எதார்த்தம்

சிங்கப்பூர் அரசு நூலகத்தில் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளதை நண்பர்கள் ஆரவாரத்துடன் பகிர்ந்துள்ளனர். இதில் மகிழ்ச்சி அடைய ஒன்றுமே இல்லை. சினிமாவில் ரஜினி எப்படியோ அப்படி எழுத்தில் சுஜாதா. அவ்வளவாக எழுதப் படிக்க தெரியாத என் அம்மாவே ஜுஜாதா கதை பிடிக்கும் என்று சொல்லி எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டி படிப்பார்கள். அந்த எழுத்துலக சூப்பர் ஸ்டார் இதயப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கையில் ரெண்டு லட்சம் இல்லாததால் மணி ரத்னம் உதவியதாக பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஒரே சமயத்தில் வாராவாரம் ஆறு பிரபல பத்திரிகையில் எழுதியவர். அத்தனை பிரபலமாக இருந்தும் அவர் நூல்கள் 2000 தான் விற்கும். விற்றது. ஒவ்வொரு புத்தகமும் 5 லட்சம் பிரதி விற்றால் மட்டுமே எழுத்தாளன் பிச்சை எடுக்காமல் வாழ முடியும். அது தமிழ் எழுத்தாளனுக்கு எத்தனை காலம் ஆனாலும் சாத்தியம் இல்லை. எனவே சிங்கப்பூரில் அல்ல, சந்திர மண்டலத்திலேயே என் தமிழ் நூலை வைத்தாலும் எனக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால் அதே சமயம் தமிழ்நாட்டுக்கு வெளியே என் ஆங்கில நூல்களை வைத்தால் எனக்கு மிகப் பெரும் நன்மைகள் உண்டாகும். அதை சிங்கப்பூர் நூல்கத்தில் ஒருவராலும் செய்ய முடியவில்லை. ஆம். நான் பல ஆண்டுகளாக முயன்றும் அது முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் பாலியில் ஒரு சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடக்கிறது. ஆண்டு தோறும். அதற்குக் கூட எனக்கு இதுவரை அழைப்பு அனுப்படவில்லை. ஆனால் இதுவரை ஷோபா சக்தி அண்ணாசாமி ஆறுமுகசாமி மன்னார்சாமி மதுரை மருதமுத்து போன்ற எல்லா எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டு உள்ளார்கள். ஒருமுறை நாடகாசிரியரும் என் நண்பருமான சிங்கப்பூர் இளங்கோவன் என் பெயரைப் ப்ரிந்துரைத்த போது நான் பாலி போனால் பாலி பெண்களுக்கு ஆபத்து என்று நினைத்தோ என்னவோ ஒரு சிங்கப்பூர் தாதா அதைத் தடுத்து விட்டார்.


நிலைமை இப்படி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே என் ஆங்கில நூல்களை வைக்க முயற்சி செய்யுங்கள்.


இன்று காலை கூட ஒரு நண்பரிடம் சினிமாவுக்கு வசனம் எழுத ஆரம்பிக்கலாமா அல்லது பிக்பாஸ் நாலில் கலந்து கொள்ளலாமா என்று பேசிக் கொண்டிருந்தேன். பணம் என் வாழ்வில் ஒரு பொருட்டு அல்ல. ஆனால் தேவைப்படுகிறது.