பயணக் குறிப்புகள் – 1

அமெரிக்கர்களுக்கு பெரூவில் வீஸா தேவையில்லை.  ப்ரஸீலில் தேவை.  இந்திய அரசியல்வாதிகளின் திறமையின்மைக்கு ஒரு உதாரணம்.

அண்டோரா, ஆஸ்த்ரேலியா, ஆஸ்த்ரியா, பெல்ஜியம், ப்ரூனே, சீலே, செக், டென்மார்க், எஸ்தோனியா, ஃபின்லாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, க்ரீஸ், ஹங்கெரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லீஷ்டென்ஸ்டைன் (இந்த நாடு ஜெர்மனியின் கீழ்க் கோடியில் சுவிஸ்ஸுக்கும் ஆஸ்திரியாவுக்கும் பக்கத்தில் உள்ளது; ஒரு சிறிய ஊர் இது; ஆனால் தனி நாடு.  38,000 பேர்தான் மொத்த மக்கள் தொகையும்), லித்துவானியா, லக்ஸம்பர்க், மால்ட்டா, மொனாக்கோ, நெதர்லாந்து, நியூஸிலாந்து, நார்வே, போர்த்துகல், ஸான் மரினோ, சிங்கப்பூர், ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தைவான், யூகே ஆகிய இந்த 38 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வீஸா இல்லாமல் பயணம் செய்யலாம்.  இதில் இந்தியா கிடையாது. இதிலிருந்து எனக்குத் தெரிவது இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை, திறமையின்மை, சுயநலம் எல்லாம்தான்.  இது இப்படியென்றால் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகில் 184 நாடுகளில் வீஸா இல்லாமல் பயணம் செய்யலாம்.  நான் எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கே அமெரிக்கர்களுக்குத் தனி நுழைவு வாயில் உள்ளது.  அதில் அவர்கள் ராஜா பல்லக்கில் போவது போல் கியூவில் நிற்கும் நம்மையெல்லாம் துச்சமாகப் பார்த்து விட்டுப் போகிறார்கள்.  இந்தியா ஒரு பிச்சைக்கார நாடு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதற்கு இதெல்லாம்தான் காரணம்.  அமெரிக்கர்களின் 184 நாட்டுப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது என்பதுதான் வெட்கக் கேடு.  அமெரிக்கர்களுக்கு வீஸா ஆன் அரைவல் கொடுக்கும் இந்தியா அதே சலுகையை இந்தியர்களுக்காகவும் அமெரிக்க அரசிடம் பேசினால் என்ன?