அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (2)

நீங்கள் படித்திருக்கலாம். அல்லது பலரும் படிக்காமலும் விட்டிருக்கலாம். என்னுடைய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் என்ற தலைப்பில் வெளிவந்த குமுதம் தொடர். இது ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் இரண்டு தொகுதிகளாக புத்தகமாகவும் வந்திருக்கிறது. என்னுடைய மிக முக்கியமான புத்தகம் இது. இதற்காக நான் மிகக் கடுமையாக உழைத்தேன். இரண்டு ஆண்டுகள் ஒரு வாரம் கூட இடைவெளி விடாமல் எழுதினேன். குமுதத்திலும் படு சுதந்திரம் கொடுத்தார்கள். சில சமயங்களில் குமுதத்தின் கருத்துக்கு நேர் எதிரான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளையும் எழுதினேன். அதையும் அனுமதித்தார்கள். இப்போது அதேபோல் ஒரு பிரபலமான வாரப் பத்திரிகையில் தென்னமெரிக்கப் பயணம் பற்றி ஒரு தொடர் எழுத இருக்கிறேன். தலைப்பு அருமையாகவந்துள்ளது. பயணக் கட்டுரைத் தொடராக மட்டும் இருக்காது. சூரியனுக்குக் கீழ் உள்ள அத்தனை விஷயங்களும். விரைவில் அறிவிப்பை எதிர்பாருங்கள்.

***

கால் நூற்றாண்டுக்கும் மேலாக நான் கனவு கண்டிருந்த தென்னமெரிக்கப் பயணத்தை – குறிப்பாக சீலே – செயல்படுத்த முதன்மைக் காரணமாக இருந்தவர் என் நண்பர் உமேஷ்.  6 லட்சம் கொடுத்து இந்தப் பயணத் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.  பெரூவின் குஸ்கோவிலிருந்து நான் பொலிவியா போயிருக்க வேண்டும்.  போகாமல் என் பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டு சீலே போய் விட்டேன்.  காரணத்தை பிறகு விரிவாக எழுதுகிறேன்.  என் பயண நண்பர் ரவி ஷங்கர் மட்டும்தான் பொலிவியா போனார்.  இதன் காரணமாக மேலும் நான்கு லட்சம் எனக்கு செலவாகி விட்டது.  ஏனென்றால், சீலேவில் நான் மட்டுமே கைடுடன் சுற்றினேன்.  கைச்செலவுக்கு இரண்டு லட்சம்.  ஆக மொத்தம் பனிரண்டு லட்சம் ஆகி விட்டது.  ஆனால் இது வருங்காலப் பயணிகளுக்கான மூலதனம்.  நான் எழுதுவதை கவனமாகப் படித்து அதன்படி நடந்தால் இதே பயணத்தை நான்கு லட்சத்தில் முடிக்கலாம்.  எனக்கு ஆன செலவில் மூன்றில் ஒரு பங்கு.  சீலே மற்றும் பெரூவில் மூன்று வார காலம் தங்கவும் விமான டிக்கட்டும் சேர்த்தே நான்கு லட்சம்தான் ஆகும்.  என் பயணக் கட்டுரையை சிரத்தையாகப் படித்தால் நீங்கள் இதை நடைமுறைப்படுத்தலாம்.   

திட்டத்தை மீறிய ஆறு லட்சத்தையும் என் வாசகர்களே கொடுத்தார்கள்.  அதற்காக அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.  தமிழ்ச் சமூகத்தைப் பற்றியும் எனக்கு அங்கீகாரம் கிடைக்காதது பற்றியும் கசப்பு உணர்வுடன் எத்தனையோ எழுதியிருக்கிறேன்.  ஆனால் அதே சமூகத்தில்தான் ஒரு எழுத்தாளனுக்காக, அவன் கனவை நிறைவேற்றுவதற்காக அவன் வாசகர்கள் 12 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.  உலகில் வேறு எங்குமே நடக்காத, கற்பனை செய்ய முடியாத விஷயம் இது.  இதற்கான என் நன்றிக் கடனை என் எழுத்தின் மூலமும் –  என் எழுத்தை மேலும் மேலும் செழுமைப்படுத்துவன் மூலமும் திருப்பிச் செலுத்துவேன்.

***

தோஹாவில் நிர்மல் வேறொரு விஷயமும் கேட்டார்.  ”உங்களுக்கு எந்தத் தேதியில் இருக்கிறோம் என்று தெரியாது.  இந்த நிலையில் அந்தந்த நாளுக்கான பயணத் திட்டம் பற்றி உங்களுக்கு யார் சொன்னது?  அந்தக் குழப்பத்தை எப்படி சமாளித்தீர்கள்?”  மூன்று வாரங்களில் இரண்டு வாரம் ரவி ஷங்கர் இந்தத் தேதி விஷயத்தையும் அந்தத் தேதியில் எங்கே போகிறோம் என்ற திட்டத்தையும் கவனித்துக் கொண்டார்.  நான் சீலேவில் தனியாக இருந்த எட்டு நாட்களில் நானே தேதியையும் எஸ்.ஓ.டி.சி. கொடுத்திருந்த பயணத் திட்ட அட்டவணையையும் சரி பார்த்து சரி பார்த்துத் தயார் செய்து கொண்டேன்.  இதை எதற்குச் சொன்னேன் என்றால், என்னைப் பற்றி இந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என் நண்பர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான். 

***

வரும் அக்டோபரில் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்கப் பயணம் பற்றி.  முதலில் நவம்பரில்தான் வர நினைத்தேன்.  தீபாவளி அன்று வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் நவம்பரில் வருவதில் ஒரு சிறிய சங்கடம் இருந்தது.  நவம்பர், டிசம்பர், ஜனவரி எல்லாம் ஐரோப்பாவைப் போலவே அமெரிக்காவிலும் குளிர் காலம்.  இதுவரையிலான ஃப்ரான்ஸ் பயணங்கள் குளிர் காலத்திலேயே அமைந்தன.  இப்போதைய தென்னமெரிக்கப் பயணமும் குளிர் காலம்.  அங்கே டிசம்பர், ஜனவரி, ஃபெப்ருவரிதான் கோடையாம்.  மீண்டும் அமெரிக்காவில் குளிர் காலத்தில் பயணம் செய்ய வேண்டுமா என்று யோசித்தேன்.  குளிர் எனக்குப் பிரச்சினை இல்லை.  ஆனால் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை.  ஸ்நோபைட் என்கிற மாதிரி என் உடலின் பின்பகுதி எல்லாம் நகத்தால் பிறாண்டின மாதிரி ஆகி விட்டது.  அந்தக் காயமெல்லாம் புண்ணாக வலித்தது.  நாலைந்து விதமான க்ரீம் எடுத்துப் போயிருந்தேன்.  எதையும் போட்டுக் கொள்ளக் கூட முடியாமல் குளிர்.  அதனால் அக்டோபரைத் தேர்ந்தெடுத்தேன்.  அவந்திகாவிடம் கேட்டேன்.  தீபாவளியெல்லாம் ஒரு பொருட்டு இல்லை என்று சொல்லி விட்டாள்.  பொதுவாக எனக்கும் அவந்திகாவுக்கும் தீபாவளி பிடிக்காது.  எங்களுக்கு சத்தம் பிடிக்காது.  வெடிச் சத்தத்தில் பிராணிகள் நடுங்கும் நடுக்கம் எங்களுக்கு ரத்தக் கண்ணீர் வரவழைப்பது.  அதனால் அக்டோபரில் வர முடியும்.  வீசா கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

இந்தப் பயணத்தைச் சற்று திட்டமிட வேண்டும்.  எஸ்.ஓ.டி.சி. மூலம் நியூயார்க், கெட்டிஸ்பர்க், நயகரா போன்ற இடங்களைப் பார்க்க ஐந்து நாட்கள்.  15 நாட்கள் நண்பர்களோடு.  அட்லாண்டாதான் மையம்.  பிறகு Utahவில் உள்ள rock formations-ஐப் பார்க்க வேண்டும்.  அதை அஸ்வினியோடு செய்யலாம்.  மற்றபடி என்னைச் சந்திக்க விரும்பும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  தோஹாவில் சொன்ன மாதிரிதான்.  எல்லா செலவையும் ஒருத்தர் தலையிலேயே ஏற்ற முடியாது.  பங்கேற்க வேண்டும்.  முடியாதவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம்.  இதில் எந்த மன வருத்தமும் பிரச்சினையும் இல்லை.  ஆன்மீகவாதிகளும் சினிமா சம்பந்தப்பட்டவர்களும் பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் செலவில் உலகம் பூராவும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  நான் 66 வயது வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.  சாரு பணம் கேட்கிறார் என்று கொச்சையாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.  எனக்குக் கிடைக்கும் பணத்தை மீண்டும் மீண்டும் பயணங்களுக்கு மட்டுமே செலவிடுகிறேன்.  மீண்டும் ஃபெப்ருவரியில் ப்ரஸீல் கார்னிவலுக்கு ராகவனோடு செல்ல இருக்கிறேன்.  ஒரு உதாரணம் இது.  இந்த அமெரிக்கப் பயணத்தோடு ஒரே ஒரு மத்திய அமெரிக்க நாட்டுக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.  தனியாக அல்ல.  நண்பரோடு. ஒரு வாரம்.  மத்திய அமெரிக்கா என்றால் மெக்ஸிகோ வேண்டாம்.  பாதுகாப்பு இல்லை என்று சொல்லி விட்டார்கள்.  நிகாராகுவா போகலாம்.  கவிஞன் ரிகபர்த்தோ லோபஸ் பெரஸ் பிறந்த நாடு.   அல்லது ஒன்று செய்யலாம். கரீபியத் தீவுகளான கூபா, எய்த்தி, தொமினிகன் ரிபப்ளிக், புவெர்த்தோ ரீக்கோ ஆகிய தீவுகளில் ஏதாவது ஒன்றுக்குப் போகலாம்.  இது எல்லாவற்றுக்குமே போக வேண்டும்.  அத்தனை கதைகள் இருக்கின்றன.  ஆனால் கால அவகாசத்தையும் செலவையும் கருத்தில் கொண்டு இதில் ஏதாவது ஒரு தீவுக்கு அல்லது நிகாராகுவாவுக்கு ஒரு வாரம் போகலாம்.  அக்டோபரில் இதற்குத் தயாராக இருக்கும் ஒரு நண்பர் எனக்கு எழுதவும்.  என்னோடு வரும் நண்பருக்கு ஒரே ஒரு நிபந்தனை.  எனக்கு எல்லா விதமான ஆலோசனைகளும் தரலாம்.  வரவேற்கிறேன்.  ஆனால் நான் ஒன்று சொன்னால் அதற்கு எதிராக ஒன்று சொல்லி என்னைக் குழப்பி விட்டு விடக் கூடாது.  என்னிடம் ஒரு பலஹீனம் உள்ளது.  அதைக் கருதியே இந்த நிபந்தனை.  லீமாவிலிருந்து குஸ்கோவுக்கு விமானம் ஏறும்போது லீமா விமான நிலையத்தில் sarojchi pills பாக்கெட் கிடைத்தது.  உயரத்தில் மூச்சு விட முடியாமல் போவதைத் (high altitude sickness) தடுக்கும் மருந்து. இதைப் பற்றி நான் சென்னையிலேயே படித்திருந்தேன்.  பெரூவின் தாக்னாவில் வசிக்கும் நண்பர் கிருஷ்ண ராஜும் இது பற்றிச் சொல்லியிருந்தார்.  அந்த மருந்தை வாங்க நினைத்த போது அதன் விலையை இந்திய ரூபாயோடு கணக்கிட்டுப் பார்த்த என் பயண நண்பர் ரவி ஷங்கர் 2000 ரூபாய்க்கு ஏன் இதை இப்போது வாங்க வேண்டும்;  குஸ்கோவில் கிடைக்கும்; அங்கே போய் வாங்கிக் கொள்ளலாமே என்று ஆலோசனை கூறினார்.  ஏற்கனவே நான் இம்மாதிரி ஆலோசனைகள் பற்றி நிறைய எழுதி பல பேரின் வெறுப்பைச் சம்பாதித்திருக்கிறேன்.  ஆனால் என்னுடைய பலஹீனம் உடனே இதைக் கேட்டு விடுவேன்.  வாங்கவில்லை.  அவர் சொல்வது சரிதானே, குஸ்கோவில் போய் வாங்கிக் கொள்ளலாமே என்று நினைத்தேன்.  சரி, குஸ்கோவில் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று ஒரு மின்னல் கீற்று ஓடியது.  ம்ஹும்.  அடுத்தவர் பேச்சைக் கேட்கும் பலஹீனமே வென்றது.  வாங்காமல் குஸ்கோ போனோம்.  குஸ்கோவில் sarojchi pills கிடைக்கவில்லை. அம்பேல். நண்பருக்கு குஸ்கோவின் 12000 அடி ஒத்துக் கொண்டது.  எனக்கு மூச்சு விட முடியாமல் போனது.  நான் திட்டத்தை மாற்றிக் கொண்டு சீலே புறப்பட்டு விட்டேன்.  கூடுதல் செலவு நாலு லட்சம்.  தவறு என்னுடையதுதான்.  ரவி ஷங்கருடையது அல்ல.  அவர் கூட இருந்த இரண்டு வாரமும் மிகவும் ஒத்தாசையாகவே இருந்தது.  ஆனால் அவர் சொன்ன ஆலோசனைகளைக் கேட்டதால் இப்படி ஆனது.  அதேபோல் சென்னைக்குத் திரும்பும் போது சந்த்தியாகோ விமான நிலையத்தில் பிஸ்கோ என்ற மதுவை வாங்க முனைந்தேன்.  பிஸ்கோ பெரூவிலும் சீலேவிலும் அருந்துகிறார்கள்.  நான் அருந்துவதில்லை எனினும் என் நண்பருக்காக வாங்க நினைத்தேன்.  சாவோ பாவ்லோ விமான நிலையத்தில் வாங்கிக் கொள்ளலாமே, இங்கேயே வாங்கி ஏன் தூக்கிச் செல்ல வேண்டும் என்று ஆலோசனை சொன்னார் ரவி ஷங்கர்.  நான் தான் ஆலோசனையை உடனே கேட்டு விடுவேனே, உடனே வாங்குவதை நிறுத்தி விட்டேன்.  சாவோ பாவ்லோவில் பார்த்தால் பிஸ்கோ கிடைக்கவில்லை.  வேறு எங்குமே பிஸ்கோ கிடைக்கவில்லை.  அவ்வளவுதான்.  தோஹா விமான நிலையத்தில் ஏதோ ஒரு பாட்டிலை வாங்கிக் கொண்டேன்.  தோஹாவில் சாய்ஸே இல்லை.  இனி எப்போதுமே பிஸ்கோ வாங்க சாத்தியம் இல்லை.  இதுவரை நான் எந்த விமான நிலையத்திலும் பிஸ்கோ பார்த்ததில்லை. 

ஆனால் பொலிவியா போகாததும் நல்லதுக்குத்தான்.  போயிருந்தால் சீலேவில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் கிடைத்தே இராது.  கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அனுபவங்கள் அவை.   

எனவே என்னோடு நிகாராகுவா அல்லது ஏதாவது ஒரு கரீபியத் தீவுக்கு வர விரும்பும் நண்பர்கள் மேற்கண்டபடி ஆலோசனைகள் சொல்லக் கூடாது.  ஆலோசனை கூட சொல்லலாம்.  நான் எடுக்கும் முடிவுக்கு எதிர் முடிவு சொல்லவே கூடாது.  ஏனென்றால் நான் அந்தப் பேச்சைக் கேட்டு கெட்டுப் போய் விடுவேன்.  என் பிரச்சினைகள் பற்றி, என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது இல்லையா?  எனவே நல்லதுக்காக நீங்கள் சொல்லும் ஆலோசனை எனக்குக் கெடுதலாக முடியும்.  இப்படி அடிக்கடி ஸ்ரீராமின் ஆலோசனையைக் கேட்டு வம்பில் மாட்டிக் கொள்வேன்.  கர்ச்சீஃப் வாங்க எக்ஸ்பிரஸ் அவென்யூ சென்றேன்.  கூடவே ஸ்ரீராம்.  நான் வெள்ளை நிற கர்ச்சீஃப் மட்டுமே வாங்குவேன்.  ஸ்ரீராமோ வெளிர்நீல கர்ச்சீஃப் வாங்கச் சொன்னார்.  ஏதோ காரணத்தால் நாம் இந்த வெளிர்நீல கர்ச்சீஃபை வாங்க மாட்டோமே என்று யோசித்தேன்.  ஞாபகம் வரவில்லை.  சரி, ஸ்ரீராம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று வாங்கி விட்டேன்.  ஆறு கர்ச்சீஃப்.  வீட்டுக்கு வந்து பார்த்தால் துண்டு சைஸில் இருக்கிறது.  ஆஹா, இதனால்தான் இதை வாங்காமல் இருந்தோம் என்று ஞாபகம் வந்தது.  உடனே மீண்டும் எக்ஸ்பிரஸ் அவென்யூ போய் (இந்த முறை ராஜேஷோடு) கோபத்தோடு பனிரண்டு வெள்ளை கர்ச்சீஃப் வாங்கி வந்தேன்.  எப்போதும் வாங்கும் சிறிய, அளவான சைஸ்.   

இதையெல்லாம் நாவலுக்கான சமாச்சாரமாக சேகரம் செய்திருந்தேன்.  இப்போது அனாவசியமாக கட்டுரையில் செலவழிக்க வேண்டியிருக்கிறது.  ஒருநாள் நானும் ஸ்ரீராமும் மவுண்ட் ரோடு புகாரிக்குப் போயிருந்தோம்.  அங்கே ஏசி பகுதியும் உள்ளது.  ஆனால் அது தனியாக இருக்கும்.  அங்கே நான் ஒரு தடவை கூடப் போனதில்லை.  ஏசி இல்லாத பொது இடமே நன்கு காற்றோட்டமாக இருக்கும்.  எப்போதுமே சாப்பாட்டு விஷயத்தில் நான் சோதனைகளில் இறங்குவதில்லை.  ஸ்ரீராம் ஏசி பகுதிக்குப் போகலாம் என்றார்.  நல்ல அக்னி நட்சத்திர காலம்.  நான் “வேண்டாம்; இங்கே உள்ள பொதுப் பகுதியே நல்ல காற்றோட்டமாக இருக்கும்” என்றேன்.  ஸ்ரீராம், ”வேண்டாம் சாரு, கடும் வெயிலாக இருக்கிறது.  ஏசிக்கே போய் விடுவோம்” என்றார்.  முடிந்தது கதை.  நான் புகாரிக்குப் போவதே அந்தத் தேநீருக்காகத்தான்.  ஏசி செக்‌ஷனில் தேநீர் இல்லை. 

அப்போது நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.  எதுவாக இருந்தாலும் ஸ்ரீராமைக் கூப்பிட்டு நானே ஆலோசனை கேட்பேன்.  ஆர்வத்துடன் சொல்வார்.  அதைப் பற்றி அவந்திகாவிடமும் கேட்பேன்.  ஸ்ரீராம் சொன்னார் என்று சொல்ல மாட்டேன்.  சாதாரணமாகக் கேட்பேன்.  அச்சு அசலாக ஸ்ரீராம் சொன்னதையே சொல்வாள்.  நான் அதற்கு நேர் எதிராகச் செய்வேன்.  செம சக்ஸஸாக நடக்கும்.  பல முறை இதை நான் சோதனை செய்து விட்டேன்.  ஆனாலும் இதெல்லாம் படு கவனமாக நானே செய்யும் சோதனை முயற்சிகள்.  அவராகவே ஆலோசனை சொன்னால் அது கெரில்லாத் தாக்குதல்.  அதையெல்லாம் என்னால் சமாளிக்க முடியாது.  ரவி ஷங்கர் சொன்ன ஆலோசனைகள் அந்த ரகம்தான்.  பிஸ்கோவாவது போகிறது.  அந்த ஹை ஆல்டிட்யூட் மருந்து ஆலோசனை தீவிரவாதித் தாக்குதல் போன்றது.  எனவே என்னோடு வரப் போகிற நண்பருக்குச் சொல்கிறேன்.  இந்த ஒரே ஒரு நிபந்தனைதான்.  ஆலோசனை சொல்லாதீர்கள்.  அதற்கென்று நான் செய்வது படு முட்டாள்தனமான வேலை என்று தெரிந்தும் ‘அனுபவிக்கட்டும், அவர்தானே சொன்னார், ஆலோசனை சொல்லாதே என்று’ என்று கம்மென்று இருந்து விடாதீர்கள்.  திரும்பவும் சொல்கிறேன்.  ஆலோசனை சொல்வதில் தப்பு இல்லை.  ஆனால் என்னைப் பற்றி மிக நன்றாகத் தெரிந்த நான் ஒரு முடிவு செய்து அதை நடைமுறைப்படுத்த முனையும் போது குறுக்கே புகுந்து அதற்கு எதிர்க் கருத்தைச் சொல்லி என் மனதைக் குழப்பாதீர்கள்.  ”இவ்வளவெல்லாம் தெரிகிறது அல்லவா?  ஏன் மற்றவர் பேச்சைக் கேட்கிறீர்?” என்கிறீர்களா?  அதுதான் என் பலஹீனம்.  பேச்சைக் கேட்டு கெட்டு இதுபோல் வியாசம் வரைந்து கொண்டிருப்பேன். 

இவ்வளவு பயமுறுத்திய பிறகு யாரும் வர மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.  ஆனால் அஸ்வினி போன்ற நண்பர்கள் வரலாம்.  அவர்கள் நீண்ட காலம் என்னை அறிந்தவர்கள்.  அப்படியே நீங்கள் ஆலோசனை சொல்லி, நான் அதைக் கேட்டு, கெட்டு இப்படி வியாசம் வரைந்தால்தான் என்ன?  கவலை வேண்டாம். 

அடுத்தபடியாக, அமெரிக்காவிலும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும்.  எனக்கு எழுதுங்கள்.  ஒரு டாலர் கூட செலவழிக்க மாட்டேன் என்பவர்கள் தோஹா நண்பர்களைப் போல் சும்மா இருந்து விடுங்கள்.  வம்பே வேண்டாம்.  என் எழுத்தோடு நெருக்கமானவர்களோடு மட்டுமே நான் இந்தப் பயணம் பற்றி உரையாடுகிறேன்.  அராத்துவும் இது பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.  மலேஷியாவில் அவரைப் பார்க்க வேண்டும் என்று பல நண்பர்கள் சொல்வார்களாம்.  திட்டமிடுங்கள் என்று சொன்னால் பதிலே இருக்காது.  இவர் தன் வேலையாக மலேஷியா போகும் போது அறை எடுத்துத் தங்கிக் கொண்டு, பார்க்க வேண்டும் என்று சொன்ன நண்பர்களுக்கு போன் போட்டால் இதோ வந்து விடுகிறேன் தல, மனைவிக்கு முதுகு வலி, டாக்டரிடம் போய்க் கொண்டிருக்கிறேன், இல்லாவிட்டால் குழந்தைக்கு ஜலதோஷம், டாக்டரிடம் காண்பித்து விட்டு வந்து விடுகிறேன் தல என்றெல்லாம் சொல்லி விட்டு இரவு பத்து மணிக்கு வந்து இவரிடமிருந்து கொஞ்சம் பியரை வாங்கிக் குடித்து விட்டு, இவரிடமே ரெண்டு சிகரெட்டும் வாங்கி ஊதி விட்டுப் போய் விடுவார்களாம்.   அப்படியெல்லாம் என்னை டார்ச்சர் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.  திரும்பத் திரும்ப சொல்கிறேன்.  புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.  என் எழுத்து காற்று மாதிரி.  காற்றை சுவாசிக்க காற்றுக்கு என்ன காசா கொடுக்கிறோம்?  ஆனால் என்னோடு நட்பு பாராட்ட வேண்டும் என்றால், கொஞ்சமாக commit ஆகுங்கள் என்கிறேன்.  கமிட் ஆக விருப்பம் இல்லையெனில் என்னை என் பாட்டுக்கு விட்டு விடுங்கள்.  அவ்வளவுதான்.  இதில் புரிந்து கொள்ள கடினமான விஷயம் என்ன இருக்கிறது?  இதை ஏன் திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால், நான் சொல்வதைப் புரிந்து கொள்ளவே முயற்சிக்காமல் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  உதாரணமாக, ஒரு நண்பர் திரும்பத் திரும்ப எனக்கு வாட்ஸப்பில் மெஸேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார்.  நான் ஒரு வாட்ஸப் அடிக்ட் என்பதால் நானும் தொடர்ந்து பதில் அனுப்பிக் கொண்டே இருந்தேன்.  இப்படியே இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தன.  சும்மா அல்ல சாமி.  இரண்டு ஆண்டுகள்.  அமெரிக்கவாசி.  இடையில் சென்னை வருகிறேன், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.  25 ஆண்டுகளாக இந்தக் கேள்வியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ஐயப்பன் சாமிகளா!  கேள்வி வரும்… எனக்கு பதில் தெரியாது.  எனக்கு என்ன வேண்டும்?  நான் ஒரு பயணி.  பயணம் செய்யப் பணம் வேண்டும்.  இதை எப்படிச் சொல்வது?  அமெரிக்காவில் ஏது பணம்?  அமெரிக்க வாழ் தமிழர்கள் எல்லாம் இலவசமாக அல்லவா உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்?  எனக்கு பதில் சொல்லத் தெரியாது.  உங்களுக்குப் பிடித்ததை வாங்கி வாருங்கள் என்று ஏதோ ஒரு பதிலைச் சொல்லி வைப்பேன்.  நூற்றுக்குத் தொண்ணூறு பேர் வந்து பார்க்க மாட்டார்கள்.  இங்கே வந்ததும் அவர்களுக்கு உடம்புக்கு வந்து விடும்.  இந்தியா ஒரு காட்டுமிராண்டி தேசம் அல்லவா?  அதனால் உடம்புக்கு வந்து விடும்.  எனக்கே பாருங்கள்.  சீலேயிலும் பெரூவிலும் தினமும் பத்து கிலோ மீட்டர் நடந்தாக வேண்டியிருந்தது.  எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடந்தேன்.  உணவு மட்டுமே பிரச்சினையாக இருந்தது.  இந்தியா திரும்பியதும் இன்று என்னால் நாகேஸ்வர ராவ் பூங்காவில் அரை கிலோமீட்டர் கூட நடக்க முடியவில்லை.  நடந்தால் வலி.  ஆஞ்ஜைனா.  இங்கே காற்றைக் கூட விஷமாக்கி வைத்திருக்கிறார்கள்.  இப்போது அந்த அமெரிக்கவாசியின் கதைக்கு வருவோம்.  சென்னை வருகிறேன்.  என்ன வேண்டும்?  25 ஆண்டுகளாகக் கேட்டுச் சலித்த கேள்வி.  அவர் வருவார்.  உடம்புக்கு வரும்.  என்னைச் சந்திக்காமலேயே திரும்பி விடுவார்.  அவருக்கு இல்லையானால் அவர் குழந்தைக்கு வரும்.  அதுதான் நடைமுறை.  நண்பரும் வந்தார்.  வந்ததும் எல்லா அமெரிக்கவாசிகளையும் போலவே ”சென்னை வந்து விட்டேன்; எப்போது பார்க்கலாம்.  எங்கே பார்க்கலாம்?” என்று மெஸேஜ் வந்தது.  நான் பதிலுக்கு “call me” என்று அனுப்பினேன்.  பதிலே இல்லை.  அழைப்பும் இல்லை.  பதினைந்து நாள் கடந்தது.  நானும் மறந்து போனேன்.  பிறகு அவரிடமிருந்து ஒரு மெஸேஜ்.  ”எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது.  இன்று மாலை அமெரிக்கா திரும்புகிறேன்.”  நான் பதிலே அனுப்பவில்லை.  ஒரு வாரம் கழித்து அமெரிக்கா போய்ச் சேர்ந்து அன்பரிடமிருந்து ஒரு மெஸேஜ்.  பிடித்த பாடலின் லிங்க், இப்படி, இப்படி.  நான் பதிலுக்கு “உங்களிடமிருந்து சாரு ஆன்லைனுக்கு சந்தாவே வரவில்லையே?  அனுப்ப முடியுமா?” என்று அனுப்பினேன்.  அன்பரிடமிருந்து பதிலே இல்லை.  நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.  அன்பரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.  இப்படியேதான் 25 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

ஒரு அன்பர்.  ”நான் இந்த ஊர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருக்கிறேன்.  நீங்கள் இங்கே வரும் போது தமிழ்ச் சங்கத்தில் பேசுங்கள்.  வீட்டுக்கும் வாருங்கள்.”  போனிலேயே அழைத்தார்.  அவர் ஊர்ப் பக்கமே போகக் கூடாது என்று இருக்கிறேன்.  என் நண்பரின் காசில் நான்கு லட்சம் ரூபாய் செலவு செய்து அமெரிக்கா போவேன்.  இவர் நோகாமல் நோன்பு கும்பிடுவார்.  இவர் வீட்டுக்குப் போய் சாப்பிட வேண்டும்.  தமிழ்ச் சங்கத்தில் பேச வேண்டும்.  இலவசமாக.  எப்படி இருக்கிறது பாருங்கள்!  நான் இத்தனை எழுதியும் அதைப் படிக்காமல் அல்லது படித்தும் சொரணை இல்லாமல் இப்படிக் கேட்கிறார்கள்.  இத்தனைக்கும் இது சென்ற மாதம் நடந்த உரையாடல். 

இது பற்றி அராத்துவிடம் புலம்பிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்.  இதுவே யோகி பாபு (ஆமாம், அவர் யார்?) தோஹா போயிருந்தால் ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு, லிமோசின் காரில் ஊர் சுற்றிக் காண்பித்து, கிளம்பும் போது அவரோடு போட்டோ எடுத்துக் கொண்டு அவர் கையில் பத்து லட்சத்தைக் கொடுத்து அனுப்புவார்கள்.  ஆனால் யோகி பாபு என்பவரால் அவர்களது வாழ்வில் எந்த ஒரு நன்மையும் விளைந்திராது.  எழுத்தாளன் என்றால் காசு கேட்கிறான் என்று சொல்லி வந்தே பார்க்கவில்லை.  அராத்து சொன்னார்.  இதேதான் அமெரிக்காவிலும் நடக்கிறது.  தமிழ்ச் சங்கத்தில் பேசத் தயாராக இருக்கிறேன் – எனக்கு 1000 டாலர் சன்மானம் கொடுத்தால்…   

***

  

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai