”நான் அந்தப் பள்ளிக்கூடத்தின் கடைசி வரியில், மேசைக்குக் கீழ் தலையை விட்டு ஒளிந்துகொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாணவன் என்பதால் இதைச் சிறப்பாக relate பண்ண முடிகிறது. முதல் பாதி சிரிப்பு வெடி. இரண்டாம் பாதி படு சென்சிபிள் பிட்ச். டோட்டலி சாரு ஸ்கிரிப்ட்.
எழுத்திலும், இலக்கிய ஆடுகளத்திலும் காணும் சாரு அல்ல அவர் நிஜத்தில். ரைட் ஒப்போசிட். படு ஜாலியான ஆள். ஆனால், அந்தப் பேச்சு மெசினை ஸ்டார்ட் செய்யும் சூட்சுமம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருந்தால் படு ரகளையாகப் போகும். மணியும், நொடியும் கொண்டாட்டத்தில் திளைக்கும். உச்சப்பட்ச அனுபவம் ஒன்று வாய்க்கும்.
அப்படி அந்தச் சூட்சுமம் பிடிபடவில்லையென்றால் நாம் சந்தர்ப்பத்தின் பாவிகள். வாய்ப்பின் லூசர்ஸ்!
சாரு பெய்ரூட் வந்தபோது ஒரு வாரம் கூட இருந்தேன். முதல் ஐந்து நாட்களும் நான் மேலே சொன்ன அந்தப் பாவியாய்தான் இருந்தேன். அலுவலகம் முடிந்து வந்தால் சாரு அறைக்குள் இருப்பார். பேச்சை ஆரம்பிப்போம். என்னிடம் சாருவுடன் பேசவேண்டும் என்றே வருடங்களாகக் குறிப்பெடுத்து வைத்த ஒரு நூறு பக்க டூ லிஸ்ட் இருக்கும். ஆனால், இரண்டாவது டொப்பிக்கோடு நாவு இழுக்க ஆரம்பித்துவிடும். வார்த்தைகள் ஒளிந்துகொண்டுவிடும். ஏதோ என்னை ஊதி ஊதி அணைப்பதுபோல் தோன்றும். திரு திருவென்று முழிப்பேன். அழுத்தி அழுத்தி மூச்சு விடுவேன். பின்னர் நம் குருநாதரை நன்றாகக் கவனித்து அனுப்பவேண்டுமே என்கிற முஸ்தீப்பில் அங்கும் இங்கும் ஓடித்திரிவேன். அவருடைய மறுநாள் பயணங்களை தயார்செய்வேன். ஆகாரத்தைக் கவனித்துக்கொள்வேன். இத்தியாதி இத்யாத்தி.
எது மிக அவசியமானதோ அதில்தான் சரியாகக் கோட்டை விட்டிருக்கிறேன் என்று புரிந்தபோது வாய்ப்பு நழுவிப்போய்விட்டிருந்தது.
ஒரு உன்னத எழுத்தாளனை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு நேரத்தையும், வாய்ப்பையும் வீணாக்கி விட்டோமே என்கிற வருத்தம் பிரடியில் தட்டிய போது சாரு துபாய் விமானத்தில் பறந்துகொண்டிருந்தார்.
ஊருக்குச் சென்றதும் ’சாரு, எப்படி என்றே புரியவில்லை! ஒரு வாரத்தை வீணடித்துவிட்டேன். பேச வேண்டும் என்று வைத்திருந்த ஒருகும்ப சமாச்சாரங்களில் பாதியைக்கூட ஒப்பேற்ற முடியாமல் போய்விட்டதே. வருத்தமாக இருக்கிறது…’ என்று ஈமெயில் அனுப்பலாம் என்று மேசையில் குந்தியபோதுதான், அவரிடமிருந்து அந்த மெயில் வந்தது.
’அமல், நீங்கள் என்னுடைய ஆள் என்று தோன்றுகிறது. உங்களுடன் நிறைய பேசவேண்டும் என்று நினைத்தேன். காலமும் நேரமும் ஒத்துழைக்கவில்லை. விட்ட தவறை நம்முடைய அடுத்த பயணத்தில் சரி செய்துகொள்வோம்.’
இதனால்தான் சொல்கிறேன், நானும் குருநாதர் டைப்தான். அதனால்தான் அந்த ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளி எனக்கும் சௌகரியமாக இருக்கிறது. என்ன, கொஞ்சம் கடைசி பெஞ்ச். கடுமையாக வேலை செய்யவேண்டும்.”
மேற்கண்ட பதிவை எழுதியவர் அமல்ராஜ் ஃப்ரான்சிஸ். இதுபோல் நேற்றைய கட்டுரையில் விடுபட்டவர்கள் எத்தனையோ பேர். பிரபு கங்காதரனையும் சேர்க்க வேண்டும். இப்படிப் பலர். ஒருநாள் செல்வேந்திரனிடம் பேசிக் கொண்டிருந்த போது”சாரு எப்போது பார்த்தாலும் தி.ஜா., அசோகமித்திரன், சி.சு. செல்லப்பா என்று பழைய ஆட்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார்; புது எழுத்தாளர்களை அவர் அறிமுகப்படுத்துவதே இல்லை” என்ற என் மீதான புகார் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் ஒரு பெரிய பட்டியலே கொடுத்தார். நான் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்கள் என.
சோகம் என்னவென்றால், என்னிடம் அந்தப் புகாரை என் நண்பர் சொன்னபோது எனக்கு அவர் சொல்வது உண்மை என்றே தோன்றியதுதான். (அவர் என்ன சொன்னாலும் உண்மை என்றே தோன்றும்; அது வேறு விஷயம்!) அவர் சொன்னதும், ‘ஆமாம், ஜெயமோகனும் எஸ்.ரா.வும்தான் இளம் எழுத்தாளர்களை அல்லது புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறார்கள்; நாம் அந்த மாதிரி எதுவும் செய்வதில்லை’ என்றே நினைத்துக் கொண்டேன். ஆனால் நேற்று ராம்ஜி ஒரு இருபது எழுத்தாளர்களைக் குறிப்பிட்டார். நான் அறிமுகப்படுத்தியவர்கள் என. அவர்களெல்லாம் அதற்கு முன்பே எழுதிப் பிரபலம் ஆனவர்கள்தான். ஆனாலும் என் மூலம் அவர்கள் இன்னும் அதிகம் பேரைச் சென்றடைந்தார்கள். ராம்ஜி குறிப்பிட்ட அந்த இருபது பேரில் ஒருவர் சாதனா. இப்போது அமல்ராஜ் ஃப்ரான்சிஸின் மேற்கண்ட குறிப்பு. அவரது நாவல் பட்டக்காடு வெளிவந்ததும் பாருங்கள், அவர் பெயர் எங்கே போகிறது என்று. இன்று நிறைய எழுத வேண்டும் என்று இருக்கிறேன். வேலை தலைக்கு மேல் வெள்ளம் போல் ஓடுகிறது. எந்த வேலையை முதலில் எடுப்பது என்றே புரியவில்லை. பார்ப்போம்.
இன்னொரு விஷயம், முகநூலில் அமலின் பதிவுக்குக் கீழே யாரோ ஒருவர் “அது சரி, பணம் அனுப்பி விட்டீர்களா?” என்று நக்கலாகப் பின்னூட்டம் இட்டிருக்கிறார். அந்த அறிவுக் கொழுந்துக்கு இதுகூடவா தெரியவில்லை? ஒருத்தரை லெபனானுக்கு அழைத்து இரண்டு வார காலம் தன் வீட்டில் தங்கச் செய்யும் ஒருவர் எனக்கு எதற்காகப் பணம் கொடுக்க வேண்டும்? எல்லாமே பணம்தானா? எல்லாமே பணம் என்று நினைத்தற்குத்தானே இயற்கை இப்போது இத்தனை பெரிய தண்டனையைக் கொடுத்து வீட்டிலேயே அடைத்துப் போட்டிருக்கிறது? இந்த நிலையிலும் பணத்தை வைத்து நக்கலா? ரெண்டு வார காலம் உணவிட்டவர் எதற்குய்யா பணம் அனுப்ப வேண்டும்? மேலும் எல்லாவற்றையுமே பணத்தினால்தான் கொடுக்க வேண்டுமா? நேரம் என்பது பணத்தை விட அரிதான விஷயம் ஆயிற்றே? நேற்று ஒரு நண்பர் ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து (நான் கேட்காமலேயே) என் வீட்டுக்கு வந்து கொடுத்து விட்டு, நான் பணம் கொடுத்தபோது அதிர்ச்சியுடன் “என்ன?” என்று பார்த்து விட்டு ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு போனார். அவர் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டிருக்கும்போதே எனக்கு ஃபோன் செய்தார். அப்போது, முடிந்தால் எனக்குக் கொஞ்சம் இட்லி மாவு வாங்கி வர முடியுமா என்று கேட்டேன். அவர் சொன்ன பதில், “உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.” இதற்கெல்லாம் பணம் ஈடாகுமா? அவர் யார் என்று சொன்னால் எல்லா எழுத்தாளர் கூட்டமும் அவர் வீட்டை மொய்த்து விடும் ஆபத்து இருக்கிறது என்பதால் பெயரைச் சொல்லவில்லை. (காயத்ரி, பெயரைச் சொல்லி விடவா?)