நான் என்னுடைய தினசரி வாழ்க்கை முறை பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியும் அதையெல்லாம் படிக்காமல், அல்லது, படித்தும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப எனக்கு யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தால் நானும் என் வேலையையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத் திரும்ப என் தினசரி வாழ்க்கை பற்றித்தான் எழுதிக் கொண்டிருப்பேன். வேறு வழியே இல்லை. என்னை ங்கொம்மா ங்கோத்தா என்று திட்டி வரும் கடிதங்களைப் பற்றி நான் கவலையே படுவதில்லை. குப்பைக்கூடையில் போட கண்ணிமைக்கும் நேரம். அந்த ஆளுக்காகப் பரிதாபப்பட கண்ணிமைக்கும் நேரம். பெண் விடுதலை இன்னும் இந்தியாவில் வரவில்லை என்று நினைக்கிறேன். இன்னும் பெண்களிடமிருந்து எனக்கு ஓத்தாம்பாட்டு வரவில்லை. ஒருவேளை மனசுக்குள் திட்டிக் கொள்கிறார்களோ என்னவோ, அல்லது, ஒருவேளை என் எழுத்து பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கிறதோ என்னவோ.
தலைக்கு மேல் வெள்ளமாய் வேலை. செய்ய வேண்டிய வேலை கொட்டிக் கிடக்கிறது. பன்னண்டாம் வகுப்பு மாணவன் கடைசி நேரத்தில் பரீட்சைக்குப் படிப்பது போன்ற அவசரகதியில் எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் என் வாழ்வின் நீரோட்டமாக விளங்கும் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் என்னுடைய நாளில் பல மணி நேரத்தைச் சாப்பிட்டு விடுகிறது. பல்லுயிர் ஓம்புதல், அடுத்தவர் உழைப்பில் சுகம் காணாதிருத்தல் என்பதே அந்த இரண்டு கோட்பாடுகள். பூனைகளுக்கு உணவிடுதலில் தினமும் ஒரு மணி நேரம் போய் விடுகிறது. மேலேயே இருக்கும். பத்து பூனைகளுக்கும் உணவு கொடுத்து முடிக்க அரை மணி நேரம் ஆகிறது. போட்டு விட்டு வந்து விட்டால் அவைகளும் போய் விடுகின்றன. ஆள் பக்கத்தில் இருந்தால்தான் சாப்பிடுகின்றன. இரவு சில சமயங்களில் பத்து மணி கூட ஆகி விடும். அவ்வளவு நேரமும் அவை எனக்காகத் தரைத்தளத்தில் காத்திருக்கும். பத்து மணிக்கு எல்லாவற்றுக்கும் உணவு கொடுத்து விட்டு களைப்பாக மேலே வந்தால் எதிர்த்தெருவில் இருக்கும் வாட்ச்மேன் வருவார். எதிர்த்தெருவில் வளரும் ச்சிண்ட்டூவுக்கும் அதன் மனைவி ஸ்நீக்கிக்குமான உணவை வாங்கிப் போவதற்காக ஒன்று விட்டு ஒருநாள் அவர் வருவார். டப்பாவில் போட்டுக் கொடுப்பேன். நான் இல்லாவிட்டால் அவந்திகா செய்வாள்.
இதற்கிடையில் எத்தனை சமூக விரோதிகளும் மனித விரோதிகளும் கிரிமினல்களும் என் எழுத்தை ஆர்வமாகப் படிக்கிறார்கள் தெரியுமா? ஒருமுறை இப்படி எழுதின என் பதிவைப் படித்து விட்டு ஒரு ஆள் எனக்கு எழுதியிருந்தார். ”டேய் ங்கோத்தா, படத்தில் எட்டு பூனைதானேடா தெரிகிறது? நீ பாட்டுக்கு 15 பூனை என்று கதை விடுகிறா” அந்த வாசகர் எழுதின வார்த்தைகளை அப்படியே இங்கே எழுதியிருக்கிறேன். என்ன செய்வது? சொர்க்கமும் பக்கத்தில்தான் இருக்கிறது. நரகமும் நம் அருகேதான் இருக்கிறது. மொத்த பூனைகள் 15. சில சமயம் சில பூனைகள் சாப்பிட வராது. அவ்வளவுதான்.
இப்படி உணவிடுவதில் போகும் ஒருமணி நேரம் மட்டும் அல்ல. சமயங்களில் பூனை உணவு தீர்ந்து போய் விட்டால், கடைக்கும் அலைய வேண்டும். உடனே ஆலோசனைத் திலகங்கள் எழுதுவார்கள். அமேஸானில் ஆர்டர் போட்டால் வீட்டுக்கு வந்து தருவானே, நீங்கள் ஏன் அலைகிறீர்கள்? இப்படிக் கேட்பவர்களைக் கழுமரத்தில்தான் ஏற்ற வேண்டும். எனக்குத் தெரியாதா அமேஸான் மூலம் வரவழைக்க முடியும் என்று? அரித்தால் சொறிந்து கொள்ளக் கூட நேரம் இல்லை சாமிகளா? மேலும், மறதி என்ற விஷயம் வேறு இருக்கிறதே? இதே வேலையாகவா இருக்க முடியும்? நான் என்ன பூனைக்காப்பாளன் வேலையா செய்து கொண்டிருக்கிறேன்? அதுவா என் பிரதான தொழில்?
அது மட்டுமல்ல; இந்தப் பதினைந்து பூனைகளில் டெட்டி என்ற பூனையும், இந்தப் புதிய மூன்று குட்டிகளும் மீன் தான் சாப்பிடுகின்றன. வாரத்தில் இரண்டு முறை அவந்திகா கடல்கரைக்குப் போய் வலையில் பிடித்த புதிய மீன்களை வாங்கி வருவாள். அதில் அவளுக்கு இரண்டு மணி நேரம் போய் விடும். இன்று அவளுக்குக் களைப்பாக இருந்ததால் நான் போனேன். இரண்டு மணி நேரம் காலி. மீன் கொடுக்காமல் வேறு ஏதாவது சுலபமான உணவைக் கொடுக்கலாமே என்று ஒரு ஆலோசனை வரும். எல்லாமே தெரியும். வெறும் பூனைக்கான விஸ்காஸ் உணவையே கொடுத்துக் கொண்டிருந்தால் சாப்பிடாது. ஒருவேளையாவது மாற்ற வேண்டும். உங்கள் வீட்டில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்தால் அந்த வீடு எப்படி இருக்கும்? பெண்களால் யூகிக்க முடியும் என்று நினைக்கிறேன். அப்படி இருக்கிறது வீடு. கொண்டு போய் எங்கேயாவது விட்டுவிடலாம். நமக்குப் பிறக்கும் குழந்தையை எங்கேயாவது கோவில் திருவிழாவில் விட்டு விட்டு வர முடிந்தவர்களால் அது முடியும். அல்லது, மனிதப் பிறவி வேறு, பூனை வேறு என்று நினைப்பவர்களால் முடியும். என் குரு ஆதி சங்கரர். என் குரு பாரதி. எல்லா உயிர்களிலும் என் உயிரைப் பார்ப்பவன். என் பிள்ளைகளிடம் மட்டுமே என் உயிரைப் பார்ப்பவன் இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் விஸ்காஸ் பூனை உணவு வாங்க செலவாகிறது; நீ சோறு சமைத்துக் கொடு என்று அவந்திகாவைக் கேட்பது அராஜகம். நானே செய்ய முடியும். எழுதுவதை விட்டு விட வேண்டும். என் வாழ்வை நிர்ணயம் பண்ணும் இரண்டு கோட்பாடுகள் என்று குறிப்பிட்டேன். அதில் இரண்டாவது, யார் உழைப்பிலும் குளிர் காயாமல் இருப்பது. இதுவரை அவந்திகாவே ஒற்றை ஆளாக சமைக்க நான் சாப்பிட்டது இல்லை. இரண்டு பேரும்தான் சமைப்போம். நான் அஸிஸ்டெண்ட். அவள் தலைமை. அரிசி களைந்து வைப்பது, காய் திருத்துவது, கீரை ஆய்வது, பூண்டு வெங்காயம் உரிப்பது இதியாதி. சமயங்களில் வாழைப்பூவெல்லாம் கூட உதிர்ப்பேன். முருங்கைக் கீரை ஆய்வது மட்டும் இரண்டு பேரும் செய்வோம்.
இப்படித்தான் முன்பு ஒருமுறை விஸ்காஸ் பூனை உணவு வாங்கித் தர விருப்பம் உள்ளவர்கள் வாங்கித் தாருங்கள் என்று கேட்டபோது ஒரு சிநேகிதி ஒரு சாப்பாட்டு யோஜனை தெரிவித்து இருந்தார். அதைச் செய்யவே மூன்று மணி நேரம் ஆகும். அவரை ப்ளாக் செய்து விடலாமா என்று யோசித்தேன். ஆனால் ஏற்கனவே ப்ளாக் செய்து பின்னர் சமரசம் ஆகித்தான் அன்ப்ளாக் செய்தேன். மறுபடியுமா? சரி, அவர்கள் செய்வதை செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.
நான் உங்களிடம் ஆலோசனையா கேட்டேன்? முன்பு ஒருமுறை சந்தா கேட்டு எழுதியபோது சில நண்பர்கள் எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்று பல ஆலோசனைகள் எழுதியிருந்தார்கள். இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிபுணரை டீக்கடை வைத்துப் பிழைக்கச் சொல்வதை ஒத்தது அது.
நிறுத்துகிறேன். ஆலோசனை சொன்ன அன்பரின் வார்த்தைகளை நான் அவசரத்தில் தவறாகப் புரிந்து கொண்டு எழுதி விட்டேன். பூனை உணவு என்பதை அவர் பூனையை அடித்துச் சாப்பிடுவது என்று என்னைக் கலாய்த்திருக்கிறார் என்பதை இப்போதுதான் அதற்கு வந்திருக்கும் காமெண்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டேன். நல்லது. இந்த சமூகம் எந்த அளவுக்கு வக்கிரம் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஓர் நல்ல எடுத்துக்காட்டு.
அவர் எழுதியிருந்தது இது:
மேல் தோலை உரித்து பக்குவமாக மிளகு நிறைய கலந்து, சீரகம், மஞ்சள், மல்லிப் பொடி சேர்த்து மூன்று அல்லது நான்கு விசில் வரை குக்கரை ஊதவிடவும்… தேவைக்கேற்ப இஞ்சி பூண்டு விழுதும், உப்பும் சேர்த்தல் தனி ருசி.. அவ்வளவே பூனை உணவு.. நரிக்குறவர் சமூகத்தில் பழகிப் பகிர்ந்துண்டதால் வரும் கைப்பக்குவம்.
உண்மையில் நான் இதை ஏதோ அர்த்தப் பிழை என்றே நினைத்து விட்டேன். எதன் மேல் தோலைச் சொல்கிறார் என்றே இதற்கு வந்திருக்கும் காமெண்ட்டைப் பார்க்கும்வரை எனக்குப் புரியவில்லை. நரிக்குறவர் — பூனை என்ற காம்பினேஷன் கூடப் புரியவில்லை. அந்த அளவுக்கு நான் இன்னும் குழந்தையாகவே இருக்கிறேன் என்று உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். நரிக்குறவர்கள் பூனைக்கு அப்படிச் சாப்பாடு போடுவார்கள் போல என்றே நினைத்து விட்டேன். எதன் மேல் தோலை உரிக்கச் சொல்கிறார் என்று மட்டும் குழம்பிப் போனேன்.
பூனைக்கு சாப்பாடு கேட்டால் பூனையை உரித்துச் சாப்பிடு என்று சொல்லும் சமூகம் தமிழ்ச் சமூகம்!!! ஆஹா. எப்பேர்ப்பட்ட சமூகம் ஐயா இது!!! இங்கே வாழ்வதில், இந்த மொழியில் எழுதுவதை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மொக்கை ஜோக் சொல்ல வேண்டும் என்று சொன்னபோது அமெரிக்க ஆங்கிலம் பேசும் ஒரு மேட்டுக்குடி அய்யங்கார் பெண் எதிரே அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து, உங்க பூனை செத்துடுச்சுன்னு வச்சுக்கோங்க என்று ஜோக்கை ஆரம்பித்ததும் அந்தப் பெண் அழ ஆரம்பித்து விட்டார். இந்த மேட்டுக்குடிப் பெண்ணுக்கு உயிரே அவருடைய குழந்தைதான். அந்த இன்னொரு பெண், உங்க குழந்தை செத்துடுச்சுன்னு வச்சுக்கோங்க என்று மொக்கை ஜோக்கை ஆரம்பிக்க முடியுமா? பெரிய வேடிக்கை என்னவென்றால், மேட்டுக்குடி அமெரிக்க ஆங்கில நங்கைக்கு ஏன் தன் ஜோக்கைக் கேட்டு அந்தப் பெண் அழுகிறார் என்றே கடைசி வரை புரியவில்லை.
இந்த சமூகத்தில் வாழ்வதை விட ஐரோப்பிய நகர் ஒன்றில் போய் தெருவோரத்தில் பிச்சை எடுக்கலாம்.
***
விஸ்காஸ் பூனை உணவு தேவைப்படுகிறது. whiskas DRY Adult cat food and whiskas DRY cat food for kittens
எழுதவும்: charu.nivedita.india@gmail.com