நானும் என் வாழ்க்கையும்…

(முன் குறிப்பு: இந்தக் கட்டுரையில் நீங்கள் என்ற வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் என் மீது அவதூறு செய்து என்னை வசை பாடும் அயோக்கியர்களையே குறிக்கிறேன் எனக் கொள்க.  என் நண்பர்களையோ, என் அன்புக்குரிய வாசகர்களையோ அல்ல)

முதலில் கஜலட்சுமிக்கும், ஸ்ரீதருக்கும், தர்மசேனனுக்கும், சுப்ரமணியனுக்கும், காயத்ரிக்கும், ராமசுப்ரமணியனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த நன்றி என்ற வார்த்தையைக் கூட அவர்கள் விரும்ப மாட்டார்கள்.  தந்தையோ குருவோ நன்றி சொன்னால் அது சரியாக இருக்குமா என்பார்கள்.  இருந்தாலும் நன்றி சொன்னால் எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.  ஒவ்வொரு தீபாவளியும் ஒரு இட்லி கூட சாப்பிட முடியாதபடி போகும்.  பூஜைக்கு நேரம் ஆகும்.  எனக்குப் பசிக்கும்.  வெளியே போய் சாப்பிடலாம் என்றால் ஆட்டோ கிடைக்காது.  முறுக்கு, சீடை, அதிரசம், சுழியம், ரவா லாடு, பொருவிளங்காய் உருண்டை எல்லாம் வீட்டிலேயே செய்யும் பழக்கம் என் வீட்டைப் பொறுத்தவரை முடிந்து போய் விட்டது.  அதனால் தீபாவளிக்குத் தீபாவளி, தீபாவளி வாழ்த்துக்கள் என்று மொபைல் போனில் வரும் நூறு இருநூறு வாழ்த்துக்களைப் படித்து பசியோடு வயிறும் மனமும் எரிந்தபடி இருப்பேன்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்த இந்த நிலை இந்த ஆண்டு மாறி விட்டது.  ஈரோட்டிலிருந்து கஜலட்சுமி பலவிதமான பட்சணங்களை குரியரிலேயே அனுப்பி விட்டார்.  அது தீபாவளிக்கு முதல் நாளே கிடைத்து விட்டது. 

தர்மசேனன் வருஷா வருஷம் எனக்கு வேட்டி சட்டை  எடுத்துக் கொடுப்பார்.  இந்த ஆண்டும் போன் பண்ணினார்.  என்னிடம் நிறைய வேட்டி இருக்கிறது; ஜீன்ஸ் அணிவதை நிறுத்தி விட்டேன்.  மெலிதான துணியில் பேண்ட் அணிவதையே விரும்புகிறேன் என்றேன்.  ரேமண்ட்ஸில் எடுக்கலாம் என்று முடிவாயிற்று.  தீபாவளிக்கு சில தினங்கள் முன்பு தி.நகரில் உள்ள பெலிட்டா உணவகத்தின் அருகே உள்ள ரேமண்ட்ஸில் சந்தித்தோம்.  பார்த்தால் மனிதர் டெங்கு ஜுரத்தோடு வந்திருந்தார்.  வீட்டில் அவந்திகாவும் டெங்கு ஜுரம் வந்துதான் படுத்திருந்தாள்.  அப்போது பணிப்பெண்ணும் இல்லாததால் நான் தான் சமையல், பாத்திரம் தேய்ப்பது எல்லாம் செய்து கொண்டிருந்தேன்.   கார்த்திக் வீடு பெருக்கி துடைப்பான்.  டெங்குவோடு ஏன் வந்தீர்கள், சில தினங்கள் சென்று கூட வாங்கிக் கொடுத்திருக்கலாமே என்று கடிந்து கொண்டேன்.  தர்மசேனன் கொண்டு வந்து கொடுத்த பட்சணங்கள் அனைத்தும் நாகூர் ஞாபகத்தை ஏற்படுத்தியது.  தர்மசேனனும் அவர் குடும்பத்தினரும் நாகூரைச் சேர்ந்தவர்கள். 

சுப்ரமணியன் ஓவியர்.  ஆனாலும் ஓவியத் துறையில் பணியாற்ற முடியாமல் மென்பொருள் நிறுவனத்தில் வேலை.  என்னுடைய ஒரு பிறந்த நாளின் போது என்னைத் தத்ரூபமாக இங்க்கில் வரைந்து வந்து கொடுத்தவர். தாம்பரத்திலிருந்து என் வீடு தேடி வந்து பட்சணங்களைக் கொடுத்தார்.  தீபாவளிக்கு மறுநாள் வந்ததால் நான் சூடாகச் சாப்பிட வேண்டும் என்று சுழியத்தை மறுநாளும் செய்யச் சொல்லி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.  இவர் கொண்டு வந்த பொருவிளங்காய் உருண்டையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மாச்சி செய்யும் பொருவிளங்காய் உருண்டையின் சுவையைக் கண்டேன்.  அற்புதம். 

பல நண்பர்கள் – என்னுடைய எழுத்தை மிக விரும்பும் நண்பர்கள் கூட – என்னைத் தன்னுடைய குருவாக நினைக்கும் நண்பர்கள் உட்பட – “நான் சாருவின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் செல்ல விரும்பவில்லை” என்று வாசகர் வட்டத்திலேயே பேசுவதையும் எழுதுவதையும் அடிக்கடி – கிட்டத்தட்ட தினந்தோறும் – பார்த்து வருகிறேன்.  இப்படி எழுதுவது, ஏதோ என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் ஒரு பொறுக்கியைப் போல் வாழ்வதாக அது ஒரு விபரீத அர்த்தத்தைக் கொடுக்கிறது.  என் வாழ்க்கையை நான் ஒரு திறந்த புத்தகமாக வைத்திருக்கிறேன்.  தமிழ்நாட்டில் இதுவரை இப்படி ஒருவர் கூட இருந்ததில்லை.  என் வாழ்க்கை தான் என் எழுத்து.  அப்படி இருக்கும் போது சாருவின் வாழ்க்கைக்குள் நான் போக விரும்பவில்லை என்று என் பிரியப்பட்டவர்களே சொன்னால் எப்படி?

ஆண்டு 1993. அந்தப் பெண் பார்க்க சேட்டுப் பெண்ணைப் போல் இருப்பாள். வயது 30. மத்திய அரசில் வேலை.  சிநேகிதிகள் “நீ ஜெயப்ரதாவைப் போல் இருக்கிறாய்; மாதுரி தீட்சித் போல் இருக்கிறாய்” என்பார்கள். கணவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆயிற்று. ஒரு மகன்.  வயது பதினொன்று.  ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.  சமூகம் அந்தப் பெண்ணை விதவை என்று பழித்துக் கொண்டிருந்தது.  பார்க்கும் ஒவ்வொருவனும் படுக்க வர்றியா என்று கேட்டு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறான்.  ஒருநாள் அவள் அலுவலகத்தில் மாங்காய் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, உடன் வேலை பார்த்த ஒருவன் ”என்ன மேடம், மாங்கா சாப்டுறீங்க…  எதாவது விசேஷமா?” என்று கேட்டு, கண்ணையும் அடித்திருக்கிறான்.  அந்தப் பெண் பார்க்கத்தான் சேட்டுப் பெண்ணைப் போல் இருப்பாளே ஒழிய ரவுடிகளிடம் ங்கோத்தா ங்கொம்மா என்று இறங்கி விடுவாள். அவள் உடனே அந்தப் பொறுக்கியிடம் சொன்னாள், “டேய், உனக்குப் பிறந்த ரெண்டு குழந்தைங்களும் உன் பக்கத்து வீட்டுக்காரனுக்குப் பொறந்ததுன்னு எல்லாரும் பேசிக்கிறாங்களே, அதைப் போய் கவனிடா முதல்ல.”

ஆனாலும் அவளுக்கு சமூகம் கொடுத்த நெருக்கடி தாங்க முடியாமல் தினந்தோறும் anti depressant மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தாள்.  ஒருநாள் பத்துப் பதினைந்து மாத்திரைகளை முழுங்கிச் செத்து விடலாம் என்று முடிவு செய்கிறாள். அப்போது அவள் அலுவலகத்துக்கு ஒருவன் புதிதாக வருகிறான்.  அவனைப் பற்றி அலுவலகத்தில் அவன் ஒரு எழுத்தாளன் என்று பேசிக் கொள்கிறார்கள்.  அவள் அவனிடம் தன் கதையை எழுதிக் கொடுத்து விட்டு சாகலாம் என்று முடிவு செய்கிறாள்.  எழுதிக் கொடுக்கிறாள்.  அதைப் படிக்கும் அவன் அவளுடைய தற்கொலை முயற்சியைத் தடுக்கிறான். நான் உன்னோடு இருக்கிறேன்; சாகாதே என்கிறான்.  நீ என்ன சொன்னாலும், என்ன தடுத்தாலும் தற்கொலை உணர்வு ஒரு பிசாசின் கைகளைப் போல் என் கழுத்தை அழுத்திக் கொல்லப் பார்க்கிறது.  இன்னும் இரண்டு நாட்கள் கூடத் தாங்காது.  பகல்கள் பரவாயில்லை.  இரவுகள் கொடூரமாக இருக்கின்றன என்கிறாள் அவள்.   எனக்கு ஒரு விவாகரத்து வழக்கு நடந்து முடிந்து விட்டது.  இன்னும் ஒருசில தினங்களில் நீதிமன்ற உத்தரவு கிடைத்து விடும்.  அது வரை பொறு; உத்தரவு கிடைத்ததும் நான் உன்னை மணந்து கொள்கிறேன் என்கிறான் அவன் அவளிடம். 

ம்ஹும்.  இன்னும் இரண்டு நாள் கூடத் தாங்க முடியாது என்று சொன்னதையே சொல்கிறாள் அவள்.

அவன் அப்போது முடிவு செய்கிறான்.  என்ன நடந்தாலும் பரவாயில்லை; இந்தப் பெண்ணின் உயிர் காப்பாற்றப் பட வேண்டும்.

விவாக ரத்து வழக்கு முடிந்து உத்தரவு வராத போதே அந்தப் பெண்ணை மணக்கிறான்.  Bigomy குற்றத்தின் கீழ் அவன் சிறையில் தள்ளப்படலாம்.  சிறையில் தள்ளப்பட்டால் அவனுடைய மத்திய அரசு வேலையிலிருந்து அவன் நீக்கப்படுவான்.

இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்ளத் தயாரானான் அவன்.  அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான்.

நான் தான் அவன்.  அந்தப் பெண் அவந்திகா.

என் வாழ்க்கையைப் பற்றி ஏதேதோ பேசித் திரியும் மூடப் பதர்களே, உங்களில் எத்தனை பேர் நீங்கள் காதலிக்கும் பெண்ணுக்காக சிறை செல்லத் தயாராக இருக்கிறீர்கள்?

உங்களில் எத்தனை பேர் காதலுக்காக மத்திய அரசு வேலையைத் துறந்து தெருவில் நிற்கத் தயாராக இருக்கிறீர்கள்? 

இந்த இரண்டையும் நான் செய்தேன். 

ஒரு பெண்ணை மணக்க எத்தனை விஷயத்தைப் பார்க்கிறீர்கள்?  பெண்ணை மணக்க வரதட்சணை வாங்கும் கயவாளிப்பயல்களா என்னைப் பார்த்துப் பேசுவது?  பத்து வயதுப் பையனோடு ஒரு பெண்ணை மணக்க உங்களில் எத்தனை பேர் முன்வருவீர்கள்? இப்படிப்பட்ட எந்தத் துணிச்சலும் இல்லாமல்,  நேர் வாழ்வில் கயவாளித்தனமும், போலித் தனமும், அயோக்கியத்தனமும் செய்து கொண்டிருக்கும் நீங்களா என்னைப் பார்த்துப் பேசுவது?

என்னைப் போலி என்றும் ஃப்ராடு என்றும் பேசும் உங்களில் எத்தனை பேர் நான் செய்த காரியங்களைச் செய்ய முடியும்?

முந்தாநாள் என் மகன் கார்த்திக் அவந்திகாவிடம் சொன்னான்.  நான் செய்த துரதிர்ஷ்டம், நான் அப்பாவை மிகத் தாமதமாகச் சந்தித்தேன் என்று. என்னை விமர்சிக்கும் தெருநாய்களே, கார்த்திக் நான் பெறாத பிள்ளை. அவனை நான் முதல் முதலில் பார்க்கும் போது அவனுக்குப் பதினோரு வயது.  அவன் சொல்கிறான் இப்படி. 

ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! ஒருநாள் நான் அவசரமாக வெளியே சென்று கொண்டிருக்கிறேன். பேண்ட் சட்டையெல்லாம் போட்டு விட்டேன். அப்போது பார்த்து கார்த்திக்கின் ஐந்து நண்பர்கள் வீட்டுக்கு வந்து விட்டனர்.  அவந்திகா வீட்டில் இல்லை.  நான் அவசர அவசரமாக அந்த ஐந்து பேருக்கும் கார்த்திக்குக்கும் சேர்த்து ஆறு கோப்பை தேநீர் போட்டுக் கொடுத்து விட்டுத்தான் வெளியே கிளம்பினேன்.  உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா?

பணிப்பெண் வராவிட்டால் பாத்திரம் தேய்ப்பது நான் தான்.  உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா?

சமையல் அறையில் இன்னமும் இரண்டு மணி நேரம் நின்று சமையல் செய்கிறேன்.  உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா? 

அப்படி இருக்கும் போது சாருவின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் போகவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்?  என்னுடைய வாழ்க்கையை நெருங்க உங்களால் பத்து ஜென்மம் எடுத்தால் கூட முடியாது.  அது இமயத்தின் உச்சியில் இருக்கிறது.  வரதட்சணை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்து பெண்ணியம் பேசும் அயோக்கியர்களால் அதைத் தொடவே முடியாது.

10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அலுவலகத்திலிருந்து good bye பணமாக இரண்டு லட்சம் வந்தது.  அதற்கு முன்பே என்னைப் பரிசோதித்த ஒரு டாக்டர் உடனடியாக ஆஞ்ஜியோ பரிசோதனை செய்து பார்க்கச் சொன்னார்.  25 ஆயிரம் கட்டணம்.  இரண்டு லட்சத்தில் 25 ஆயிரத்தை எடுத்து ஆஞ்ஜியோ செய்து பார்த்திருந்தால் பைபாஸ் சர்ஜரி செய்திருக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்காது.  ஆனால் ஹார்ட் அட்டாக் வந்து செத்தாலும் பரவாயில்லை; நான் பட்ட கஷ்டத்தை என் மகன் படக் கூடாது என்று அவனுடைய எஞ்ஜினியரிங் படிப்புக்காக அந்த இரண்டு லட்சத்தையும் அப்படியே கல்லூரியில் கட்டினேன். 

அதனால்தான் கார்த்திக் சொல்கிறான், என் துரதிர்ஷ்டம், நான் என் அப்பாவை மிகத் தாமதமாகச் சந்தித்தேன் என்று. 

ஆனால் மற்றவருக்காகக் குந்துமணியைக் கூடத் தர மனம் இல்லாத சுயநல நாய்கள் என்னைப் பார்த்து உன் வாழ்க்கை மோசமானது என்கின்றன.  நான் என் மகனுக்காகவும் மனைவிக்காகவும் செய்ததை நீங்கள் செய்வீர்களா?  அவன் படிப்புக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை என்றேன்.

நான் ஏதோ ஒரு பொறுக்கி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது பேசும் இந்தப் பொறுக்கிகளிடம் ஒன்று கேட்கிறேன்.  நீங்கள் அலுவலகத்திலும் சமூக வாழ்க்கையிலும் எவ்வளவு கீழ்த்தரமான சமரசங்களைச் செய்து கொண்டு மலப்புழுக்களைப் போல் வாழ்கிறீர்கள்?  மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்.

என் அலுவலகத்தில் ஒரு பொறுக்கி என்னை எப்போதும் அவமானப்படுத்திக் கொண்டே இருப்பான்.  அவன் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.  ”உனக்கு நான் பேசும் ஆங்கிலம் புரியுமா?  உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே?  நீ எப்படி இங்க்லீஷ் ஸ்டெனோக்ராஃபராக ஆனாய்?  மத்திய அரசு வேலையில் கூட லஞ்சம் புகுந்து விட்டதா?” என்றெல்லாம் என்னைப் பார்த்துக் கேட்பான்.  அப்போது என் வயது 48.  அவன் வயது 25. நான் மத்திய அரசில் 20 ஆண்டுகள் சர்விஸ் போட்டிருந்தேன். இப்படியே மூன்று தினங்கள் சென்றன.  நான்காம் நாள் என்னை நேரடியாக இடியட் என்று திட்டினான். 

டேய் புண்டாமவனே, தேவடியாளுக்குப் பிறந்தவனே என்று ஆரம்பித்து ஐந்து நிமிடம் செந்தமிழில் திட்டி விட்டு அட்மின் அதிகாரியிடம் வந்து ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

இந்தத் துணிச்சலும் தைரியமும் என்னைப் பார்த்து, என் வாழ்க்கையைப் பார்த்து விமர்சிக்கும் மூடர்களுக்கு இருக்கிறதா?

வீட்டுக்கு வந்த என்னை மறுநாள் அலுவலகம் வரவழைத்த அட்மின் அதிகாரி – அவர் என் எழுத்தின் ரசிகர் – ராஜினாமா வேண்டாம், உங்களுக்குப் பென்ஷன் வராது, வி.ஆர். எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

அப்போதுதான் வி.ஆர். திட்டம் அமலில் வந்திருந்த சமயம்.  ஆனால் வி.ஆர். கொடுப்பதாக இருந்தால் ஆறு மாதங்களுக்கு முன்னால் அலுவலகத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டுமே என்று கேட்டேன்.  பரவாயில்லை, நான் back date போட்டுப் பதிவு செய்து கொள்கிறேன் என்றார் அதிகாரி.

இப்படி என் வாழ்வில் எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என் வாழ்க்கையிலிருந்து ஒரு துகளை எடுத்துக் கொண்டால் கூட அது உங்களுக்கு நெருப்பில் நடப்பது போல் இருக்கும். 

என்னைப் போலவே அவந்திகாவுக்கும் அலுவலகத்தில் அவமானம் நடந்தது.  அவந்திகாவோ பத்து ஆள் வேலையை ஒரே ஆளாகச் செய்யக் கூடிய நேர்மைத் திலகமான அரசு ஊழியர்.  அவளையே அவமானப்படுத்தினார்கள் அதிகாரிகள்.  அதிகாரிகளிடம் சிரித்துப் பேசிக் கொண்டுத் திரிந்தால் கொஞ்சம் பிழைக்கலாம்.  இல்லாவிட்டால் அவமானம்தான்.  ஒருநாள் ஒரு அதிகாரி “வீட்டில் இருந்து நாற்காலியைத் தேய்த்தால் பணம் கிடைக்காது.  இங்கே அலுவலகத்தில் வந்து தேய்த்தால் கை நிறையப் பணம் கிடைக்கும் என்று தானே ஆபீஸ் வருகிறீர்கள்?” என்று கேட்டானாம்.  மறுநாளே நீ வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.  அவளுக்கு அப்போது அக்கவுண்ட்ஸ் அதிகாரியாகப் பதவி உயர்வு வந்திருந்தது.  அப்போதே 60,000 ரூ சம்பளம்.  அவளும் அந்தப் பணம் தேவையில்லை என்று சொல்லி விட்டாள். 

என்னை ஏசும் நண்பர்களே, உங்களில் இப்படிச் சொல்ல எவனுக்கு தில் இருக்கிறது சொல்லுங்கள்?

தர்மசேனனிடம் அன்றைய தினம் பேசியதால்தான் இவ்வளவும் எழுதுகிறேன்.  தர்மாவின் நண்பர்கள் அவரிடம் “சாரு ஒரு ஃப்ராடுய்யா..  ரெமி மார்ட்டின் குடிச்சுக்கிட்டு ஜாலியா வாழ்ந்துக்கிட்டு வாசகர்கள்கிட்ட பணம் புடுங்குறான்… அவனுக்கு ஏன் வேட்டி சட்டை வாங்கிக் குடுக்கிறே?” என்று கேட்டார்களாம்.

அப்போது தர்மா சொன்னார்.  என்னை ஏன் இவ்வளவு பேர் திட்டுகிறார்கள், கரித்துக் கொட்டுகிறார்கள் என்றால் நான் வாசகர்களிடம் பணம் கேட்கிறேன் என்ற ஒரே காரணம்தான்; உங்கள் எழுத்தைப் பார்த்து அவர்கள் திட்டவில்லை என்றார்.

எனக்குப் பணம் வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், 1995-இலேயே கமல்ஹாசனோடு போய்ச் சேர்ந்திருக்க முடியும்.  இன்று உ.த.எ. செய்யும் வேலையை நான் 18 ஆண்டுகளுக்கு முன்பே செய்து மெட்ராஸ் டாக்கீஸ் காரில் கமலைப் பார்க்கப் போனேன் என்று எழுதியிருக்க முடியும்.  1994-இல் மகாநதி வந்தது.  இந்தியர்களின் அற உணர்வைக் கேள்விக்குட்படுத்தும் க்ளாஸிக் என்று எழுதினேன்.  கமல் கடிதம் எழுதினார்.  1995-இலேயே குருதிப் புனல் வந்தது.  நான் என்ன செய்திருக்க வேண்டும்?  கமல் நம் நண்பர் என்று வாயையும் சூ… யும் மூடிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். நான் அப்படி இல்லை.  குருதிப் புனல் சாக்கடைப் புனல் என்று எழுதினேன்.  எந்தப் பத்திரிகையும் போடவில்லை.  நானே 1000 ரூபாய் செலவு செய்து – நண்பர்களிடம் கையேந்தி வாங்கிய பணம் – சிறு புத்தகமாகப் போட்டு எல்லா சினிமா நண்பர்களிடமும் இலவசமாக விநியோகித்தேன்.  அந்தக் கணத்திலிருந்தே நாசர் போன்ற நண்பர்கள் என்னைக் கண்டாலே ஒதுங்கிப் போகத் தலைப்பட்டனர்.  சென்னை ப்ரிவியூ தியேட்டர் வாசலில் நின்று 1995-இல் நான் அந்தத் துண்டுப் புத்தகத்தை விநியோகித்தேன். 

காசையும் பணத்தையும் அதிகாரத்தையும் கண்டால் சூத்து வாய் தெரியாமல் ஓடும் பதர்களே… நீங்களா என்னைப் பார்த்து என் வாழ்க்கையைப் பார்த்து ஏசுவது? 

எனக்குக் கடிதம் எழுதிய கமல்ஹாசனை- அவருடைய நட்பைப் பேணுவது கூட முக்கியம் அல்ல என்று நினைத்து குருதிப் புனலை சாக்கடைப் புனல் என்று விமர்சித்தேன்.  ஏன்?  அதில் ஒரு கம்யூனிஸ்ட் போராளி ஒரு சிறுமியின் புட்டத்தைப் பார்த்து ரசிப்பான்.  கம்யூனிஸ்டுகளின் அடிப்படையான ஒழுக்க உணர்வு கூடத் தெரியாமல் படம் எடுத்திருக்கிறார்களே என்று ஒரு தார்மீக ஆவேசத்தில் விமர்சித்தேன்.  ஆனால் இன்று ஒரு எழுத்தாளர் கமலிடம் தான் ஒரு மேற்கத்திய எழுத்தாளரின் பெயரைத் தெரிந்து கொண்டேன் என்று எழுதுகிறார். எப்பேர்ப்பட்ட சொம்பு?  இது போல் என் வாழ்நாளில் ஒரு தருணத்தில் கூட சொம்பு தூக்கியதில்லை. 

நான் வேண்டாம், நான் உன் எதிரி…  நாஞ்சில் நாடன் உனக்கு சீனியர்தானே?  அவரால் உனக்கு எந்த எழுத்தாளரின் பெயராவது தெரிந்தது என்று எழுதியிருக்கிறாயா?  அது ஏன் கமல் என்றதும் உன் வால் குழைந்து குழைந்து ஆடுகிறது?  பணம், காசு, அதிகாரம்.

இது எதற்காகவும் என்றைக்கும் நான் சமரசம் செய்து கொண்டது கிடையாது.  என்னுடைய சினிமா விமர்சனங்கள் அத்தனையும் இதற்கு சாட்சி. 

நான் வாசகர்களிடம் பணம் கேட்பது என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களுக்குக் கூட கசக்கிறது.  நான் என்னையே தாழ்த்திக் கொள்கிறேனாம்.   ஏன் தம்பி, என்னை என் அலுவலகத்தில் உனக்கு ஆங்கிலம் பேச வருமா? ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டு அவமானப்படுத்தினார்கள்.  இன்னும் எத்தனையோ ஆயிரக் கணக்கான அவமானங்களை சகித்துக் கொண்டுதான் நீங்களும் வேலை பார்க்கிறீர்கள்.  அதெல்லாம் உங்களையோ என்னையோ தாழ்த்தவில்லை.  ஆனால் என் எழுத்தைப் படிக்கும் வாசகர்களிடம் – அதிலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் அனுப்புங்கள் என்று சொன்னால் அது என் சுய மரியாதைக்கு இழுக்காகத் தெரிகிறதா?

நான் ஒரு அரசு வேலையில் இருந்து கொண்டு என்ன அயோக்கியத்தனமான சமரசத்தையும் ஏற்றுக் கொண்டு வேலை செய்து பணம் சம்பாதித்தால் என் சுய மரியாதைக்கு இழுக்கு இல்லை.  என் வாசகர்களிடம் – அதுவும் பிரியமானவர்கள் மட்டும் அனுப்புங்கள் என்று சொன்னால் அது என் சுய மரியாதைக்கு இழுக்கா? என்ன வாதம் இது?  அப்படியானால் காசு தான் பெரிசு என்றல்லவா ஆகிறது? 

நான் பார்த்த வேலையில் காசு வரும்… ஆனால் எனக்குப் பிடிக்காத வேலை.  மாமா வேலை என்று சொல்லும் அளவுக்கு முறை வாசல் செய்ய வேண்டியிருந்தது.  வேலையை விட்டு விட்டு, எனக்குப் பிடித்த வேலையான எழுத்தில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன்.  இந்த வேலையில் காசு இல்லை.  புத்தகம் விற்பதில்லை.  தமிழர்கள் புத்தகம் படிப்பதில்லை.  ராயல்டியாக வரும் பணம் எனக்கு டிஷ்யூ பேப்பர் வாங்கத்தான் ஆகும்.  விகடனில் தொடர் எழுதினேன்.  ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.  ஆனால் எனக்கோ ஒரு கட்டுரை எழுத குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் ஆனது.  சில சமயங்களில் அதற்கு மேலும் போயிற்று. 

நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள்.  அதற்காக அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.  இன்னும் பல செலவுகள்.  அதற்கு உங்களுக்கு மாதம் 20,000 ரூ. செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்.  அதற்கு உங்கள் சம்பளம் 1000 ரூபாயா தருகிறான்?  20,000 ரூ. நீங்கள் செலவு செய்தால் அந்த 20,000 ஐயும் கொடுத்து, மேலும் சம்பளமாக ஒரு லட்சமோ ஒன்றரை லட்சமோ தருகிறானா இல்லையா?  ஆனால் பத்திரிகையில் கட்டுரை எழுதினால் நான் நாலு கட்டுரைக்கு 40,000 ரூ செலவு செய்தால் நாலு வாரத்துக்கு நாலாயிரம் ரூபாய் என்று கூசாமல் தருகிறார்கள்.  இவர்கள்தான் தமிழ்க் கலாச்சாரத்தின் தூண்கள்!!!

அலுவலக வேலையில் விமானப்படி முதல் கொண்டு பெட்ரோல் செலவு அது இது என்று எல்லாவற்றையுமே கொடுத்து, அதற்கு மேலும் சம்பளம் கொடுக்கிறான்.  எழுத்தில் எல்லாமே ஓசி. 

ஆனால் இப்படி எண்ணற்ற சமரசங்களைச் செய்து கொண்டு, அவமானகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் என்னைப் பார்த்து வாசகர்களிடம் பிச்சை எடுக்கிறான் என்கிறார்கள்.  நான் எடுப்பது பிச்சை அல்ல.

நான் ஒரு கலைஞன்.  என் கலைக்கு உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள்.  இது ஒரு பண்ட மாற்று; அவ்வளவுதான்.

காலையில் இஞ்சி, நடுப்பகல் சுக்கு, இரவில் கடுக்காய் உண்டால் உனக்கு நோயே வராது என்று சொன்னேன் அல்லவா?  அதன் விலை என்ன? ஒரு கோடி ரூபாய்.  ஏன் என்றால் உன் உயிரின் விலை அது.  அதற்கும் மேலானது உன் உயிர் என்று ஏன் உனக்குத் தெரியவில்லை.  என்னுடைய பத்தாண்டு ஆராய்ச்சியினால் நான் கண்டு பிடித்தது அது.  கோரக்கரும், தேரையரும் சொன்னதுதான்.  ஆனால் அதை நான் மீட்டுருவாக்கம் செய்தேன்.  சொன்னதோடு மட்டும் அல்ல.  இமயமலை சென்று, பதினைந்து நாள் 18,000 அடி உயரத்தில் பைக்கில் பயணம் செய்து, எந்தச் சிக்கலும் இல்லாமல் வந்திருக்கிறேன்.  என்னோடு வந்த பனிரண்டு பேரில் நான் மட்டுமே ஆக வலுவாக இருந்தேன்.  இஞ்சியும் கடுக்காயும் செய்ததுதான் அது. 

இன்னும் நான் கேட்ட இசை, நான் படித்த இலக்கியம், நான் பார்த்த சினிமா… எத்தனை நூறு… எத்தனை ஆயிரம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.  நான் ஒரு தங்கச் சுரங்கம்.  வெட்டி வெட்டி உனக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.  இதற்குப் பதிலாக, உன்னால் முடிந்தால், உன்னால் முடிந்தால் மட்டும் என்று எப்போதும் வலியுறுத்தியே சொல்கிறேன் – எனக்குக் கொஞ்சம் பணம் கொடு… எனக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னால் என்னைப் பார்த்துப் பழிப்பதா? எப்பேர்ப்பட்ட போலியான, அயோக்கியத்தனமான சமூகம் இது?

இது பற்றி எழுத இன்னும் உள்ளது. முக்கியமாக பெரியாரின் சுய மரியாதை பற்றி எழுத வேண்டும்.  முடிந்தால் எனக்குப் பணம் அனுப்புங்கள்.  இன்னும் என்னால் ஒரு மடிக் கணினி வாங்க முடியவில்லை.  சினிமாவுக்கு வசனம் எழுத வாய்ப்பு இல்லை என்று நினைக்காதீர்கள்.  சமரசம் செய்யத் துணிந்தால் – ”கமல்ஹாசனிடம்தான் நான் இலக்கியம் கற்றேன்… மணி சாரிடம் தான் சினிமா பயின்றேன்” என்று ஆதாரங்களோடு எழுதி அதை அவர்கள் வீட்டில் கொண்டு போய் கொடுத்தால் அடுத்த விநாடியே நான் லட்சங்களில் புரளலாம்.  தேவையில்லை.  எனக்குப் பிடித்த தொழிலிலிருந்து எந்த சமரசமும் செய்யாமல் எனக்குப் பணம் வேண்டும். 

பாரதியைப் பார்க்க எட்டையபுரம் மகாராஜா வந்தார். பாரதியும் மகாராஜாவும் பேசி மகிழ்ந்தனர்.  மகாராஜா போய் விட்டார்.  வீட்டுக்குள் நுழைந்த பாரதியிடம், “வீட்டில் அரிசி இல்லை; மகாராஜாவிடம் உங்கள் நிலையைச் சொல்லக் கூடாதா?” என்று கேட்கிறார் அவர் மனைவி.  பாரதி என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.  நான் பாரதியிடமிருந்து கற்றது சமரசமற்ற வாழ்க்கையும், சுய மரியாதையும்.  ஆனால் பெரியாரிடமிருந்து கற்றது, வேறு ஒன்று.  அதனால்தான் சமரசம் செய்து கொள்ளாத கோபி கிருஷ்ணனைப்  போல் தர்மு சிவராமுவைப் போல் ஐம்பதிலேயே சாகாமல் உங்களிடம் கேட்கிறேன்.  பெரியார் கேட்டார்.

(தொடரும்…)    

 

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026

     

 

 

Comments are closed.