நானும் என் வாழ்க்கையும்… (3)

சிறிது நேரம் முன் ஒரு நண்பரிடம் பேசினேன்.  என்னைக் கன்னாபின்னா என்று திட்டி எழுதுகிறார்களாம்.  என் நண்பர்களையும் கன்னா பின்னா என்று திட்டுகிறார்களாம்.  ”நானும் அதேபோல் களத்தில் இறங்கி அவர்களைத் திட்டப் போகிறேன்” என்றார் நண்பர்.  எப்படி எப்படித் திட்டுவேன் என்றும் சொன்னார்.  நான் மிரண்டு போனேன்.  எலியோடு சண்டைக்குப் போய் நீங்கள் வெற்றியே அடைந்தாலும் நீங்களும் எலியாக மாறி விட்டீர்கள் என்றுதானே பொருள்?

உங்களையோ என்னையோ யாராவது அவதூறு செய்தால் நாமும் பதிலுக்கு அவதூறு செய்யக் கூடாது.  உங்களுக்கு நேரம் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுங்கள்.  ஒரு வக்கீல் நோட்டீஸ் கூடப் போதும்.  என்னைப் பொறுத்தவரை அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்களாகவே பார்க்கிறேன்.  ஏதோ நான் அவர்களுக்குக் கடன் பட்டிருக்கிறேன்.  அதை அவர்கள் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்களால் எல்லாம் மன பாதிப்பு அடையக் கூடிய அளவுக்கா பலஹீனமாக இருக்கிறீர்கள்?  ஏன் உங்களுக்குக் கோபம் வருகிறது?  தெருநாய்கள் கூட்டமாக நிற்கும் போது ஒதுங்கிப் போகும் மனப்பக்குவம் ஏன் இந்த மனிதர்கள்  விஷயத்தில் உங்களுக்கு வர மாட்டேன் என்கிறது?  இது பற்றி நீங்கள் மன உளைச்சல் அடைவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  கடலைப் பாருங்கள்.  நாம் எவ்வளவு சிறியவர்கள்?  இந்த பூமியைப் பாருங்கள்… நாம் அதை விட எவ்வளவு சிறியவர்கள்.  இமயமலையின் முன்னே நிற்கும் போது அதை உணராத ஒரு மனிதன் கூட இருக்க முடியாது.  ஆனால் மலையை விட்டு அகன்றதும் மறந்து விடுகிறோம். நான் என்ற அகங்காரம் நமக்குள் புகுந்து கொண்டு விடுகிறது.  என்னை ஒருவன் திட்டுவதா? அவனை சும்மா விடுவதா?  இப்படி ஒவ்வொரு மனிதனும் கிளம்பினால் இந்த உலகமே போர்க் களமாகி விடுமே?  இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது குறள்.  நன்னயமெல்லாம் செய்ய வேண்டாம்.  கண்டு கொள்ளாமலாவது போகலாமே?

மேலும், நான் என்னுடைய எழுத்துக்களில் எத்தனையோ புத்தகங்களையும், இசைக் கலைஞர்களையும், சினிமாக்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.  அதையெல்லாம் நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் உங்களுக்கு ஒரு ஆயுள் போதாது.  அப்படியிருந்தும் உங்களைத் திட்டுபவர்களைப் படித்து, கோபப்பட்டுக் கொண்டிருந்தால் நீங்கள் தோல்வி அடைகிறீர்கள் என்று பொருள். 

எப்படியென்றால், உங்கள் உணர்வுகளின் எஜமானன் நீங்களாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய வேறு ஒருவராக இருக்கக் கூடாது.  உங்களைக் கோபப்படுத்துவதுதான் அவர்கள் நோக்கம்.  நீங்கள் கோபமடைகிறீர்கள்.  அப்படியானால் அவர்களின் நோக்கத்தை நீங்கள் நிறைவேற்றி வைக்கிறீர்கள். என்று அல்லவா ஆகி விடுகிறது? 

இருந்தும் “நானும் என் வாழ்க்கையும்” என்ற தொடரை ஏன் எழுதுகிறேன் என்றால் என் நண்பர்களிடம் சிலர் வந்து “ஏன் உங்க ஆளு காசு கேக்குறான்?” என்று கேட்டு தர்மசங்கடத்தை உண்டு பண்ணுவதால் அந்தக் கேள்விக்கான பதிலாகவே இதை எழுதுகிறேன்.  மேலும், என் வாழ்க்கையைப் பற்றி பலரும் ஏதோ நான் ஒரு படு மட்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருப்பதைப் பார்த்து, அவர்களுக்கு நான் எப்படி வாழ்கிறேன் என்பதைச் சொல்ல வேண்டியது என் கடமை என்று உணர்வதாலும்தான் இதை எழுதுகிறேன்… 

இதற்காக என் நண்பர்கள் யாரும் புண்பட வேண்டாம்.  நான் யாரைக் குறித்து இதை எழுதுகிறேன் என்று தெளிவாக எழுதி விட்டேன்.  என் வாழ்க்கையை விமர்சிப்பவர்களுக்கு நான் எப்படி வாழ்கிறேன் என்று நான் சொல்லியே ஆக வேண்டும்.  அவர்களுக்குப் புரியாது.  அதைப் பற்றிக் கவலையும் இல்லை.  ஆனால் இந்தத் தருணத்தை முன்வைத்து நானே என்னைத் திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பு.  முக்கியமாக என் நண்பர்கள் இனிமேல் என்னிடம் வந்து அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள், இவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்று புகார் செல்லும் முகாந்திரமே இருக்காது அல்லவா?  எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் இந்தப் பதிலை எழுதுகிறேன். 

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026

  

 

Comments are closed.