வேண்டுதல்

ராஸ லீலா கலெக்டிபிளுக்குப் பணம் அனுப்ப xoom.com இல் என் முகவரி கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  அப்படித் தேவையெனில் எனக்கு எழுதுங்கள்.  அனுப்பி வைக்கிறேன்.    charu.nivedita.india@gmail.com

***

மக்கள் ஏன் கோவிலுக்குப் போகிறார்கள்?  இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வதற்காக.  இல்லையா? எனக்கு முதலில் தெரிந்த கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா.  இன்னமும் அங்கே விபூதி தருகிறார்கள்.  எத்தனை வஹாபிஸம் வந்தாலும் விபூதி தந்து கொண்டேதான் இருப்பார்கள்.  ஏனென்றால், மக்கள் அன்புடன் எஜமான் என்று அழைக்கும் நாகூர் ஆண்டவரை வழிபட வரும் மக்களில் தொண்ணூறு சதவிகிதம் இந்துக்கள். எனக்குத் தெரிந்த அடுத்த கோவில் நாகூர் சிவன் கோவில்.  ஆயிரம் வருஷத்துக்கு முந்தைய கோவில்.  அற்புதமாக இருக்கும். அங்கே இருக்கும் துர்க்கை அம்மன் என் தாய்.  பெருமாள் கோவிலுக்கு அதிகம் போனதில்லை.  வீட்டுக்குப் பக்கத்தில்தான் என்பதால் ஆண்டாள் பாசுரங்கள் கேட்கும்.  பிரபந்தம் என் உயிருக்குள் கலந்தது அப்படித்தான். பெருமாள் கோவில் எனக்குத் தமிழைக் கொடுத்தது. சிவன் கோவில் என்னை அன்பால் வளர்த்தது.  தர்ஹா என் வீடாக இருந்தது.  அதற்குப் பிறகு தஞ்சாவூர் பெரிய கோவில் என் வாசக சாலையாக இருந்தது.  பின்னர் கோவிலுக்கும் எனக்குமான உறவில் நீண்ட கால இடைவெளி ஏற்பட்டது.  15 ஆண்டுகளுக்கு முன்பு மைலாப்பூர் பாபா கோவில் என் வாழ்வில் அறிமுகம் ஆனது.  இன்றளவும் பாபா கோவில் என்னுடனே தான் இருக்கிறது.  ஊரில் இல்லாத நாளில்தான் பாபாவைப் பார்க்காமல் இருக்கிறேன்.  பாபா கோவில் எனக்குக் கோவில் அல்ல.   அது என் குருவின் வீடு.   குருவிடமும் அதிகம் ஒன்றும் கேட்பதில்லை.  15 ஆண்டுகளுக்கு முன் என் புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பதன் வேதனையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மறுநாளே – ஆம், மறுநாளே – என் ஆசை நிறைவேறியது.  (சாரு, உங்கள் ஸீரோ டிகிரியை மொழிபெயர்த்து முடித்து விட்டேன்.   பதிப்பகத்துக்குப் போக நீங்கள் சரி சொல்ல வேண்டியதுதான் பாக்கி என்று ப்ரீதம் சக்ரவர்த்தியிடமிருந்து போன் வந்தது.)  அதற்குப் பிறகு எதுவும் வேண்டிக் கொண்டதாக ஞாபகம் இல்லை. 

மைலாப்பூர் வந்த புதிதில் குதூகலமாக வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மாதவப் பெருமாள் கோவில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்று போய்க் கொண்டிருந்தேன்.  அப்புறம் ஒன்று தோன்றிற்று.  நான் கோவிலுக்குப் போனால் எனக்கு நல்லது.  கோவிலுக்குப் போகாமல் அந்த நேரத்தில் நாலு எழுத்தை எழுதினால் சமூகத்துக்கு நல்லது. எதைத் தேர்ந்தெடுப்பேன் சொல்லுங்கள்.   கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டேன்.   சமூக வேலையை நான் செய்தால் என் வேலையை என்னைப் படைத்த கடவுள் செய்ய மாட்டாரா என்பது என் கேள்வி.  

சத்யா என்று நான் அன்புடன் அழைக்கும் சத்யமூர்த்தி என் இனிய நண்பர்களில் ஒருவர்.  மாதம் ஒருமுறை சந்திப்போம்.  சென்ற மாதம் ரெய்ன் ட்ரீ ஓட்டலின் ரூஃப் டாப்பில் சந்திக்கலாம் என்று ஏற்பாடு.   சென்னையில் அது ஒரு அற்புதமான இடம். மவுண்ட் ரோடு ரெய்ன் ட்ரீயில் கூட இத்தனை அழகு கிடையாது.  மேலும் இங்கே பட்லர் ஆங்கிலத்தில் பேசி நோகடிக்க மாட்டார்கள். தமிழிலேயே பேசுவார்கள்.   கபாலி கோவில் போய் விட்டு ரெய்ன் ட்ரீ போகலாம் என்றார் சத்யா. அவர் வாரம் இரண்டு மூன்று தடவை போவாராம்.  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை கபாலி கோவிலுக்குப் போனபோது நான் வெளியே வைத்து விட்டுப் போன 4000 ரூ. மதிப்புள்ள ஹஷ் பப்பீஸ் செருப்பு தொலைந்து போனது ஞாபகம் வந்ததால் இந்த முறை முறையாக டோக்கன் வாங்கி செருப்பு வைக்கும் மாடத்தில் வைத்து விட்டுப் போனேன்.  கபாலியைப் பார்க்க எக்கச்சக்க க்யூ.  க்யூவில் நிற்கலாமா என்றார் சத்யா.   இப்போதெல்லாம் ஒரு கான்ஸ்டபிள் கூட தன் உத்தியோகத்தை வைத்து பந்தா பண்ணும் இந்தக் காலத்தில் கமிஷனராக வேலை பார்த்துக் கொண்டு க்யூவில் நிற்கலாமா என்று கேட்கிறார்.  என் நண்பர்களெல்லாம் மகாத்மாக்கள் என்று நான் அடிக்கடி எழுதுகிறேன் அல்லவா, அதற்கு இதுவும் ஒரு உதாரணம். இன்னொரு விஷயம், இப்போது கமிஷனர் என்று எழுதி விட்டேன் அல்லவா?  அதற்கே எனக்கு ஒரு திட்டு கிடைக்கும்.  ஏனென்றால், எந்த இடத்திலும் தன் உத்தியோகத்தைப் பற்றிச் சொல்லிக் கொள்ள மாட்டார்.  அவர் பெயருக்குப் பின்னாலும் ஐஏஎஸ் பட்டத்தைப் போட மாட்டார்.  தமிழில் அற்புதமான ஒரு மொழிபெயர்ப்பு நூல் எழுதியிருக்கிறார். காலச்சுவடு வெளியீடு.  ரூமி என்பது தலைப்பு. ஜலாலுத்தின் ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.  விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்தே எழுதாமல் இருக்கிறேன்.  நீங்கள் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.  அதிலும் என். சத்தியமூர்த்தி என்று பெயர் மட்டுமே உள்ளது. பட்டம் கிட்டமெல்லாம் எதுவும் இல்லை.   சத்யா, என்னை மன்னியுங்கள். இதெல்லாம் மேற்கத்திய சமூகங்களில் பாராட்டுகின்ற அம்சங்கள் இல்லை.  ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தி பாராட்டி எழுதும் அளவுக்கு நம் சமூகம் தரம் தாழ்ந்து கிடக்கிறது.  அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவும் அவர் மனைவியும் ஒரு உணவகத்துக்குப் போன போதும், ஓட்டல் சிப்பந்தி ஒபாமாவிடம் “உங்கள் வங்கி அட்டை வேலை செய்யவில்லை” என்று சொல்ல, ஒபாமாவின் மனைவி தன் வங்கி அட்டையைக் கொடுத்ததாகப் படித்தோம் அல்லவா?  அம்மாதிரி சமூகம் என்றால் நான் இதைப் பொருட்படுத்தி எழுத மாட்டேன். இங்கே ஒரு நீதிமன்ற டவாலியே கலெக்டர் மாதிரி அல்லவா நடந்து கொள்கிறார்! 

எனக்கு அத்தனை பெரிய க்யூவில் நின்று கபாலியை தரிசிக்க இஷ்டமில்லை. என் அப்பனைப் பார்க்க நான் வரிசையில் நிற்க வேண்டுமா, என்னய்யா இது நியாயம்?  வேண்டுமானால் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு என் அப்பன் வரட்டும் என்று நினைத்துக் கொண்டே வெளியில் நின்று எக்கி எக்கிப் பார்த்துக் கொண்டேன். அங்கேதான் ஒரு பெரிய பிரச்சினை.  அப்பனிடம் என்ன வேண்டிக் கொள்வது?  அந்த நேரம் பார்த்து எதுவுமே நினைவுக்கும் வரவில்லை.  பணம் வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாமா என்று யோசித்தேன்.  பணம் இருந்தால் உலகத்தைச் சுற்றிக் கொண்டே இருக்கலாம்.  ம்ஹும்.   வேண்டுதலாக இருந்தாலும் அதில் ஒரு லாஜிக் இருக்க வேண்டும்.  சாமி, எனக்கு ரெண்டு றெக்கை கொடு, நான் லூசிஃபர் மாதிரி பறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள முடியுமா?  கபாலி என்னதான் பவர்ஃபுல் God-ஆக இருந்தாலும் ஒரு மனிதனுக்கு றெக்கையெல்லாமா கொடுப்பார்?  அந்த மாதிரி, தமிழ் எழுத்தாளனாகப் பிறந்து விட்டு பணம் கொடு என்று வேண்டினால் அது நடக்கவே நடக்காது.  சாத்தியமே இல்லை.  வேறு என்ன வேண்டிக் கொள்ளலாம்?  நீண்ட ஆயுள்?  ம்ஹும். அது மிகவும் illogical-ஆகத் தோன்றியது.  ஆயுள் என்பது கடவுளால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்கிறபோது அதே கடவுளிடம் போய் எப்படி அதை மாற்றச் சொல்வது?  கடவுளாகவே இருந்தாலும் அவர் எடுத்த முடிவை அவரே மாற்ற முடியுமா என்ன?  ம்ஹும். அவர் முன்னால் நின்று கொண்டிருந்தேனே தவிர வேண்டிக் கொள்வதற்கு எதுவுமே தோன்றவில்லை.  ஒருக்கணம் இப்படி வேண்டிக் கொள்ள எதுவுமே இல்லாமல் இருக்கிறோமே என்ற தன்னிரக்கமும் ஏற்பட்டது.  அதே சமயம், உறவு பந்தம் பாசம் எல்லாவற்றையும் அறுத்தவனுக்கு என்ன வேண்டுதல் இருக்க முடியும் என்றும் தோன்றியது.   சும்மா பேச்சுக்காக சொல்லவில்லை.  ஒருநாள் நாங்கள் வளர்க்கும் பூனை கெய்ரோ எங்கள் அபார்ட்மெண்டில் வசிக்கும் பூனைகளில் ஒன்றான ரவுடியைக் கடித்தது. அந்தப் பூனைக்கு நான் தான் ரவுடி என்று பெயர் வைத்தேன்.  ஏனென்றால், அது மற்ற பூனைகளைப் போல் எந்தப் பூனையோடும் மல்லுக்கு நிற்காது.  ரொம்ப சாது. ஞானி மாதிரி. ஆனால் பூனையை ஞானி என்று கூப்பிட்டால் ஒரு மாதிரி இருக்குமே என்று ரவுடி என்று அழைக்கிறேன்.  நீங்கள் உங்களுக்குப் பிரியமானவரை செல்லம் என்று அழைப்பதில்லையா, அப்படி.  ரவுடியைக் கடித்த கெய்ரோவை வலிக்காமல் லேசாகத் தட்டி ஒரு திட்டு திட்டினேன். கெய்ரோவிடம் ஒரு குணம்.  அதற்கு யாரை ரொம்பப் பிடிக்குமோ அவர்களைக் கடிக்கும். அதன்படி அதற்கு ரொம்பப் பிடித்தவர்கள் மனிதர்களில் அவந்திகாவும் பூனையில் ரவுடியும்.  அதெல்லாம் தெரியும் என்றாலும் அப்போது கண்ணெதிரே அந்தக் குறைந்த பட்ச வயலென்ஸை சகிக்க முடியாமல் தட்டினேன், திட்டினேன்.  அவந்திகா கோபித்துக் கொண்டாள், ”நம்ம பூனையை நீ எப்படித் திட்டலாம்?”  

”என்னது நம் பூனையா? எனக்கு எல்லா பூனையுமே நம் பூனைதான்.”  “ம்ஹும்.  எனக்குக் கெய்ரோதான் முக்கியம்.  அப்புறம்தான் மற்றதெல்லாம்.”

ஒருநாள் நானும் ராஜேஷும் கபாலி கோவிலுக்கு எதிரே உள்ள கிரி டிரேடிங் கடைக்கு எனக்காக கபாலி வேஷ்டி வாங்கப் போனோம்.  கபாலி படத்தில் ரஜினி கட்டியிருப்பார் இல்லையா, கறுப்பு வேஷ்டி.  அது. அப்போது  அங்கே இருந்த ஒரு அழகான அம்மன் சிலையை வாங்கினார் ராஜேஷ்.  ஓ, அவர் வீட்டுக்கு வாங்குகிறார் போல என்று நினைத்துக் கொண்டேன்.  கடைசியில் பார்த்தால் அது அவந்திகாவுக்கு.  அவந்திகாவிடம் விஷயத்தைச் சொல்லி சிலையைக் கொடுத்தேன். இவள் எதுக்கு வந்தா இங்கே என்று குழப்பத்துடனும் யோசனையுடனும் சிலையை வாங்கி பூஜையறையில் வைத்து விட்டு மாடவீதிக்குப் போய் ஒரு கூடை உதிரி மல்லிகைப் பூவை வாங்கி வந்து அதை மணிக் கணக்கில் சரமாகத் தொடுத்து அம்மனுக்கு அணிவித்தாள்.  அது அல்ல நான் சொல்ல வந்தது; அவள் ”இவள் எதுக்கு வந்தா இங்கே?” என்று கேட்டதை நான் தப்பாகப் புரிந்து கொண்டு, பூனை நாயெல்லாம் இருக்கும் போது இவளும் ஒரு மூலையில் இருந்து விட்டுப் போகட்டுமேம்மா என்று பதில் சொன்னேன். 

”ம்ஹும்… நான் சொல்ல வந்தது வேறு” என்றாள் அவந்திகா.  என்ன என்று நானும் கேட்கவில்லை; அவளும் சொல்லவில்லை.

***

 

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai