”நியாய சாஸ்திரம் செய்த கௌதம மஹரிஷிக்கு ‘அக்ஷபாதர்’ என்று ஒரு பேர். அவர் அறிவால் ஓயாமல் சிந்தனை பண்ணிக்கொண்டே இருப்பாராதலால் வெளி உலகேம அவர் கண்ணுக்குத் தெரியாதாம். ஒருமுறை எதையோ பலமாக யோசித்துக் கொண்டே போய் ஒரு கிணற்றில் விழுந்து விட்டாராம். அப்போது பகவானே அவரை மேலே ஏற்றி விட்டு அவருடைய காலிலேயே கண்ணையும் வைத்து விட்டாராம்! பாதத்திலே அக்ஷம் (கண்) ஏற்பட்டதால் இவருக்கு அக்ஷபாதர் என்று பெயர் வந்தது என்று கதை.”
இன்று மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஐசிஐசிஐ வங்கியிலிருந்து சில தினசரிகளின் இணைப்பை அனுப்பியிருந்தார்கள். தினமும் அனுப்பினாலும், ரொம்ப காலமாக பேப்பரே படிக்கவில்லையே, உலகத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அந்த இணைப்பின் உள்ளே சென்றேன். தமிழ் இந்து இருந்தது. புரட்டிக்கொண்டே போன போது என் பிரியத்துக்குரிய சந்திரசேகரேந்திர சுவாமிகளின் பேச்சு காணக் கிடைத்தது. அந்தப் பேச்சின் முதல் பத்திதான் அக்ஷபாதர் கதை. அந்த அக்ஷபாதர் மாதிரிதான் நானும்.
அல்லது இப்படிச் சொல்லலாம். இந்தப் பயிற்சியைப் பாருங்கள். நூறு மீட்டர் தூரத்தை நீங்கள் நடந்து கடக்கிறீர்கள். நீங்கள் மது அருந்தவில்லை. நிதானமாகத்தான் இருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் அந்த தூரத்தை நடந்து கடக்கிறீர்கள். ஒரு பத்து முறை இந்தப் பத்து தடவை நடைகளில், ஒவ்வொரு முறையும் எத்தனை தூரத்தை அகலவாக்கில் எடுத்துக் கொண்டிருப்பீர்கள்? அதாவது, ஒரு நேர்க்கோட்டில்தானே வந்திருப்பீர்கள்? அதற்கு அகலவாக்கில் எவ்வளவு இடம் தேவைப்பட்டிருக்கும்? அதாவது, நீங்கள் நடந்து வந்த பாதையின் அகலம் எவ்வளவு இருக்கும்? சுமார் ஒன்றரை அடி. இதே ஒன்றரை அடி அகல பாதையில் நீங்கள் நடக்க வேண்டும். காற்று நிதானமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பாதை இருநூறு அடி உயர சுவரில் இருக்கிறது. உங்களால் நடக்க முடியாது. கீழே விழுந்து விடுவீர்கள். இதே தூரத்தை தரைத்தளத்தில் அனாயாசமாக நடந்தீர்களே? இப்போது ஏன் நடக்க முடியவில்லை? பயம். உயரத்தைக் கண்டு பயம். ஆனால் இதே சுவரை – இதே ஒன்றரை அடி அகலப் பாதையை ஒரு ஜென் குரு படு சாதாரணமாக நடந்து கடப்பார். ஏனென்றால், அவர் மனதில் இந்த உயரம் இல்லை. அவரைப் பொறுத்தவரை அவர் தரையில்தான் நடக்கிறார்.
நான் அந்த ஜென் குருவைப் போன்றவன். கொரோனா என் மனதில் இல்லை. அதற்காகத் தான்தோன்றித்தனமாகத் திரிகிறேன் என்று அர்த்தமல்ல. கவனமாகவே இருக்கிறேன். வீட்டை விட்டு எங்குமே வெளியில் செல்வதில்லை. காலையில் மொட்டை மாடியில் வாக்கிங். அப்போது எந்தக் கதவுப் பிடியையும் தொட வேண்டிய அவசியம் இல்லை. லிஃப்ட்டையும் பயன்படுத்துவதில்லை. மற்றபடி காலையிலும் இரவிலும் இரண்டு வேளை பூனைகளுக்கு உணவு கொடுப்பதற்காகக் கீழே வருகிறேன். அப்போது கீழே உள்ள கதவு இரண்டின் கைப்பிடிகளைத் தொட வேண்டியிருக்கிறது. தொட்டவுடனேயே கையில் எடுத்துப் போயிருக்கும் சானிடைஸரில் கைகளைத் துடைத்துக் கொண்டு விடுவேன். வீட்டுக்கு வந்ததும் கையை சோப்புப் போட்டுக் கழுவி, சானிடைஸர் போட்டு ஏக அமர்க்களம். வெளிக் கதவைத் தொட்டு விட்டு எங்கள் வீட்டுக் கதவுப் பிடியைத் தொடுகிறேன் அல்லவா? அதனால் எங்கள் வீட்டுக் கதவுப் பிடிகளும் சுத்தம் செய்யப்படும்.
அமெரிக்க நண்பர் சொன்னார். அங்கெல்லாம் யாரும் எதைப் பற்றியும் கண்டு கொள்கிற மாதிரியே தெரியவில்லை. மினியாபலீஸில் ஒரு ஓல்ட் ஏஜ் ரெஸ்ட் ஹவுஸில் இருக்கிறார். ”வீட்டுக் கதவின் ஹேண்டிலை எல்லோரும் தொட்டுத் தொட்டுத்தான் திறக்கிறார்கள், மூடுகிறார்கள்; யாரும் சானிடைஸரே போடுவதில்லை. உடற்பயிற்சிக் கூடத்துக்குப் போனால் அங்கே பயிற்சி சைக்கிளில் ஒருத்தர் முடித்ததும் இன்னொருவர் போய் உட்கார்ந்து பெடல் செய்கிறார். சீட்டையோ கைப்பிடியையோ துடைப்பது கூட இல்லை.” இன்னொரு சுவாரசியமான சம்பவம் சொன்னார். கையுறையோடு வருகிறார் நர்ஸ். சோதனை முடிந்ததும் கையுறையைக் கழற்றி குப்பைக் கூடையில் போட்டு விட்டு வெறும் கையால் அறைக் கதவின் ஹேண்டிலைப் பிடித்துத் திறந்து கொண்டு போகிறார். ஹேண்டிலில் கொரோமா இருந்தால்?
சரி, என் கதைக்கு வருவோம். எங்கள் வீட்டில் காய்கறிகள் வாங்கினால் எல்லா காய்கறிகளுக்கும் இங்கே மஞ்சள் நீராட்டு உண்டு. பிறகு எல்லாவற்றையும் காற்றில் உலர்த்தி பிறகு துணியால் துடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கிறாள் அவந்திகா. காய்க்காரர் கொடுக்கும் மீதிப் பணத்தில் கொரோனா இருக்கலாம் இல்லையா? எனவே பண நோட்டுகளையும் நீரில் கழுவி கொடியில் க்ளிப் போட்டுக் காய வைக்கிறாள். இதைச் சொன்னபோது “உங்கள் வீடு எங்கே இருக்கிறது, சொல்லுங்கள்?” என்று கேட்டார் நண்பர். ஜோக் கிடக்கட்டும். பண நோட்டில் கொரோனா இருக்காதா?
இதெல்லாம் கொரோனாவுக்காக நான் எடுத்துக் கொள்ளும் சில முன்னெச்சரிக்கைகள். சாலையில் சிவப்பு விளக்கு எரிந்தால், அநிச்சையாகவே நிற்கிறோம் இல்லையா, அது போன்ற விஷயம். கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை வேறு, கொரோனாவை மனதில் சுமப்பது வேறு. கொரோனா என் மனதில் இல்லை. தமிழ்நாட்டில் எத்தனை மரணம்? இந்தியாவில் எத்தனை? அமெரிக்காவில் எத்தனை? இந்தப் பேச்சே இல்லை. இதற்கெல்லாம் பதிலாக தினமும் ரெண்டு மூணு கஷாயத்தைக் குடித்து விட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனாலும் அவ்வப்போது முகநூல் வழியாகவும் நண்பர்கள் வழியாகவும் செய்திகள் காதில் விழுந்துகொண்டுதான் இருக்கின்றன. முதலில் தப்லிக் ஜமாத் மாநாடு. தில்லியில் மார்ச் 16-ஆம் தேதியிலிருந்தே 50 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடுவது தடை செய்யப்பட்டிருந்தது. அந்தத் தடையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் – உலகம் பூராவுமே கொரோனா வைரஸால் மக்கள் செத்து மடிந்து கொண்டிருந்தபோது மார்ச் மாதத்தில் ஆயிரக்கணக்கான பேர் கூடி நிகழ்ச்சி நடத்தியது சமூக விரோதமான செயல்தான். இதைப் பல இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்திருந்தாலும் போதுமான அளவுக்கு இது குறித்த எதிர்ப்பு இஸ்லாமியரிடையே இல்லாதது வருந்தத்தக்கதுதான். ஏனென்றால், தப்லிக் ஜமாத் மாநாடு தில்லியில் நடப்பதற்கு முன்னால் ஃபெப்ருவரியில் மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்துள்ளது. அதில் 16000 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ப்ரூனே, கம்போடியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பலரும் கலந்து கொண்டு பிரிந்ததால் இங்கிருந்து கொரோனா இந்த நாடுகளுக்கெல்லாம் பரவி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே தில்லியில் கூட்டம் கூடுவதற்குத் தடை உத்தரவு இருந்தும் அதை மதிக்காமல் ஆயிரக்கணக்கான பேர் தில்லி நிஸாமுத்தீனில் தப்லிக் ஜமாத் தலைமையகத்தில் கூடியிருக்கிறார்கள். என் இஸ்லாமிய நண்பர்கள் பலரும் திருச்சி கோவிலில் கூடவில்லையா, திருவனந்தபுரம் கோவிலில் கூடவில்லையா என்று கேட்கிறார்கள். அப்படிப்பட்ட கூட்டம் இந்தியா பூராவும்தான் கூடிக் கொண்டிருக்கிறது. மோடி 21 நாள் லாக்டவுனை அறிவித்தவுடன் தில்லியிலிருந்து ஆயிரக்கணக்கான விளிம்புநிலை மனிதர்கள் பீஹாருக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் நடைப்பயணமாகக் கிளம்பிச் சென்றார்கள். அவர்களெல்லாம் கொரோனா தொற்று உள்ளவர்கள் இல்லையே? அவர்களெல்லாம் கோலாலம்பூர், ப்ரூனே, சிங்கப்பூர் போன்ற கிழக்காசிய நாடுகளில் பயணம் சென்று வந்தவர்களோடு சேர்ந்து இருந்தவர்கள் இல்லையே? மக்கள் கூடின இடமெல்லாம் கொரோனா தொற்றும் என்றால், இந்நேரம் இந்தியாவில் மூன்று கோடி பேர் செத்து மடிந்திருப்பார்கள். நேற்று வீட்டுக்கு எதிரே உள்ள பழமுதிர் நிலையம் போனேன். அவந்திகாவின் இரவு உணவு பழம்தான். எனக்குப் போக விருப்பம் இல்லை. நான் போகாவிட்டால் அவந்திகா போவாள். வேறு வழியில்லாமல் முகக்கவசம் அணிந்து கொண்டு போனேன். உள்ளே ஒரே தள்ளுமுள்ளு. நாலு நாலு பேராக உள்ளே விடுவது பற்றிய பேச்சே இல்லை. எல்லோரும் எல்லோரையும் இடித்துக் கொண்டு… அசல் டவுன் பஸ் மாதிரியேதான் இருந்தது. கொரோனாவினால் எல்லோரும் செத்திருக்க வேண்டும். அப்படியில்லை. அங்கே வெளிநாட்டவர் யாரும் இல்லை. மைலாப்பூர் பகுதியில் கொரோனா தொற்று இல்லை. இதுவே ஒரு சர்வதேச மாநாடாக இருந்தால் கொரோனா தொற்றும். திருச்சி தேர்த் திருவிழாவை நடத்துவதற்கு போலீஸ் அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. முதலில் போலீஸ் செய்தது தப்பு. மீறி நடத்தினால் நடத்தியவர்களைக் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் ஒரு முக்கியமான விஷயம், அது தேர்த் திருவிழா. சர்வதேச ஆன்மீக மாநாடு அல்ல. அதில் கலந்து கொண்டவர்கள் கொரோனா தொற்றினால் சாகவில்லை. தில்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பலர் காஷ்மீரில் இறந்து விட்டார்கள். காஷ்மீரிலிருந்து மட்டும் 1100 பேர் தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். இதில் எத்தனை பேருக்குத் தொற்று, எத்தனை இறப்பு என்ற கணக்கு ஆராய்ச்சியிலெல்லாம் நான் இறங்கவில்லை. நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளலாம். இன்னொரு வித்தியாசம், தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இந்தியா முழுவதும், காஷ்மீரிலிருந்து தமிழ்நாடு வரை சென்றிருக்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் நாடு பூராவிலிருந்தும் தில்லி தப்லிக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்றவர்கள். இந்த மாநாட்டின் வீரியமும் விளைவும் என்னவென்றால், இதற்குத் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களின் எண்ணிக்கை 1500; இதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவர்கள் 1200; தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வந்தவர்கள் 834. இவர்களில் 750 பேர் தில்லி தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் என்றால் 90 சதவிகிதம் இல்லையா? இதை விட கலவரமான செய்தி வேறு ஏதேனும் உண்டா? இதை முஸ்லீம்கள் கண்டித்திருக்க வேண்டாமா? இதை இந்துக்கள் எப்படி கவனிப்பார்கள்? காஷ்மீரின் ஒமர் அப்துல்லா, தப்லிக் ஜமாத்தின் மாநாடு இஸ்லாமிய வெறுப்புக்கு excuseஆக ஆகிப் போகும் என்று ட்வீட் போட்டிருக்கிறார்.
கொரோனா பாதிப்புப் பட்டியலில் தமிழ்நாடு கடைசியில் இருக்க வேண்டிய மாநிலம். ஏனென்றால், இங்கே வெளிநாட்டுப் போக்குவரத்து கம்மி. ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவதாக நிற்கிறது. காரணம், தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள். இது சமூகத்தில் என்னென்ன பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று இஸ்லாமிய அமைப்புகளோ இஸ்லாமிய நண்பர்களோ நினைத்துப் பார்க்கிறார்களா? நண்பர்களே, ஒரு லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசம் பூராவிலும் பயணம் செய்து களத்தில் இறங்கிப் போராடி செய்ய முடியாத இஸ்லாமிய வெறுப்பு என்ற காரியத்தை, மதத்தின் பெயரால் இந்துக்களை ஒருங்கிணைக்கும் செயலை தப்லிக் ஜமாத் ஒரே வாரத்தில் செய்து முடித்து விட்டது. இப்போதுதான் ஃபெப்ருவரியில் தில்லியில் ஒரு பெரிய கலவரம் நடந்து நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டதன் ஈரம் கூடக் காயவில்லை. அதற்குள் இப்படி மறுபடியும் இஸ்லாமிய வெறுப்பை சமூகத்தில் தூவ வேண்டுமா? இது தேவையா? நம் உயிரை மாய்த்துக் கொள்ளவே நமக்கு இந்தியச் சட்டப்படி உரிமை இல்லாதபோது ஒட்டு மொத்த சமூகத்தையே புதைகுழிக்கு அனுப்புவதற்குக் காரணமாக இருப்பது… சமூக விரோதம் என்பது சாதாரண வார்த்தை… இதைவிடக் கொலைபாதகச் செயல் வேறு ஏதேனும் உண்டா? ஹிமாச்சலப் பிரதேசத்திலிருந்து தப்லிக் ஜமாத் மாநாட்டுக்குப் போய் வந்தவர்களை அதிகாரிகள் விசாரிக்கச் சென்றபோது அவர்கள் மீது காறித் துப்பியிருக்கிறார்கள். உடனே அந்த மாநில டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் இனிமேல் இப்படிச் செய்பவர்கள் மீது கொலை முயற்சிக்கான எஃப் ஐ ஆர் போடப்படும் என்று தெரிவித்திருக்கிறார். வாஸ்தவம்தானே? தும்மினாலே மற்றவர் மீது கொரோனா பரவி விடும் என்கிறபோது வேண்டுமென்றே காறித் துப்புவது கொலை முயற்சி அல்லாமல் வேறு என்ன?
எப்படிப்பட்ட காரியங்களெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்று கவனிக்கிறீர்களா? தில்லி மாநாட்டில் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று ஏற்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட சிலர் நடந்து கொள்வதெல்லாம் காணொளிகளாகப் பரவி லட்சக்கணக்கான பேரால் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்ட ஒரு ஆள் உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் அந்தக் கட்டிடத்தையே துவம்சம் செய்கிறார். அவர் அம்மணமாக இருப்பதால் அவருக்கு நாங்கள் சிகிச்சை செய்ய முடியாது என்று நர்ஸுகள் திரும்பி விட்டனர். கண்ணாடிக் கதவையெல்லாம் உடைக்கிறார். உடம்பெல்லாம் ரத்தம். இன்னொரு இடத்தில் கொரோனா தொற்று உள்ள நபர்கள் (தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்) மருத்துவர்கள் மீது காறித் துப்புகிறார்கள்; மூத்திரம் பெய்து அடிக்கிறார்கள். எல்லாவற்றின் மீதும் எச்சில் துப்புகிறார்கள்.
இஸ்லாம் என்றால் அன்பு என்று மட்டுமே நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட சிலரது நடவடிக்கைகள் அந்த மார்க்கத்தின் அடிப்படைக்கு எதிராக இருப்பதை கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டும் இல்லாமல், இது போன்ற நடவடிக்கைகள் மோடியைத்தான் மேலும் மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.
***
பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai