ரத்தத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்…

பிராமண நண்பர்களின் வீடுகளில் இன்று பாயசம்.  மற்ற இந்துக்களின் வீடுகளில் பல்வகை இனிப்புகள், கொண்டாட்டங்கள்.  நான் நேற்றே எழுதியபடி மோடியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் விவேகானந்தராகவும் ஆதி சங்கரராகவும் பார்க்கிறான்.  கிறித்தவர்களின் மிக மூர்க்கமான மதமாற்ற நடவடிக்கைகளாலும் இஸ்லாமியரின் ஜனத்தொகைப் பெருக்கத்தாலும் இந்து மதம் அழிந்து விடும் என்று மடத்தனமாக நம்பும் இந்து தன் வாக்கை மோடிக்குப் போட்டிருக்கிறான்.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களிலும் ஒட்டு மொத்தமாகவும் – அதாவது, தமிழ்நாட்டைத் தவிர மற்ற தேர்தல் முடிவு இப்படி இருக்கும் என்பதை என்னால் முன்கூட்டியே யூகிக்க முடியாமல் போனதால்தான் இந்த முறை நான் கணிப்பு எதையும் எழுதவில்லை.  ஆனால் தமிழ்நாட்டில் திமுக வரும் என்பதை ஓரளவு யூகிக்க முடிந்தது.  எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரை மக்கள் விரும்பவில்லை.  ஆக, இனி வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும்?

மோடியின் வெற்றியை கிறித்தவர்கள் தங்கள் இருப்புக்கு (existence) மிகப் பெரிய அச்சுறுத்தலாகக் கருதி தங்கள் மத மாற்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவார்கள்.  அதற்கு மேற்கத்திய நாடுகள் உறுதுணையாக இருக்கும்.  நிறைய பணப்பெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும்.  உள்நாட்டில் பல இடங்களில் குழப்பங்கள் ஏற்படும்.  எல்லா திட்டங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடிக்கும்.  போலீஸ் பிரிட்டிஷ் போலீஸைப் போல் மாறி மக்களை சுட்டுக் கொல்வார்கள்.  நிறைய தூத்துக்குடிகள் உருவாகும். சமூக அமைதி கெடும்.

இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்தவரை, தீவிரவாதிகள் எக்கச்சக்கமாக உருவாவார்கள்.  வஹாபிஸம் தீவிரமாக வளரும்.  ஐஎஸ் ஐஎஸ்ஸின் ஊடுருவலும் அதிகமாகும்.  அப்பாவியான முஸ்லீம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

அதாவது, இஸ்லாமியத் தீவிரவாதமும் அதேபோல் இந்துத்துவா தீவிரவாதமும் தலைவிரித்து ஆடும்.  மதக் கலவரங்கள் ஏற்பட எக்கச்சக்கமான வாய்ப்புகள் உண்டு. 

சென்னையில் மதக் கலவரம் ஏற்பட்டால் நான் முஸ்லீம் என்று கருதப்பட்டு கொல்லப்பட வாய்ப்பு இருக்கிறது.  காரணம், நான் Circumcise செய்து கொண்டவன்.  என் மரணத்தைப் பற்றிக் கவலையில்லை.  இந்தியா மனிதர்களும் நாய்களும் பூனைகளும் விருட்சங்களும் ஏனைய வன விலங்குகளும் வாழத் தகுதியில்லாத இடமாக மாறி விட்டது.  வனத்தில் நீர் இன்றி யானைகளும் புலிகளும் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்டு சாகின்றன. 

இனிமேல் எங்களைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. 

ஏனென்றால்,

இப்படிப்பட்ட வாழ்க்கையை நாங்களேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். 

காரணம்,

நாங்கள் துயரத்தை விரும்புகிறோம். 

நாங்கள் கண்ணீரை விரும்புகிறோம். 

நாங்கள் ரத்தத்தை விரும்புகிறோம்.

இது எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்டது. 

இப்படித்தான் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. 

பலப் பல நூற்றாண்டுகளாக எங்கள் கடவுள்களும் தீர்க்கதரிசிகளும் எங்களுக்கு அலுத்து விட்டார்கள். 

எத்தனை காலத்துக்குத்தான் கோவணம் கட்டிய மகாத்மாக்களையே பார்த்துக் கொண்டிருப்பது.

அதனால்தான் இப்போது ரத்தத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். 

முடிந்தால் கடவுளிடம் போய்ச் சொல்லுங்கள்,

அவரைக் கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லி…