அய்யனார் விஸ்வநாத் – சாரு நிவேதிதா உரையாடல்

அய்யனார் விஸ்வநாத்துடனான உரையாடல் புதிதாக வேறொரு திசையில் திரும்பியிருக்கிறது. இந்த முறை அய்யனார் கேட்ட கேள்விக்கு நான் பதில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் பதிலின் ஆரம்பம். இன்னும் எழுத நிறைய உள்ளது. சந்நதம் வந்தது போல் தட்டச்சு செய்தேன். எவ்வளவு நேரத்தில் அடித்தேன் என்று தெரியவில்லை. படு வேகத்தில் அடித்தேன். கை நரம்பெல்லாம் நடுங்கி விட்டது. இதைத் தனியாக ஒரு புத்தகமாகவே கொண்டு வந்து விடலாம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

அய்யனார் விஸ்வநாத்:

தமிழ் இலக்கியச் சூழலில் எது இலக்கியம், எது இலக்கியமில்லை என்ற விவாதம் – நவீன இலக்கிய சிந்தனைப் போக்கு துவங்கிய காலத்திலிருந்து ஆரம்பித்திருக்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த விவாதம் மேலெழும்போது என் மதிப்பீடுகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு வணிக இலக்கியம்தான் தமிழ்ச் சூழல் சீரழியக் காரணம் என கோபம் கொப்பளிக்க வெகுண்டெழுந்து எழுத்தில் சீறி அனைவரின் வெறுப்பையும் பெற்றுக் கொண்டவனாக இருந்திருக்கிறேன். அதே விவாதம் அமேசான் போட்டியை ஒட்டி இப்போது மேலெழும்போது என்னால் கோபப்பட முடியவில்லை. தரமற்ற படைப்புகள் குறித்தான புகார்களோ, ஆத்திரமோ, எரிச்சலோ இப்போது எனக்கு இல்லை. தீவிர இலக்கியத்தைப் போலவே வணிக இலக்கியத்துக்கான இடமும் உள்ளது. துரதிர்ஷடவசமாக தமிழில் தீவிர இலக்கியத்துக்கான இடம் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு அல்லது இடமே இல்லை என்றும் கூட சொல்லிவிடலாம். இதற்காக ஆத்திரப்படுவதில் என்ன பிரயோசனம் இருக்கிறது என்கிற நிதானம் வந்து சேர்ந்திருக்கிறது. இலக்கிய எழுத்து என ஒரு தரப்பால் முன் வைக்கப்படும் அல்லது வியந்தோந்தப்படும் பல படைப்புகள் என் வாசிப்பில் மலினமானவை. வெறும் ஜிகினா பூசியவை. அந்த படைப்புகளில் இருக்கும் பதினைந்து சொற்களைக் களைந்து விட்டால் வணிக இலக்கியத்தில் வைத்துப் பேசக்கூடத் தகுதி இல்லாதவை. தமிழ்ச் சூழலில், குறிப்பாய் தமிழின் தீவிர இலக்கியச் சூழலில் நிலவும் சாதிய மற்றும் குழு மனப்பான்மை அடிப்படையில்தான் இந்தப் படைப்புகள் என்று சொல்லப்படும் அபத்தங்கள் முன் நிறுத்தப்படுகின்றன. மாறாய் வணிக இலக்கியத்திற்கு இந்தச் சிக்கல் கிடையாது. நேரம் போக வேண்டும் என்பதைத் தாண்டி அவற்றிற்குப் பெரிய கடமைகள் எதுவும் இல்லை. எனவே சில வணிக இலக்கியங்கள் எனச் சொல்லப்படும் ஆக்கங்கள் அதன் சுதந்திரத் தன்மையால் அசல் படைப்புகளாக மிளிர்கின்றன.

இனி என் கேள்வி, நீங்கள் இந்த இருமையை எப்படிப் பார்க்கிறீர்கள். எது இலக்கியம் எது இலக்கியமில்லை மற்றும் இதையெல்லாம் தீர்மானிப்பது யார்? இலக்கியப் படைப்பு என்பதற்கான அடிப்படை அளவுகோல் என்ன? பல வருடங்களாகத் தொடரும் இந்த விவாதம் எந்தத் திசையை நோக்கி நகர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். ஆரோக்கியமான எழுத்துச் சூழல் என்கிற ஒன்று உண்மையிலே இருக்கிறதா?

சாரு நிவேதிதா:

உங்கள் கேள்வியின் அடிப்படையோடு நான் முரண்படுகிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது அய்யனார்.   வணிக எழுத்து ஒரு சமூகத்துக்குத் தேவைதான். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.  இருக்கவும் கூடாது.  சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் எப்போதும் ப. சிங்காரத்தையும் நகுலனையும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சர்வாதிகார மனப்போக்கு.  மானுட சுதந்திரத்துக்காக எழுத வருபவர்கள் எப்படி சர்வாதிகார மனப்போக்குடன் நடந்து கொள்ள முடியும்?  அது சாத்தியமில்லை.  இங்கே பட்டுக்கோட்டை பிரபாகருக்கும் தேவை இருக்கிறது.  பால குமாரன், சுஜாதா போன்றவர்களுக்கும் தேவை இருக்கிறது.  நகுலன், அசோகமித்திரனுக்கும் தேவை இருக்கிறது.  ஆனால் தமிழ் இலக்கியச் சூழல் – கலாச்சார சூழல் என்று ஒட்டு மொத்தமாகச் சொன்னாலும் சரியே – சீரழிந்து போனதற்கு மிக முக்கியமான காரணம், தமிழ் வணிகப் பத்திரிகைகள்தான்.  இது பற்றி நான் பல சந்தர்ப்பங்களில் விரிவாகவே எழுதியிருக்கிறேன். 

உ.வே.சாமிநாதய்யர் எழுதிய என் சரித்திரம் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் வாராவாரம் தொடராக வந்தது என்று சொன்னால் இப்போது யாராவது நம்புவார்களா?  ஆனால் அப்படிப்பட்ட காலத்திலும் புதுமைப்பித்தன் போன்றவர்கள் வணிகப் பத்திரிகைகளால் தீண்டத் தகாதவர்களைப் போல் நடத்தப்பட்டிருக்கிறார்கள்.  புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.  நம்பர் எழுதப்பட்ட சிலேட்டை மார்பின் முன்னே தன் இரண்டு கைகளாலும் பிடித்தபடி தி.ஜ. ரங்கநாதன் தன் குடும்பத்தோடு நிற்கும் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?  அப்புகைப்படத்தின் ஸ்டாம்ப் சைஸ் நகலை நீங்கள் பழுப்பு நிறப் பக்கங்கள் நூலில் காணலாம்.  அந்தக் காலத்தில் ஹிட்லரின் வதைமுகாம்களுக்கு அனுப்பப்படும் முன் தங்கள் குறிப்பேடுகளுக்காக கோடு போட்ட சட்டை போட்ட  யூதர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்புவார்கள்.  அந்தப் புகைப்படங்களைத்தான் தி.ஜ.ர.வின் புகைப்படம் எனக்கு ஞாபகப்படுத்தியது.  இந்த அவலத்துக்கு ஒரே காரணம், அப்போது இருந்த வணிகப் பத்திரிகைகள்தான்.  மிகக் கறாராக, கல்கியும் அவரை ஒத்த மேட்டுக்குடி பிராமண புத்திஜீவிகளும் இலக்கியவாதிகளுக்கு எதிராக செயல்பட்டார்கள்.  அதில் முக்கியமானவர் ராஜாஜி. அவருக்கு இலக்கியவாதிகள் என்றாலே கசப்பு.  பின்னே என்ன அய்யனார்?  அம்மா வந்தாள் நாவலில் தி. ஜானகிராமன் என்ன எழுதினார்?  வேதாந்த உபந்யாசம் செய்யும் தண்டபாணி அய்யர்.  உயர்நீதிமன்ற நீதிபதிக்கெல்லாம் வேதம் கற்பிக்கிறார்.  அப்பேர்ப்பட்டவரின் மனைவி (அம்மா வந்தாள் நாவலின் ‘அம்மா’) சிவசுவோடு உறவு வைத்துக் கொண்டு அவனுக்கு ஒரு குழந்தையும் பெற்று தனது மற்ற பிள்ளைகளோடு ஒரு பிள்ளையாக வளர்க்கிறாள்.  சிவசுவும் தண்டபாணியின் வீட்டுக்குத் தொடர்ந்து வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்.  இந்த நாவலின் இரண்டு இடங்கள் பிராமண சமூகத்தின் போலி மதிப்பீடுகளைத் தூக்கிப் போட்டு அடித்துக் கிழிப்பவை. 

அந்த இரண்டு இடங்களும் இதுதான்:

பொழுது விடிந்து சூரியோதயமாகி விட்டது.  மாடிப்படி இறங்கியதுமே தண்டபாணியின் முகம் சிணுங்கிற்று.  ஊஞ்சல் பலகைக்குப் பக்கத்தில் ஒரு பாயில் கட்டம் போட்ட கருப்புப் போர்வையால், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை மறைத்து ஒரு உருவம் படுத்திருந்ததைக் கண்டுதான் அந்தச் சிணுக்கம். கடைசிப் பையன் பல் தேய்த்து விட்டு முற்றத்திலிருந்து தாழ்வாரத்துக்கு ஏறி, மாடத்து மடலிலிருந்து விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டான். அதனால் படுத்திருப்பது மூன்றாவது பையன் கோபுவாகத்தான் இருக்க வேண்டும். ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த காவேரி, தகப்பனார் இறங்கி வருவதைப் பார்த்து எழுந்தாள்.  “எழுந்திரேன், அண்ணா, மணி ஏழரையாயிடுத்து!” என்று அவர் முகத்தைப் பார்த்து விட்டுக் கத்தினாள். 

பிறகு காவேரி அவரிடம் பரிவுடன் தலை வலிக்கிறதா என்று கேட்கிறாள்.  அந்தப் பரிவைக் கண்டு, வெயில் புறப்பட்டும் தூங்கும் ‘மூதேவி’யைக் கண்ட சிணுக்கம் கூட மறைந்து விடுகிறது தண்டபாணிக்கு. 

“அதெல்லாம் ஒன்றும் இல்லேம்மா.  என்னமோ ராத்திரி ரொம்ப நாழியாயிடுத்து தூங்க.  ஏமாந்து போயிட்டேன்.  கண்ணைத் திறந்தா விடிஞ்சு கிடக்கு.”

“அப்படின்னா நாலு மணி, அஞ்சு மணிக்குத்தான் தூங்கியிருப்பேள்.  நீங்க இத்தனை நாழி கழிச்சு எழுந்துண்டதில்லையேப்பா… அண்ணா, அண்ணா, எழுந்திரேன்,” என்று மீண்டும் கத்தினாள் காவேரி.

“அவர் ஆறு மணிக்குத்தான் தூங்க ஆரமிச்சாரோ என்னமோ! அவரை ஏண்டி எழுப்பறே?” என்று அவர் பல்பொடியை எடுத்தார். 

பின்னணி புரிந்திருக்கும்.  தண்டபாணி.  திருமணமான மகன்,  மருமகள்.  மகள்.  மூன்றாவது மகன் கோபி.  இப்போது கோபி பற்றிய வர்ணனை:

கீழே படுத்திருந்த உருவம் போர்வையை விலக்கி முகத்தைக் காட்டிற்று. ஒரு சோம்பல் முறித்து விட்டு எழுந்தது.  அது பெரிய உருவம்.  தலையில் கட்டை மயிர்க் கிராப்பு.  லேசாக ஒன்றரைக் கண்.  ஒரு கண் சற்றுச் சிறுத்து இடுங்கினாற் போல் இருக்கும்.  பெரிய முறுக்கு மீசை.  மார்பெல்லாம் பொசபொசவென்று மயிர்.  இடையில் ஒரு லுங்கி.    

இனி என் வார்த்தைகளில் சொல்கிறேன்.  ஒரு பிராமண குடும்பத்தில் இப்படி ஒரு பையன்.  இந்த உருவத்தைப் பார்க்கும் போது தண்டபாணிக்கு ஒரு செம்மறி ஆட்டைப் போல் தோன்றுகிறது.  மிகவும் எரிச்சலுடன் பல் தேய்க்கிறார்.  பல் தேய்க்கும் போதே அந்த லுங்கி உருவத்தைக் கடைக் கண்களால் பார்க்கிறார்.  அவனும் அப்பாவாக இருக்கிறாரே என்ற போலி மரியாதையுடன் உள்ளே எழுந்து தம்பி அறைக்குப் போகிறான்.  ஆக, எத்தனை குழந்தைகள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  இந்த லுங்கி உருவத்தைப் பார்க்க சகிக்காமல் குளிக்கப் போகும் தண்டபாணி நினைத்துப் பார்க்கிறார்:

“குளிக்கிறது நானில்லை.  என் உடம்பு குளிக்கிறது.  கால் விரல் அழுக்கெல்லாம் விரல் தேய்க்கிறது.  நானில்லை.  ‘நானு’க்கு அழுக்கும் கிடையாது.  குளியலும் கிடையாது.  இந்த உடம்பு நானில்லை.  அது பிரகிருதி.  இது வெறும் ஜடம், வியாதி,  கஷ்டம்,  பிடுங்கல்,  தொல்லை – எல்லாம் அதற்குத்தான்; எனக்கு இல்லை.  நான் ஒரு தொல்லையையும் வாங்க மாட்டேன்; ஏற்க மாட்டேன்.  நான் ஈசுவரனின் பிம்பம்; இல்லை, ஈசுவரனேதான்.  ஈசுவரனை எந்தக் கஷ்டம், எந்த ஏக்கம் வாட்ட முடியும்? ஏக்கம், துன்பம் எல்லாம் உடம்புக்கு அல்லவா?  நான் ஈசுவரன்.  ஸகஸ்ர நாமம் எனக்குத்தான் சொல்லிக் கொள்கிறேன்.  என் பெருமைதான் அது.”  இத்தனை தத்துவ விசாரமும் எதற்கு?  அந்த லுங்கி உருவத்தைப் பார்த்ததால் ஏற்பட்ட விசாரம்.  தண்டபாணிக்குக் குளியல் அறையை விட்டு வெளியே வரவே மனம் இல்லை.  வந்தால் அந்த லுங்கி உருவத்தைப் பார்க்க வேண்டுமே?  தத்துவ விசாரம் பக்கம் பக்கமாகப் போய்க் கொண்டே இருக்கிறது. 

அப்போது கூடத்திலிருந்து ஒரு புதுக்குரல் கேட்கிறது.  ஊட்டியிலேருந்து வரேன் மன்னி…  நேரே காரிலே வரேன்…”

இப்போது குளியல் அறையிலிருந்து தண்டபாணி:  சிவசுவின் குரல்தான் அது.  இன்னும் சிறிது நேரம் கழித்துப் போகலாம்.  ஆனால், குளியல் தீர்ந்து விட்டது.  விரல் அழுக்கைக் கூட எடுத்தாகி விட்டது.  எத்தனை நேரம்தான் குளிக்கிற உள்ளில் நிற்க முடியும்?  வேட்டியைப் பிழிந்து கொண்டு அரையில் ஈரத்துண்டுடன் கூடத்திற்கு வந்தார் தண்டபாணி.

சிவசு ஊஞ்சலில் உட்கார்ந்திருக்க அலங்காரம் அவன் எதிரே தூணோரமாக புடவையால் வலது தோளைப் போர்த்திக் கொண்டு நிற்கிறாள்.  நமஸ்காரம் அண்ணா என்று எழுந்து கொள்ளும் அவனை தண்டபாணி உட்காருங்கோ என்று நிமிர்ந்து பார்த்துச் சொல்கிறார். 

சிவசுவை சற்று நிமிர்ந்துதான் பார்க்க வேண்டும்.  அவன் அத்தனை உயரம்.  உடல் இரட்டை நாடியில்லை; ஒற்றை நாடியும் இல்லை.  மொழுமொழுவென்று பூசினாற்போலிருக்கும்.  இந்த வர்ணனை பக்கம் முழுதும் நீள்கிறது.  வயது நாற்பத்தெட்டு.  ஆனால் இருபத்தெட்டுதான் சொல்ல முடியும்.  “அப்படி ஒரு இளமை அவன் காலைச் சுற்றிச் சுற்றி அடிமையாகக் கிடந்தது.  அவனுடைய சொத்தில் பாதியோ காலோ உள்ளவர்கள், தின்றோ, மேலும் பணம் பணம் என்று பறந்தோ தங்கள் வயசோடு இன்னும் இருபது வயதைச் சேர்த்து, உடம்பிலும் தோலிலும் சுமந்து தள்ளாடியிருப்பார்கள்.  இவனையோ, உரிமையுள்ள வயது கூட அணுகக் கூசினாற்போலிருந்தது.  தஞ்சாவூரில் நூற்றைம்பது வேலிச் சொத்துக்காரனும் கூட. 

சிவசு இந்த வீட்டுக்கு வர ஆரம்பித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.  முதலில் தன் தங்கையின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஐயரிடம் வந்தான்.  பிறகு மறுநாள் வேறு சில ஜாதகங்களோடு வந்தான்.  மறுநாளும் வந்தான்.  அதற்கு மறுநாளும் வந்தான்.  இன்னும் நூறு ஜாதகங்களோடு வந்தான்.  அப்படித்தான் அவன் சிநேகம் ஆரம்பமாயிற்று.   இப்போது தண்டபாணி ஜபம் செய்யும் போதும் சிவசுவின் இந்தப் போக்குவரத்துதான் வந்தது.  அதை விரட்ட மேலும் மேலும் ஜபம் செய்கிறார்.  கோபுவின் குரல்.  சிவசு கோபு அணிந்திருக்கும் கைலியைப் பார்த்து “நீ மட்டும் குட்டையா ஒரு முழுக் கை தொள தொள சட்டையும், அகலமா ஒரு பெல்ட்டும் போட்டுண்டியோ, எங்க ஊர் ரஹ்மான் ராவுத்தர் சபுரு போய்ட்டு நாகப்பட்டிணத்திலே கப்பல்லெ இறங்கி வர்றாப்பலியே இருக்கும்.”

இரண்டாவது இடம்:  வேத பாடசாலைக்குப் போன அலங்காரத்தின் மூத்த மகன் அப்பு ————- ஆண்டுகளுக்குப் பிறகு தன் வீட்டுக்குத் திரும்புகிறான்.  ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கும் உருவத்தைப் பார்த்து “என்னடா கோபு, மீசையை எப்ப எடுத்தே?” என்று கேட்கிறான்.  மறுகணமே சற்றுக் குழம்பி உற்றுப் பார்க்கிறான்.  “சிவசு மாமாண்ணா!” என்கிறாள் காவேரி.

நான் சொல்ல வந்தது அவ்வளவுதான்.  என்னடா கோபு, மீசையை எப்ப எடுத்தே?  இப்படி எழுதிய ஒரு எழுத்தாளனை எப்படி ராஜாஜியோ கல்கியோ கொண்டாடியிருப்பார்கள்?  அதிலும் தான் பார்க்கின்ற அத்தனை ஆண்களோடும் படுக்க வேண்டும் என்று நினைத்து அதைச் செயல்படுத்தியும் காட்டிக் கொண்டிருந்த அம்மணி என்ற பெண்ணின் கதையான மரப்பசுவைப் பற்றி என்ன எழுத?  மேட்டுக்குடி பிராமண வர்க்கமே இப்படிப்பட்ட எழுத்தாளர்களைக் கரித்துக் கொட்டியிருக்காதா?  கு.ப.ராஜகோபாலனும் ஆண் பெண் உறவு பற்றித்தான் எழுதினார்.  கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் ஆண் ஆண் உறவு பற்றியது. 

ஆக, அந்தக் கால வணிகப் பத்திரிகைகள் அனைத்துமே இலக்கியவாதிகளுக்கு எதிராகவே இருந்தன.  அதனால்தான் – எழுதுவதற்கு “இடம்” வேண்டும் என்பதற்காகவேதான் சி.சு. செல்லப்பா எழுத்துவை ஆரம்பித்தார்.  மணிக்கொடி கதை வேறு.  அப்போது சுதந்திரப் போராட்ட காலம்.  ஆனால் சுதந்திரம் வந்த பிறகு, அத்தனை பிராமணர்களும் அப்போதைய எழுத்தாளர்களுக்கு எதிராக மாறினார்கள்.  அதே சமயம், திராவிடக் கட்சிகளும் ஒட்டு மொத்த பிராமணர்களுக்கு எதிராக எழுந்தார்கள்.  ஆக, அப்போதைய எழுத்தாளர் என்ன நினைத்திருப்பார்?  ஒரு பக்கம், தன்னுடைய பிராமண இனமே தன்னை வெறுத்து ஒதுக்குகிறது.  இன்னொரு பக்கம், திராவிட இயக்கம் தீயாய்ப் பரவுகிறது.  கணையாழி என்ற இலக்கியப் பத்திரிகை ஏன் தில்லியில் ஆரம்பிக்கப்பட்டது என்றால் இதுதான் காரணம்.  பெரும்பாலான பிராமண இளைஞர்களும் சுருக்கெழுத்தும் தட்டச்சும் கற்றுக் கொண்டு தில்லி பக்கம் போனார்கள்.  இந்திரா பார்த்தசாரதி போன்ற ஆசிரியர்களுக்குப் பேராசிரியர் வேலை கிடைத்தது.  க.நா.சு. தில்லியில் எழுத்தாளராக ஒதுங்கினார்.  கும்பகோணத்து இளைஞனான சாமிநாதன் சி.பி.ஐ.யில் ஸ்டெனோவாகச் சேர்ந்தான்.  (பிறகு தர்மு சிவராமுவால் அவருக்கு வெங்கட் சாமிநாதன் என்ற நாமகரணம் சூட்டப்பட்டு பாலையும் வாழையும் என்ற நூல் வெளிவந்தது.)  தன்னையும் தன் இனத்தவரையும் கும்பகோணத்திலிருந்து விரட்டி விட்ட திராவிட இனத்துக்குத் தன் நூலில் பழி தீர்த்துக் கொண்டார்.  தமிழில் 2000 ஆண்டுகளாக எதுவுமே இல்லை.  எல்லாமே பாலை.  தீ வைத்துக் கொளுத்தினார் வெங்கட் சாமிநாதன். 

வணிகப் பத்திரிகைகளுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இடையே அப்போது பெரிய போரே நடந்தது அய்யனார்.  கல்கியை நாம் அத்தனை பேரும் படித்தோம்.  படித்துப் படித்து மாய்ந்தோம்.  கொண்டாடினோம்.  ஆனால் அதே கல்கிதான் புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களைக் கொலை செய்தார்.  புதுமைப் பித்தன் எப்படி கதை எழுத வேண்டும் என்று அவருக்குப் பாடம் எடுக்கிறார் ராஜாஜி.  எப்பேர்ப்பட்ட  அவலம் பாருங்கள்!  அகலிகை என்ற புதுமைப்பித்தனின் கதைக்காகத்தான் ராஜாஜி அந்தப் பாடம் எடுத்தார்.  எத்தனை கொலைவெறியுடன் எழுதுகிறார் தெரியுமா ராஜாஜி?  அதனால்தான் மகாத்மா ராஜாஜியைப் பார்த்து “பாரதி, உங்கள் மொழியின் சொத்து.  அவரை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.  ஆனால் யாருமே கேட்கவில்லை.  பாரதியைக் கொன்றார்கள்.  தாகூரை வங்காளம் எப்படிக் கொண்டாடியது?  மாறாக, பாரதியை பட்டினி போட்டுக் கொன்றார்கள். 

அசோகமித்திரனின் வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?  அவர் அந்தக் காலத்து டிகிரி படித்தவர்.  ஒரே ஒரு பரீட்சை எழுதியிருந்தால் கலெக்டராகி இருக்கலாம்.  பாரதியும் அப்படித்தான்.  சி.சு.செ., க.நா.சு. எல்லாருமே அப்படித்தான்.  மிகப் பெரிய பதவிக்குச் செல்லக் கூடிய அறிவையையும் மேதமையையும் கொண்டிருந்த அவர்கள் அதையெல்லாம் காலால் உதைத்து எறிந்து விட்டுப் பட்டினி கிடந்து செத்தார்கள்.  அசோகமித்திரன் முழு நேர எழுத்தாளர்.  அப்படியென்றால், பிச்சைக்காரன்.  பிச்சைக்காரனுக்காவது யாரேனும் மனம் இரங்கிப் போடுவார்கள்.  இந்தத் தமிழ் சமூகமோ 2000 ஆண்டுகளாக எழுத்தாளர்களை வெறுத்து ஒதுக்கும் சமூகம்.  எழுத்தாளனின் நிலை அதை விடக் கேவலம்.  அசோகமித்திரன் தமிழைப் போலவே ஆங்கிலம் எழுதுபவர் என்பதால் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி ஜீவனோபாயம் செய்து வந்தார்.  மாதம் ஒரு கட்டுரை வந்தாலே அதிகம்.  அதற்கும் பத்தோ இருபதோ ரூபாய் வரும்.  அவ்வளவுதான் வருமானம்.  என்ன பிரச்சினை என்றால், இந்த வறுமை பற்றி அவர்கள் வாயே திறக்க மாட்டார்கள்.  நான் இதை வெளியே சொன்னாலும் என்னைத் திட்டுவார்கள்.  சிதம்பர சுப்ரமணியன் மட்டுமே ஆடிட்டராக இருந்து வளமாக வாழ்ந்தவர்.  இந்திரா பார்த்தசாரதி தில்லியில் பேராசிரியராக இருந்தார்.  தி.ஜா. அகில இந்திய வானொலியில் அதிகாரியாகப் போனதால் தப்பினார்.  மற்ற அத்தனை பேர் கதையும் கிட்டத்தட்ட தி.ஜ.ர. கதை மாதிரிதான்.  அசோகமித்திரனுக்கு ஆஸ்துமா.  ஆஸ்துமாவுக்கான மருந்து மாத்திரை வாங்கக் காசு இல்லாமல் கிடப்பார்.  காரணம்?  பெரும் பத்திரிகைகள்.  எல்லோரும் கல்கியையும் சுஜாதாவையும் படித்து ஆர்கஸம் அடைந்து கொண்டிருந்தார்கள்.  அசோகமித்திரன் தி.நகர் நடேசன் பூங்கா சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து எழுதி கணையாழி பத்திரிகையில் பிரசுரம் செய்வார்.  அதன் ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் அசோகமித்திரனுக்கு ஏதோ கொஞ்சம் சம்பளம் கொடுத்தார்.  அசோகமித்திரன் தான் கணையாழியின் நிர்வாக ஆசிரியர். 

போர் என்று குறிப்பிட்டேன்.  இலக்கியவாதிகளுக்குத் தங்கள் மூலம் ஒரு வேளை உணவு கூடக் கிடைக்காமல் பார்த்துக் கொண்டன பெரும்பத்திரிகைகள்.  லா.ச.ரா. மட்டுமே விதிவிலக்காக இருந்தார்.  பெரும் பத்திரிகைகளிலேயே எழுதியவர் அவர்.  மற்றபடி பெரும் பத்திரிகைகள் ஜெயகாந்தனையே பெரும் ஆளுமையாக எழுப்பிக் கட்டினார்கள்.  யார் இங்கே வெளியே தெரிந்திருக்க வேண்டும்?  தி. ஜானகிராமனும் அசோகமித்திரனும்.  இருவருமே பிராமணர்.  பிராமணர் அனைவருமே இவர்களை உயர்த்திப் பிடித்திருக்க வேண்டும்.  ஆனால் பிராமணர்களே இவர்களைக் குழி தோண்டிப் புதைத்தார்கள்.  ஏன்?  ஒரே கேள்வியில் தி.ஜா. பதில் சொல்லி விட்டார்.  ”என்னடா கோபு, மீசையை எப்போ எடுத்தே?”

ஆக, சுருக்கமாகச் சொன்னால், வணிக எழுத்து பரவலாக வாசிக்கப்படுவதில் எனக்கு எந்தப் புகாரும் இல்லை.  எவ்வளவு நேரம்தான் சீரியஸான விஷயங்களையே பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும் இருப்பது?  இதோ இதை எழுதி முடித்து விட்டு Ninja Assassin-ஐத்தான் பார்க்கப் போகிறேன்.  ஆனால் நிஞ்ஜா அஸாஸின் எடுத்தவன் என்னோடு வந்து உட்கார்ந்து கொண்டு நானும் நீயும் ஒன்னு என்று சொல்லக் கூடாது.  இங்கே சொல்கிறான்.

பின்வரும் பட்டியல்/புள்ளி விபரத்தைப் பாருங்கள்:

1965இல்தான் பாரதீய ஞான பீடப் பரிசு உருவாக்கப்பட்டது.  உருவாக்கப்பட்ட  ஆண்டிலேயே கேரளத்தைச் சேர்ந்த ஜி. சங்கர குரூப்புக்கு அந்தப் பரிசு கிடைத்தது.  கவனியுங்கள், இந்தியாவிலேயே இந்திக்காரர்களும், வங்காளிகளும், கன்னடியர்களும்தான் மொழி வெறியர்கள்.  தமிழர்களோ மொழிக்காக பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திக் கொண்டு சாவார்களே தவிர இந்த இலக்கிய சமாச்சாரமெல்லாம் அவர்கள் அறிய மாட்டார்கள்.  தீவிர மொழிவெறியர்களான இந்திக்காரர்களே ஞானபீடத்தின் முதல் ஆண்டுப் பரிசுக்கு வேலை செய்யவில்லை.  எங்கோ மூலையில் இருக்கும் கேரளத்துக்கு அந்தப் பெருமை கிடைத்தது.  காரணம், மலையாளிகளின் இலக்கியப் பிரக்ஞை. 

அடுத்து, எஸ்.கே. பொற்றேகாட்.  1980.  1984இல் தகழி சிவசங்கரன் பிள்ளை.  1995இல் எம்.டி. வாசுதேவன் நாயர்.  2007இல் ஓ.என்.வி. குருப்.   ஆக, மலையாளத்துக்கு இதுவரை ஐந்து ஞான பீடம். 

கன்னடத்துக்கு 1967இலேயே ஞான பீடம்.  கே.வி. புட்டப்பா.  தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இந்திக்குக் கிடைக்கவில்லை.  1965இல் மலையாளத்துக்குக் கிடைத்ததும் தீவிரமாக களத்தில் இறங்கி 1966இல் பரிசை எடுத்துக் கொண்டது வங்காளம்.  அடுத்த ஆண்டு கன்னடம்.  இப்படி பேசி வைத்துக் கொண்டது போல் மலையாளம், வங்காளம், கன்னடம் என்று ஞான பீடம் வாங்கினார்கள்.  1968இல்தான் இந்திக்கு முதன்முதலாகக் கிடைத்தது.  பின்னர், 1973, 1977 (சிவராம் காரந்த்), 1983 (மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்), 1990, 1994 (யு.ஆர். அனந்தமூர்த்தி), 1998 (கிரிஷ் கர்னார்ட்), 2010 (சந்திரசேகர கம்பாரா).  ஆக, கன்னடத்துக்கு இதுவரை எட்டு ஞான பீடப் பரிசுகள் கிடைத்துள்ளன.

இந்திக்கு 1968, 1972, 1978, 1982, 1992, 1999, 2005, 2009, 2013 ஆகிய ஆண்டுகளில் இந்தி.  ஒன்பது ஞானபீடம். 

1966, 1971, 1976, 1991, 1996, 2016 ஆகிய ஆறு ஆண்டுகளில் வங்காளம்.   

இலக்கியத்தில் மேற்கண்ட நான்கு மொழிகளையும் விட தமிழில்தான் இலக்கியவாதிகளும், இலக்கியப் படைப்புகளும் அதிகம்.  இரண்டே இரண்டு முறைதான் தமிழுக்குக் கிடைத்திருக்கிறது.  அதுவும் குப்பை.  அகிலன் மற்றும் ஜெயகாந்தன்.  1975-இல் அகிலனுக்கு ஞான பீடம் கிடைத்துள்ளது.  வணிகப் பத்திரிகைகளை நாம் மன்னிக்கவே கூடாது அய்யனார்.  இந்த அவலத்துக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.  நோபல் பரிசு வாங்குவதற்கு வைரமுத்து தன்னைத் தகுதியானவர் என்று நினைத்துக் கொண்டு (பாவம்), தன் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆள் தேடி அலைந்து, மொழிபெயர்த்து அதை நோபல் கமிட்டிக்கு அனுப்பியிருக்கிறார் அல்லது அனுப்ப நினைக்கிறார் என்றால் இதற்கு யார் காரணம்?  விகடன் பத்திரிகைதானே?  முதலில் விகடன் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குக் கிடைத்தது.  இப்போதும் விகடன் எழுத்தாளர் வைரமுத்து முயற்சி செய்கிறார்.  ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் என்றால், நாம் நோபல் வரை போக வேண்டாமா என்று நினைக்கிறார் வைரமுத்து.  இதற்கிடையில் கமல்ஹாசன் வேறு இயக்குனர் ஷங்கரை எழுத்தாளர் என்று அழைத்து வைரமுத்துவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார். 

அவலம் அய்யனார், அவலம்.  எல்லா மொழிகளிலும் பல்ப் எனப்படும் பைங்கிளி எழுத்து இருக்கிறது.  ஆனால் தமிழில்தான் பைங்கிளி எழுத்தாளன் நம்மைத் தூக்கிப் போட்டுக் கடாசி விட்டு அவன் முன்னே போய் ஞானபீடப் பரிசை வாங்கிக் கொண்டு போகிறான். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai