பூச்சி – 21

தில்லியில் ஐம்பது பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு இருந்தும் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல், எங்கள் இஷ்டப்படி இருப்போம் என்ற மனோபாவத்துடன் நடந்து கொண்ட தப்லிக் ஜமாத்தின் செயல்பாடுகளின் விளைவு இன்று தில்லியில் 1069 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் என்றால் அதில் 712 பேர் தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள்.  கடந்த 24 மணி நேரத்தில் பாஸிடிவ் முடிவு வந்தவர்களில் 128 பேர் – அதாவது 77 சதவிகிதம் பேர் தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.  இதைத்தான் குறிப்பிட்டேன், எந்த இந்துத்துவ சக்தியாலும் ஒருங்கிணைக்க முடியாத இந்துக்களை இந்த விஷயம் ஒருங்கிணைத்திருக்கிறது என்று. 

***

ஐரோப்பாவின் அத்தனை நாடுகளும் இத்தாலியைப் போல், ஸ்பெயினைப் போல், ஃப்ரான்ஸைப் போல் பாதிக்கவில்லை.  கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அத்தனை மரணங்கள் இல்லை.  ஸ்பெய்னில் 17000, இத்தாலியில் 20000, ஃப்ரான்ஸில் 14000 மரணங்கள்; ஆனால் ஆஸ்த்ரியாவில் 350.  இப்படியெல்லாம் எழுதவே பயங்கரமாக இருக்கிறது.  இது போன்ற மரணங்களையெல்லாம் வரலாற்றில்தான் படித்திருக்கிறோம்.  1347இலிருந்து 1351 வரை ஐரோப்பாவின் மொத்த ஜனத்தொகையில் 60 சதவிகிதத்தை அழித்து விட்டது ப்ளேக் நோய்.  ப்ளாக் டெத் என்று அப்போது அதை அழைத்தார்கள்.  மொத்தம் 20 கோடி பேரை பலி வாங்கியது.  கருங்கடலிலிருந்து இத்தாலி வழியாக ஐரோப்பா வந்த வணிகக் கப்பல்களிலிருந்த எலிகள் மூலம் பரவியது அந்த ப்ளேக்.  அப்போதும் ப்ளேக் நோய்க்கு மருந்து எதுவும் இல்லை.  நோய் பீடிக்காதவர்கள் தனிமையில் இருந்ததன் காரணமாக மட்டுமே தப்பிப் பிழைத்தார்கள்.  மனித குல வரலாற்றிலேயே நடந்த மிகப் பெரிய கொள்ளைநோய்ப் பேரழிவு அதுதான். 

ஆனால் அந்தக் கொள்ளை நோய் கூட ஐரோப்பாவையும் வட ஆஃப்ரிக்காவையும் ஐரோப்பாவைத் தொட்டுக் கொண்டிருந்த ஆசிய நாடுகளையும் மட்டுமே பாதித்தது.  ஆனால் இன்றைய கொரோனா, உலகம் பூராவையும் ஸ்தம்பிக்கச் செய்து விட்டது.  உலகமே நடமாட்டத்தை இழந்து கூட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது.  அறிவியல் புனைவுகளிலும், ஹாலிவுட் apocalypse படங்களிலும் மட்டுமே பார்த்திருந்த விஷயம் இப்போது நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது.  இப்படி ஒரு சம்பவம் மனித குல வரலாற்றிலேயே நடந்திருக்க வாய்ப்பில்லை.  ரே ப்ராட்பரியின் மில்லியர் இயர் பிக்னிக், பெடஸ்ட்ரியன், ஆர்த்தர் ஸி. க்ளார்க்கின் நைன் பில்லியன் நேம்ஸ் ஆஃப் காட் போன்ற கதைகளில்தான் இது போன்ற பேரழிவுகளைப் படித்திருக்கிறோம்.  இப்போது நம் கண் முன்னே காண்கிறோம். 

நியூயார்க்கர் பத்திரிகையின் ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். இயக்குனர் Mo Scarpelli மார்ச் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று எடுத்தது.  பார்க்கவே பயங்கரமாக இருந்தது.  இப்போதைய ரோம் இப்போதைய இந்திய நகரங்களைப் போல் இல்லை.  இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ என்னவோ, சாந்தோம் நெடுஞ்சாலையில் ஏகப்பட்ட வாகனங்கள்.  வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட இந்த அளவு கூட்டம் இருக்குமா என்று தெரியவில்லை.  அவ்வளவு கூட்டம்.  எதிரே காய்கறிக்கடையிலும் கூட்டம்.  லாக்டவுனை இன்னும் இரண்டு வாரம் நீட்டிக்கப் போகிறார்கள் என்பதை எதிர்பார்த்து எல்லா மக்களும் சாமான்கள் வாங்கிப் போட வெளியே வந்து விட்டனர்.  ஆனால் ரோம் மயான பூமியைப் போல் இருந்தது.  ஒரே ஒரு வயதான பெண்மணி ஏதோ ஒரு பையை எடுத்துக் கொண்டு போகிறார்.  டவுன் பஸ் காலியாகப் போகிறது.    ஒரே ஒரு புறா தத்தித் தத்தி நடை பயில்கிறது.  தெருவில் வேறு சலனமே இல்லை.  Dream’s Bar-இன் வெளியே ஒரு காகிதத்தில் அடுத்த அறிவிப்பு வரும் வரை பார் மூடியிருக்கும்; நாங்களும் வீட்டிலேயே இருக்கிறோம் என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறது.   அந்த நிலையிலும் ஒரு பெண் தெருவோரத்தில் இருக்கும் ஒரு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறார்.  ஒரு வீட்டின் ஜன்னலிலிலிருந்து ஒரு ஆள் ஒரு குழந்தைக்கு வேடிக்கைக் காட்டுகிறார்.  அவர் எதிரே ஒரு அழகான பெரிய வெண்புறா அமர்ந்திருக்கிறது.  ஒரு கடையின் வாசலில் இருபது முப்பது பேர் ஆறு அடி இடைவெளி விட்டு நிற்கிறார்கள்.  எல்லோரும் முகமூடி அணிந்திருக்கிறார்கள்.  ஒரு இளைஞனை ஒரு பெண் தன் முகமூடியை வாய்க்குக் கீழே இழுத்து விட்டு விட்டு உதடுகளில் முத்தமிடுகிறாள்.  எதிரே இருக்கும் ஸ்கார்பெல்லியை (அவர்தான் கேமராவும் கூட) அதற்கப்புறம்தான் கவனித்தவளைப் போல் பார்க்கிறாள்.  அதிர்ச்சி அடையவில்லை.  சகஜமாக நகர்ந்து போகிறாள்.  என்ன இருந்தாலும் ஐரோப்பா இல்லையா?  ஒரு இடத்தில் பெட் ஷாப் இருக்கிறது.  அதில் ஒரு பெரிய பூனைப் படம்.  (ஆஹா, இந்த ஆவணப் படம் ஒரு கிளாஸிக்!) பல இடங்களில் Everything will be OK என்று எழுதப்பட்டிருக்கிறது.  இப்போது கேமரா கீழேயிருந்து மேலே பார்க்கிறது.  முதல் மாடியில் ஒரு இளைஞன் கையுறை மாட்டியபடி தன் வீட்டு பால்கனியின் கைப்பிடியைத் துடைத்துக் கொண்டிருக்கிறான்.  ரோம் நகரில் ஓடும் திபர் நதியின் கரை ஓரத்தில் ஒருவர் ஓடிக் கொண்டிருப்பதை கேமரா லாங் ஷாட்டில் காண்பிக்கிறது.  எட்டு நிமிடம் ஓடுகிறது இந்த ஆவணப்படம்.

***

இப்போதும் சொல்கிறேன்.  நம்மிடம் இந்தக் கொள்ளை நோயிலிருந்து தப்புவதற்கான மருந்துகள் உள்ளன.  அதை அறியாத மூடர்களாக இருக்கிறோம் நாம்.  மேற்கத்தியர்கள் கொடுத்த கல்வியை மட்டுமே படித்து விட்டு முகநூலில் நம்முடைய பழமையைக் கேலியும் கிண்டலும் பேசித் திரிகிறோம்.  மோடியையும் இந்துத்துவர்களையும் விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு நம் பழமை பற்றிய எந்த அறிவும் இல்லாமல் மூடர்களாய் மட்டிப் பதர்களாய் நம் பாரம்பரிய மருத்துவத்தை முகநூலில் கேலி செய்து கொண்டிருக்கிறோம்.  இது நம் அப்பன் முகத்தில் காறி உமிழ்வதைப் போன்ற மடத்தனம்.  கேரளத்தில்தான் வெளிநாட்டில் வாழும் மக்கள் அதிகம்.  போக்குவரத்தும் அதிகம்.  அப்படியானால் மரண பலியில் அது முதலில் அல்லவா நிற்க வேண்டும்?  இல்லை.  இதுவரை இரண்டே இரண்டு பலிகள்.  கேரளம் இந்தக் கொரோனா தொற்றை விரட்டுவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்குகிறது.   குட்டி ரேவதியின் பதிவின் மூலம் கேரள அரசு ஆணை ஒன்றைப் பார்த்தேன்.  இந்தத் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் அபராஜித தூப்ஸ் சூரணம், வில்வாதி குலிகா, சுதர்ஸன் மாத்திரை, சதாங்கம் கஷாய சூரணம் என்ற நான்கையும் சிபாரிசு செய்திருக்கிறார்கள். சிபாரிசு செய்ததோடு மட்டும் அல்லாமல்,  மருந்துகளையும் பல அரசுத் துறைகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.  சதாங்க கஷாய சூரணத்தை இரண்டு ஸ்பூன் எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.  இதில் சுதர்சன மாத்திரையில் மட்டும் எத்தனை மூலிகைகள் இருக்கின்றன என்று பார்ப்போம்.

சந்தனம்

தேவதாரு

வசம்பு

கோரைக் கிழங்கு

கடுக்காய்

துல்கநரி

கர்க்கடசிங்கி

இஞ்சி

கண்டங்கத்திரி

நிலவேம்பு

பற்படகம்

வேப்பிலை

மிளகுக் கொடியின் வேர்

பேராமுட்டி வேர்

பூலாங்கிழங்கு

இப்போது எத்தனை வந்துள்ளது?  இதுபோல் அறுபது எழுபது மூலிகைகள் சேர்ந்ததுதான் சுதர்ஸன மாத்திரை.

நாளை தொடர்கிறேன்…