நானும் என் வாழ்க்கையும் முதல் பகுதியைப் படித்து விட்டு என் நண்பர் ஒருவர் குதி குதி என்று குதித்தார். என்னுடைய உள் வட்டத்தைச் சேர்ந்த இருபது பேரில் ஒருவர் அவர். அவருக்கும் எனக்கும் அநேகமான எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போகும். அது என்னவோ இந்தப் பண விஷயத்தில் மட்டும் ஒத்துப் போகவில்லை. அதாவது, வெறும் வாய்க்கு அவல் கொடுத்து விட்டேனாம். இதுதான் சாக்கு என்று என்னைப் பிரித்து மேய்ந்து விடுவார்களாம். அப்படி இப்படி, ஆ… ஊ…
மயிரே போச்சு. என் தரப்பை நான் சொல்லியே ஆக வேண்டும். என் எழுத்தைப் பிடித்தவர்களிடம் இருந்து, விருப்பப்பட்டவர்களிடமிருந்து பணம் கேட்பது என் உரிமை. சமீபத்தில் ஒரு பிரபல அரசியல் கட்சி மாவட்டம் மாவட்டமாக தேர்தல் நிதி சேர்த்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கோடி மூன்று கோடி நான்கு கோடி என்று சேர்ந்தது. அந்தப் பணமெல்லாம் விருப்பப்பட்டா கொடுத்தார்கள்? மிரட்டி வசூலிக்கப்பட்டதுதானே? நான் என்ன அப்படியா கேட்கிறேன்? நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைத் தருகிறேன். நீங்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். விருப்பப்படாவிட்டால் படிக்காமல் இருக்கலாம். விரும்பினால், மனம் இருந்தால், உங்களால் முடியும் பட்சத்தில் பணம் கொடுக்கலாம். எல்லாமே உங்கள் விருப்பம்தான் என்கிறேன். இதில் என்னய்யா பிரச்சினை?
எல்லாரும்தான் சிறிய வயதில் கஷ்டப்பட்டார்கள். நீங்கள் மட்டும்தான் கஷ்டப்பட்டீர்களா? என்றார் நண்பர். நான் ஒன்றும் என் கஷ்டத்தைச் சொல்லி காசு கேட்கும் ரோகிப் பிச்சைக்காரன் அல்ல. நான் கலைஞன். என் கலையை உங்களுக்குத் தருகிறேன். விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் தட்சிணை தாருங்கள் என்கிறேன்.
விவேகானந்தருக்கு ஒருமுறை ஒரு அமெரிக்கக் கோடீஸ்வரர் ஒரு பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறார். விவேகானந்தர் அதற்கு நன்றி கூறவில்லை. அது அந்தக் கோடீஸ்வரருக்கு என்னவோ போல் இருந்திருக்கிறது. விவேகானந்தரைக் கேட்கிறார். விவேகானந்தர் எங்கள் நாட்டில் பண உதவி செய்தவர் தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னாராம். அந்த நிலையில்தான் நான் இருக்கிறேன்.
என் நண்பருக்கு மேலும் ஒன்று சொல்ல விரும்பினேன். எல்லோரும்தான் கஷ்டப்பட்டார்கள்; படுகிறார்கள். ஆனால் நான் கஷ்டப்பட்ட போதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. வேலையை விட்டு விட்டு வந்து விட்டேன். எனக்குப் பிடித்த தொழிலில் நயா பைசா தர மாட்டான் என்று தெரிந்தும் பணம் வரும் வேலையை விட்டு விட்டு எனக்குப் பிடித்த தொழிலுக்கு வந்தேன். அதிலும் எழுத்தாளர்களைப் பிச்சைக்காரர்களாக மதிக்கும் ஒரு சமூகத்தில் அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், என் தொழில் எனக்குப் பிடித்தது.
வேலையில் எண்ணற்ற சமரசங்கள் செய்து கொண்டு வாழும் என் நண்பர் என்னிடம் கேட்டார், நீங்கள் செய்யும் தொழிலில் சந்தோஷமாக இருக்கிறீர்களா என்று. என்னைப் போல் சந்தோஷமாக இருக்கும் ஒரு ஆளை நீங்கள் பார்க்க முடியாது என்றேன். ”அது போதும்; எனக்கு சந்தோஷமே இல்லையே; எவ்வளவு பணம் வந்து என்ன?” என்றார் நண்பர்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது ஜக் மோகன் தில்லியின் கவர்னராக இருந்தார். நான் டைப் செய்யும் notes எங்கள் அலுவலகத்திலிருந்து ஜக் மோகனுக்கு தினமும் போகும். ஒருநாள் அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் அப்போது சிவில் சப்ளைஸில் ஸ்டெனோ. நீங்கள் என் பர்ஸனல் பிராஞ்சுக்கு வந்து விடுகிறீர்களா என்றார். ஐயோ, நான் எழுத்தாளன் சார், ஏதோ பஞ்சப்பாட்டுக்கு சிவில் சப்ளைஸில் வேலை பார்க்கிறேன் என்றேன். என்னிடம் இருந்தால் பிரதமரின் பர்ஸனல் பிராஞ்சுக்குப் போகும் வாய்ப்பும் இருக்கிறது என்றார். ஸார், நான் தினமும் மண்டி ஹவுஸ் போகும் ஆள் என்றேன். சிரித்துக் கொண்டே அனுப்பி விட்டார். மண்டி ஹவுஸ் தான் தில்லி புத்திஜீவிகளின் adda.
ஏன் ஐயா, பிழைக்க வேண்டும் என்றால், பணத்தின் மீது எனக்கு ஆசை இருந்தது என்றால் அப்போதே நான் ஜக் மோகன் மூலமாக இந்திரா காந்தியிடம் சேர்ந்திருப்பேனே? இந்திராவின் ஸ்டெனோக்கள்தான் பிறகு கேபினட் மந்திரிகள் ஆனார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவ்வளவு பெரிய பதவியையும் சுகத்தையும் வேண்டாம் என்று மறுத்தது என்ன மயிருக்காக? எனக்குப் பிடித்த தொழில் எழுத்து என்பதற்காக. சிவில் சப்ளைஸில் இருந்தால் ஐந்து மணிக்கு மேல் நான் இஷ்டம் போல் வாழலாம். இஷ்டம் போல் லீவ் எடுக்கலாம். எழுத்துக்கு அவ்வளவாக பாதகம் இல்லை. அதனால்தான் பதவியை உதறி எறிந்தேன்.
இன்னொரு விஷயம். இந்தியாவில் வாரிசு உணர்வு என்பது ஒவ்வொருவருக்கும் தங்கள் உயிரை விட மேலான விஷயம். இப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியாது. அதாவது, உங்கள் குழந்தைதான் உங்கள் சொத்து. உங்கள் குழந்தையை உங்கள் உயிரை விட நீங்கள் நேசிக்கிறீர்கள். ஏனென்றால், அந்தக் குழந்தை உங்கள் ரத்தம்; உங்கள் சதை; உங்கள் வாரிசு. சிவாஜி கணேசனின் பேரக் குழந்தை கூட இன்று ஒரு ஹீரோ. இளையராஜாவின் அத்தனை குழந்தைகளும் இசை வாரிசுகள். இப்படியே உங்களுக்குத் தெரிந்த வாரிசுப் பட்டியலை நீங்கள் போடலாம். உங்களுக்கு ஓவியம் தெரிந்தால் உங்கள் குழந்தையும் பெரிய ஓவியனாக இருக்கும். நீங்கள் ஒரு விளையாட்டுக்காரராக இருந்தால் உங்கள் பிள்ளையும் விளையாட்டுக்காரர் தான்.
இந்த வாரிசு விஷயத்தை காலால் எட்டி உதைத்த இரண்டு பேரில் நானும் ஒருவன். (இன்னொருவர் மனுஷ்ய புத்திரன்). நானும் அவந்திகாவும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. நானும் உங்களில் ஒருவனாக இருந்தால் எனக்கு என் வாரிசைக் காண எவ்வளவு ஆர்வம் இருக்கும்? அதிலும் அவந்திகா ஒரு மகா பேரழகி. பார்க்கும் அத்தனை பேரும் மாதுரி தீட்சித் போல் இருக்கிறீர்களே என்பார்கள். கடைக்குப் போனால் அவளுக்குத் தமிழ் தெரியாது என்று தப்பும் தவறுமாக அவளிடம் இந்தியில் பேசுவார்கள். நான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. கார்த்திக்கே போதும் என்றாள். போதும் என்றேன். அதோடு முடிந்தது.
சில மனிதாபிமானிகள் உளர். தன் ரத்தத்தில் உதித்த குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அதற்கு மேல் தத்து எடுத்துக் கொள்வார்கள். நானோ மனுஷ்ய புத்திரனோ அப்படிச் செய்யவில்லை.
அப்படித் தத்து எடுத்து நான் வளர்த்த குழந்தை இப்போது என்ன சொல்கிறது? ”அப்பாவை இன்னும் முன்னதாகப் பார்க்காமல் போனது என் துரதிர்ஷ்டம்” என்று. உங்களில் யாருக்காவது இந்தத் தைரியம் உள்ளதா? உங்கள் ரத்தத்தில் பிறந்த வாரிசைப் பார்க்காமலேயே தத்து எடுத்துக் கொண்டு வாழும் நபர் யாரேனும் இருக்கிறீர்களா? உங்கள் ரத்தத்தில் குழந்தையைப் பெற்றுக் கொண்டு அந்தக் குழந்தைக்காகவே வாழ்நாள் பூராவையும் தத்தம் செய்து கொண்டு வாழ்பவர்களுக்கு என் வாழ்க்கையின் ஒரு புள்ளியைக் கூட தொட முடியுமா?
என் நண்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. என்னையும் என் வாழ்க்கையையும் மிகக் கேவலமாகவும், ஆபாசமாகவும் வசை பாடும் மூடப் பதர்களுக்காகவே இந்தக் கட்டுரைத் தொடரை நான் எழுதுகிறேன். என் நண்பர்கள் ஒதுங்கி விடுங்கள். நான் இந்தக் கட்டுரையை என் குருதியாலும், வியர்வையாலும், ஆன்மாவினாலும் எழுதுகிறேன். தயவு செய்து என் சீற்றத்தைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று என் நெருங்கிய நண்பர்களையும் பிற வாசகர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பணம் எனக்குத் துச்சம். பணத்தையே கௌரவமாகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே நான் பணம் கேட்டு எழுதுவது அகௌரவமாகத் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். என் வாழ்க்கையை வாழ எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. அதற்காக என் எழுத்தைக் கொடுத்து முடிந்தவர் அனுப்புங்கள் என்கிறேன். இதில் என்ன அகௌரவம் என்று எனக்குப் புரியவே இல்லை. கௌரவம் என்பது பணத்தில்தான் இருக்கிறதா?
இதை விமர்சிப்பவர்களுக்கு என் நிலைமை புரியவே புரியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், நீங்கள் பணத்தைப் பெரிதாக நினைக்கிறீர்கள். பணத்தை கௌரவத்தின் குறியீடாக நினைக்கிறீர்கள். அதனால்தான் பணத்தைத் துச்சமாக நினைக்கும் என்னை நான் அகௌரவப்படுத்திக் கொள்வதாக நினைக்கிறீர்கள். பணத்துக்கும் என் கௌரவத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
மீண்டும் சொல்கிறேன். முடிந்தால் பணம் அனுப்புங்கள். எக்ஸைல் மொழிபெயர்ப்பு எப்போது முடியும் என்று தெரியவில்லை. முடிந்தால் அது ஒரு சர்வதேச விருதைப் பெறும். ஸீரோ டிகிரி Jan Michalski விருதின் long list வரை சென்று விட்டது. மற்ற சர்வதேச விருதுகளுக்கு அதை அனுப்ப முடியாது. ஏனென்றால், அதன் தமிழ் மூலம் எழுதப்பட்டு 20 ஆண்டுகள் ஆகி விட்டன. Jan Michalski விருது ஒரு ஈரானிய நாவலுக்குக் கிடைத்திருக்கிறது. எக்ஸைல் ஆங்கிலத்தில் வெளிவந்தால் நிச்சயம் அந்த நாவல் ஒரு சர்வதேச விருதைப் பெறும். அதற்குப் பிறகு நான் பணம் கேட்க வேண்டிய தேவை எனக்கு இருக்காது. மொழிபெயர்ப்பாளர்கள் இந்தச் செய்தியை குறித்து வைத்துக் கொள்ளவும்.
பணம் அனுப்புவதாக இருந்தால் அதற்கான வங்கித் தகவல்கள்:
Account holder’s Name: K. ARIVAZHAGAN
Axis Bank Account number: 911010057338057
Branch: Radhakrishnan Salai, Mylapore
IFSC UTIB0000006
MICR CODE: 600211002
***
ICICI account No. 602601 505045
Account holder’s name: K. ARIVAZHAGAN
T. Nagar branch. chennai
IFSC Code Number: ICIC0006026
Comments are closed.