ரஜினிகாந்துக்கு ஒரு கற்பனைக் கடிதம்…

நாளை நள்ளிரவு மூன்றரை மணிக்கு – சரியாகச் சொன்னால் நாளை மறுநாள் அதிகாலை – தோஹா விமானத்தைப் பிடிக்கிறேன்.  அங்கிருந்து சாவொ பாவ்லோ.  அங்கிருந்து லீமா.  மொத்தம் 36 மணி நேரம் விமானத்திலும் விமான நிலையத்திலும் போகும்.  பையில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கிறேன்.  இந்த நிலையில் பின்வரும் கடிதம் ஃப்ரான்ஸிலிருந்து வந்தது.  அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வணக்கம் ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் ……………… இணைய சிற்றிதழ் அதனது ஆவணி இதழை தமிழக சிறப்பிதழாக வெளியிட தீர்மானித்துள்ளோம். அதில் உங்களை கௌரவிக்குமுகமாக உங்கள்  சிறுகதை ஒன்று இடம்பெறுவதை விரும்புகின்றோம். உங்களால் இந்த சிறப்பிதழில் பங்காற்ற முடியுமா? முடியுமானால் உங்கள் சிறுகதையை ஆடி மாத இறுதிக்குள் எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம். உங்கள் பதில் கண்டு மிகுதி தொடர்கின்றோம்.  நன்றி . 

தொடர்பு : ……………………@gmail.com

இதழைப் பார்வையிட :   —————————— (இதழின் மின்முகவரி)

நேசமுடன்

—————— 

பிரதம ஆசிரியர்

தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் ஒரு தனி ரகம்தான் என்பதற்கு இந்தக் கடிதம் சான்று.   இதைப் படித்தவுடன் ரஜினிக்கு நான் இப்படி ஒரு கடிதம் எழுதலாம் என்று நினைத்தேன்.  அந்தக் கடிதம் இப்படி இருக்கும்.

அன்புள்ள ரஜினிகாந்த்,

வணக்கம்.  நான் எங்கள் வீட்டில் மஹா அவ்தார் பூஜை செய்யலாம் என்று இருக்கிறேன்.  பூஜை வரும் ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும்.  அந்தப் பூஜையில் தங்களை சிறப்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.  நானும் என் மனைவியும் எங்கள் பூனைகளும் பூனைக்குட்டிகளும்.  அதனால் நீங்கள் பூஜைக்கு வந்து பூஜைக்குத் தேவையான வெண்பொங்கல், சாம்பார், தேங்காய்ச் சட்னி மூன்றையும் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஸ்விக்கியிலெல்லாம் ஆர்டர் பண்ணக் கூடாது.  நீங்களேதான் செய்ய வேண்டும்.  தங்களை கௌரவிப்பதுதான் எங்கள் நோக்கம் என்பதால் அதை நீங்கள் சரியானபடி புரிந்து கொண்டு நீங்களே மேற்படி வெண்பொங்கல், சாம்பார், தேங்காய்ச் சட்னி மூன்றையும் செய்து தர வேண்டும்.  சாம்பாரில் சின்ன வெங்காயம் போடலாம்.  இது என்ன உங்கள் மனைவியார் லதா ரஜினிகாந்த் அவர்கள் வீட்டு விசேஷமா?  அதனால் நீங்கள் தாராளமாக உங்கள் கைவண்ணத்தைக் காட்டலாம்.  இதனால் தங்களுக்கு நல்ல பயன் உண்டு.  அஜித்தின் பிரியாணி போல் உங்கள் பொங்கலையும் உலகம் அறியும்.  உங்கள் ஒப்புதலை எனக்கு மின்னஞ்சல் செய்தால் என் வீட்டு முகவரியை அனுப்பி வைக்கிறேன்.

நேசமுடன்,

சாரு நிவேதிதா