அன்புள்ள சாரு,
கொரானவுக்கு முன்பு வரை உங்களது எழுத்துக்களை மிகுந்த உற்சாகத்துடன் திறந்த மனநிலையுடன் படித்து வந்தேன்,ஆனால் இப்பொழுதெல்லாம் உங்களது எழுத்துக்களை உற்சாகமின்றி குற்ற உணர்ச்சியுடன் படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
மோடியையும் இந்துத்துவாவையும் எதிர்த்துக் கொண்டே மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ உங்களது எழுத்துக்கள் அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
தப்லீக் ஜமாத் பற்றிய உங்களது அனைத்து கருத்துகளும் ஊடகங்களின் வாயிலாக நீங்கள் பெற்ற தகவலாகத்தான் நான் பார்க்கிறேன். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எழுத வேண்டும் என்றெல்லாம் நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
உங்களுக்கு எது சரியெனப்படுகிறதோ அதை எழுதுங்கள். ஆனால் நான் தொடர்ந்து குற்ற உணர்வுடன் உங்களது எழுத்துக்களைப் படிக்க விரும்பமில்லை.
சலாம்.
முகம்மது ஸுல்ஃபிஹர்
ம்ம்ம்… என்ன பதில் எழுதுவது என்று தெரியவில்லை. மோடிக்கும் இந்துத்துவாவுக்கும் வலு சேர்ப்பது இஸ்லாமியர்களும் தப்லீக் ஜமாத் போன்ற அமைப்புகளும்தான். இல்லாவிட்டால் பண நீக்கம் போன்ற மக்கள் விரோதத் திட்டங்களைக் கொண்டு வந்த மோடி வீட்டுக்குப் போயிருக்க வேண்டாமா? ஏன் போகவில்லை? முஸ்லீம்களும் அவர்களை விட கிறிஸ்தவர்களும் மோடியை மிகத் தீவிரமாக எதிர்த்தார்கள். தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவக் கல்லூரியும் மோடிக்கு எதிரான பிரச்சாரக் கேந்திரமாகவே மாறியது. மிக வெளிப்படையாக அந்தக் கல்வி நிறுவனங்கள் மோடிக்கு எதிராக இயங்கின. இதெல்லாம் தவறு என்று நான் சொல்லவில்லை. நான் மோடி ஆதரவாளன் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட எதிர்ப்பு முறைகள் அனைத்தும் மோடிக்கு ஆதரவாகவே போகும் என்கிறேன். போனதையும் பார்த்தோம். பொதுவாக இந்துக்களை யாரும் ஒருங்கிணைக்க முடியாது. இந்துக்களுக்கு வேத நூல் கிடையாது. இந்து சாமியார்களே இந்து மதத்தை ஒழித்துக் கட்டுவதில் முன்னணியில் நிற்கிறார்கள். உதாரணமாக, பூண்டும் வெங்காயமும் காம உணர்வைத் தூண்டுபவை என்பதால் இந்து சாமியார்கள் தங்கள் சீடர்களையெல்லாம் பூண்டும் வெங்காயமும் சேர்த்துக் கொள்வதைத் தடை செய்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் எந்த சாமியாரை எடுத்துக் கொண்டாலும் அங்கே பூண்டு வெங்காயம் இருக்காது. அவ்வளவு ஏன், ஒரு சாமியாரின் பக்தரால் நடத்தப்படும் மகாமுத்ராவிலேயே பூண்டு வெங்காயம் கிடையாது. ஒரு சாமியாரின் cult-இல் நீங்கள் சீடராகச் சேர்ந்தால் அதற்கப்புறம் உங்களுடைய சந்ததியே பூண்டு வெங்காயம் சாப்பிடாமல்தான் வளர்வார்கள். பூண்டு வெங்காயம் சாப்பிடாத என் நண்பர்கள் பலரிடம் விசாரிப்பேன், அவர்களின் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட இந்து cult-இன் சீடர்களாக இருப்பார்கள். இப்படி காமத்தை அடக்கக் கற்றுக் கொடுத்து, தன்னிடம் ஞானம் பெற வரும் குடும்பத்தினரில் ஒருவரை இருவரை துறவியாக மாற்றி சந்ததி உருவாக்கத்தைத் தடுத்து விடுகிறார்கள் இந்த இந்து சாமியார்கள். உண்மையில் இவர்கள் இந்து மதத்தைக் கருவறுப்பவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும்? கீதையிலேயே பூண்டு வெங்காயம் போன்றவற்றை உண்பது ராஜஸ குணத்தைக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மதத்தில் யாரும் கோவிலுக்குப் போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; நாத்திகனாகவும் அந்த மதத்தில் இருக்கலாம். புனித நூல் என்றும் எதுவும் இல்லை. மதச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தீர்மானமான, நிர்ணயிக்கப்பட்ட மதச் சடங்குகளும் இல்லை. இந்துக்களின் புனித நூலாக ஒருசிலரால் கருதப்படும் பகவத் கீதை மகாபாரதத்தில் வருகிறது. ஆனால் இந்துக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? மகாபாரதமே வீட்டில் படிக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆம். யாரும் வீட்டில் மகாபாரதம் படிக்கக் கூடாது. படித்தால் குடும்பத்துக்கு ஆகாது. எப்பேர்ப்பட்ட மதம் பாருங்கள்!
இப்படித் தறுதலையாய்ப் பிரிந்து கிடந்த இந்துக்களை மோடியின் வரவுக்குப் பிறகு ஒருங்கிணைத்தது யார் என்று யோசியுங்கள். மோடி இந்துக்களுக்கு என்ன செய்தார்? அவர் யாருக்குமே எதுவுமே செய்யவில்லை. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. ஏழைகள் மேலும் ஏழைகளானார்கள். காங்கிரஸ் ஆட்சியிலாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள். அதன் மூலம் ஏழைகளுக்கு ஏதோ ரெண்டு பிஸ்கட் கிடைத்தது. மோடி ஆட்சியில் பணக்காரனும் ஏழையாகிக் கொண்டிருக்கிறான். ஏதோ ருஷ்யக் கம்யூனிஸ்ட் ஆட்சி போல் போய்க்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இப்போது கொரோனா.
இந்த நிலையில் மோடியை பலப்படுத்தி, இந்துக்களையும் ஒருசேர ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பது சில இஸ்லாமிய அமைப்புகள்தான். குடியுரிமைச் சட்டத்துக்கான இஸ்லாமியரின் நாடு தழுவிய எதிர்ப்பிலேயே இந்துக்கள் ஒன்று சேர ஆரம்பித்தார்கள். இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படப் போவது அஸ்ஸாமில் சட்டத்துக்குப் புறம்பாக வசிக்கும் பாங்ளாதேஷிகள்தானே, இதற்கு ஏன் பாலக்கரை பாய் நடு ரோட்டில் நின்று போராடுகிறார் என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள் இந்துக்கள். இந்தச் சூழ்நிலையில் தப்லீக் ஜமாத். நான் ஒன்றும் ஊடகங்களைப் பார்த்து கருத்து உருவாக்கிக் கொள்பவன் அல்ல. புள்ளிவிபரங்கள் வந்து கொட்டிக் கொண்டிருக்கின்றன. நேற்றைய செய்தி எட்டு எத்தியோப்பியர்கள் தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு வந்தவர்கள் இங்கே தமிழ்நாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். தனிமையில் இருங்கள் என்று போலீஸ் எச்சரிக்கை செய்திருக்கிறது. கேட்கவில்லை. வெளியே வந்து சுற்றுகிறார்கள். எட்டு பேரும் எத்தியோப்பிய முஸ்லிம்கள். இதையெல்லாம் இந்துக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று நாம் யோசிக்க வேண்டாமா? இதைக் கண்டிக்க வேண்டாமா? சவூதி அரேபியாவில் இது போன்ற மாநாடுகள் ஒன்று கூட இல்லையே? சவூதி இந்த விஷயத்தில் படு கறாராக இருக்கிறதே? இதை நான் புரிந்து கொள்கிறேன். அவர்கள் வழிவழியாக வந்த முஸ்லீம்கள். கிழக்காசிய நாடுகளில் வாழும் முஸ்லீம்கள் சில தலைமுறைகளுக்கு முன்னர், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மதம் மாறியவர்கள். பொதுவாக, மதம் மாறியவர்களுக்குத்தான் மதத்தின் மீது அதிகப் பிடிப்பு இருக்கும். ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்தான் அதீதமான தமிழ்ப் பற்றாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். என் நைனா தம் உறவுக்குள் தெலுங்கில் பேசி, தெலுங்கில் எழுதுபவர் என்றாலும் தன் குழந்தைகளுக்கு அறிவழகன், பொற்செல்வி, தமிழரசி, செழியன் என்ற தூய தமிழ்ப் பெயர்களையே வைத்தார். இயல்பாகவே திமுககாரராகவும் இருந்தார். நான் 2000-இல் ஃப்ரான்ஸ் சென்றிருந்தபோது அப்போதைய ஃப்ரெஞ்ச் அதிபர் நிகலாஸ் ஸார்கோஸி ஒரு தீவிர ஃப்ரெஞ்ச் fanatic போல் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பூர்வீகம் என்ன என்று பார்த்தேன். ஹங்கேரி மற்றும் கிரேக்கக் கலப்பு கொண்டவர். வெளியாள். ஆனால் பாரிஸில் பிறந்தவர். இந்தக் காரணத்தினால்தான் சவூதி அரேபியாவில் காண முடியாத விஷயங்கள் கிழக்காசிய நாடுகளில் – குறிப்பாக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கே, நாங்களும் உண்மையான முஸ்லீம்கள்தான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. சவூதியில் இரண்டு பேர் கூடினாலே போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது. இங்கே இரண்டாயிரம் பேர் கூடினால் போலீஸ் பம்முகிறது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் எதுவாக இருந்தாலும் மதம் என்று வந்தால் இங்கே அரசு எந்திரம் கடும் நடவடிக்கை எடுக்க அச்சம் கொள்கிறது. அதிலும் சிறுபான்மை என்றால் அச்சம் அதிகமாகிறது. இதிலெல்லாம் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
இப்படி இருக்கும்போது நான் எழுதுவது எப்படி இந்துத்துவத்துக்கும் மோடிக்கும் வலு சேர்ப்பதாக இருக்கும்? மோடி ஒரு ஃபாஸிஸ்ட் என்கிறேன். அந்த ஃபாஸிஸ்டின் கீழ் இந்துக்கள் ஒன்று சேர்கிறார்கள், ஒருங்கிணைகிறார்கள், சிறுபான்மை மதத்தினர் கவனமாக இருக்க வேண்டும் என்கிறேன். ஆனால் மோடியை மீண்டும் மீண்டும் எதிர்ப்பதன் மூலமாக மட்டுமே இந்துக்களை நீங்கள் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?
நான் ஒன்றும் ஃபாஸிஸ்ட் என்ற பதத்தை வசை வார்த்தையாகப் பயன்படுத்தவில்லை. I mean it. ஃபாஸிஸத்தின் அடிப்படைக் கூறு, Survival of the fittest என்ற டார்வினின் கோட்பாட்டைத் தங்கள் விருப்பத்துக்கேற்றபடி வளைத்துக் கொண்டதுதான். இங்கே, இந்த உலகத்தில், வலுத்தவனே வாழ முடியும். நான் கடவுள் படத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் ஒரு கண் பார்வையற்ற பெண் (பூஜா) வருகிறாள். அவளை செத்துப் போ என்கிறான் அகோரி ருத்ரன். அவ்வளவுதான். கண் பார்வை இல்லையா, செத்துப் போ. வாழ வழியில்லையா, செத்துப் போ. நான், இந்த நாட்டின் பிரதம மந்திரி, உங்கள் அனைவரையும் நேசிப்பவன், உங்கள் அனைவருக்காகவும் உயிரையும் விடத் திண்ணமாக இருப்பவன், சொல்கிறேன். இதோ இந்தக் கணத்திலிருந்து இரண்டு வார காலத்துக்கு ஊரடங்கு உத்தரவை அறிவிக்கிறேன். கதம் கதம். தில்லியில் வசித்த அன்றாடங்காய்ச்சிகள் லட்சக் கணக்கான பேர் தங்கள் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு ஐநூறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பீஹாருக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் கால்நடையாய்க் கிளம்பினார்கள். Exodus. இது என்ன விவிலிய காலமா? இத்தனை நாள் நீங்களெல்லாம் வல்லரசு என்று பொய் சொல்லித்தானே எங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தீர்கள்? இல்லை, இப்போதும் சொல்கிறோம். நாம் வல்லரசுதான். அப்படியென்றால், இதோ இந்த மக்கள் ஐநூறு கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்கிறார்களே, இந்தப் பஞ்சைப் பராரிகள், தில்லியில் தினக்கூலிகளாய் இருந்தவர்கள் இப்போது தில்லி மூடி விட்டதால் தங்கள் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்களே, வழியில் செத்துப் போவார்களே? Survival of the fittest. யார் யாரெல்லாம் பிழைத்துக் கொள்கிறீர்களோ அவர்களெல்லாம் எனக்கு ஓட்டுப் போடுங்கள். நான் உங்களுக்காகவே வாழ்கிறேன்.
தம்பி, நாற்பது ஆண்டுகளாக நான் சமகால அரபி இலக்கியம் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னுடைய தப்புத் தாளங்கள் நூலை வாசித்தால் இது தெரியும். துருக்கிக்கும் லெபனானுக்கும் ஏன் சென்று வந்தேன்? துருக்கிக்குச் சென்றது நீலமசூதியில் கேட்கும் பாங்குக்காக (அதான்). அதைக் கேட்பதற்காக. லெபனான் சென்றது அதன் இலக்கியத்துக்காக. சமீபத்தில்கூட காயத்ரி ஆன் எபரின் கதையை ஃப்ரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தபோது நான் அவளிடம் அரை மணி நேரம் பேசினேன். ஃப்ரான்ஸ் ஒரு மேட்டுக்குடி நாடு. கனடா ஒரு மேட்டுக்குடி நாடு. அதை ஏன் நீ மொழிபெயர்க்க வேண்டும்? கனடா மேட்டுக்குடி என்றாலும் அங்கே எழுதப்படுவதும் Francophone இலக்கியம்தானே என்றாள். ”இருக்கலாம். ஆனால் பெர்பெர் நாடுகளில் – மெக்ரிப் நாடுகளில் எழுதப்படும் francophone இலக்கியத்தைத்தான் நீ முன்னிலைப்படுத்த வேண்டும்; அதுதான் நம் அரசியல். இன்றைய நிலையில் உலக அளவில் அடக்கப்படுவது இஸ்லாமியர்தான். மெக்ரிப் நாடுகளான அல்ஜீரியா, மொராக்கோ, துனீஷியா போன்ற நாடுகளின் வாழ்க்கையிலிருந்து பிறக்கும் இலக்கியம்தான் இன்றைய தினம் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது” என்றேன். கனடிய ஃப்ராங்கஃபோன் இலக்கியத்தில் நான் எடுத்துக்கொண்ட ஆன் எபரும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைத்தானே எழுதுகிறார் என்றாள். மேற்கு நாடுகளின் ஒடுக்கப்படுபவன் வேறு; மெக்ரிப் நாடுகளின் ஒடுக்கப்படுபவன் வேறு. இங்கே அவன் இரண்டு பேரால் ஒடுக்கப்படுகிறான்: ஒன்று, அவனுடைய இனத்தைச் சேர்ந்த முஸ்லீம் மன்னனாலேயே ஒடுக்கப்படுகிறான்; இரண்டு, காலனி ஆதிக்கத்தின் எஜமானர்களான ஃப்ரெஞ்சுக்காரர்களால். இப்படி இரட்டை ஒடுக்குமுறையை அனுபவிக்கிறான் மெக்ரிப் நாடுகளின் மனிதன். என்ன இருந்தாலும் மெக்ரிப் francophone இலக்கியத்தைப் படித்தாலே நம் நெஞ்சு பதறும். ஆத்மா நடுங்கும்.
இப்படியாக நாற்பது ஆண்டுகளாக இஸ்லாமியக் கலாச்சாரத்தை இலக்கியத்தின் மூலமாக சுவாசித்துக் கொண்டிருக்கும் நான் எப்போதுமே ஒரு மத அடிப்படைவாதியின் பக்கம் நிற்க மாட்டேன். அது மோடியாக இருந்தாலும் சரி, தப்லீக் ஜமாத்தாக இருந்தாலும் சரி. ஏனென்றால், இறைசக்தி மதங்களுக்கு அப்பாற்பட்டது என்று நம்பும் சூஃபிகளின் மாணவன் நான்.