத பத்தாம்பசலி எழுத்தாளர்களே எள்ளி நகையாடும் அளவுக்கு அந்தப் ‘பின்நவீனத்துவப்’ படிப்பாளிகளின் எழுத்து தோற்றுப் போனது. 

என்றாலும் என்னைப் பொறுத்தவரை பின்நவீனத்துவத்தை வெறும் கோட்பாடுகளின் வழியாக மட்டும் அல்லாமல், சர்வதேச இலக்கியத்தின் மூலமாகவும் பயின்று கொண்டதால் அந்த விபத்தில் நான் சிக்கவில்லை.  அதனால்தான் அதிகார மையத்தைக் கட்டமைக்கும் பிரதிகளை உருவாக்குவதிலிருந்தும் விலகி, பன்முகத் தன்மை கொண்ட பிரதிகளை என்னால் உருவாக்க முடிந்தது.  இந்தா பிடி, கதை என்று கொடுப்பதல்ல பின்நவீனத்துவப் பிரதிகள்.  ”நான் கொடுக்கிறேன்; நீ பெற்றுக் கொள்” என்பதான அதிகார மையம் கொண்ட பிரதிகளுக்கு மாறாக, வாசகரின் சிருஷ்டிகரத்தன்மைக்கு இடம் கொடுத்து, பிரதியின் வாசல்களைத் திறந்து வைத்து எப்போதும் புதுப் புது கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் ஒரு மாஜிக் வெளியாகத் திகழ்பவை பின்நவீனத்துவப் பிரதிகள். இதைத்தான் லியோதார் petits récits (குட்டிக் கதைகள்) என்று சொல்கிறார்.

இப்போது நாம் பின்நவீனத்துவத்தையும் தாண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம்.  கணினியின் பயன்பாடு உச்சத்தில் இருக்கும் காலம் இது. மொழியில் சொல்லவொண்ணாத மாற்றங்களை நிகழ்த்தியிருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை புனைகதை என்ற வடிவத்தை எப்படி பாதிக்கும்?  இதைக் கோட்பாட்டு ரீதியாக Digimodernism என்று வகைப்படுத்துகிறார் Alan Kirby. Digimodernism என்றால் என்ன? கிர்பியின் வார்த்தைகளில் சொன்னால் புதிய தொழில்நுட்பங்களினால் ஏற்படும் கலாச்சார பாதிப்பு. கலை இலக்கியத்தில் கணினியின் பாதிப்பு.  பின்நவீனத்துக்கும் பிறகான cultural paradigm. 

இந்த அர்த்தத்தில்தான் அராத்து எழுதிய தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை பின்நவீனத்துவத்தையும் கலைத்துப் போடும், பிரித்துப் போடும் ஒரு புதிய இலக்கிய வடிவம் என்கிறேன்.  இந்த இடத்தில் இந்தக் கட்டுரையின் Murasaki Shikibu பற்றிய பத்தியை மீண்டும் படித்து விடுங்கள். 

திருக்குறளும், சங்க இலக்கியமும், பாரதியும் முன்னோடிகளே இல்லாத சாதனைகள்.  அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளுக்கு உலக இலக்கியத்திலும் தமிழிலும் எனக்கு முன்னோடிகள் கிடைக்கவில்லை. ருமானியாவைச் சேர்ந்த Emil Cioran ஃப்ரெஞ்சில் Aphorisms என்ற வகையில் எழுதினார்.  ஒன்றிரண்டு வாக்கியங்களில் பழமொழியைப் போல் இருக்கும்.  அதையும் நாம் petits récits-ஓடு சேர்க்க முடியாது.  டொனால்ட் பார்த்தெல்மேவின் (Donald Barthelme) சிறுகதைகளை வேண்டுமானால் அந்த வகையோடு சேர்க்கலாம் என்றாலும், Georges Perec-ஐப் போல் வெறும் கட்டுடைத்தலோடு (deconstruction) மட்டுமே அது நின்று விட்டது.

அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் மேற்கண்ட டொனால்ட் பார்த்தெல்மே, ஜார்ஜ் பெரக் இருவரையும் தாண்டி விட்டதற்கான காரணங்களாக எனக்குத் தோன்றுபவை: ஒன்று, கணினியின் பயன்பாடு.  இன்னொன்று, அராத்து முன்வைக்கும் செக்‌ஷுவல் பாலிடிக்ஸ்.  இதைப் பற்றி எழுதினால் அது மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) கால கட்டத்துக்குப் போகும். அராத்துவின் பல கதைகளில் ஜார்ஜ் பத்தாயைப் (Georges Bataille) பார்க்க முடிகிறது.  இதற்காக அராத்துவுக்கு பத்தாய் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  நம் இந்திய வாழ்க்கையே அதற்கான களங்களை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  ஆயிரம் பத்தாய்கள் வந்தாலும் எழுதித் தீராத அளவுக்கு பாலியல் நிகழ்வுகளையும் பிறழ்வுகளையும் கொண்டதாக இருக்கிறது இந்தியச் சமூகம்.  அதில் புகுந்து அதகளம் பண்ணியிருக்கிறார் அராத்து. 

(நாளை தொடரும்…)      

Comments are closed.