மன்னிப்பு (8)

அராத்து எழுதியதைப் படித்து விட்டீர்களா?  இப்போது இது பற்றி நான் இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.  ஆனால் ஒரு வருத்தமும் இருக்கிறது.  அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளுக்குத்தான் இப்படிப்பட்ட சர்ச்சை ஏற்பட வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் தகுதியில்லாத ஒரு புத்தகத்துக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது.  பரவாயில்லை. 

எனக்கு உற்றமும் சுற்றமும் இலக்கியம்தான்.  உடன்பிறந்தவர்களோடு எந்தத் தொடர்பும் இல்லை.  சண்டையும் சரி, சமாதானமும் சரி, இலக்கியவாதிகளோடுதான்.  ஷோபா சக்தியின் பதிவில் நீங்கள் அதை ஓரளவு யூகித்திருக்கலாம்.  என் வீட்டில் கூட நான் கொஞ்சம் அந்நியமாக உணர்வேன்.  ஆனால் ஹமீதின் வீட்டில் அப்படி உணர்ந்ததில்லை.  சமையல் உள் வரை சுவாதீனமாகச் சென்று வருவேன்.   அவருக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம்.  அடித்துக் கொள்வோம்.  சேர்ந்து கொள்வோம்.  எங்களை சண்டை போட வைப்பதும் இலக்கியம்; சேர வைப்பதும் இலக்கியம்.  பணம் காசு புகழ் அல்ல.  எனவே என்னைத் திட்டவும், பாராட்டவும், கண்டிக்கவும் எல்லாவற்றுக்கும் ஹமீதுக்கு உரிமை உண்டு.  சமீபத்தில் அவருடைய முகநூலில் அவர் பதிவிட்ட ஒன்றை என் பிறந்த நாள் தினப் பரிசு என்று சொல்லி என் நண்பர் ஒருவர் என்னிடம் காண்பித்தார். 

”சுஜாதா, சுந்தரராமசாமி, நகுலன், ஞானக் கூத்தன், அம்பை, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ரேஞ்சில் பிற இந்திய மொழிகளில் எதிலாவது எழுதிய எழுத்தாளர்கள் யாரும் இதுவரை சாகித்ய அகடாமி போன்ற ஒரு விருதை வாங்காமல் இருந்திருக்கிறார்களா?”

என் நண்பனுடைய பட்டியலில் கூட இடம் பெற முடியாத போது வேறு யார் என் பெயரைச் சொல்லுவார் என்று நினைத்துக் கொண்டு அதை அப்படியே கடந்து போனேன்.  இது எனக்கு மிகவும் பழகிப் போன ஒன்று.  பிரகாஷ் ராஜ் ஒருமுறை விகடன் மூலம் அவர் அறிந்த எழுத்தாளர்கள் என்று சொல்லி, தமிழில் எழுதியுள்ள அத்தனை எழுத்தாளர்களின் பெயர்களையும் பட்டியல் இட்டிருந்தார்.  தேவன் முதற்கொண்டு வண்ணதாசன், நாஞ்சில் நாடன் வரை அத்தனை பெயரும் இருந்தது.  ஆனால் என் பெயர் மட்டும் இல்லை.  என் பெயரைச் சொன்னால் அவருக்கு சினிமா வாய்ப்பு மறுக்கப்படும் போலும் என்றே அதை எடுத்துக் கொண்டேன்.  ஆனால் ஹமீதுக்கு அப்படிப்பட்ட காரணங்கள் இருக்காது.  அவருக்கு என் எழுத்து பிடிக்கவில்லை.  அதற்கு நான் என்ன செய்ய முடியும்? சரி, விஷயத்துக்கு வருகிறேன்…

ஹமீதின் விழாவில் நான் கலந்து கொள்ள மறுத்ததற்கு எனக்கு எவ்வளவு உரிமை உண்டோ அந்த அளவுக்கு அதில் கலந்து கொள்ள மறுத்ததற்காக என்னைத் திட்ட அவருக்கும் உரிமை உண்டு.  ஏனென்றால், எங்கள் இருவருக்குமே இலக்கியம் வேறு, வாழ்க்கை வேறு அல்ல.  20 ஆண்டுக் காலமாக என் புத்தகங்களை வெளியிட எந்த சும்பனும் முன்வராத போது அதைத் தைரியமாக வெளியிட முன்வந்தது ஹமீது ஒருவர்தான்.  உயிர்மை பதிப்பகம் மட்டும்தான் அதைச் செய்தது.  (அதற்கு முன் நான் எல்லாப் பதிப்பகங்களிலும் கேட்டு மறுதலிக்கப்பட்டு சோர்வடைந்திருந்தேன்.)   இந்த நிலையில் ஹமீது என் மீது வருத்தப்பட்டதைக் கேடயமாகப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட  ”இளம் எழுத்தாளர்” என் மீது கல் எறிவதைத்தான் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.  நான் அமைதி காத்தேன்.  ஆனால் தொடர்ந்து கல் எறியப்படும் போது என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.

”நாவல் பூராவும் ஒரே டெம்ப்ளேட்டாக இருக்கிறதே?  அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது என்று எவ்வளவு காலத்துக்குத்தான் எழுதிக் கொண்டிருப்பீர்கள்?” என்று நான் கேட்டால் அதற்கு இளம் எழுத்தாளர் “துக்கம் என்பதை துக்கம் என்று படிக்கக் கூடாது.  தொண்டை என்பதை தொண்டை என்று படிக்கக் கூடாது” என எனக்குப் பாடம் எடுக்கிறார்.  சரி, வேறு எப்படிப் படிப்பதாம்?  துக்கம் என்பதை கக்கம் என்றும், தொண்டை என்பதை புண்டை என்றும் படிக்க வேண்டுமா?   என்ன இது ஏமாற்று வேலை?  துக்கத்தை அப்படித்தான் சொல்ல முடியும் என்று சொல்லி இருந்தாலாவது பரவாயில்லை.  அதை விட்டு விட்டு துக்கம் என்பதை துக்கம் என்று படிக்காதே என்றால் என்ன அர்த்தம்?  நீங்கள் ஒருவனை மூடனே என்று சொல்கிறீர்கள்.  அவன் உடனே சண்டைக்கு வந்தால் மூடனே என்பதை மூடனே என்று புரிந்து கொள்ளக் கூடாது என்றால் நீங்கள் பித்தலாட்டம் செய்கிறீர்கள் என்று மட்டும்தான் அர்த்தம்.   

எனக்கு ஹமீது மீது எந்த வருத்தமும் இல்லை.  நண்பன் கேட்டு ஒரு விஷயத்தை மறுக்க வேண்டியதாகி விட்டதே என்ற வருத்தம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது.  அதனால்தான் மன்னித்து விடுங்கள் என்று பொதுவிலேயே கேட்டேன்.  இன்னமும் இது பற்றி எனக்குக் குற்ற உணர்ச்சி இருக்கிறது.   ஆனாலும் நான் முன்பு போல் இல்லை.  ஒருவருடைய விழாவில் வந்து அந்தப் புத்தகத்தைத் திட்டுவதை நான் தவிர்க்கவே நினைக்கிறேன்.  எவ்வளவு நியாயம் இருந்தாலும் அது சரியான காரியம் அல்ல.  ஹமீது நினைப்பார், இப்போது இவ்வளவு வரிந்து கட்டி எழுதும் இவர் இதையெல்லாம் மேடையிலேயே பேசி இருக்கலாமே என்று.   அப்படி நான் செய்தால் அது அதர்மம்.  அது அந்த இளம் எழுத்தாளரின் மேடை.  இது என்னுடைய ப்ளாக்.  மேலும், இதையெல்லாம் எழுத நான் விருப்பப்படவே இல்லை.  அந்த இளம் எழுத்தாளர்தான் என்னை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருக்கிறார்.  ஒரு நாவல் வெளிவருவதற்கு முன்பே அது பற்றி எதிர்மறையாகப் பேசுவது நியாயமான காரியமே அல்ல.  அந்தக் கொடுமையான விஷயத்தை என்னை செய்யச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கிறார் இளம் எழுத்தாளர்.  என்னை அவமானப்படுத்துவதன் மூலம் இதை அவர் செய்கிறார்.  Wolf Totem நாவலை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்கிறார் அவர்.  எப்படி இருக்கிறது கதை?  ஏய்யா, ஒரு வாக்கியத்தைக் கூட ஒழுங்கா எழுத மாட்டேங்கிறே என்றால் உனக்கு மூளை இல்லை என்று பதில்.  நான் 45 ஆண்டுகளாக சீரியஸாகப் படித்து வருகிறேன்.  படிப்பது தான் என் பிரதானமான தொழில்.  எழுத்தெல்லாம் அதற்கு அடுத்தது தான்.  என்னிடம் வந்து ஒரு இருபத்தஞ்சு வயசு வாண்டு சொல்கிறது, நீ தப்பாகப் படிக்கிறாய் என்று.   இங்கே தமிழ்நாட்டில் wolf Totem ஓநாய் குலச்சின்னம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகி வரும் முன்பே அந்த நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து மே மாதம் 2012-இல் ஏஷியன் ஏஜ்/டெக்கான் கிரானிக்கிள் தினசரிகளில் இந்த நாவல் பற்றி எழுதி விட்டேன்.   பின்வருவது அந்தக் கட்டுரையின் தமிழ் வடிவம்:

Jiang Rong எழுதிய Wolf Totem என்ற நாவல், மா சே துங்கின் ரெட் புக்கைப் போல் மில்லியன் கணக்கில் விற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த நாவலை இலக்கியம் என்று சொல்வதை விட ஆந்த்ரபாலஜி என்றே சொல்லுவேன்.  Oscar Lewis இன் La Vida என்ற ஆந்த்ரபாலஜி புத்தகத்தில் இருந்த அதே விறுவிறுப்பு இந்தப் புத்தகத்திலும் இருக்கிறது.  Puerto Ricoவின் San Juan நகரில் உள்ள ஒரு சேரியில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் கதைதான் La Vida.  இந்தக் கதையில் எந்தக் கற்பனையும் கிடையாது.  அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பேட்டியை அப்படியே கேட்டு பதிவு செய்திருக்கிறார் ஆஸ்கார் லீவிஸ். அது ஒரு சமூக மானுடவியல் ஆய்வாக இருந்தாலும் குரூரமும், வன்முறையும், காமமும் மட்டுமே நிரம்பிய அந்தச் சேரி மக்களின் வாழ்வை எல்லோரும் ஒரு நாவலைப் போலவே வாசித்தார்கள். ஆனால் இந்தியாவில் நாவல் என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருப்பவை எல்லாம் சுயசரிதைகள்.  பெரும்பாலும் அவையெல்லாம் அந்த எழுத்தாளரின் தாத்தா, பாட்டி குடும்பக் கதையாகவே இருப்பதால் இந்திய ஆங்கில எழுத்து எனக்கு மிகவும் சலிப்பூட்டுகிறது. இதற்குக் காரணம், ஆங்கிலத்தில் எழுதக் கூடியவர்கள் இங்கே மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுடைய தயிர் வடை கதைகளும் ஒரே அச்சில் வார்த்தெடுத்ததைப் போல் இருக்கின்றன. 

Wolf Totem நாவலில் இந்தப் பிரச்சினை எதுவும் இல்லை.  சீனாவின் கலாச்சாரப் புரட்சி காலகட்டத்தில் பெய்ஜிங் நகரிலிருந்து மங்கோலியாவின் உள்பகுதியில் உள்ள Olon Bulog என்ற சமவெளிக்குச் செல்லும் Chen Shen என்ற இளம் மாணவன்,  அங்கே வசிக்கும் nomadic  இடையர்களுடன் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்து விட்டு  பெய்ஜிங் திரும்புகிறான்.  அந்தப் பதினோரு ஆண்டுகளின் கதைதான் வுல்ஃப் டோட்டம்.

மங்கோலியாவின் செங்கிஸ்கான்தான் உலக வரலாற்றிலேயே அதிக நாடுகளைப் பிடித்தவன்.  செங்கிஸ்கான் நாடோடி இனத்தைச் சேர்ந்தவன்; உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றைச் சேர்ந்தவன்; அவன் பேசிய மங்கோலிய மொழிக்கு எழுத்து கூட கிடையாது.  Primitive கலாச்சாரத்தை சேர்ந்தவன்.  அப்படிப்பட்ட ஒருவனால் எப்படி உலகம் முழுவதையும் பிடிக்க முடிந்தது?  மங்கோலியர்களின் wolf totem தான் காரணம் என்கிறார் நாவலாசிரியர்.  ஓநாயிடமிருந்துதான் – ஓநாய் மற்ற மிருகங்களை எப்படி வேட்டை ஆடுகிறது என்பதிலிருந்துதான் அவர்கள் அத்தனை ராணுவத் தந்திரங்களையும் கற்றுக் கொண்டார்கள்.  மங்கோலிய இனம் ஓநாய்; சீனர்கள் ஆட்டு மந்தை. ஓநாய் குழு மனப்பான்மை கொண்டது.  ஆடுகள் அப்படி அல்ல; ஒரு ஆட்டை வெட்டினால் மற்ற ஆடுகள் சந்தோஷமாக அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்.  ஏனென்றால், அவன் என்னைக் கொல்லவில்லையே என்ற சுயநலம். பிரம்மாண்டமான பெருஞ்சுவரைக் கட்டினாலும் இந்த ஆட்டுமந்தை மனோபாவத்தினால்தான் சீனர்கள் மங்கோலியர்களிடம் தோற்றார்கள்.  நாடோடிகள் கலாச்சாரம் Vs உழவர் கலாச்சாரம் என்று இதை ஒரு binary opposition ஆக வகைப்படுத்துகிறார் Jiang Rong.  நீங்கள் எந்த விலங்கை வேண்டுமானாலும் பழக்கி விடலாம்; ஆனால் ஓநாயை மட்டும் பழக்கவே முடியாது.  ஓநாய் தன் சுதந்திரத்துக்காக உயிரையே கொடுக்கக் கூடியது.  மங்கோலியர்களும் அப்படியே.  அந்த வகையில் மங்கோலியா ஒரு ஆன்மீக சொர்க்கம்.  சுமார் 700 பக்கங்களில் Jiang Rong வைக்கும் வாதம் இதுதான்.  ஆனால் அவர் சொல்லும் ஆன்மீக சொர்க்கம் எதார்த்தத்தில் எப்படி இருக்கிறது? ரத்த ஆறு ஓடும் ஒரு பூமி அது.  அந்தச் சமவெளியில் வாழும் அத்தனை உயிர்களையும் சாப்பிடுகிறது ஓநாய்; மனிதர்கள் உட்பட.  மனிதனும் அங்கே வாழும் அத்தனை உயிர்களையும் சாப்பிடுகிறான்.  நாவலில் ஓநாய்கள் குதிரைக் குட்டிகளைக் கொன்று தின்னும் இடம் மிகவும் கொடூரமானது.  இப்படி குரூரம், வன்முறை, மிருகவெறி (beastiality) ஆகியவற்றை மட்டுமே கொண்ட ஒரு கலாச்சாரத்தை எப்படி ஒருவர் வியந்து பாராட்ட முடியும்? ஓநாய் சுதந்திரமாக இருக்கிறது என்றால் அந்த சுதந்திரத்திற்காக அந்த பூமியில் உள்ள அத்தனை உயிரினங்களையும் அது கொன்று தின்கிறதே? 

இடையர்களின் தலைமைக் கிழவன் chen shen-இடம் ”மான்களை ஓநாய் வேட்டையாடவில்லை என்றால் மான்களின் தொகை அளவில்லாமல் பெருகி இந்தச் சமவெளியில் உள்ள எல்லா புல்பூண்டுகளும் முற்றாக அழிந்து இந்த இடமே பாலைவனம் ஆகி விடும்” என்கிறான்.  இந்த வாதத்தில் ஒரு eco-balancing இருக்கிறது.  ஆனால் ஒரே ஒரு இனம் மற்ற இனத்தையெல்லாம் கொன்று தின்னும் ஃபாஸிஸ்ட் பூமியை விட பாலைவனம் பரவாயில்லை தானே?  குறைந்த பட்சம் பாலைவனத்தில் ரத்த ஆறு ஓடாதே?  

ஜப்பானிய ஜென் பௌத்தத்தில் ம்யூ என்று ஒரு நிலை உள்ளது. மிகப் பெரும் தத்துவார்த்த உண்மைகளைக் கொண்டிருக்கும் இந்த ம்யூவை சுலபமான முறையில் இப்படி விளக்கலாம்.  ”குடித்து விட்டு உன்னை அடித்துக் கொண்டிருந்த உன் கணவன் இப்போது அதை நிறுத்தி விட்டானா?”  இதற்கு நீங்கள் ஆமாம் என்றும் சொல்ல முடியாது;  இல்லை என்றும் சொல்ல முடியாது.  மௌனம்தான் சரியான பதிலாக இருக்க முடியும்.  அதைத்தான் mu concept of emptiness என்று ஜென் சொல்லுகிறது. இது Void of Quantum physics-உடனும் தொடர்புடையது. 

மற்ற உயிர்களை அடித்துத் தின்பதையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் ஓநாய்களையும் மனிதர்களையுமே racial supremacy-யோடு பக்கம் பக்கமாகச் சொல்லும் Wolf Totem-த்தைப் படித்த போது எனக்கு இந்தியாவின் ஞானிகளைப் பற்றியும் சூஃபிகளைப் பற்றியும் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.  காட்டுமிராண்டித்தனமான ஒரு வாழ்க்கையும் கலாச்சாரமும் ஆன்மீக சொர்க்கம் என்றால் எந்த உயிரையும் கொல்லலாகாது என்று சொன்ன மகாவீரரையும் புத்தரையும் உருவாக்கிய இந்திய நிலப்பகுதியை என்னவென்று சொல்வது? தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக இன்னொரு உயிரைக் கொல்லும் ஓநாயிடமிருந்து போர்த் தந்திரங்களைக் கற்றுக் கொண்டு உலக மக்களையெல்லாம் அடிமைப்படுத்திய ஃபாஸிஸ்ட் செங்கிஸ்கானை ஒரு சூப்பர்மேனாக உருவகப்படுத்தியிருக்கிறார் ஜியாங். அப்படியானால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கொலைக்கருவியை தனது தியாகத்தின் மூலம் தியாகத்தின் குறியீடாகவே மாற்றிய இயேசுவை என்னவென்று சொல்வது?

ஓநாயை குலச் சின்னம் என்று சொன்னால் அந்த ஓநாயையும், சிங்கம் புலி, கரடிகளையும் நாய்க்குட்டிகளைப் போல் தன் பின்னே ஓடி வரச் செய்த ஆதி சங்கரரை என்னவென்று சொல்வது?  எல்லா விலங்குகளும் அந்த மனிதனின் பின்னே ஏன் அப்படி ஓடின? அதன் பின்னால் இருந்த “உண்மை” என்ன? நம்முடைய விஞ்ஞானக் கோட்பாடுகளையெல்லாம் தாண்டிய எத்தனையோ karamat-களினால்தானே சூஃபி ஞானிகள் இந்தியா முழுவதும் இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள்? (கராமத் = அற்புதம்)

உணவுக்காக இன்னொரு உயிரினத்தை அடித்துத் தின்னும் கலாச்சாரத்தை உன்னதமாகப் போற்றும் ”ஓநாய் குலச்சின்னம்” எனக்குள் இது போன்ற ஆயிரக் கணக்கான கேள்விகளை எழுப்பியது.  இந்த உலகிலேயே அதி அற்புதமான, நம்ப முடியாத விஷயம் என்னவென்றால் மற்றவர்களுக்காகத் தன்னை அழித்துக் கொள்வதுதான்.  12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர் அவர். தன் குருவிடம் சென்று பிரம்ம ரகஸ்யத்தைக் கேட்கிறார்.  பல நாட்கள் அலைந்து,  பல தினங்கள் உண்ணா நோன்பு இருந்த பிறகுதான் குரு அவருக்கு அந்த ரகஸ்யத்தைச் சொல்கிறார்.  சொல்லி விட்டு,  ”இதை மற்றவர்களுக்குச் சொன்னால் உனக்கு நரகம்தான் கிடைக்கும்” என்றும் எச்சரிக்கிறார்.  ஆனால் சிஷ்யனோ தான் பெற்ற பிரம்ம ரகஸ்யத்தை கோவில் கோபுரத்தின் மேலே ஏறி ஊர் முழுக்கச் சொல்லுகிறான்.  ”இந்த ரகஸ்யத்தை அறிந்து கொண்டதால் இத்தனை பேருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்றால் என் ஒருத்தனுக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை” என்கிறார் அந்த மனிதர்.  அவர் பெயர் ராமானுஜர். ஸ்ரீவைஷ்ணவத்தின் ஸ்தாபகர்.

இன்னொரு அதிசயம், துறவு.  உலக பந்தத்தைத் துறந்து விட்டு வீடு அற்று, சொந்தம் அற்று காட்டில் திரியும் மனநிலையைப் பற்றி ஒரே ஒருக்கணம் யோசித்துப் பாருங்கள்.  இந்திய வரலாற்றில் எத்தனையோ அரசர்கள் துறவு பூண்டிருக்கலாம். ஆனால் 22 ஆண்டுகள் இந்திய சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசனாக இருந்து அதிகாரம் செலுத்திய சந்திர குப்த மௌரியனின் துறவுக்கு அதெல்லாம் ஈடாகாது.  அவன் தன்னுடைய 42-ஆவது வயதில் தன் அரசாட்சியைத் துறந்தான்.  கிரீடத்தை இறக்கி வைத்து விட்டு, கஷாயத்தை உடுத்திக் கொண்டு ஸ்ரவணபெலகுலா வந்து சமண ஞானி ஆச்சாரியர் பத்ரபாஹுவை சந்தித்தான்.  பின்னர் Sallekhana  (சாகும் வரை உண்ணாவிரதம் என்ற சமண சடங்கு) செய்து இறந்தான்.  (சமணம் தற்கொலை செய்து கொள்வதை அனுமதிப்பதில்லை.   ஆனால் ஒருவர் தன்னுடைய பிறவியின் பயன் முடிந்து விட்டது என்று கருதினால் இந்தச் சடங்கை செய்து உயிர் துறக்கலாம்… குறிப்பாக, ஞானிகள்.)

ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் மன்னன் தன் சுகபோகத்தையெல்லாம் துறந்து விட்டு ஒரு பிச்சைக்காரனைப் போல் வெளியே வருவதை விட வேறு ஒரு உன்னதம் இருக்க முடியுமா என்ன?  உலகில் எந்தக் குலச்சின்னத்தினால் இந்த மனநிலையை விளக்க முடியும்?

பின்குறிப்பு:  யாராவது இந்தியக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு கருட குலச்சின்னம் என்று ஒரு நாவலை எழுதினால் நன்றாக இருக்கும்.  கருடண்  விஷ்ணுவின் வாகனம்.

Mangolian Taiga பற்றி Ulrike Ottinger ஒன்பது மணி நேர அவணப் படம் எடுத்திருக்கிறார்.  இந்த நாவலைப் படித்த கையோடு அதையும் பார்த்து விடலாம் என்று முயற்சித்தேன்.  டிவிடியின் விலை 200 யூரோ என்று தெரிந்தது.  அந்தப் பணத்தில் மங்கோலியாவை நேரிலேயே போய் பார்த்து விடலாம் என்று படம் பார்க்கும் ஆசையை விட்டு விட்டேன். 

தொடரும்… 

 

    

Comments are closed.