ஓநாய் குலச்சின்னம் நாவல் பற்றிய என் கட்டுரை ஏஷியன் ஏஜ்/டெக்கான் கிரானிக்கிள் தினசரிகளில் மே 2012-இல் வெளிவந்தது. தமிழில் அந்த நாவல் இப்போதுதான் படிக்கக் கிடைத்திருக்கிறது. மேலும், இப்படி ஒரு நாவலைத் தேர்வு செய்து படிக்கவும், அதைப் பற்றி எழுதவும் நான் அதற்கு முன் 20 நாவல்களையாவது படிக்க வேண்டியிருக்கிறது. எதற்குச் சொல்கிறேன் என்றால், படிப்பு வாசனையே இல்லாத வாண்டுகள் எல்லாம் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முனைகிறார்கள்.
ஓநாய் குலச்சின்னத்திலும் இனவாதம் இருக்கிறது. ஆனால் அது படிக்க சுவாரசியமாக இருந்தது. தரவுகள் மிகத் துல்லியமாக இருந்தன. அதனால்தான் அந்த நாவலை நான் நிராகரித்தாலும் மிக நாகரீகமாக ஒரு கட்டுரை எழுதி நிராகரித்தேன். அந்த நாவலுக்கு மதிப்புரை எழுதிய யாருமே நான் சுட்டிக் காட்டிய விஷயத்தைக் குறித்து எழுதவில்லை – நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த ஒரே ஒரு விமர்சனம் தவிர. அந்த விமர்சனத்தில் மட்டுமே அந்த நாவலின் இனவாதம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. நம் இளம் எழுத்தாளரின் நாவலுக்கு வருவோம். அவர் எழுதிய எழுத்துக் குவியல் ஏன் நாவலே இல்லை என்றால் ஒரு வாக்கியமும் ஒழுங்காக எழுதப்படவில்லை. யாரோ தமிழ் தெரியாத ஆள் கிறுக்கியது போல் உள்ளது. இது முதல் காரணம். மற்ற காரணம், பொதுப் புத்தி எதை நம்புகிறதோ அதுவே இந்த நாவலின் அடிநாதமாக அமைந்திருக்கிறது. யாரொருவர் பொதுப் புத்தியை நம்பி நாவல் எழுதுகிறார்களோ அது குப்பையாகத்தான் போகும். பொதுப் புத்தியை அடியொற்றி எழுதப்பட்டதால் இந்த நாவலுக்கு நிச்சயம் சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளும் பரிசுகளும் கிடைக்கும். இது சினிமாவாக எடுக்கப்பட்டால் நிச்சயம் பல பரிசுகளை அள்ளிக் குவிக்கும். சூப்பர் ஹிட்டாகவும் ஆகும். இயக்கத்துக்கு வசந்த பாலனையும், இசைக்கு இளையராஜாவையும் பரிந்துரைக்கிறேன். கிண்டலுக்குச் சொல்லவில்லை. வசந்த பாலனுக்கு என்றே எழுதப்பட்ட கதை போல் இருக்கிறது.
ஓநாய் குலச்சின்னத்திலும் இனவாதம் இருக்கிறது என்றாலும் ஏன் அதைப் படிக்க முடிந்தது என்றால் அதன் தரவுகளின் நம்பகத்தன்மை, நேர்த்தி மற்றும் சுவாரசியம். இளம் எழுத்தாளரின் நாவலில் இந்த மூன்றுமே இல்லை. ஒரு இடத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் பத்து பக்கங்களுக்கு பிராமணர்களைக் கண்டபடி திட்டுகிறார்கள். (தமிழ் சினிமா டெம்ப்ளேட்). நான் கேட்கிறேன். தமிழ்நாட்டில் ஆதிக்கத்தில் இருக்கும் வேறு இரண்டு சாதிகளைப் பற்றி உம்மால் இப்படித் திட்டி எழுத முடியுமா? அந்த சாதிகளின் பெயர்களை எழுதினால் கூட என் வீட்டுக்கு ஆள் வந்து விடும். திட்டுவதோடு மட்டும் அல்ல; நாவலில் வரும் பிராமணப் பெண்கள் அத்தனை பேரும் சோரம் போகிறார்கள். ஒரு கார் டிரைவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் புகுந்து அம்மா, பெண் இருவரையும் புணர்கிறான். வெறும் குடும்பம் அல்ல. அந்தக் குடும்பத் தலைவர் தான் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் முதலாளி. பெயர் சந்திரா. இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் போன்ற பல மென்பொருள் நிறுவனங்கள் இருக்கின்றன அல்லவா? அதெல்லாம் முதல் அடுக்கில் இருக்கும் நிறுவனங்கள். சில்வர் சாஃப்ட் நிறுவனம் இரண்டாம் அடுக்கில் இருப்பது. அதன் முதலாளி தான் சந்திரா. அவர் எப்படி அமெரிக்காவிலிருந்து ஆர்டர் வாங்கி தன் நிறுவனத்தில் இரண்டு பில்லியன் டாலர் லாபம் பார்க்கிறார் தெரியுமா? மேனன் என்ற மலையாளியின் மூலம் தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அழகான பெண்களை அமெரிக்காக்காரனுக்குக் கூட்டிக் கொடுத்து.
நான் சொல்லவில்லை. நம் இளம் எழுத்தாளர் சொல்கிறார். ம்ஹும். அவர் சொல்லவில்லை. கதாபாத்திரங்கள் சொல்கின்றன. எழுத்தாளர் என்ன செய்வார், பாவம். இதேபோல் மலையாளிகள் பற்றியும் படு கேவலமாக எழுதப்பட்டிருக்கிறது. அதற்கும் நாவலாசிரியர் பொறுப்பு அல்ல. கதாபாத்திரம் பேசுகிறது.
என்னவோ போங்கள்…
Comments are closed.