கடந்த ஆறு மாதங்களாக நான் எக்ஸைல் மற்றும் ஸீரோ டிகிரி மொழிபெயர்ப்பில் மூழ்கிக் கிடக்கிறேன். மொழிபெயர்ப்பாளர்களோடு நானும் co-translator ஆக செயல்பட்டு வருகிறேன். இந்த நிலையில் எக்ஸைலின் அடுத்த அத்தியாயத்தைச் செப்பனிட்டு ஒரு வாரத்துக்கு முன்னால் மொழிபெயர்ப்பாளருக்கு நான் அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் என் உயிர்ப் பிரச்சினையான அந்த மொழிபெயர்ப்பைக் கூட தள்ளி வைத்து விட்டு, ஒரு வாரம் ஓய்வெடுங்கள் என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லி விட்டு இந்த முன்னுரை வேலையில் ஈடுபட்டேன். இது வெறும் எழுத்து வேலை அல்ல. ராப்பகலாகப் படிக்க வேண்டியிருந்தது. ரொலான் பார்த், ஜார்ஜ் பத்தாய் போன்ற என் ஃப்ரெஞ்ச் நண்பர்களின் எழுத்தைத் திரும்பவும் வாசிக்க வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு ஒரு கவன ஈர்ப்பைக் கேட்டு விட்டது தற்கொலைக் குறுங்கதைகள். இன்னொரு விஷயம், இந்த முன்னுரையின் மற்ற பகுதிகளிலும் தற்கொலைக் குறுங்கதைகள் என்றே வாசிக்கவும். அராத்து, தற்கொலை குறுங்கதைகள் என்றே எழுதியிருந்ததால் நானும் அப்படிக் குறிப்பிட்டு விட்டேன். பிறகுதான் பார்த்தேன், அவர் வாழ்க்கையை வாழ்கை என்றே தட்டச்சு செய்வதால் அவருடைய மடிக் கணினியில் க் என்ற எழுத்து வராது போல் இருக்கிறது என்று நினைக்கிறேன். எனவே தற்கொலைக் குறுங்கதைகள் தான் சரி. இனி முன்னுரையின் கடைசிப் பகுதி.
IV
பின்நவீனத்துவத்தின் பல அம்சங்களைத் தற்கொலைக் குறுங்கதைகளில் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம். முதலாவது, self reflexivity. அதற்குள் போவதற்கு முன்னால் நாம் ஒன்றை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பின்நவீனத்துவமோ அதன் தொடர்பான விஷயங்களோ வெறும் இலக்கிய உத்தி அல்ல. அது ஒரு அரசியல் நிலைப்பாடு. எப்படி என்று பார்ப்போம்.
Self reflexivity என்பது ஒரு பிரதி தன்னைத் தானே பிரதிபலித்துக் கொள்வதாகும். தற்கொலைக் குறுங்கதைகளிலிருந்து சில உதாரணங்கள்:
”சாந்தியின் மனம் தத்தளித்தது. ஒரு சந்தேகத்துக்காக இந்தக் கதை எழுதுபவன் சாந்தியிடம் தத்தளிக்கிறதுதானே என ஜாடைமாடையாகக் கேட்டதற்கு, போடா பத்தினிக்குப் பிறந்த தேவிடியா மகனே எனத் திட்டினாள்.” (எளிமை)
”ஃபக் ஆஃப்” என்ற கதை:
”என் மூளையிடம் கேட்டேன் – உன்னால், என் மூலம், நான் எழுதுவதை இலக்கியத் தரமாக எழுத வைக்க முடியுமா என்று.
மூளை சொன்னது – ஃபக் ஆஃப், நான் நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். I am totally fit. எப்போதாவது நீ குடிச்சிட்டு எழுதறதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.”
நவீனத்துவத்தில் பிரதிக்கு மதிப்பு இல்லை. பிரதியை உருவாக்கும் கலைஞனே அங்கு பிரதானமானவன். நவீனத்துவம் வெளியிலிருந்து செல்வாக்கு செலுத்தும், பாதிக்கும் விஷயங்களை தவிர்க்கவே விரும்புகிறது. அது அந்தக் கலைப் படைப்பை சிருஷ்டிக்கும் கலைஞனின் உள் தர்ஸனத்தையே பெரிதும் நம்புகிறது. அந்த வகையில் அது வெளிச் சக்திகளிலிருந்து பாதிக்கப்படாத சுய அதிகாரம் (autonomous) பொருந்தியதாக இருக்கிறது. இத்தகைய வரலாற்றுத் தருணத்தில் தான் Roland Barthes எழுத்தாளன் செத்து விட்டான் (Author is dead) என்று அறிவித்தார்.
சில வாக்கியங்கள் மானுட வாழ்வை மாற்றி அமைப்பதில் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன. அஹம் ப்ரம்மாஸ்மி என்பது அப்படிப்பட்ட வார்த்தைகளில் ஒன்று. I do not agree with what you have to say, but I’ll defend to the death your right to say it என்ற வால்டேரின் வாசகம் இன்னொன்று.
Make love, not war என்பது ஃப்ரான்ஸில் மே 1968 மாணவர் புரட்சியின் போது சொல்லப்பட்ட வாசகம். அதே போன்ற இன்னொரு வாசகம், எழுத்தாளன் செத்து விட்டான் எனபது. இந்த வாசகம் 25 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் அறிமுகமான போது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இந்த வாசகம் ஜனநாயகத்தன்மையை நிலைநாட்டும் ஒரு அரசியல் நிலைப்பாடு ஆகும். எப்படி என்றால், தாய்வழிச் சமூகத்தில் தாய் அதிகாரம் செலுத்துகிறாள்; தந்தை வழிச் சமூகத்தில் தந்தை அதிகாரம், கல்விக் கூடங்களில் ஆசிரியர் அதிகாரம், மருத்துவமனைகளில் மருத்துவர் அதிகாரம், சிறைச்சாலைகளில் கண்காணிப்பாளர் அதிகாரம். இதேபோல் எழுத்தைப் பொறுத்தவரை எழுத்தாளன் அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறான். நான் தருகிறேன், நீ பெற்றுக் கொள் என்று வாசகரை வெறும் நுகர்பவனாக (consumer) மாற்றுகிறான். பழைய பிரதிக்கும் பின்நவீனத்துவப் பிரதிக்கும் உள்ள வித்தியாசத்தை நான் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவது வழக்கம். பழைய பிரதி fast food; பின்நவீனத்துவப் பிரதி நாமே மீன் பிடித்து சமைத்துச் சாப்பிடுவதைப் போன்றது. எழுத்தாளன் செத்து விட்டான் என்றால் எழுத்தாளனின் அதிகாரம் – பிரதியின் ஒற்றைப் பரிமாணத் தன்மை செத்து விட்டது என்று பொருள். பின்நவீனத்துவப் பிரதியில் வாசகனும் அந்த வாசிப்பினூடேயே ஒரு எழுத்தாளனாக மாறுகிறான். இப்படிப்பட்ட திறந்த வாயில்களைக் கொண்டதாக இருக்கிறது பின்நவீனத்துவப் பிரதி. பழைய பிரதியோ மூடிக் கொண்டிருக்கிறது.
ஆக, எழுத்தாளன் செத்தால்தான் பிரதி தன்னைத்தானே பிரதிபலித்துக் கொள்ளும் தன்மையைப் பெற முடியும். இப்படிப்பட்ட self reflexivity கொண்ட பிரதிக்கு போர்ஹேஸின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். தமிழில் என்னுடைய நாவல்களான எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், ஸீரோ டிகிரி, கர்னாடக முரசு தொகுப்பில் வந்த சில சிறுகதைகள் மற்றும் ஷோபா சக்தியின் சிறுகதைகள். அதற்குப் பிறகு தற்கொலைக் குறுங்கதைகள் தான். அதிலிருந்து மேலும் சில உதாரணங்கள்:
”சாந்தியை பத்து வருடம் கழித்து யதேச்சையாய் பார்த்த போது குண்டாகி இருந்தாள். பழைய அழகு குலைந்திருந்தது. சாந்தி புத்திசாலி. வழக்கமாக இந்த சிச்சுவேஷனில், அடையாளமே தெரியவில்லை என்ற சொல்லாடல் வரும் என்பதால், அவள் முன் ஜாக்கிரதையாக அவளின் எலக்ஷன் போட்டோ ஐடி கார்டை மிகப் பெரியதாக்கி ஃப்ளெக்ஸ் பிரிண்ட் அவுட்டில் தூக்கிப் பிடித்தவாறே நடந்து வந்து கொண்டு இருந்தாள்.
என்ன சாந்தி என்றேன், வாஞ்சையோடு.
வாஞ்சைன்னா என்னாடா என்றாள்.” (நாஸ்டால்ஜியா என்ற கதையில்)
“ஒருநாள்” என்றுதான் இந்தப் பத்தி ஆரம்பிக்க வேண்டும். ஆனால் சுந்தருக்கு இப்படி எதையும் சாதாரணமாகச் செய்தால் பிடிக்காது என்பதால் – நிறைஞ்ச வெள்ளிக்கிழமை என ஆரம்பிக்கப் போகிறது இந்தப் பத்தி. என்னதான் வித்தியாசமாகச் செய்ய நினைத்தாலும் இந்தப் பத்தி ஒருநாள் என்றே ஆரம்பித்து விட்டதைத் தவிர்க்க முடியவில்லை பாருங்கள். அடுத்த பத்திதான் நிறைஞ்ச வெள்ளிக்கிழமை…. ச்சே சரி சரி வாருங்கள் அடுத்த பத்திக்கு… அடுத்த பத்தியில் கதை ராக்கெட் வேகம் எடுக்கப் போகிறது…” (டாக்டர்)
தேவதையின் இளைய தங்கை என்ற கதையில் self reflexivity ஒரு உச்சத்தைத் தொடுகிறது.
”வேலையின் அசதி காரணமாக ஓடுபிணமாக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாள் சாந்தி. வீடு நெருங்கி விட்டது. (இது கதைக்குத் தேவையா). காலிங் பெல் அடித்தாள்.
இந்தக் கதை கடைசியில் கணவன், சாந்தியின் ஒப்புதல் இல்லாமலேயே புணர்ந்து விட்டு தூங்கிக் கொண்டிருக்க, பக்கத்தில் சாந்தி கேவிக் கேவி அழுது கொண்டே, இல்லாத மோட்டு வளையை நிர்வாணமாக பார்த்துக் கொண்டிருப்பதாகத்தான் முடியப் போகிறது.
நடுவில் வழக்கமாக நடக்கும் சண்டை, வாக்குவாதம், திட்டு, அடி, உதை, கொடூரம் இதையெல்லாம் படிக்க வாசகர்கள் என்ன கேனையர்களா? சாந்திக்கோ அல்லது கணவனுக்கோ வேண்டுமானால் தன் பாய் ஃபிரெண்டிடம் / கேர்ள் ஃபிரண்டிடம், கதை சொல்ல ரா மெட்டீரியல் கிடைக்கும்.
இருந்தாலும் இதையெல்லாம் ஒரு கதை எனப் படிக்கும் வாசகர்களுக்கு ஒரு ட்விஸ்ட் வேண்டாமா?
சாந்தியும் கணவனும் பெரிய மனது பண்ணி வாசகர்களுக்காக ஒரு ட்விஸ்ட் கொடுத்தனர். அது என்னவெனில் அவர்கள் எரிச்சலோடு புணர்ந்து கொண்டிருக்கையில், உச்சக்கட்டத்தில் இருவரும் காதோரம் சொல்லிக் கொண்டனர் – ஐ லவ் யூ.”
பின்நவீனத்துவத்தின் மற்றொரு கோட்பாடு, intertextuality or text within the text. ஏற்கனவே எழுதப்பட்ட இன்னொரு பிரதியிலிருந்து சிலவற்றை எடுத்து நம்முடைய பிரதியில் பயன்படுத்திக் கொள்வது அல்லது பகடி செய்வது. புயலிலே ஒரு தோணியில் இளங்கோ அடிகளை அவ்வாறு பகடி செய்திருப்பார் ப. சிங்காரம். தற்கொலைக் குறுங்கதைகளில் அஞ்சலி என்ற கதையில் மோகமுள், நினைவுப் பாதை, எக்ஸைல் ஆகிய மூன்று நாவல்கள் பகடி செய்யப்பட்டுள்ளன. முதலில் மோகமுள்.
”நிறைய மெலடி சாங்ஸ் கலெக்ஷன் வச்சிருக்கேன், கேக்கறியா?
அய்யோ, நாவல்ல கடைசியாதான் கேக்க விட்டாரு, இதானே வேண்டும் என்று. எதுக்கு சாங்ஸ், அது இது என சுத்தி வளைச்சி பேசிட்டு, என்னை சுகிக்கணும் அதுதானே , வா… வந்து எடுத்துக்கோ.
யமுனாவை அணைத்தபடி, நீ என் ஆதர்ஸ நாயகிடி செல்லம் என்றான்.
ரூம்ல ஏசி இருக்கா என்றாள்.
பக்கத்தில் படுத்தபடி, அப்பாடா நாவல்ல பெட்ரூம் சீன் வறதுக்குள்ள எனக்குத் தாவு தீந்துடிச்சி; படிக்கிற நீங்கள்ளாம் எப்பிடி பொறுமையா இருந்தீங்க என்றாள்.”
மோகமுள் யமுனாவைத் தொடர்ந்து நினைவுப் பாதை சுசிலாவும், எக்ஸைல் அஞ்சலியும் தற்கொலைக் குறுங்ககதைகளில் என்ன பாடு படுகிறார்கள் என்பதை நீங்களே நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பின்நவீனத்துவப் பிரதியின் இன்னொரு அம்சம், வாசிப்பின் இன்பம். Roland Barthes கூறிய Pleasure of the Text. சமகாலத் தமிழ் இலக்கியம் வாசகர்களிடம் சரியாகப் போய்ச் சேராததற்கான பல காரணங்களில் ஒன்று, அந்த எழுத்தை வாசிப்பது மிகவும் இம்சையாக இருக்கிறது என்பதாகும். வேண்டுமென்றே வரவழைக்கப்பட்ட திருகல் மொழியில் எழுதினால் அது இலக்கியம்; புரிகிறாற்போல் எழுதினால் இலக்கியம் அல்ல என்பதாக ஒரு கருத்து இலக்கியச் சூழலில் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. பல இலக்கியவாதிகளின் எழுத்து எந்த அளவுக்கு இம்சையாக இருக்கிறது என்பதை சிறு முதலிரவு என்ற ஒரு கதையிலேயே பகடி செய்திருக்கிறார் அராத்து. இந்த இம்சையெல்லாம் இல்லாமல், தற்கொலைக் குறுங்கதைகள் அட்டகாசமான ஒரு வாசிப்பு இன்பத்தை நமக்கு நல்குகிறது. இந்த நாவலை நீங்கள் விரும்பலாம்; அல்லது, வெறுத்து ஒதுக்கலாம். ஆனால் அலுப்பூட்டுகிறது என்று மட்டும் சொல்லவே முடியாது.
புனிதங்களைச் சிதைப்பது பின்நவீனத்துவத்தின் மற்றொரு கூறு. தற்கொலைக் குறுங்கதைகளின் ஒவ்வொரு எழுத்துமே நம் கலாச்சாரம் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது. பெண்மை, தாய்மை, கற்பு, எழுத்தின் தூய்மை, காதல், கடவுள், மரணம் என்று எல்லாவிதமான புனிதங்களும் இந்த நாவலில் புனிதத்தன்மையை இழந்து நிற்கின்றன. பிரதானமாக இந்தக் கலகத்தைச் செய்பவள், கதையின் நாயகி சாந்தியாக இருக்கிறாள். அது தவிர, பாத்திரங்களின் பெயர்களில் கூட புனிதத்தின் சிதைவைப் பார்க்க முடிகிறது. ஸ்ரீ மண்ணாங்கட்டி, கோண்டி ராமசாமி, பிதுக்கு முழி, ஊசி, மொடக்கத்தான், மறுக்கான், கழனித் தண்ணி, மொளைக்குச்சி, சுடுகாட்டான், மக்கட்டை, ஓம்பொடி, வெள்ளை அப்பளம் போன்ற பெயர்களெல்லாம் இந்த நாவலில் வரும் பாத்திரங்களின் பெயர்கள். (இந்த இடத்தில் நாம் பாரம்பரியமான எழுத்தாளர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு வைக்கும் பெயர்களையும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு அமெரிக்கையான பெயர் அரவிந்தன்.)
புனிதங்களின் சிதைவுக்கு நாவலிலிருந்து ஒருசில உதாரணங்களைப் பார்ப்போம்:
”தம்பி இன்னொரு கோட்டர் எடுத்தாப்பா. ஆங்… அது என்னமோ தெரியலை என் பொண்டாட்டிக்கு நான் குடிச்சா புடிக்கவே மாட்டேங்குது.
என்னா மச்சி, எல்லா பொண்டாட்டிக்கும்தான் குடிச்சா புடிக்காது.
ஏன் மச்சி பொய்யி புளுவற?” (குடி)
நமது கலாச்சாரப் புனிதங்களிலேயே பெரும் புனிதமான வரலாறு என்ற பெருங்கதையாடல் குஷிகேஷி என்ற கதையில் சிதைவுறும் விதத்தைப் பாருங்கள்:
”அந்தப்புரத்தில் 240 பெண்கள் உள்ளனர். கடுமையான காவல். இந்த நாட்டு மற்றும் அண்டை நாட்டுப் பெண்கள். அந்தப்புரப் பெண்களுக்கு உணவு உடை செல்வத்திற்கெல்லாம் பிரச்சினை இல்லை இளவரசே. பலரும் இன்னும் கன்னி கழியவில்லை இளவரசே. கட்டி அணைத்தல், முத்தமிடுதல் , விரல் விளையாட்டு, வாய் விளையாட்டு என அனைத்தையும் செய்து கிளப்பி விட்டு விட்டு கடைசியில் புணராமல், புணர முடியாமல் அரசர் திருப்பி அனுப்பி விடுவதால் பெண்கள் அனைவரும் பித்துப் பிடித்தது போல் உள்ளனர். சிலர் காய் கனி எடுத்துக் கொண்டு தனி அறைக்குச் சென்று விடுகின்றனர். சிலர் பெண்ணும் பெண்ணுமே… சொல்லவே நாக்கூசுகிறது இளவரசே. சிலர் தப்பித்து ஓடப் பார்த்து , பிடிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டு விட்டனர்.”
பின்நவீனத்துவத்தின் இன்னொரு அம்சம், குப்பையைக் கச்சாப் பொருளாக உபயோகப்படுத்திக் கொள்வது. இப்படி உருவாக்கப்படும் எழுத்தை Literature of Trash என்று சொல்வார்கள். இதை டொனால்ட் பார்த்தெல்மேவின் எழுத்தில் மிகச் செறிவாக செய்து காட்டியிருப்பார். இந்த நாவலில் மெனு என்று ஒரு கதை உள்ளது. ஒரு உணவு விடுதியில் போய் அமர்கிறாள் சாந்தி. சிப்பந்தி மென்யு கார்டைத் தருகிறார். கதை முழுவதும் அந்த மென்யு கார்டில் உள்ள பட்டியல்தான்.
CREAM OF VEG SOUP 50
SWEET CORN VEG SOUP 50
SWEET & SOUR SOUP 55
VEG CLEAR SOUP 45
CREAM OF TOMATO SOUP 50
CREAM OF MUSHROOM SOUP 55
HOT & SOUR VEG SOUP 50
இப்படியாக நூறு இருநூறு அய்ட்டங்களின் பட்டியல் நீள்கிறது.
கதையின் முடிவு இது:
”15 நிமிடம் மெனுவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மேடம் என்றபடி ஆர்டர் எடுக்க ரெடியானான் சர்வர்.
ஒரு கர்ட் ரைஸ். சிக்கன் கறி இல்லையா எனக் கேட்டாள் சாந்தி.”
***
இன்றைய கால கட்டம் ஒவ்வொரு மனிதனிடமும் கடுமையான மனநோயை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நோய் நம்முடைய சமூக வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் வன்முறையாகவும், அபத்தமாகவும் இன்னும் பலவிதமாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை ஒவ்வொரு தருணத்திலும் நாம் அனுபவித்து வருகிறோம். தற்கொலைக் குறுங்கதைகள் முழுவதுமே இந்த madness மிக வலுவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு கதையை உதாரணம் காட்டுகிறேன். கதையின் பெயர், லவ் யூ.
ஹலோ…
ஹலோ ஏன் இவ்வளோ நேரம் கூப்பிடல நான் உனக்கு டிக்கட் புக் பண்றதுக்கு… இல்லடி அதுக்குத்தான்… போடா நான் சொல்றத கேக்கவே கேக்காத, நான் லேப்டாப்பை ஓப்பன் செஞ்சப்ப என் ஃபேமிலில இருந்து விருந்தாளி வந்துட்டாங்க… இல்ல செல்லம் டிக்கட்டே வேணாம்னு சொல்லத்தான்… நான் அதைக்கூட கண்டுக்காம உனக்காக டிக்கட் போட ட்ரை பண்ணா கனெக்ஷன் கிடைக்கல, கஸ்டமர் கேர் கால் பண்ணி… ஏய் இருடி… கேட்கலாம்னு பாத்தா ஏதேதோ ஆப்ஷன் வருதே ஒழிய கஸ்டமர் கேர் எக்சிக்யூட்டீவ் கிட்ட போக மாட்டேங்குது… ஏய் நான் சொல்றத கேக்கறயா… அப்புறம் என் ஃபிரண்டுக்கு போன் பண்ணி… ஏய் லூஸு ஒரு நிமிஷம் நான் சொல்றத… டிராவல்ஸ் மூலமா புக் பண்ண முடியுமான்னு கேட்டேன், அப்ப பாத்து என் ஹஸ்பெண்ட் கால் பண்ணி, கால் வெயிட்டிங் போவுது… ஏன்டி பைத்தியம் நான் என்ன லூஸா, ஒரு நிமிஷம் சொல்ரத கேளுடி… ஒடனே கட் பன்ணிட்டு அவர்கிட்ட பேசினா ஒரே திட்டு, சாவலாம்னு தோணிச்சி, இருந்தாலும்… செருப்படி வாங்குவ, இப்ப நிறுத்தப் போறியா இல்லியாடி? உனக்காக பிரவுஸிங்க் செண்டர் போலாம்னு டிரஸ் பண்ணிட்டு இருக்கும் போது… ஷிட்… கரண்ட் கட்… ஃபக் ஆஃப்… பைக் சாவி… ச்சீ ஒரு நிமிஷம்… கிடைக்கல நான் சொல்றத… அப்புறம் நடந்தே… கேளேண்டி லூஸு… பிரவுஸிங் செண்டர் போனேன்… ஓத்தா இப்ப நிறுத்துறியா இல்லையாடி? எனக்கு இது வேணும்… என்னாடி வேணும் எருமை மாடு லிஸன் பண்ண மாட்ட… நல்லா திட்டுங்க, எல்லாரும் திட்டுங்க… ஐயோ ஏன்டி… திட்டு வாங்கத்தான் நான் பொறந்திருக்கேன்… ப்ளீஸ் ஒரு நிமிஷம்… நல்லா திட்டுங்க… இல்லடி எனக்கு டிக்கட்டே வேணாம்… இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்ல?
டிக்கட் போட்டியா?
இல்லை போட முடியலை, அதைத்தான் சொல்ல வந்தேன், சொல்ல வுட்டாதான நீ… போடா.
ஏய் நீ என்னை பேசவே உடலையேடி, சாரி செல்லம்…
ஐ லவ் யூ.
ஐ லவ் யூ.
***
தமிழ் இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவம் அறிமுகம் ஆகி சுமார் முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அறிமுகப்படுத்தியவர்கள் பெரும் பண்டிதர்கள், ஆங்கிலம் பேசும் ஜாம்பவான்கள், மேட்டுக்குடியைச் சேர்ந்த புத்திஜீவிகள். ஆனால் இவர்கள் யாருமே புனைகதை வெளியில் பின்நவீனத்துவம் எப்படிச் செயல்பட முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டியதில்லை. நடந்ததெல்லாம் வெறும் சிறுபிள்ளைத்தனமான, நகைப்புக்குரிய விஷயங்களாகி விட்டன. அதாவது, பின்நவீனத்துவத்தை முறையாகப் பயின்ற இவர்களிடம் கலைக்கு வேண்டிய அடிப்படையான சிருஷ்டிகரத்தன்மை இல்லாத காரணத்தால் பின்நவீனத்துவத்தை இழித்தும் பழித்தும் பேசிய பழமைவாதிகளால் எள்ளி நகையாடப்படும் பிரதிகளை இவர்கள் உருவாக்கினார்கள். வெறும் கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் பயின்று உருவாக்கப்படுவதல்ல இலக்கியம் என்ற எளிய விஷயத்தை இவர்கள் அறிந்து கொள்ளாததே இந்தத் தோல்விக்குக் காரணம்.
இந்தப் பின்னணியில் பின்நவீனத்துவமும் தெரியாமல், சரியான இலக்கியப் பின்புலமும் இல்லாமல் வெளியிலிருந்து வந்த ஒரு மனிதர் இப்பேர்ப்பட்ட ஒரு பாய்ச்சலை இலக்கியத்திலும் மொழியிலும் நிகழ்த்த முடியும் என்பதே எனக்கு ஒரு நகைமுரணாகத் தெரிகிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும் போது இது ஒன்றும் அத்தனை பெரிய அசாத்தியமான விஷயம் அல்ல என்றும் தோன்றுகிறது. காரணம், கலைக்குத் தேவையான ஒன்று அராத்துவிடம் உள்ளது. அது, கலையை வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்காமல் கலையையும் வாழ்வின் ஒரு கூறாக அனுபவம் கொள்வது. 1980-இல் இலக்கியம் வெளிவட்டம், படிகள் போன்ற பத்திரிகைகளில் கலையும் வாழ்க்கையும் பற்றி பின்நவீனத்துவப் பண்டிதர்களிடம் நான் விவாதம் செய்த கட்டுரைகளை நீங்கள் படித்தால் இது பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். பறைக் கொட்டு என்பது மரணத்துக்காக மட்டுமே அடிக்கப்படுவது என்பது நமக்குத் தெரியும். அராத்து தனது திருமணத்தின் போது நாதஸ்வரமும் வேறு எந்த சாஸ்த்ரீய வாத்தியக் கச்சேரியும் வைக்கவில்லை. ஸ்ரீவைஷ்ணவ குலத்தைச் சேர்ந்த அவருடைய திருமணத்தில் பறைக் கொட்டு தான் அடிக்கப்பட்டது. கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு, பீடி புகைத்தபடி பறையை தணலில் வாட்டிக் கொண்டிருந்த தலித் கலைஞர்களின் பறை முழக்கத்தோடு தான் அராத்துவின் திருமணம் நடந்தது. அந்த முழக்கத்திலிருந்து பிறந்ததுதான் தற்கொலைக் குறுங்கதைகள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் வெறும் படிப்பு மட்டுமே நுண்ணுணர்வைக் கொடுத்து விடாது என்பதை வலுயுறுத்துவதற்காகத்தான்.
இறுதியாக, கதையாடல் மற்றும் மொழி (micro and macro) ஆகிய இரண்டு தளங்களிலும் புரட்சிகரமான கட்டுடைப்பு செய்து புதிய சாத்தியங்களைத் திறந்து விட்டிருக்கும் தற்கொலைக் குறுங்கதைகள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் இதுகாறும் நடந்த வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக எதிர்காலத்தில் சொல்லப்படும். மட்டுமல்லாமல், உலக மொழிகள் எதிலுமே பின்நவீனத்துவத்தையும் கலைத்துப் போடும் ஒரு பிரதி இதுவரை வெளிவந்தது இல்லை. அப்படிக் கலைத்துப் போடும் முறைக்கு Digimodernism என்று இப்போதுதான் பெயரே வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழிலோ அப்படி ஒரு நாவலே வந்து விட்டது. Non-liner writing என்ற ஒரு புதிய genre ஸீரோ டிகிரி என்ற நாவல் மூலம் உலக இலக்கியத்துக்குத் தமிழின் பரிசாக வழங்கப்பட்டது. இப்போது Digimodernism என்ற genre-இல் உலகிலேயே முதல் நாவல் வெளிவந்திருக்கிறது. இதைத் தமிழர்களாகிய நாம் கொண்டாட வேண்டும்.
Comments are closed.