அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள்

வரும் அக்டோபரில் அமெரிக்கா (யு.எஸ்.) வரலாம் என்று இருக்கிறேன். வீஸா கிடைத்தால். இந்த முறை வீஸா கிடைக்க எஸ்.ஓ.டி.சி. மூலம் பயண ஏற்பாட்டைச் செய்து கொள்ளப் போகிறேன்.  ஐந்து நாள் எஸ்.ஓ.டி.சி. மூலம் ஊர் சுற்றல்.  ரெண்டு வாரம் நண்பர்களின் மூலம். முதல் வருகை அட்லாண்டா நகரம். ஏனென்றால், அங்கே வசிக்கும் ஒரு நண்பர்தான் பயண டிக்கட்டுக்கான பொறுப்பை ஏற்கிறார்.  அமெரிக்கா வாருங்கள் வாருங்கள் என்று சுமார் 20 நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளாகத் தீவிரமாக வற்புறுத்தி வருகிறார்கள். நான் டிக்கட் எடுத்துக் கொண்டு போனால் தங்குவது, உள்நாட்டுப் பயணம், தினப்படி செலவு இன்ன பிறவற்றில்  எனக்கு ஒரு பைசா செலவு இல்லாமல் நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். 

ஆனால் இந்த இருபது பேரில் ஒரு பத்து பேர் ஒருங்கிணைந்து திட்டமிட்டிருந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சென்றிருக்கலாம்.  ஆனால் இவர்கள் யாருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது.  தெரிந்து கொள்ளவும் ஆர்வமில்லை.  தனியாக நின்று டிக்கட் செலவை ஏற்கும் அளவுக்குப் பணமும் இல்லை.  எனக்கு அமெரிக்க வாழ்க்கை பற்றித் தெரியும் என்பதால் சொல்கிறேன்.  போக வர ஒரு லட்ச ரூபாய் ஆகும்.  1500 டாலர்.  இந்தச் செலவை மூன்று நான்கு பேர் ஏற்க முடியும்.  ஆனால் அதற்கான முனைப்பு இல்லை.  ஆர்வம் இருக்கிறது.  செயலூக்கம் இல்லை.  இந்தச் செயலூக்கத்தை நாம் ஆன்மீக குழுக்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.  நண்பர் ஜக்கி உலகம் பூராவும் சுற்றி வருகிறார்.  அவர் பணத்திலா போகிறார்?  அவர் இப்போது கோடீஸ்வரர்.  ஆனால் அவர் கையில் சல்லிக் காசு இல்லை என்றாலும் இதே மாதிரிதான் உலகம் பூராவும் சுற்றிக் கொண்டிருப்பார்.  அவருடைய சீடர்கள் நான்கு பேர் சேர்ந்து டிக்கட் வாங்கி அனுப்பி விடுவார்கள்.  அப்படிப்பட்ட செயலூக்கத்தை ஒரு எழுத்தாளனின் வாசகர்களிடம் காண முடிவதில்லை.  அதில் ஒன்றும் ஆச்சரியமும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரே ஒருவர் செயலூக்க வீரராக இருந்தால் போதும்.  மீதி மூன்று பேரிடம் நானூறு டாலர் நானூறு டாலர் வசூலித்து இவரும் போட்டு டிக்கட்டை அனுப்பி விடலாம்.  சரி, இத்தனை நாள் நடக்கவில்லை.  இப்போது அட்லாண்டாவில் ஒரு நண்பர் முன்வந்திருக்கிறார்.  தீபாவளி அன்று அட்லாண்டாவில் இருப்பேன்.  வீசா கிடைத்தால்.  பிற விபரங்களை பின்னர் தெரியப்படுத்துகிறேன்.  

தோஹாவில் கத்தார் ஏர்வேஸ் ஏற்பாடு செய்திருந்த ஓரிக்ஸ் ரொட்டானா என்ற ஓட்டலுக்கு இரவு இரண்டு மணிக்கு வந்து சேர்ந்தேன்.  அப்போது தென்னமெரிக்காவில் பகல் என்பதால் எனக்குத் தூக்கம் வரவில்லை.  அது ஐந்து நட்சத்திர ஓட்டல்.  படு ஆடம்பரமாக இருந்தது.  இரவு நேர ஜாஸ் கிளப் அங்கே ரொம்பப் பிரபலம்.  ஆனால் அந்த நேரத்தில் – அப்போதுதான் – மூடினார்கள்.  அதனால் போக முடியவில்லை.  எட்டு மணிக்கு இட்லியோடு நிர்மல் வந்தார்.  நான் தூங்கவில்லை என்று தெரிந்திருந்தால் இரவே வந்திருப்பார்.  இட்லியும், கத்தரிக்காய், அவர் வீட்டில் பறித்த முருங்கக்காய், சின்ன வெங்காயம் எல்லாம் போட்ட சூப்பர் சாம்பாரும் காரச் சட்னியுமாக நானும் என் பயண நண்பர் ரவி ஷங்கருமாக வளைத்துக் கட்டி வெட்டினோம்.  ஆளுக்குப் பத்து இட்லி.  நிர்மலின் மனைவி பிரமாதமாகச் சமைக்கிறார்கள்.  சமையலில் என் பாராட்டைப் பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.  நன்றாக இல்லை என்றால் விருந்தோபசாரமாக ”நன்றாக இருந்தது” என்று பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்.  அதற்காக நன்றாக இல்லை என்றும் சொல்லி மனவருத்தம் உண்டாக்க மாட்டேன்.  ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்து விடுவேன்.  உணவு பிரமாதமாக இருந்தது என்பதற்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது.  கன்னாபின்னா என்று வேர்க்கும்.  அன்றைய உச்சந்தலையிலிருந்து கால் வரை வேர்த்துக் கொட்டியது.  இன்னொரு விஷயம் நிர்மல் சொன்னார்.  என்னுடைய ரத்த புத்திரர்கள் கூட செய்ய மாட்டார்கள்.  நிர்மல் சொன்னார்.  செய்தார்.  எங்கள் வீட்டில் தேங்காய் சட்னிதான் வழக்கமாகச் செய்வோம்.  உங்களுக்குத் தேங்காய் சட்னி பிடிக்காது; காரச் சட்னிதான் பிடிக்கும் என்பதால் இதை செய்யச் சொன்னேன் என்றார்.  சென்னை ஓட்டல்வாசிகள் என்னை அப்படி ஆக்கி விட்டார்கள்.  இங்கேயெல்லாம் தேங்காய் சட்னி என்றால் என்ன தெரியுமா?  தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு அடித்து, மூன்று மூன்று கடுகை எண்ணி போட்டு – எண்ணிப் போட வேண்டும், மூன்றுக்கு மேல் போய் விடக் கூடாது (பாவிகளா!) – தாளித்து ஏனத்தில் போட்டால் அதன் பெயர் தேங்காய் சட்னி. மிளகாயை மறந்து விட்டேன்.  20 தேங்காய்க்கு அரை காய்ந்த மிளகாய் என்பது கணக்கு.  மூன்று தேங்காய்க்கு?  கடுகத்தனை மிளகாயைக் கிள்ளிப் போட வேண்டியதுதான்.  இதற்குப் பெயர் தேங்காய் சட்னியா?  சென்னையில் எல்லா ஓட்டலிலும் இதுதான் தேங்காய் சட்னி.  (அதனால்தான் சென்னையில் மழை பெய்ய மாட்டேன் என்கிறது!) மற்றபடி உண்மையான தேங்காய் சட்னி எனக்கு உயிர்.  நாகூர் வெங்கட்ராமய்யர் ஓட்டலில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக – இன்றளவும் – தேங்காய் சட்னி சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  ஆஹா… தேவாமிர்தம்.  சுடச் சுட ஆவி பறக்கும் இட்லி – இந்த சென்னைக்காரர்களின் தலையில் இடி விழ – இங்கே சுடச் சுட ஆவி பறக்கும் இட்லி என்றால் யாருக்குமே தெரியவில்லை.  இட்லியை எடுத்து ஹாட்பேக்கில் போட்டு பத்து நிமிடம் கழித்து “சுடச் சுட” எடுத்துக் கொடுக்கிறார்கள்.  இதற்குப் பெயரா இட்லி?  இட்லி பானையிலிருந்து துணியோடு தட்டில் கவிழ்த்தால் பெரும் ஆவியோடு இட்லி பொங்கும் பாருங்கள், அதன் பெயர்தான் இட்லி.  இலையில் ஓடும் தேங்காய் சட்னியை இட்லியின் மேலே ஊற்றித் தோய்த்து எடுத்து வாயில் போட்டால் அதற்கு ஈடு இணை கிடையாது.  இப்படிப்பட்ட தேங்காய் சட்னி ஆனானப்பட்ட ராயர் கஃபேவில் கூட இல்லை. 

சரி, துணியெல்லாம் வைக்க முடியாது ஐயா.  எங்கள் உடையிலேயே துணியைக் குறைத்து விட்டோம், இட்லி துணிக்கு எங்கே போவது என்று கேட்கிறீர்களா?  சரி, ஒத்துக் கொள்கிறேன்.  இந்தப் பின்நவீனத்துவ காலகட்டத்தில் இட்லி குழிகளில் எண்ணெயை விட்டு இட்லி சுட வேண்டும்.  ஓகே.  ஒன்றும் தப்பில்லை.  அதையும் ஸ்பூன் கொண்டு சுடச் சுட எடுத்துத் தட்டில் போட வேண்டியதுதானே?  அதை ஏன் ஐயா, அம்மணி, ஹாட் பேக்கில் போட்டு என் வாழ்வைத் துன்பவியல் காவியமாக மாற்றுகிறீர்கள்?  ஓ, அப்படிப் போட வேண்டுமானால் ஓட்டலையே மூட வேண்டியிருக்கும்.  நேற்று ராயர் மெஸ்ஸில் நடந்ததைக் கேளுங்கள்.  சென்னையிலேயே ராயரிடம் மட்டும்தான் ஆவி பறக்கும் இட்லி கிடைக்கும்.  இன்னமும் அவர் துணி போட்டுத்தான் இட்லி ஊற்றுகிறார்.  உண்மையிலேயே ஆவி பறக்கும் இட்லி.  ராகவனுக்கு மெஸேஜ் அனுப்பி விட்டேன்.  நான் சாப்பிட்டே 21 நால் ஆகிறது.  21 நாளும் பழம்தான்.  அதனால் நேராக ராயர் கஃபே போகிறேன்.  ஏழேகால் மணிக்கு. முடிந்தால் வாருங்கள்.  வந்தார்.  அங்கே அடுத்த பந்திக்கானவர்கள் முதல் பந்தியில் யாராவது சாப்பிட்டு முடிந்து எழுந்திருந்தால் அந்த இருக்கையில் உட்காரக் கூடாது.  இந்த ரூல் எனக்கும் தெரியாது; ராகவனுக்கும் தெரியாது.  நான் உட்கார்ந்தேன்.  கடுப்படித்தார் ராயர்.  எழுந்து போய்யா, ஏன் என் ஓட்டலுக்கு வருகிறாய் என்ற தொனியில்.  கண்டு கொள்ளக் கூடாது.  சென்னையில் ஆவி இட்லி எங்கேயும் கிடைக்காது.  ஈகோவை விட்டால்தான் ராயரிடம் இட்லி கிடைக்கும்.  இல்லாவிட்டால் அங்கே உள்ள ரூலைப் பின்பற்ற வேண்டும்.  வாங்கிக் கட்டிக் கொண்டு எழுந்து ஒரு ஓரமாக வழியை மறைக்காமல் வந்து நின்றேன்.  இதேபோல் ஏற்கனவே ராகவனும் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தார்.  இருக்கிறதே அஞ்சு பேர், இதுக்கு ஏன் இப்படி அடித்துப் பிடிக்கிறீர்கள் என்று வேறு எங்கள் இருவரையும் நேரடியாகப் பார்த்துத் திட்டினார்.  ஏன் அடித்துப் பிடிக்கிறோம் என்றால் இங்கே வரும் சேட்டுகள் அப்படி.  நாம் நின்று கொண்டிருந்தாலும் நமக்குப் பிறகு வரும் அவர்கள் முன்னே போய் அமர்ந்து கொண்டு நம்மை அடுத்த பந்திக்குத் தள்ளி விடுவார்கள்.  இதை ராயரிடம் சொன்னால் ”அப்படியானால் வராதே” என்று கூச்சலே போடுவார் என்பதால் வாயைத் திறக்கவில்லை.  இப்படியாக எங்கள் இருவர் மீதும் காண்டில் இருக்கும் ராயரை மேலும் தன் வாயால் காயப்படுத்தினார்.  முதலில் ஆவி பறக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது.  ராயர் பொங்கல்தான் சென்னையிலேயே முதல்.  அந்தப் பொங்கலை சாம்பாரிலும் தேங்காய் சட்னியிலும் தோய்த்துத் தோய்த்துச் சாப்பிடலாம்.  ராகவன் தோய்த்தார்.  நான் வேண்டாம் என்று வெறும் இலையோடு உட்கார்ந்திருந்தேன்.  ஏனென்றால் பொங்கலை விட இட்லி பிடிக்கும்.  ஏன் பொங்கல் வேண்டாம் என்று என்னைக் கேட்டார்.  பொங்கலைக் காண்பித்து நான் அதில் பிறக்கவில்லையே என்றேன்.  வாய் விட்டுச் சிரித்தார்.  (பொங்கல் பிராமணர் உணவு) உடனே ராயரிடம் இட்லி நேரமாகுமா என்று கேட்டு விட்டார்.  ராயருக்கு யாரோ வேட்டியை அவிழ்த்து விட்டு விட்டது போல் ஆகி விட்டது.  என்னது, இட்லி நேரம் ஆகுமா?  ஆறின இட்லி இருக்கு.  தரவா?  சூடா வேணம்னா வெய்ட் பண்ணுங்கோ.  ஆறின இட்லின்னா இப்போவே தரேன்.  என்ன பண்ணட்டும்?  ஒரு கத்தல் கத்தினார்.  ராகவன் அடங்கி விட்டார்.  இது தேவையா என்று நினைத்துக் கொண்டேன்.  இட்லி அடுப்பில் இருக்கிறது.  இங்கே வருவதே ஆவி இட்லிக்குத்தான்.  அப்படி இருக்கும் போது ராயரின் ஆவியை எடுக்கத் துணியலாமா? 

சரி, எங்கோ போய் விட்டேன்.  விஷயத்துக்கு வருகிறேன்.  இட்லி உண்ட பிறகு நிர்மல் இன்னொன்றும் செய்தார்.  எனக்கு ரசம் பிடிக்கும் என்று சுடச் சுட ரசமும் கொண்டு வந்திருந்தார்.  ஆஹா!  யார் இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்வார்? 

தோஹாவில் மற்றொரு இன்பமான சமாச்சாரம்.  அன்றைய தினம் முழுவதுமே நிர்மலைத் தவிர வேறு யாருமே என்னை வந்து பார்க்கவில்லை.  பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்கிறேனாம்.  அவ்வளவு பணம் கை வசம் இல்லையாம்.  அடக் கடவுளே!  பத்தாயிரமா கேட்டேன்?  பத்து ரூபாய் அல்லவா கேட்டேன்?  இங்கே பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் ஒருவர் எனக்கு நூறு ரூபாய் அனுப்புகிறார்.  அப்படிப்பட்ட நிலையில் ஒரு பத்து ரியால் கொடுக்கக் கூடாதா என்றல்லவா கேட்டேன்?  நானும் நிர்மலும் ரவியும் காப்பி குடித்தோம்.  ரவி கொஞ்சம் இனிப்பு சாப்பிட்டார்.  தண்ணீர் பாட்டில் வாங்கினோம்.  நூறு ரியால் ஆனது.  நம்மூர்ப் பணத்துக்கு 2000 ரூ.  ஒரு காப்பியின் விலை அஞ்சு ரியால்.  நூறு ரூபாய்.  வசந்த பவன் காப்பி.  கழனித் தண்ணி மாதிரி இருந்ததால் குப்பையில் கொட்டி விட்டேன்.  நிர்மலுக்கு ஒரு அஞ்சு ரியால் நட்டம்.  இந்த அஞ்சு ரியால்தான் கேட்டேன்.  உங்களுக்கு அஞ்சு ரியால்.  எனக்கு நூறு ரூபாய்.  சுருக்கமாகச் சொல்கிறேன்.  என் எழுத்து உங்கள் சொத்து.  இலவசமாகப் படித்துக் கொள்ளலாம்.  காற்று மாதிரி.  ஆனால் என்னை சந்திக்க நினைத்தால் அதற்காக நீங்கள் கொஞ்சம் commit ஆக வேண்டும்.  பத்து ரியாலாவது கொடுக்க வேண்டும்.  காப்பி செலவுக்கு.  முடியாது என்று சொல்லி விட்டார்கள்.  யாருமே வந்து பார்க்கவில்லை.  ஆனால் அது காரணம் இல்லை என்றார் நிர்மல்.  வியாழக் கிழமை லீவு கிடைக்காது என்பதுதான் காரணமாம்.  ஒருத்தருக்குக் கூடவா என்று கேட்க நினைத்தேன்.  கேட்கவில்லை.  பார்க்காததால் எனக்கு எந்த நட்டமும் இல்லை.  மேலும், நான் சொன்ன பண விஷயத்தை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவும் இல்லை.  சாரு பணம் கேட்பார்.  நம்மிடம் பணம் இல்லை.  இதுவே அவர்களின் புரிதலாக இருந்திருக்கிறது.  மகிழ்ச்சி. 

அமெரிக்க வாழ் வாசகர்களும் இப்படியே செய்யாதீர்கள் என்பது என் வேண்டுகோள்.  தென்னமெரிக்கப் பயணத்துக்கு ஆறு லட்சம் ஆகும் என்று எதிர்பார்த்தேன்.  12 லட்சம் ஆகி விட்டது. 

தொடரும்…  

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai