காஷ்மீர் (2)

”இந்த சட்ட நீக்கத்தைஅறிமுகப்படுத்தும் முன் காஷ்மீரில் மிகப் பெரிய எண்ணிக்கையில் ராணுவத்தை அனுப்பி, 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, தலைவர்களை வீட்டுக்காவலில்  வைத்து, இணையத்தொடர்பை துண்டிக்கிறது மைய அரசு.  அதற்கான அவசியம்தான் என்ன? ஒரு சட்ட திருத்தத்தை மக்கள் ஏற்காவிடில் அதற்கு எதிராக போராடும் உரிமை அவர்களுக்கு இல்லையா? அவர்கள் போராடுவார்கள் என முன்கூட்டியே  அறிந்து ஒரு மாநிலத்தின் மீது “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தொடுப்பது சர்வாதிகாரத்தின்  உச்சம் அல்லவா!”

அபிலாஷ் எழுதியிருந்த பத்தி இது.  உள்துறை அமைச்சகத்திலிருந்து இந்த முன்னேற்பாடுகளைச் செய்திருக்காவிட்டால் இந்நேரம் காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கும்.  அதை அனுமதிக்கும் அளவுக்கு அத்தனை முட்டாள்தனமான அரசாங்கமா இது?  இந்த நடவடிக்கையில் எந்த சர்வாதிகாரமும் எனக்குத் தெரியவில்லை.  மேலும், காஷ்மீரிகளிடம் இப்போது ”உங்கள் விருப்பம் என்ன?” என்று கேட்டு வாக்கெடுப்பு (Plebescite) நடத்தினால் ”தனிநாடாகப் பிரிந்து கொள்கிறோம்” என்றே சொல்வார்கள்.  ஏனென்றால், அவர்கள் அனைவரும் தீவிரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  ஆக, அந்த மக்களின் விருப்பப்படியே காஷ்மீரை நீங்களே ஆண்டு கொள்ளுங்கள் என்று கொடுத்து விட்டால் காஷ்மீர் தீவிரவாதிகளின் செயல்கேந்திரமாக மாறி விடும்.  தலையைத் துணியால் மூடாவிட்டால் பெண்களை நடுத்தெருவில் வைத்து கழுத்தை வெட்டுவார்கள்.  பெண்கள் படித்தால் முகத்தில் அமிலத்தை வீசுவார்கள்.  ஒரு காட்டுமிராண்டித்தனமான, மத்திய காலகட்ட பூமியாக – அல்லது, தாலிபான்களின் ஆஃப்கனிஸ்தானாக காஷ்மீர் மாறும்.  எங்கேயோ குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கொண்டு எழுதிவிடுவார்கள் எழுத்தாளர்கள்.  அவர்களுக்கு காஷ்மீரின் உண்மை நிலவரம் தெரியாது.  மேலும், நாளை என்ன ஆனால் என்ன அவர்களுக்கு?  யாருடைய தலை வெட்டப்பட்டு உருண்டால் அவர்களுக்கு என்ன?

அப்படி வாக்கெடுப்பு நடத்தினால் முதலில் தமிழ்நாடே தனியாகப் பிரிந்து கொள்கிறோம் என்றுதான் சொல்வார்கள்.  தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் என்ன ஆகும்?  சீமான் தான் முதல்வர்.  அடுத்து, கர்னாடகா தனியாகப் பிரிவேன் என்பார்கள்.  இப்படி ஒவ்வொரு மாநிலமும் பிரியும்.  வாஸ்தவத்தில் சிறு சிறு மாநிலங்களாகப் பிரிவதை எழுத்தாளர்கள்தான் வரவேற்று எழுத வேண்டும்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களே இதை எதிர்க்கிறார்கள்.  மேலும், பிற மாநில முஸ்லீம் பெருமக்கள் மோடியின் இந்த முடிவை ஆதரித்துத்தான் எழுத வேண்டும்.  ஏனென்றால், இந்த முடிவு காஷ்மீர் மக்களுக்கு நன்மையையே செய்யும்.  அவர்களும் மற்ற மாநிலத்தவரைப் போல் கல்வியிலும் தொழிலிலும் முக்கியமாக சுற்றுலாவிலும் முன்னேறி நல்வாழ்க்கையை எய்த மோடி அரசின் இந்த முடிவு வழி வகுக்கும்.