மஹாஸ்வேதா தேவியைத் தெரியாத இலக்கிய வாசகர்கள் இந்தியாவில் இருக்க வாய்ப்பில்லை. அவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கூட வாங்கக் கூடும் என்று பலரும் நம்பினார்கள். இது ஒரு பக்கம். என்னுடைய சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் பிழைதிருத்தம் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் முடிக்கும் நிலையில் இருக்கிறேன். நான் பிழை திருத்தம் செய்யும் போது அந்த நூலைத் திரும்பவும் வாசிக்கிறேன். அதனால்தான் நேரம் ஆகிறது. சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் கல்லூரிகளில் பாடமாக வைத்திருக்கப்பட வேண்டிய ஒரு நூல். அல்லது, பல ஆயிரம் பேர் படித்திருக்க வேண்டிய நூல். இரண்டுமே நடக்கவில்லை. எப்போதாவது – ஒரு ஐந்து ஆண்டுகளில் ஏதோ ஒரு நாள் கமல்ஹாசனைப் போன்ற சினிமாத் துறையில் பிரபலமான ஒருவர் எனக்கு ஃபோன் செய்து சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்னு உங்க புக் ஒன்னு படிச்சேன் சார், ரொம்பப் பிரமாதம் என்று ஆரம்பித்து பத்து நிமிடம் பேசுவார். அவ்வளவுதான்.
ரித்விக் கட்டக் பற்றிய கட்டுரையில் பின்வரும் பத்தி கடைசியாக வருகிறது. அதை உங்களுக்குத் தருகிறேன்:
ரித்விக் கட்டக்கின் தந்தை சுபாஷ் சந்திர கட்டக் மாவட்ட நீதிபதியாக இருந்தவர். அவர் ஒரு கவிஞரும் நாடகாசிரியரும் ஆவார். ரித்விக் அவரது பதினோராவது குழந்தை. கடைசிக் குழந்தை. ரித்விக்கின் மூத்த சகோதரர் மணிஷ் கட்டக். அவர் ஒரு புகழ்பெற்ற இடதுசாரி எழுத்தாளராக விளங்கியவர். ஆங்கிலப் பேராசிரியரான அவர் ஒரு களப் போராளியாகவும் இப்டா (IPTA) இயக்கத்தின் முன்னோடியாகவும் இருந்தவர். அவருடைய மகள்தான் உலகப் புகழ் பெற்ற மஹாஸ்வேதா தேவி.