குருஜி : ராம்ஜி நரசிம்மன்

இன்று முகநூலில் ராம்ஜி நரசிம்மனின் கீழ்க்கண்ட பதிவைப் படித்தேன். இந்த குருஜியிடம் தான் பழகிய அனுபவங்களை இது போன்ற 300 சம்பவங்களைக் கொண்டு அவர் விவரித்திருக்கிறார். அதையெல்லாம் ஒரு நாவலாக எழுதலாம் என்று இருந்தேன், Source ராம்ஜி என்று போட்டு. ஆனால் தாமதப்படுத்தி விட்டேன் போல. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் இப்போது ராம்ஜியே அந்த நாவலை எழுதி விடுவார் போல் தெரிகிறது.  ஒரே ஒரு விஷயம்.  வாழ்கை.  அது ஏன் என் நண்பர்களில் பலர் வாழ்கை என்று எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.  ஏற்கனவே வேறு இதை நான் ராம்ஜியிடம் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.  அராத்துவிடம் சுட்டிக் காட்டினேன்.  நிர்மலிடம் சுட்டிக் காட்டினேன்.  இன்னும் பலரும் வாழ்கை என்றே எழுதுகின்றனர்.  ஏன் பள்ளிக்கூடங்களில் வாழ்கை என்றுதான் எழுத வேண்டும் என்று சொல்கிறார்களா? 

மற்றபடி ராம்ஜி குருஜி என்ற பெயரில் அந்த நாவலை எழுதத் தொடங்கி விடலாம். 

இனி ராம்ஜி:

ஒரு மாபெரும் சங்கீத வித்வானுடன் பல வருடங்களாக நெருங்கி பழகும் பாக்கியம் பெற்றவன் நான். சங்கீதத்தை தவிர வாழ்கைக்குத் தேவையான பல விஷயங்களை அவரிடம் கற்றேன். தோணும் போதெல்லாம் அதைப் பற்றி சொல்கிறேன்.

எங்கள் நெருக்கம் எப்படி என்றால் எல்லோரும் இருக்கும் போது அவர் அருகிலேயே இருப்பேன் மற்ற சிஷ்யர்கள் போல. மற்ற நேரங்களில் ஒன்றாக ஒரு peg போடுவது . ஒரு peg மேல் நான் அறிந்த வரையில் அவர் அருந்தியதே இல்லை. 8 மணிக்கு உணவு அதை தொடர்ந்து ஒரு கோப்பை whiskey இது 50 ஆண்டு கால பழக்கம். உலகிலேயே அரு மருந்து அது தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு.

எங்கு போவதென்றலும் என்னை அழைத்து செல்வார். நானும் அவரும் மட்டும் என் காரில், வழியில் கடற்கரையில் நிறுத்தி குச்சி ஐஸ் சாப்பிடுவது வழக்கம். அப்படி ஒரு நாள் நானா, அப்படித்தான் என்னை அழைப்பார், கொஞ்சம் போகணும் வரியா என்றார் வரேன் குருஜி, அப்படி தான் அழைப்பேன் அவரை.

வீட்டு வாசலுக்கு வந்து அவரை அழைத்தேன் எங்கே குருஜி என்றேன் முதலில் கடற்கரை என்றார். அங்கே குச்சி ஐஸ் சாப்பிட்டு விட்டு. எங்கே குருஜி என்றேன் . காமராஜர் அரங்கம் செல் என்றார் . வழியில் என்ன நிகழ்ச்சி என்று கேட்டேன் ஒரு பெரிய தொழிலதிபர் பெயரை சொல்லி அவருடைய வீணை கச்சேரி நான் தான் தலமை என்றார்.

இது வரை அவர் வீணை வாசிப்பார் என்று எனக்குத் தெரியாது. கச்சேரி முடிந்த பின் அவருக்கும் தெரியாது என்பது உறுதியானது. என் ஆச்சர்யத்தை அடக்கி கொண்டு, கச்சேரி எப்படி இருக்கும் குருஜி எனக் கேட்டேன். ஒரு நொடி இடைவெளி இல்லாமல் மயிரு மாதிரி தான் இருக்கும் என்றார். நானும் சிரித்து அவரும் சிரித்தார்.

நிரம்பிய அரங்கம் அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் கடலென திரண்டு இருந்தார்கள். கச்சேரி அரம்பித்தது விசித்திரமான பல ஓசைகள். ஒவ்வொரு பாட்டும் எப்போது முடிந்தது என்று கூட தெரியாத அளவிற்கு வாசிப்பு. முதலில் கைதட்ட ஆரம்பித்த சிலரைத் தொடர்ந்து எல்லாரும் கைதட்டினார்கள்.

எனக்குப் பெரும் சங்கடம் என்னடா இப்படி ஒரு மேதையைப் போய் இந்த மாதிரி ஒரு கச்சேரியில் உட்கார வைத்து விட்டார்களே என்று. ஆனால் அவரோ எல்லோரையும் போல் மிக ரசித்து கேட்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தார். அவ்வபோது என்னை பார்த்து சிரிப்பார். எனக்குத் தாங்க முடியாமல் சிரிப்பு வரும். என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது என்று அவருக்கு நன்றாக தெரியும் . தெரிந்தே இந்த விளையாட்டு.

ஒரு வழியாக கச்சேரி முடிந்தது . எல்லோரும் பேசினார்கள் விழாத் தலைவராக கடைசியில் அவர் பேசுவதை கேட்க எல்லாருக்கும் ஆவல் தொழிலதிபருக்குத்தான் மிக அதிகம் அது அவர் முகத்தில் சந்தேகமே இல்லாமல் தெரிந்தது. மெதுவாக நடந்து சென்று . நான் என் சீடனுடன் காரில் வரும் போது இந்த கச்சேரி எப்படி இருக்கும் என என் எதிர்பார்ப்பைச் சொன்னேன் . நான் எப்படி எதிர்பார்த்தேனோ அப்படியே இருந்தது என்றார் .

பெரும் ஆரவாரத்தோடு கைதட்டல். தொழிலதிபர் நெகிழ்ந்து அவர் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றார். எங்கள் இருவருக்கும் மட்டும் தான் தெரியும் அவர் எதிர்பார்த்தது என்னவென்று.