Digimodernism – First footprint – 2

சிவனும் பார்வதியும் காமத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது சிவனின் வாயிற்காப்போனாக இருந்த நந்தி அந்த உரையாடலைக் கேட்டு, காமம் குறித்து 1000 அத்தியாயங்கள் அடங்கிய காம சூத்திரத்தை எழுதியதாக ஐதீகம். இந்த நூலை கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஷ்வேதகேது 500 அத்தியாயங்களாக சுருக்கி எழுதினார். இதை மேலும் சுருக்கி எழுதினார் பாப்ரவியர். இந்த நூல்களெல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் இந்த நூல்களைப் பற்றி வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தில் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) குறிப்புகள் வருகின்றன. இன்னும் சரியாகச் சொன்னால் நந்தியின் நூல் தான் தன்னுடைய காம சூத்திரத்தின் மூல நூல் என்றும், அதன் சிறு பகுதியே இது என்றும் எழுதுகிறார் வாத்ஸ்யாயனா.  இதோ ஸ்லோகம்:

”மஹாதேவானுசரஸ் ச நந்தீ சஹஸ்ரேத்யாயானாம் ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச.”

இதற்குப் பிறகு காம சூத்திரம் பற்றி சுமார் முப்பதுக்கு மேற்பட்ட நூல்கள் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டன. அவை எல்லாமே சம்ஸ்கிருதத்திலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இப்போதும் கிடைக்கின்றன. அவற்றில் சில:

மைசூர் அரசரான இரண்டாம் மாதவர் எழுதிய தத்தக சூத்திரவ்ருத்தி (கி.பி. நான்காம் நூற்றாண்டு).

கொக்கோக முனிவரின் ரதி ரகஸ்யம். (கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு)

மகாகவி ஜெயதேவரின் ரதி மஞ்சரி. (கி.பி. பனிரண்டாம் நூற்றாண்டு)

கல்லரசாவின் ஜன வஸ்யம். (ரதி ரகஸ்யத்தை அடியொற்றி கன்னடத்தில் பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது)

கந்தர்ப்ப சூடாமணி, மன்னர் வீரபத்ரா, 1577.

கல்யாணமல்லரின் அனங்கரங்கா. (பதினாறாம் நூற்றாண்டு)

தமிழர்களின் வரலாற்று உணர்வைப் பற்றி எப்போதும் நான் விமர்சித்தே எழுதி வருகிறேன்.  இப்போதும் அது என் நினைவுக்கு வருகிறது. ஏனென்றால், தமிழில் அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் இப்போது கிடைக்கவில்லை. (இவர் தான் வெற்றி வேற்கை எழுதியவர்.) கொக்கோகத்தை சில ஆண்டுகளுக்கு முன் எனக்குப் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.  ஒவ்வொரு மனிதனும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம் அது. சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பார்கள்.  அது தவறு என்பதை அந்த நூலைப் படித்த போது நான் உணர்ந்தேன். அந்த நூலை ஆங்கிலேயர்கள் தடை செய்தார்கள்.  இன்னமும் ஆங்கிலேயர்களின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இப்போதும் அந்தப் பொக்கிஷத்தை மீட்டெடுக்காமல் ஆங்கிலேயர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னால் நமக்கு போதித்த விக்டோரிய ஒழுக்க மதிப்பீடுகளையே பேணிக் காப்பாற்றி வருகிறோம். உதாரணமாக, சமீபத்தில் கூட ஒரு பிரபலப் பத்திரிகையில் ஓரினச் சேர்க்கை ஒருவித மனநோய் என்று எழுதப்பட்டிருந்ததைப் படித்தேன்.  அதேபோல் இந்திய அரசியல் சட்டம் வாய்வழிப் புணர்ச்சியை தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்கிறது. ஆனால், இந்தியப் பாரம்பரியம் அப்படி இல்லை என்பதை நம்முடைய கோவில் சிற்பங்களைப் பார்த்தாலே தெரியும்.  காம சூத்திரத்தின் இரண்டாவது அத்தியாயம் சாம்பிரயோகிகம்.  இதில் வாத்ஸ்யாயனா பத்து நிலைகளைச் சொல்கிறார். 1. அறுபத்து நான்கு விதமான கலவி நிலைகள் (postures). 2. ஆலிங்கன விசார – ஆலிங்கனம் செய்யும் விதங்கள். 3. சும்பனம் – முத்தமிடும் முறைகள். 4. நகங்களைப் பயன்பாடு. 5. பற்களின் பயன்பாடு, கடித்தல் மற்றும் வேற்று தேசத்தினருடன் கலவி செய்யும் விதம். 6. 7. கைகளால் அடித்தல் (உதாரணமாக, பிருஷ்டப் புணர்ச்சியின் போது பிருஷ்டத்தில் கையால் அடித்தல்) மற்றும் ஒலி எழுப்புதல். 8. ஆண்களைப் போல் செயல்படும் பெண்கள் 9. ஔபரிஷ்டகம் நவமோ – அதாவது, ஓரல் செக்ஸ்.  இதைத்தான் இயற்கைக்குப் புறம்பானது என்கிறது இந்தியச் சட்டம். 10. கலவியை எப்படித் துவங்குவது, எப்படி முடிப்பது.

காம சூத்திரத்தின் மிக முக்கியமான அத்தியாயம், அதன் கடைசி அத்தியாயமான ஏழாம் அத்தியாயம் ஔபமிஷாதிகம்.  அதாவது, உடல் கவர்ச்சியைக் கூட்டுவதற்கும், ஆண்மையை அதிகரிப்பதற்கும் என்னென்ன மருத்துவ முறைகள் உள்ளன என்பதை விளக்குகிறது இந்த அத்தியாயம்.

மேலே குறிப்பிட்ட ரதி ரகஸ்யத்தைப் பற்றி ஒரு சுவாரசியமான கதை உண்டு. வேணு தத்தன் என்ற மன்னனின் காலத்தில் ஒரு பெண் விரக தாபம் தாங்காமல் ஆடைகளைக் கழற்றிப் போட்டு விட்டு, தன்னை யாரேனும் திருப்தி செய்யும் வரை நிர்வாணமாகவே இருப்பேன் என்று சபதம் செய்து விடுகிறாள்.  (கிட்டத்தட்ட அராத்துவின் சாந்தி எனக்கு நினைவுக்கு வருகிறாள்.)  இதைக் கேள்விப்பட்ட மன்னன் அவளை அரசவைக்கு அழைத்து வரச் சொன்னான்.  அரசவைக்கும் அவள் நிர்வாணமாகவே வந்தாள்.  இதைச் சற்றும் எதிர்பாராத அரசன், “ஏ பெண்ணே, இவ்வளவு பேர் எதிரில் நிர்வாணமாக வர உனக்கு வெட்கம் நாணம் ஏதும் இல்லையா?” என்று கோபத்துடன் கேட்கிறான்.  அதற்கு அவள், “இந்த சபையில் என்னைத் திருப்தி செய்யக் கூடிய ஆண் மகன் யாராவது இருந்தால் நான் ஆடை அணிந்து கொள்கிறேன்” என்கிறாள்.  அப்போது சபையில் இருந்த கொக்கோக ரிஷி, “நான் இவளைத் திருப்தி செய்கிறேன்” என்று சொல்லி அவளோடு செல்கிறார்.  ரிஷி காம ரகஸ்யம் கற்றவர் என்பதால் மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என்று களியாட்டம் போட, அந்தப் பெண் Oh ghaad oh ghaad என்று கதறி அழுது இனிமேல் ஆடை அணிந்து கொள்கிறேன் என்று சொல்லி, மிகுந்த நாணத்துடன் அரசவைக்கு வருகிறாள்.

எப்படிச் செய்தீர், என்ன செய்தீர் என்று அரசன் ரிஷியைக் கேட்ட போது, ரிஷி சொன்னதுதான் ரதி ரகஸ்யம் என்ற நூல்.

இதுதான் இந்தியப் பாரம்பரியமே தவிர, வெள்ளைக்காரர்கள் நம் மீது திணித்த விக்டோரிய மதிப்பீடுகள் அல்ல.  இந்தியர்களைப் போல் காமத்தைக் கொண்டாடியவர்கள் இல்லை.  சம்ஸ்கிருதத்தில் பர்த்ருஹரியின் சிருங்கார சதகங்களில் காமம் சொட்டும்.  பெண்ணைக் கண்டால் பிணம் கூட எழுந்து புணரும் என்பார் ஒரு சதகத்தில்.  தமிழ் இலக்கியத்தில் காமம் குறித்த எழுத்துக்களில் திருவள்ளுவரின் காமத்துப் பால் மிக விசேஷமான ஒன்று.  அதற்குப் பிறகும் தொடர்ச்சியாக தமிழில் காமம் எழுதப்பட்டே வந்திருக்கிறது.

***

ஆனால் தமிழர்களின் வெகுஜன மனோபாவமோ அடிமைத்தனம் சார்ந்தது. அதனால் விக்டோரிய ஒழுக்க மதிப்பீடுகளையே தங்களுடைய பாரம்பரியமாக நம்பி

காமத்தைத் தங்கள் கலாச்சாரத்திலிருந்து விரட்டி அடித்தனர்.  கலைஞர்களும் இதற்கு விதிவிலக்காக இல்லாமல் மைய நீரோட்டத்தை ஒட்டியே தங்கள் படைப்புகளை முன்வைத்தனர்.

சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காமத்தை எழுதியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் இலை மறைவு காய் மறைவாகவே எழுதினார்கள். ஆனால் சமூக எதார்த்தம் எப்படி இருக்கிறது என்றால், காமத்தை சரியாக அணுகத் தெரியாமல் போனதால் ஒட்டு மொத்த சமூகமே ஒரு நோய்க் கூறான நிலையை அடைந்திருக்கிறது. இங்கே நடக்கும் எண்ணற்ற குற்றச் செயல்களுக்கு காமமே காரணமாக இருந்து வருவதிலிருந்து நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் சராசரி மனிதனை விட பத்தாம்பசலிகளாக இருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் காமத்தை எழுதுவது தப்பான விஷயமான எண்ணி அதை ஒரு தீண்டத்தகாத பொருளாக ஒதுக்கி வைத்து விட்டனர்.

தடைகளை மீறுபவனே கலைஞன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழில் அப்படி நடக்கவில்லை.  இப்படியே ஒரு நூற்றாண்டு முடிந்த பிறகு தற்காலத்தில் ஒன்றிரண்டு பேர் துணிச்சலாக காமத்தை எழுதத் துவங்கினர். ஆனால் அதிலும் ஒரு துரதிர்ஷ்டம் நடந்தது.  பிறந்ததிலிருந்தே பேசாமல் இருந்த குழந்தை பேசத் துவங்கியதும், “அம்மா நீ எப்போது செத்துப் போவாய்?” என்று கேட்டது போல் ஆயிற்று, அவர்கள் எழுதிய காமத்துப் பால் கதைகள்.  எந்த சிருஷ்டிகரத் தன்மையும் இல்லாத வெறும் தட்டையான எழுத்தையே காம இலக்கியம் என்று அவர்கள் முன் வைத்தனர்.

இந்த நிலையில் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழில் காமத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் முதல் நாவலாக அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளைப் பார்க்கிறேன்.  இந்த நாவலில் சொல்லப்பட்டிருப்பது இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்.  காமத்தை அவர்கள் இப்படித்தான் எதிர்கொள்கிறார்கள்; வாழ்கிறார்கள் என்பதை இந்தத் தலைமுறையைச் சேராதவனாக இருந்தாலும் நான் நெருக்கமான முறையில் அறிந்திருக்கிறேன். அந்த வகையில் தமிழில் வெளிவரும் முதல் பாலியல் நாவல் (erotic novel) இது.  இப்படிச் சொல்லும் போது நான் எழுதிய காமரூப கதைகள் என் நினைவுக்கு வருகிறது.  ஆனால் அந்த நாவலை நான் ஏன் இந்த genre-இல் எழுதப்பட்ட முதல் நாவல் என்று சொல்லவில்லை என்றால் அதில் காமம் மிகப் பெரும் வாதையாகச் சொல்லப்பட்டது.  காமத்தின் அடிப்படையாகத் திகழ்வது வாதை அல்ல; காமம் இன்பத்துக்குரியது.  காமம் துய்த்தலுக்குரியது.  காமரூப கதைகளில் காமம் என்பது இல்லாததாக இருக்கிறது. அந்த இல்லாமையே அதில் வரும் பாத்திரங்களின் தீராத வலியாகவும் வாதையாகவும் ஆகிறது.  மாறாக,  தற்கொலை குறுங்கதைகளில் காமம் மனித உடல்களில் புகுந்து துள்ளி விளையாடுகிறது.  அதனால்தான் இதை தமிழின் முதல் பாலியல் நாவல் என்கிறேன்.

தற்கொலை குறுங்கதைகளின் இன்னொரு தனித்தன்மை என்னவென்றால் இதன் மொழி.  பாரதிக்குப் பிறகு தமிழ் உரைநடையை பாதித்தவர்களில் சுஜாதாவுக்குப் பெரும் பங்கு உண்டு.  அதற்குப் பிறகு அடியேனைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.  ஏனென்றால், நான் என்ன எழுதினாலும் அதைத் தவறாமல் படித்து விட்டுத் திட்டுகிறார்கள் என்றால், என் எழுத்தைப் படிக்காமல் இருக்க முடியவில்லை என்று தானே பொருள்?  இது எவ்வளவு பெரிய விஷயம்?  என் எழுத்தைப் பிடிக்காவிட்டாலும், அதை வெறுத்தாலும், அதைப் படிக்காமல் இருக்கவே முடியவில்லை என்ற ஒரு நிலையில் எல்லா வாசகர்களும் இருக்கிறார்கள் என்றால் அதை என்னவென்று சொல்வது?  சரி, நமக்குப் பிறகு நம்முடைய அற்புதமான தமிழை யார் நேர்த்தி செய்திருக்கிறார்கள் என்று உன்னிப்பாகவே கவனித்து வந்தேன்.

அராத்து அதைச் செய்திருக்கிறார்.  தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை நிகழ்த்தியிருக்கிறார்.  பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது.  எதிர் அழகியலின் கலகக் கலரி ஆட்டம் இது.  இதுவரையிலான தமிழ்ப் புனைகதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம்.  மொழியில் மட்டும் அல்லாமல் கதை சொல்லும் முறையிலும் அராத்து இதைச் செய்திருக்கிறார்.  தமிழ்ப் புனைகதை உலகம் இதுவரை பெருங்கதையாடல்களையே (grand narrative) சொல்லி வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அராத்து தனது குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் இதையும் உடைத்து விட்டார்.

லாஸ்ட் ஆர்டர் என்ற கதையைப் பாருங்கள்:

சார் டைம் 10.45 ஆயிடிச்சி, லாஸ்ட் ஆர்டர் ப்ளீஸ்.

பதினஞ்சு லார்ஜ் பகார்டி, ஒம்போது கிங்க் ஃபிஷர் ஸ்ட்ராங்க், நாலு சோடா, ஆறு வாட்டர் பாட்டில், நாலு ஃபுரூட் சால்ட், மூணு வெஜ் சாலட், ஒரு ஸீ ஃபுட் ப்ளேட்டர்… அப்புறம் மூணு தயிர் சாதம்.

(இன்னும் வரும்…)

Comments are closed.