தேவதைகளும் சாத்தான்களும்…

இலக்கியம் ஒன்றே மனித இனத்தை இன்றைய அழிவிலிருந்து மீட்டெடுக்கக் கூடியது.  நீங்கள் ஒரு இந்துவோ, முஸ்லீமோ, கிறித்தவரோ, பௌத்தரோ யாராக இருந்தாலும் உங்கள் கடவுள் உங்களை மீட்கப் போவதில்லை.  மனிதன் விதைத்ததை மனிதன் மட்டுமே அறுவடை செய்ய முடியும்.  முகமது ஷுக்ரி என்று ஒரு மொராக்கோ தேசத்து எழுத்தாளர் இருந்தார்.  அவர் எழுதிய அல்-கூப்ஸ் அல்-ஹஃபி என்று ஒரு அரபி நாவல் உள்ளது.  அரபி மொழி தெரிந்தவர்கள் அதை அரபியிலேயே படிக்கலாம்.  ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அதன் பெயர் Naked Bread.  அல்-ஹஃபி என்றால் நிர்வாணம்.  அல்-கூப்ஸ் என்றால் ரொட்டி.  அல் என்பதற்கு The என்று பொருள்.  இறந்த பிறகுதான் மனிதர்கள் மனிதர்களுக்கு மரியாதை தருகிறார்கள் என்று தன் நாவலில் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் முகமது ஷுக்ரி.

ஷுக்ரியின் தம்பி சிறுவனாக இருக்கும் போதே அவனைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடுகிறார் அவர் தந்தை.  வறுமைதான் காரணம்.  பல ஆண்டுகள் கழித்து கபர்ஸ்தான் வருகிறார் ஷுக்ரி.  ஷுக்ரியின் நண்பர் அப்துல் மாலிக் அன்று கபர்ஸ்தான் சென்று ஓத வேண்டியிருந்தது.

என் தம்பிக்காகவும் ஓதுவீர்களா மாலிக்?

உன் தம்பியின் கல்லறை எங்கே இருக்கிறது ஷுக்ரி?

ஒரு சுவருக்கு அருகே இருந்தது.  அதுதான் அடையாளம்.  கல்லறை கட்டும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.

ஆனால் இங்கே பல சுவர்கள் இருக்கின்றனவே?

அவர் ஓத ஆரம்பித்தார்.  யாஸின் ஒவ்வால் குரான் அல் ஹக்கீம்…

நான் கொண்டு வந்திருந்த மலர்க்கொத்துக்களை அங்கிருந்த எல்லா கல்லறைகளிலும் வைத்தேன்.  இங்குதான் நம் தம்பி எங்கோ அடக்கம் செய்யப்பட்டிருக்கிறான்.  ஒருவேளை என் பாதங்களுக்கு அடியிலோ…அப்துல் மாலிக்கின் வார்த்தைகள் என் காதில் ஒலிக்கின்றன.  என் தம்பி எந்தப் பாவமும் செய்யவில்லை.  அவன் இந்தப் பூமியில் வாழ்ந்த சில வருடங்களை பசி பட்டினியிலேயே கழித்தான்.  அவனை அடக்கம் செய்த முதியவர் அப்போது என்னிடம் சொன்னார்: உன் தம்பி மலக்குகளோடு இருக்கிறான்.

இருக்கலாம்.  நான்?  நான் என்ன ஆவேன்?  அநேகமாக சைத்தானாகலாம்.  சிறுவர்களெல்லாம் தேவதைகளாகவும் பெரியவர்களெல்லாம் சைத்தான்களாகவும் ஆவார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  நான் மலக்காவதற்கான காலம் கடந்து விட்டது.

அல்-கூப்ஸ் அல்-ஹஃபி இவ்வாறாக முடிகிறது.பத்திரிகைகளில் வெளிவந்த சிறுவர் சிறுமிகளின் உடல்களைப் பார்த்தபோது இந்த நாவல் என் ஞாபகத்துக்கு வந்தது.