அவர் பெயர் ராமசேஷன்

ராமசேஷன் ஒரு ஸாஃப்ட்வேர் எஞ்ஜினியர்.  ஆனாலும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஐந்து ஆண்டுகள் படித்து புலவர் பட்டம் பெற்றவரை ஒத்த தமிழ்ப் புலமை உண்டு. அதற்கும் மேலும் என்று சொல்லலாம்.  வாழ்நாள் பூராவும் பழந்தமிழ் இலக்கியத்தில் ஊறினவர்.  வெண்[பா எழுதும் ஆற்றல் கொண்டவர்.  (நல்லவேளை, புதுக்கவிதை சமாச்சாரத்தில் இறங்கவில்லை). சமகால இலக்கியம் இப்போதுதான் பரிச்சயம்.  நாம் எல்லாம் தமிழ் எழுத்தாளர்களாக இருந்தும் இலக்கணம் பற்றிக் கவலைப்படுவதில்லை.  ஒற்றாவது மயிராவது என்று ஒற்று இல்லாமலேயே எழுதிக் காலம் கழிக்கிறோம். நான் ஆட்சேபணை செய்தால் போடு ஒற்றை என்று சொல்லி இலவச டிவி மாதிரி எல்லா இடத்திலும் ஒற்றை அள்ளித் தெளித்து விடுகிறார்கள். ஆனால் ராமசேஷன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபலமான பள்ளியின் தமிழ் ஆசிரியையின் வீட்டுக்குப் போய் இலக்கணம் பயின்றிருக்கிறார்.  ஆசிரியையின் வீடோ நெசப்பாக்கத்தில் இருக்கிறது.  மைலாப்பூரிலிருந்து நெசப்பாக்கம் எத்தனை தூரம்?  இது ஒரு துருவம், அது ஒரு துருவம். அப்புறம் அந்த ஆசிரியைக்கே ஒரு அளவுக்கு மேல் இலக்கணம் தெரியாததால் நிறுத்தி விட்டு இவரே தொல்காப்பியம், நன்னூல் எல்லாவற்றையும் படித்திருக்கிறார். 

எதற்காகப் படித்தார்?  ஒரு ஸாஃப்ட்வேர் எஞ்ஜினியர் ஏன் தமிழ் இலக்கணம் படிக்க வேண்டும்?  அவர் என்ன எழுத்தாளரா?  அப்படியெல்லாம் கனவு கூட கண்டவர் அல்ல.  அப்புறம் ஏன்?  தான் பேசும், எழுதும் மொழியைப் பிழையற கற்க வேண்டும் என்ற ஒரே ஆர்வம்தான்.  47 வயதில் போய் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். 

எனக்குத் தமிழ் இலக்கணம் தெரியாது.  ஆனாலும் அனுபவத்தின் அடிப்படையில் அனுமானம் கொள்வதால் என் எழுத்தில் அதிகமாக இலக்கணப் பிழைகள் இருக்காது. சந்தேகம் எழுந்தால் சேஷனைக் கேட்பேன்.  அப்புறம் தோன்றியது, சேஷனையே ஒரு இலக்கண நூல் எழுதச் சொன்னால் என்ன?  பிரபலமாக இருக்கும் உங்களுடைய புத்தகமே 200 தான் விற்கிறது என்கிறீர்கள்; நான் இலக்கண நூல் எழுதினால் யார் வாங்குவார்? என்று கேட்டார் ராமசேஷன்.  அதெல்லாம் விற்கும் என்று தைரியம் சொன்னேன்.  கொஞ்சம் எழுதி அனுப்பினார். அது கொஞ்சம் சராசரி வாசகருக்குப்  புரியாத நிலையில் உள்ளது.  நான் அதில் கொஞ்சம் கை வைத்தால் ஒரு ஆட்டோக்காரருக்குக் கூடப் புரிந்து விடும்.  அதனால் அவரோடு நானும் கூட்டு சேர்ந்தால் ”நல்ல தமிழில் எழுதுவது எப்படி?” என்று ஒரு நூலைக் கொண்டு வந்து விடலாம். அதே தலைப்பில் சொக்கனும் எழுதியிருக்கிறார் என்றார் சேஷன்.  எழுதினால் என்ன? விஷ்ணுபுரம் என்ற தலைப்பில் நாவல் எழுதுவதுதான் தப்பு.  ”நல்ல தமிழில் எழுதுவது எப்படி?” என்ற தலைப்பிலேயே பத்து புத்தகம் கூட வரலாம் என்றேன். இந்த விஷயத்தில் அவ்வளவு தேவை இருக்கிறது.

இன்று அய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுப்பைப் படிக்க எடுத்தேன்.  வரும் ஜனவரி புத்தக விழாவின் போது புத்தகம் வெளிவந்து விடும்.  முள்ளம்பன்றிகளின் விடுதி என்பது தலைப்பு.  அதில் ”தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை” என்று ஒரு தலைப்பு இருந்தது.  முன்னுரை.  பொதுவாக நான் இப்படிப்பட்ட நெடிலும் குறிலும் புணரும் போது ஒற்று போடுவதில்லை.  கவனியுங்கள்.  எனக்குத் துளியும் இலக்கணம் தெரியாது.  எல்லாம் அனுபவத்தில்தான் எழுதுகிறேன்.  ஒலியின் லயம் எப்படி இருக்கிறது என்பதுதான் என் இலக்கணம்.  எனவே அறியா பருவம், அறியா பறவை என்று எழுதுவதே என் வழக்கம்.  ஆனால் அய்யனார் அறியாப் பருவம் என்று எழுதியிருந்தார்.  அய்யனார் ஓரளவுக்குப் பிழை இல்லாமல் எழுதக் கூடியவர்.  அதனால் சந்தேகப்பட்டு சேஷனைக் கேட்டேன்.  நாமெல்லாம் பள்ளிக்கூடத்தில் படு ஜாலியாகப் படித்தோம் இல்லையா, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்?  அதுதான் இது என்றார் சேஷன்.  ஈறு கெட்ட = அறியாத என்ற வார்த்தையின் ஈறு (த) கெட்டு விட்டது.  அறியாத என்பது எதிர்மறை.  எனவே, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் ஒற்று மிகும்.  எனவே அறியாப் பருவம் என்பதே சரி.  மேலும் சொன்னார் சேஷன்.  இலக்கணத்தில் இரண்டே இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொண்டால் போதும்.  ஒற்று மற்றும் புணர்ச்சி.  ஒற்றில் ஒற்று மிகும் இடம், மிகா இடம்.  எங்கே புள்ளி வரும்; எங்கே புள்ளி வராது.  இதை மட்டும் தெரிந்து கொண்டால்கூடப் போதும்.  புணர்ச்சி விதிகள் நமக்கே தெரியும்.  செம்மை ப்ளஸ் கதிர் செங்கதிர்.  இதுதான் புணர்ச்சி.