நேற்றைய தொடர்ச்சி
புஷ்கரமூலம்
வால்மிளகு
முர்வா என்று சம்ஸ்கிருதத்தில் உள்ளது. பெருங்குரும்பை என்று மலையாளத்திலும் தமிழில் பஞ்சுக்கொடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியாகத் தெரியவில்லை.
வேப்பிலை
முருங்கை விதை
அதிமதுரம்
வேப்பிலை விதை
தண்ணீர் முட்டான் கிழங்கு
மரமஞ்சள்
சிவப்புச் சந்தனம்
பத்மாகா
சீமை தேவதாரு
வெட்டிவேர்
லவங்கம்
மூவிலை
ஓமம்
அதிவிஷம்
வில்வப் பட்டை
கருப்பு மிளகு
லவங்கப் பத்திரி
நெல்லிக்காய்
அமிர்தவல்லி என்று அழைக்கப்படுகின்ற சீந்தில்
கடுகி
சித்திரமூலம்
காட்டுப்பேய்ப் புடலை
சித்திரப்பாலாடை
இப்படி நான் ஏற்கனவே எழுதியது போல் அறுபது எழுபது அல்ல, 150 மூலிகைகள் சேர்ந்து உருவாக்கப்படுகிறது சுதர்ஸன மாத்திரை. இத்தனை மூலிகைகளைச் சேர்த்து ஒரு மருந்தை எப்படி ஒரு மனிதனால் உருவாக்க முடியும் என்று ஆயுர்வேத மருத்துவரைக் கேட்ட போது அவர் சொன்னார், ஆயுர்வேதத்தின் பிதாமகரான தன்வந்தரிக்கும் சித்த வைத்தியத்தின் மூலவரான அகத்தியருக்கும் அந்த வைத்திய முறைகளைக் கற்பித்தது கடவுள் என்றார். இப்பேர்ப்பட்ட சுதர்ஸன மாத்திரையின் விலை 60 மாத்திரை 200 ரூ. இந்த சுதர்ஸன மாத்திரை மட்டும் அல்ல, ஆயுர்வேத மருந்துகள் எல்லாமே குறைந்த பட்சம் பத்து மூலப் பொருட்களால்தான் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, அஸ்வகந்தாரிஷ்டம் பொதுவான ஆரோக்கியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்து. இதில் அஸ்வகந்தா, முஸ்லி என்ற நிலப்பனைக்கிழங்கு (இதுதான் உலகிலேயே மிகச் சிறந்த வயக்ரா), சீவள்ளி, கடுக்காய், மஞ்சள், மரமஞ்சள், அதிமதுரம், சித்தரத்தை, நிலப்பூசணிக் கிழங்கு, அசோக மரப் பட்டை, கோரிக் கிழங்கு, பகன்றை, வெண்சந்தனம், செஞ்சந்தனம், நன்னாரி, வசம்பு, சித்திர மூலம், திரிகடுகம், அதிமதுரம், லவங்கம், ஏலம், சொக்கலை (கன்னிக் கொம்பு), நாகமரப் பட்டை, நீர். இப்படியாகத்தான் ஒவ்வொரு ஆயுர்வேத மருந்தும் தயாரிக்கப்படுகிறது. இணையத்தில் பார்த்தால் பெரும் பெரும் சித்த வைத்தியர்கள் தங்கள் தொலைபேசி எண்ணையும் போட்டு மிக மிக அரிய மூலிகை மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளை இலவசமாகவே எழுதியிருக்கிறார்கள். இங்கே அலோபதி டாக்டர் நம் நாடி பிடித்துப் பார்த்தால் 500 ரூபாய் வாங்குகிறார். மைலாப்பூர் ரேட்.
பூச்சியை விரட்ட கையிலேயே மருந்தை வைத்துக் கொண்டு மரண பயத்தோடு வீடடைந்து கிடக்கும் மூட மனிதரைக் கண்டு மிகவும் வருத்தப்படுகிறேன்.
***
பொதுவாக நான் கொரோனா பற்றிய எந்தச் செய்திகளையும் படிப்பதில்லை. புள்ளி விபரங்களைப் பார்ப்பதில்லை. வீட்டில் தொலைக்காட்சி இல்லை. பேப்பர் படித்தே பல ஆண்டுகள் இருக்கும். முகநூல் மட்டுமே வெளியுலகத் தொடர்பு. அதிலும் நான் யாருக்கும் லைக் போடுவதில்லை என்பதால் நாலைந்து நண்பர்களின் பதிவுகள் மட்டுமே என் பக்கத்தில் தெரியும். கொரோனா பற்றி எதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்? நான் என்ன இந்த நாட்டின் முதலமைச்சரா? சுகாதார அமைச்சரா? டாக்டரா? ஆரம்பித்தால் ஒரு நாளில் இருபது மணி நேரத்துக்குக் கொரோனா செய்திகளையே பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கலாம் போல் தெரிகிறது. அது எதற்கு? ஆனானப்பட்ட நெட்ஃப்ளிக்ஸையே தூக்கிக் கடாசி விட்ட பிறகு இதெல்லாம் என்ன ஜுஜுபி? இன்னொன்று, இந்தக் கொரோனா தகவல்களையெல்லாம் தெரிந்து கொண்டு எனக்கு என்ன ஆகப் போகிறது? பணம் பணம் என்று ஓடியது மனிதக் கூட்டம். அதிகாரம் அதிகாரம் என்று ஓடியது. நிற்க நேரமில்லை. பேச நேரமில்லை. சாப்பிட நேரமில்லை. சர்வதேச அரசியலும் ஒரே கச்சடா. எங்கு பார்த்தாலும் போர். மனித உடல்களை சரித்துக் கொண்டே இருந்தது ராணுவம். சுருக்கமாகச் சொன்னால், மனித இனம் தன்னுடைய அழிவை நோக்கியே வெகுவேகமாகச் சென்று கொண்டிருந்தது. இல்லாவிட்டால் நம் வாழ்வின் அடிப்படையான, நம் உயிர்வாழ்வுக்கு அத்தியாவசியமான மரங்களையே அழித்து ஒழிப்போமா? எத்தனையோ நூறு பக்கங்களுக்கு எழுதித் தீர்த்து விட்டேன். நான் கண்ணுற்ற வனங்களிலெல்லாம் யானைகள் நீர் தேடி ஊருக்குள் வர ஆரம்பித்திருந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர் காட்டழகர் கோவிலுக்குச் செல்லும் வழியெல்லாம் ஒருகாலத்தில் அடர்ந்த வனம். இப்போது மொட்டையடித்தாற்போல் இருந்தது. வழியெங்கும் யானை லத்தி. வனத்துக்குள்ளிருந்து நீர் தேடி வந்த யானைகள். மரம் இருந்தால்தானே நீர் இருக்கும்? எல்லாமே வறண்டு கிடந்தது. காட்டழகர் ஒரு பக்தன் மீது இறங்கினார். யாருக்கு என்ன வேண்டுமோ கேள் என்று உறுமியது அழகர் சாமி. முதல் பக்தனே சாமியைக் கோபப்படுத்தி விட்டான். சாமி, மழை வேணும். பயிரெல்லாம் பட்டுப் போச்சு. ஆடு மாடெல்லாம் பட்டினி கெடக்கு. சாமி அவன் குரல்வளையைத்தான் பிடிக்கவில்லை. மழை பொய்த்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. இப்டி காட்டையே அழிச்சிட்டிங்களேடா பாவிங்களா. எப்பிர்ரா மழை பேயும்? சொல்லுடா சொல்லு. கத்திக் கொண்டே இருந்தது சாமி. பிறகு ஒங்களோட பேச எனக்கு ஒன்னும் இல்லே என்று கத்தி விட்டு சாய்ந்து விட்டது.
அப்படித்தான் நடந்திருக்கிறது. நம் பகுத்தறிவு முற்போக்கு சிங்கங்களுக்குச் சொல்கிறேன். அந்த ஆள்தான் ஒன்றும் தெரியாத பாமரன். எல்லாம் தெரிந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் தன் மரணத்துக்குச் சற்று முன்பு கொடுத்த பேட்டியிலும் இதையேதான் சொன்னார். மனிதனின் பேராசை இந்த மனித இனத்தையே அழித்து விடும். அதுதான் நடந்திருக்கிறது. ஐரோப்பிய நகரங்களுக்குப் போனால் அங்கே உள்ள கறிக்கடைகளைப் பார்த்தால் ஏதோ மிருகக்காட்சி சாலையைப் பார்ப்பது போல் இருந்தது. அத்தனை வகை மிருகங்களும் தொங்கின. மாடுகளை எத்தனை கொடூரமாகக் கொல்கின்றனர்! அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று கண்காணிப்புக் குழுக்கள் இருக்கின்றனதான். ஐரோப்பா, அமெரிக்கா எல்லாமே மாட்டுக் கறி உண்பவர்கள் என்பதால் பல இடங்களில் மாடுகளைக் கொடூரமாகக் கொல்கின்றனர். சீனாவில் கேட்கவே வேண்டாம். விட்டால் மனிதர்களையே கொன்று வறுத்து விடுவார்கள் போலிருக்கிறது. எவனாவது நாயையும் பூனையையும் கொன்று தின்பான ஐயா? நாயைத் தின்பதும் நம் குழந்தையைத் தின்பதும் ஒன்று இல்லையா? அதிலும் ஒரு காட்டுமிராண்டி நாயை உயிரோடு போட்டு வறுக்கிறான். அதனால்தான் கொரோனா வந்தது என்கிறார்கள் நிபுணர்கள். Primatology நிபுணரான Jane Goodall மனிதன் விலங்குகளிடம் குரூரமாக நடந்து கொண்டதால்தான் இந்தக் கொரோனா வைரஸ் வந்தது என்கிறார். ஜேனுக்கு முன்பிருந்தே நான் அப்படித்தான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். மனிதன் இயற்கையை அவமதிக்கிறான். நானே அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறேன் என்ற அகங்காரத்தில் இருக்கிறான். எனவேதான் இயற்கை அவனை அழிக்கிறது. இப்படித்தான் பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு காணொளி பார்த்தேன். இயற்கை மனிதனிடம் சொல்கிறது. நீ எனக்குத் தேவையில்லை. மனித இனம் இல்லாமலேயே இயற்கை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டு போகிறது. இயற்கைக்கு மனிதன் தேவையில்லை. ஆனால் மனிதனுக்குத்தான் இயற்கை தேவை. எனவேதான் நம் முன்னோர் – இந்துக்கள் – இயற்கையை வணங்கினார்கள். மரத்தை வணங்கினார்கள். சூரியனை வணங்கினார்கள். காற்றை வணங்கினார்கள். பறவைகளை வணங்கினார்கள். பட்சியைப் பார்த்தால் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். காகங்களுக்கு உணவிடாமல் தான் உண்ணாத கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள். மண்ணை வணங்கினார்கள். மண்ணை உதைத்தால் மண்ணைத் தொட்டுக் கும்பிட்டார்கள். ஏ, பூமியே, உன்னை உதைக்கப் போகிறேன், என்னை மன்னித்துக் கொள் என்று சொல்வதற்காகத்தான் நடனமாடுபவர்கள் அதற்கு முன் மண்ணைத் தொட்டு வணங்கினார்கள். ஆனால் டை கட்டிக்கொண்டு இங்லீஷ் பேசிய மடையர்கள் இவர்களையெல்லாம் பார்த்துக் காட்டுமிராண்டிகள் என்றார்கள். இப்போது இயற்கை இவர்களைத் தீர்த்துக் கட்டுகிறது. தன்னை மதித்தவனின் மீது மட்டும் கொஞ்சம் கருணை காட்டுகிறது.
மனிதன் எத்தனை மரங்களை வெட்டினான் தெரியுமா? ஒரே ஒரு மரத்தில் ஆயிரம் பட்சிகளும் ஆயிரமாயிரம் புழு பூச்சிகளும் குரங்குகளும் வசித்தன. இங்கே மைலாப்பூரில். என் பக்கத்து வீட்டில். என் வீட்டில். என் வீட்டு மரத்தை என் பக்கத்து வீட்டுக்காரன் வெட்டினான். அவன் வீட்டு மரத்தையும் வெட்டினான். சுமார் 3000 பட்சிகளும் புழு பூச்சிகளும் தங்கள் வாழ்விடத்தை இழந்தன. இது ஒரு மரத்துக்கு. இப்படி அழிந்த மரங்களும் வனங்களும் கணக்கிலேயே அடங்காதவை. இதைப் போலவே மிருகங்களையும் வதைத்தது மனித இனம். கிழக்காசிய நாடுகளில் பாம்புகளைப் பிடித்து அதைக் கொன்று அதன் தோலை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இது கிழக்காசியாவில் பெரிய குடிசைத் தொழிலாகவே நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரை நூல்களை எடுத்துப் படித்தீர்களானால் மனித இனம் இயற்கையையும் விலங்குகளையும் எப்படி அழித்துக் கொண்டிருக்கிறது என்ற வாதையின் வார்த்தைகளையே பார்க்கலாம். அதற்கெல்லாம்தான் இப்போது இந்தப் பேரழிவு பதிலாகக் கிடைத்திருக்கிறது. இதில் நான் என்ன புதிதாக கொரோனா பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளப் போகிறேன்? எல்லோருக்கும் வருவதுதான் எனக்கும். முடிந்த வரை கவனமாக இருக்கலாம்.
***
நேற்று எழுத அமர்வதற்கு மாலை நான்கு மணி ஆகி விட்டது. காலை எட்டு மணிக்கு மாடியில் வாக்கிங் முடிந்து கீழே வந்தால் அதிலிருந்து ஆரம்பித்த வேலை மாலை மூன்று மணிக்குத்தான் முடிந்தது. மூன்றரைக்கு மதிய உணவு. நாலு மணிக்கு அமர்ந்த போது நாள் பூராவும் செய்த உடல் உழைப்பு கண்களை அசத்தியது. இருந்தாலும் தம் கட்டிக்கொண்டு இரவு பதினொன்றே முக்கால் வரை வேலை செய்தேன். என்னடா இது, இருபத்து நாலு மணி நேரத்தில் நான்கிலிருந்து ஒன்பது – வெறும் ஐந்து மணி நேரம்தானா எழுத்துக்கு, மற்ற நேரமெல்லாம் எடுபிடி வேலையா என்று மனம் கொதித்தது நேற்று. அதனால்தான் பதினொன்றே முக்கால் வரை எழுதினேன். காலை நான்கு வரை கூட நீட்டித்திருக்க முடியும். உடல்நலம் கெட்டு விடும். எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலை ஐந்து மணிக்கு உறக்கம் கலைந்து விடும் என்பதால் முடிந்த வரை பதினோரு மணிக்கு மேல் கண் விழிப்பதில்லை.
அப்படி என்ன எட்டு மணி நேரத்துக்கு எடுபிடி வேலை என்று கேட்டால் அதை அநேக முறை எழுதி விட்டேன். மீண்டும் எழுதினால் பலர் கடுப்பாவார்கள். ஆனாலும் சீனி போன்ற சிலர் kafkasque experience மாதிரி அட்டகாசமாக இருக்கிறது என்பதால் என்னை மீறி எழுதி விடுகிறேன். இதெல்லாம் நமக்கு நாமே பேசிக் கொள்வது மாதிரிதான். அது எப்படி காலை எட்டு மணியிலிருந்து மாலை நான்கு வரை எடுபிடி வேலை? பேசாமல் ஒரு விடியோ எடுத்து விடுவோமா என்று கூட இருக்கும். எட்டு மணிக்கு வந்தேனா? காஃபி. டிஃபன். இதெல்லாம் கொரோனாவினால் வந்த வினை. இந்த இரண்டையும் நாகேஸ்வர ராவ் பார்க் போய்க் கொண்டிருந்தபோது வெளியிலேயே முடித்து விடுவேன். இப்போது வீட்டில். இட்லி என்றால் மிளகாய்ப் பொடியோடு போக மாட்டேன். சட்னியும் வேண்டும். பெரிய வெங்காயம் ரெண்டை நறுக்கினேன். தக்காளி ரெண்டை நறுக்கினேன். பச்சை மிளகாயை எடுத்த போது நான் சட்னி செய்கிறேன் என முன்வந்தாள் அவந்திகா. அப்போதுதான் எழுந்து வீடு பெருக்கிக் கொண்டிருந்தாள். நள்ளிரவு ஒரு மணிக்குப் படுத்து எட்டரைக்கு எழுந்து கொள்ளும் வழக்கம் உடையவள். நள்ளிரவு வரை படிப்பு (ஆன்மீகம்). அவள் சட்னி செய்தால் பச்சை மிளகாய் சேர்க்க மாட்டாள். அவள் இப்படி சட்னியெல்லாம் சாப்பிட மாட்டாள். சாத்வீக உணவுதான். முதல் நாள் ரசம், முதல் நாள் கூட்டு. மிளகாய்ப் பொடி கூட அவளுக்குச் சத்ரு. நீதான் சாப்பிடுவதில்லையே, பச்சை மிளகாய்ப் போடேன் என்று முன்பு மல்லுக்கு நின்று பார்த்தேன். ம்ஹும். அவளுக்குப் பிடிக்காது என்றால் பிடிக்காதுதான். மீன் கருவாடெல்லாம் விதவிதமாக சமைத்துக் கொடுக்கிறாள். ஆஃப்டர் ஆல் பச்சை மிளகாய்க்காகப் போராடக் கூடாது என்று விட்டு விட்டேன். சட்னி தயாராவதற்குள் இட்லி ஊற்றி வைத்து விட்டேன். அவள் சாப்பிட பதினொன்றரை மணி ஆகும். சாப்பிட்டு விட்டு பூனைகளுக்கு மீன் அவித்துக் கொடுத்தேன். பிறகு பாத்திரம். இனியும் பாத்திரம் பற்றி எழுதினால் கொலைவெறி ஆகி விடுவீர்கள். அதனால் ஒரே வார்த்தையோடு விட்டு விட்டேன். ஆனால் அன்று பாத்திரம் தேய்ப்பது பற்றி எழுதியபோது ஒரு நுணுக்கம் விடுபட்டு விட்டது. அதை அன்றே எழுதியிருக்க வேண்டும் என்பதால் இப்போது எழுதலாம். என் நண்பரின் மகளுக்கு அவர் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்ரீவைஷ்ணவர். தென்கலை. பெண் எஞ்ஜினியரிங் முடித்து பெரிய கம்பெனியில் பெரிய வேலை. சம்பளம் ஒரு லகரம். அதுவும் சென்னையிலேயே. இது நடந்து எட்டு வருடம் இருக்கும். நண்பருக்கு ஒரே பெண். அந்தக் காலம் மாதிரி இல்லை. பெண் பார்க்க வருவது ஒரு பெரிய சடங்கு. மாப்பிள்ளை வீட்டார் வைத்ததுதான் சட்டம். எத்தனையோ கிலோவுக்கு வெள்ளிச்சாமான்கள் கேட்பார்கள். வைரத்தோடு வைர மூக்குத்தி. பெரிய இடமாக இருந்தால் கார். இத்யாதி, இத்யாதி. நானே அவந்திகாவின் இளைய தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க ஒவ்வொரு ஜோதிடராக நாய் அலை அலைந்திருக்கிறேன். மாப்பிள்ளை வீட்டார் கேட்ட விஷயங்களையெல்லாம் பார்த்த அவந்திகா என்னிடம் “இதனால்தான் இந்தப் பாப்பார சங்காத்தமே வேண்டாம் என்று உன்னைத் திருமணம் செய்தேன்” என்றாள். அவளும் ஸ்ரீவைஷ்ணவம். தென்கலை. இதற்கும் என் நண்பரின் மகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பொறுங்கள். நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இப்போது காலம் மாறி விட்டது. நண்பரின் மகள்தான் தன் வாழ்வின் சகாவைத் தீர்மானிக்கும் உரிமையைத் தன் கையில் வைத்திருந்தாள். மொத்தம் 60 பேரை நிராகரித்தாள் அந்தப் பெண். பார்க்க அழகாகவும் இருப்பாள் என்பதால் கூடுதல் தைரியமாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. நண்பருக்கும் தெரியவில்லை. ஒவ்வொரு நிராகரிப்பும் ஒவ்வொரு குட்டிக் கதை. அதில் ஒரே ஒரு கதையைச் சொல்கிறேன். ஒரு பையன் பெண் பார்க்க வந்தபோது அவனுக்கு ஒரு ஃபோன் வந்தது. எடுத்தான். நாகரீகமானவன் தான். ஒரே வாக்கியத்தில் முடித்துக் கொண்டான். “மச்சி, அப்புறம் கால் பண்றேன்.” அவனையும் வேண்டாம் என்று சொல்லி விட்டது பற்றி என் நண்பருக்கு ஒரே வருத்தம். என்னம்மா, பையனும் பார்க்க அழகா லட்சணமா இருக்கான். நல்ல இடம். நல்ல வேலை. ஏன் வேண்டாம்ங்கிறே? அவன் குடிப்பாம்ப்பா, அதனால்தான் வேண்டான்னேன். அப்டியா, அவன் குடிப்பாங்கிறது உனக்கு எப்டித் தெரியும்? அவன் பேசினதை கவனிச்சியா? மச்சின்னான் பாரு. மச்சின்னு சொல்றவன் குடிப்பான். குடிக்கிறவன் எனக்கு வேண்டாம்.
இப்படியாகத்தான் அவந்திகா தன்னிடம் வரும் பணிப்பெண்களையெல்லாம் நிராகரித்தவண்ணம் இருந்தாள், இருக்கிறாள். இதோடு ஏழு பணிப்பெண்களை நிராகரித்து விட்டாள். ஓரிருவர் அவர்களாகவே ஓடி விட்டார்கள். ஒரு பெண்ணை எப்படி நிராகரித்தாள் தெரியுமா? இதோ எனக்குப் போன வாரம் வந்த கடிதத்தைப் படியுங்கள்.
சாரு,
கிச்சன் சாமான் கழுவுவதில் இன்னொரு முக்கியமான விஷயத்தை விட்டு விட்டீர்கள். கழுவிய சாமானை கவிழ்த்து வைக்கும் நுணுக்கம்தான் அது. சிறிய கரண்டியிலிருந்து பெரிய தட்டு, கிண்ணம் எல்லாவற்றையும் கழுவியபின் கவனமாகக் கவிழ்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு நாளானாலும் உலராது. கழுவிய சாமானங்களை எடுத்து வைக்கும்போது போது, ஈரமான சாமானங்களை கவனமாகத் துடைத்து வேறு வைக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால் தண்ணீர் கொட்டி மற்ற காய்ந்த சாமானங்களையும் ஈரம் செய்துவிடும். எடுத்து வைக்காமல் ரெண்டு நாள் கூடையிலேயே விட்டு வைத்தால் நீர் வற்றி, நீரிலுள்ள உப்புக்கறை வேறு படிந்து இருக்கும். நீரோடு எடுத்து வைத்தால் சாமானம் துருப் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஈரச்சாமான்களால் பல பிரச்சினைகள்.
இப்படிக்கு,
சக சாமான் கழுவி.
இப்போது புரிகிறதா, பாத்திரம் தேய்ப்பதிலுள்ள சூட்சுமம்? ஒரு பணிப்பெண் வந்தாள். ர் எதற்கு? பேசாமல் ள்ளே போட்டு விடுகிறேன். Political correctness எல்லாம் பேச்சுக்குத்தான் சரியாக இருக்கிறது. நடைமுறையில் சிக்கல். வந்ததிலிருந்தே அவந்திகாவை அவசரப்படுத்திக் கொண்டே இருந்தாள். பொறும்மா பொறும்மா என்று சொல்லிக் கொண்டே இருந்தாள் அவந்திகா. ”உங்க வீட்டுல மாப் கிடையாதா? துணியாலதான் கை வைச்சுத் துடைக்கணுமா?” என்று அநாவசியக் கேள்வியெல்லாம் கேட்டாள். அவந்திகா முறைப்பாக ரெண்டு மாப் இருக்கு, ஏன் கேக்கிறீங்க என்றாள். இல்ல, பிடிதுணியெல்லாம் இருக்கேன்னு கேட்டேன். அது பிடிதுணி, சமையல் மேடை துடைக்க என்று மீண்டும் முறைப்பாகவே சொன்னாள் அவந்திகா. பணிப்பெண் அவசரப்படுத்திக் கொண்டே இருந்தாள். அவள் வேலைக்குச் சேர்ந்து ஐந்து நிமிடங்களே ஆகியிருந்தன. அவந்திகா கொஞ்சம் பொறுங்க, நேத்து தேய்ச்சு காஞ்சு கிடக்கிற சாமான்களையெல்லாம் எடுத்து வச்சுட்டுத்தான் புதுசா தேய்க்கணும் என்றாள். அதற்குள் அவந்திகா கண் அயர்ந்த நேரத்தில் புதுப் பணிப்பெண் சாமான்கள் ரெண்டு மூணைத் தேய்த்து காய்ந்த பாத்திரங்களின் மேல் வைத்து விட்டாள். அவ்வளவுதான், காய்ந்த பாத்திரமெல்லாம் ஈரமாகி விட்டது. இரு கரங்களையும் கூப்பிய அவந்திகா அந்தப் பணிப்பெண்ணிடம் நூறு ரூபாய் கொடுத்து வீட்டுக்குப் போய் வாருங்கள் என்று அனுப்பி விட்டாள்.
சரி, நமக்குப் பழைய கதையெல்லாம் வேண்டாம். நேற்று கதைக்கு வருவோம். பாத்திரம் முடிந்த போது 11. பூனைகளுக்குக் கொடுத்த முடித்த போது 11.30. கீழே பூனைகள் பசியில் கத்துகின்றன என்றாள் அவந்திகா. அவள் ஏதோ பால்கனி தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றுவதிலும் துணி துவைப்பதிலும் பிஸியாக இருந்தாள். கீழே போய் வந்தேன். 12. மதிய சமையலுக்கு சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, முருங்கைக்காய் எல்லாம் நறுக்கி, உரித்து வைத்தேன். குக்கரை எடுத்து அரிசி களைந்து வைத்தேன். அடுத்து விழுந்த பாத்திரங்களைத் தேய்த்தேன். ஒன்றரை. அப்போதுதான் சமைக்க வந்தாள் அவந்திகா. எல்லாம் நறுக்கி தயாராக இருந்தது. இஞ்சித் துகையல் அரைக்கப் போகிறேன், இஞ்சி வேண்டும். ஓகே, இஞ்சி நறுக்கிக் கொடுத்தேன். இரண்டு மணி. குளிக்கப் போனேன். குளித்து விட்டு இன்னும் கொஞ்சம் எடுபிடி வேலை. சாப்பிடும் போது மூன்றரை. நான்கு மணிக்கு எழுத அமர்ந்த போது கடும் சோர்வு.
சீனி கேட்டார், இதையே நாம் ஹைதராபாதில் செய்த போது எந்தக் கஷ்டமும் தெரியவில்லையே, ஜாலியாக அல்லவா இருந்தது? அக்ரஹாரத்தில் இருப்பதற்கும் சேரியில் இருப்பதற்குமான வேறுபாடுதான். ஜெர்மனியில் வாழ்வதற்கும் ஃப்ரான்ஸில் வாழ்வதற்கும் உள்ள வேறுபாடுதான். புரட்சி என்றால் கூட ஜெர்மன்காரர்கள் டிக்கட் எடுத்துக் கொண்டுதான் வருவார்கள் என்றாராம் லெனின். அத்தனை ஒழுங்கு அங்கே. ஃப்ரான்ஸ் கொஞ்சம் ஜாலி. கையில் டிக்கட்டுக்குப் பணம் இல்லை. ஓ, பணம் இருந்தும் டிக்கட் வாங்க நேரமில்லை. ரயிலைப் பிடித்தாக வேண்டும். தடுப்பை ஒரே தாவாகத் தாவி ரயிலைப் பிடிக்கலாம். டிக்கட் இல்லாவிட்டால் அங்கே ஒன்றும் கிரிமினலைப் போல் நடத்த மாட்டார்கள். ஜெர்மனி அப்படி இல்லை.
ஹைதராபாத் வாழ்க்கை சொர்க்கம். காலையில் எட்டு மணிக்கு எழுந்து கொள்வோம். அங்கே போனால் என் உடல் கடிகாரம் வேலை செய்யாது. உறங்க அதிகாலை நான்கு ஆகும். எட்டுக்கு எழுந்து கொள்வேன். சீனி எழ பதினொன்று ஆகும். ஒரு கும்பலாகப் பாத்திரங்கள் கிடக்கும். நாங்கள் யாரும் அலட்டிக் கொள்ளவே மாட்டோம். சாவகாசமாக டிஃபன் சாப்பிட்டு விட்டு மதிய உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசிப்போம். விரால் மீன் என்பேன். அமீர்பெட் பகுதி. பக்கத்திலேயே மீன் மார்க்கெட். வாங்கிக் கொண்டு வந்து சீனி சமைப்பார். நானோ கோபாலோ பாத்திரம் தேய்ப்போம். எதுவுமே பிரச்சினையாகத் தெரியாது. வித்தியாசத்தை உங்களுக்குச் சரியாகப் புரிய வைத்து விட்டேனா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. களைப்பாக இருந்தால் ஸ்விக்கி போடுவோம் என்பதுதான் ஜாலிக்குக் காரணம். இங்கே என் வீட்டில் இப்போது கூட பணிப்பெண் வைத்துக் கொள்ளலாம். மேலே உள்ள (முன்னாள்) கலெக்டர் வீட்டில் இரண்டு பணிப்பெண்களும் ஒரு பணியாளரும் இருக்கின்றனர். எல்லா வீடுகளிலும் அப்படித்தான். என் வீட்டில் மட்டுமே இல்லை. அது பாதுகாப்பு இல்லை என்பது அவந்திகாவின் கருத்து. நண்பர் ஸ்ரீராம் இன்னமும் மூன்று வேளையும் ஓட்டலில்தான் சாப்பிடுகிறார். அவர் வீட்டில் ஸ்டவ் கூட இல்லை. அவருக்கெல்லாம் வெந்நீர் வைக்கக் கூட நேரமும் இருக்காது. நானும் கூட ஸ்விக்கியில் வாங்கி உண்ணலாம். அவந்திகாவுக்கு அதில் உடன்பாடு இல்லை. இப்படிப் பல கூடாதுகள். அதனால்தான் சிரமம்.
நானும் தஞ்சாவூர்க்காரன் தானே? அதனால் இன்று உஷாராகி விட்டேன். பாத்திரம் தேய்த்தேன் தான். ஆனால் எல்லாம் நேரப்படிதான். நேர விரயமே கிடையாது. சமையல் இல்லை. நேற்று வைத்த குழம்பு. பூனைகளுக்கும் கீழே போய் சாப்பாடு போட மாட்டேன் என்று அறிவித்து விட்டேன். ஆகையினால் காலையிலிருந்து தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன்.
சொல்லியிருக்கிறேன், நான் வீட்டில் இருக்கும்போது யாரோடும் போனில் பேச மாட்டேன். ஆனால் சீனியோடு ஒன்றிரண்டு விஷயங்கள் பேசித்தானாக வேண்டியிருக்கும். அதனால் மாலை நான்கு மணிக்கு மேல் அவரோடு கச்சிதமான வார்த்தைகளில் கச்சிதமாகப் பேசுவேன். ஒரு ஐந்து நிமிடம். ஆனால் பாருங்கள், இதை நீங்கள் சீனியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், ஒருநாள் கூட அவரோடு பேசும்போது போனைத் துண்டிக்காமல் பேசியதே இல்லை. அதாவது, பேச ஆரம்பிப்பேன். அவந்திகாவிடமிருந்து அழைப்பு வரும். என் அறை இருப்பது ரொம்ப தூரத்தில். அதனால் நான் போன் பேசுவதோ, யாரிடம் பேசுகிறேன் என்பதோ அவளுக்குத் தெரியவே வாய்ப்பு இல்லை. எல்லாமே த்ரௌபதி அழைத்த அபய அழைப்புதான். ஐயோ காப்பாற்று சாரு என்ற பதற்றம் எப்போதுமே தெரியும். கக்கூஸில் இருந்தாலும் அடித்துப் பிடித்துக் கொண்டுதான் ஓட வேண்டியிருக்கும். பார்த்தால் ஏணிப்படியின் பத்தாவது படியில் கையில் மிகப் பெரிய சூட்கேஸையோ பாத்திரத்தையோ வைத்துக் கொண்டு தடுமாறிக் கொண்டிருப்பாள். உன்னைக் கூப்பிட வேண்டாம் என்று பார்த்தேன். ஏணி ஆடுகிறது, கொஞ்சம் பிடி. ங்கொய்யால, ஓடாமல் இருப்பீர்களா? இதையெல்லாம் பார்த்துத்தான் என் நண்பன் ஒருத்தன் கல்யாணமே வேண்டாம் என்று ஒண்டிக்கட்டையாக இருக்கிறான்.
இன்று என்னவோ தெரியவில்லை, காலை எட்டரை மணிக்கு சீனியிடமிருந்து போன். அதை நான் ஒன்பது மணிக்குத்தான் பார்த்தேன். (சமையலறையில் அல்லவா இருந்தேன்?) ஒன்பது மணிக்கு போனை எடுத்து அழைத்தேன். இன்று எப்படியும் குறுக்கீடு இருக்காது. அப்போது அவந்திகா ஆயில் புல்லிங்கில் இருந்தாள். இருபது நிமிடங்களுக்கு அவளால் பேச இயலாது. ஆனால் விதியின் சதி என்னவென்றால், சீனியிடம் பேசி ஒரு நிமிடம் ஆகியிருக்காது, மீன் கடையிலிருந்து போன். அதை எடுத்தே ஆக வேண்டுமே? அதனால் இன்றும் சீனியிடம் இதோ அழைக்கிறேன் என்று சொல்லி விட்டு மீன் கடைக்கு ஃபோன் பண்ணினேன். அது என்ன காரியம் என்றால், பூனைகளுக்கு மீன் தீர்ந்து விட்டது. அரசு மீன் கடைக்கு போன் போட்டேன். அவர் கொஞ்ச நேரம் கழித்துத்தான் எடுப்பார். சுரேஷ் என்று பெயர். அங்கே போய் வாங்கி வருவது மேலே இருக்கிறாரே கலெக்டரின் பணியாள் ஜான். அங்கே வேலையை முடித்து விட்டு எங்களுக்கு இப்படி வாரம் ஒருமுறை போய் வருவார். மீன் கடைக்கு மட்டும். சுரேஷிடம் என்ன மீன் இருக்கிறது என்று கேட்டேன். ரோகும் பாறையும் என்றார். ரோகு ஆறு கிலோ (பூனைகளுக்கு ஒரு வாரம் வரும்), பாறை அரை கிலோ (எனக்கு) என்றேன். எடுத்து வைக்கிறேன் என்றார். பிறகு மீண்டும் சீனியை அழைத்தேன். அடக் கடவுளே, ஆயில் புல்லிங் செய்து கொண்டிருந்தாலும் வேறு இடத்திலிருந்து அழைப்பு. பத்து மணிக்கு ஜான் வந்தார். ரோகு ஆறு கிலோ, பாறை அரை கிலோ என்றேன். ரோகினின்னு மீன் இருக்கா சார் என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ஜான். இல்லிங்க, ரோக், ரோகு.
ரோகினி.
இல்லிங்க ஜான். ரோகு ரோகு.
ஓ சரி சார்.
பணத்தைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு சத்தமாக ஆறு கிலோ ரோகினி, அரை கிலோ பாறை என்று மனப்பாடம் செய்து கொண்டே இறங்கினார் ஜான். ஜான் போனால் போலீஸ் பிடிக்காது. கேட்டால் கலெக்டர் பெயரைச் சொல்லி விடலாம். கலெக்டர் பெயரைச் சொல்லி விடலாம். கலெக்டர் அவர் நாளில் மிகவும் பிரபலமாக இருந்தவர். பெயரைச் சொன்னாலே தெரியும்.
கொஞ்ச நேரம் ஆனதும் சுரேஷுக்கு போன் செய்தேன். வேலையைக் கொடுத்தோம் என்று மறந்து போனால் ஆபத்து. ஏனென்றால், நேற்று இங்கே இருக்கும் சூப்பர்வைஸரிடம் பணம் கொடுத்து பெட்ஷாப் அனுப்பினாள் அவந்திகா. விஸ்காஸ் வெட் சாஷே வாங்கி வர வேண்டும். மூன்று பாக்ஸ் என்று சொல்லி 1500 ரூபாய் கொடுத்தாள். அதற்கு முன்பே அவள் கச்சேரி ரோட்டில் இருந்த அந்த வெட் ஷாப்புக்கு போன் செய்து ஏற்பாடு செய்திருந்தாள். நான்கு பாக்ஸ் கேட்டாள். மூன்றுதான் இருந்தது. ஆள் அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தாள். சூப்பர்வைஸர் தெளிவாகக் கேட்டுக் கொண்டு போய் மூன்று பாக்கெட் சாஷே 105 ரூபாய்க்கு வாங்கி வந்தார். ஒரு பாக்ஸ் 350 ரூ. மூன்று பாக்ஸ் 1050 ரூ. இவர் வாங்கி வந்தது மூன்று பாக்கெட். பிறகு மீண்டும் போனார். இப்படி ஆகி விடக் கூடாது என்று கண்கொத்திப் பாம்பு மாதிரி அவர்களின் பின்னேயே நாமும் போய்க் கொண்டு இருக்க வேண்டும். சுரேஷுக்கு போன் போட்டால் அவர் பதற்றத்துடன் “சார், நான் சாந்தோம் கடையில் இல்லை சார், தேவர் சிலை கிட்ட இருக்கிற கடையில் இருக்கேன்” என்றார். அடப் பாவி, அதை முதலிலேயே சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா? இங்கே சாந்தோம் கடைக்குப் போன ஜான் சுரேஷ் பெயரைச் சொல்லி கேட்க அந்த சாந்தோம் கடைக்காரர் சுரேஷைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். எல்லா கடையிலும் ஒரே விதமான மீன் இருக்காது. சரி என்ன நடந்தது பார்க்கலாம் என்று ஜானுக்கு போன் போட்டால் போன் ஸ்விட்ச் ஆஃப். முடிந்தது கதை. சரி, சாந்தோம் கடையைக் கூப்பிடுவோம் என்று கூகிளில் சாந்தோம் கடையின் நம்பரைக் கண்டு பிடித்து அழைத்தேன். அந்த ஆள் இன்று மட்டும் லீவாம். கடையின் லேண்ட்லைன் நம்பரைக் கொடுத்தார். அழைத்தேன். நீட்டி முழக்க வேண்டாம். ஜான் ஒரு மூன்று கிலோ ரோகை வாங்கிக் கொண்டு வந்தார். அவ்வளவுதான் இருந்ததாம். ஆமாம், உங்கள் போன் என்ன ஆயிற்று ஜான்? அதில் சார்ஜ் போய்டுச்சு சார், சார் வீட்டில் சார்ஜில போட்டிருக்கேன்.
***
பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai