அக்கப்போர் – 2

கார்ல் மார்க்ஸ் ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார். எனக்கு வயதாகி விட்டது, கனிந்து விட்டேன் என்று சொல்லும் யார் மீதும் நான் அப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் எப்போதும் பிரயோகிக்கிறேன். அதையேதான் இப்போதும் செய்தேன். ஆனால் என் வார்த்தைகள் கார்ல் மார்க்ஸை பெரிதும் பதற்றமடைய வைத்திருக்கிறது என்பதை அவர் மேலும் ஒரு அவதூறையும் ஒரு மிரட்டலையும் வைத்திருப்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அவதூறும் மிரட்டலும் கீழே:

”நீங்கள் விதந்தோதும் ஒரு படைப்பை அது குப்பை என்று உங்களிடம் நேரில் சொல்லும் சுதந்திரம் எனக்கு இருந்திருக்கிறது. பொதுவில் எழுதியதால் சங்கடப்பட்டுவிட்டீர்கள் என்று இதைப் புரிந்துகொள்கிறேன். மற்றபடி, உனக்கு என் மீது பகை இருந்தால், ஏதாவது ஒரு மதுபான கேளிக்கையின் போது, கழுத்தை நெரித்துப் போடு என்று சொல்லியிருக்கிறீர்கள். இதை நான் பரிசீலிக்கிறேன். இப்படியே தொடர்ந்து நீங்கள் அதீத உணர்ச்சி வசப்பட்டு சான்றிதழ் வழங்கிக்கொண்டிருந்தால் அதைத்தான் செய்யவேண்டும்.”

அராத்து என்ன கடவுளா, கார்ல், உங்களுக்கும் எனக்கும் உரையாடலே சாத்தியமில்லை போல் தோன்றுகிறது. நான் என் பதிலிலேயே சொல்லி விட்டேன். நீங்கள் அராத்துவை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அவர் நாவலை போர்னோ, குப்பை, மலம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். அது உங்கள் விருப்பம். நானே தினம் தினம் பல நூல்களை அப்படித்தான் திட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு வயதாகி விட்டது, அதனால் வண்ணதாசனின் அப்பா வல்லிக்கண்ணன், திகசி மாதிரி தாத்தாவாகி எல்லாரையும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதால் வந்த பதில் அது. என்ன அடுத்த அவதூறு என்றால், பொதுவில் எழுதியதால் சங்கடப்பட்டு விட்டீர்கள் என்று எழுதியிருப்பது அவதூறு. என்னோடு பேசும் போது உங்களைப் பற்றித்தான் அதிகம் பேசுவார் என்று கவிதா ஒருமுறை சொன்னபோது ரொம்பவும் நெகிழ்ந்து போனேன். அப்படி என்னைப் பற்றி உணரும் நீங்கள் என்னை சற்றும் புரிந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. ஆனால் யாரோ சொல்லிக் கொடுத்து எழுதுகிறேன் என்று கருப்பசாமியே சொல்லும் போது நீங்களும் இப்படி எழுதலாம்தான்.

அடுத்து கொலை மிரட்டல். அப்பன் மகனிடம் சரிடா என்னைக் கொன்னுர்ரா என்று கோபத்தில் கத்தினால் மகன் அப்பன் கழுத்தை நெரிப்பானா? கலியில் அதுவும் நடக்கும் போல?

”இதை நான் பரிசீலிக்கிறேன். இப்படியே தொடர்ந்து நீங்கள் அதீத உணர்ச்சி வசப்பட்டு சான்றிதழ் வழங்கிக்கொண்டிருந்தால் அதைத்தான் செய்யவேண்டும்” என்று எழுதியிருக்கிறீர்கள். எத்தனை வன்மம்!!! புதுப்பேட்டை தனுஷ் ஞாபகம் வருகிறது கார்ல். இப்போது நான் என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? இனிமேல் தங்களை நான் சந்திக்க மாட்டேன். விஷம் வைத்து விட்டால் என்ன செய்வது?

ஆனால் ஒரு சந்தேகம். என்னைக் கொலை செய்ய ஒரு நாவலாசிரியர், ஒரு பத்திரிகை ஆசிரியர் ஆகிய இரண்டு பேர் முகநூலிலேயே வெளிப்படையாக ஆசை தெரிவித்திருக்கும் போது நீங்கள் மூன்றாவதாக வருகிறீர்கள். பாவம்.