To You Through Me (1)

நேற்றைய சந்திப்பு பற்றி பலரும் உற்சாகமாக எழுதியிருந்தார்கள்.  செல்லப்பா பற்றி முதலில் இரண்டு மணி நேரம் பேசினேன்.  இரண்டு மணி நேரம் தொடர்ந்து பேசியது இதுவே முதல் முறை.  இதற்கு முன் கு.ப.ராஜகோபாலன் பற்றி ஒரு கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் பேசியதுதான் அதிக பட்சம்.  ஆனால் நேற்றுதான் ஒரு விஷயம் தெரிந்தது.  நேரம் இருந்தால் – அதாவது உங்களுக்குப் பொறுமை இருந்தால் – ஐந்து மணி நேரம் கூட விடாமல் பேசலாம் என்பதே அது.  நேற்றே கூட நான் பேச நினைத்த பல விஷயங்களைப் பேசவில்லை.  தொடவே இல்லை.  முக்கியமாக வ.வே.சு. ஐயர் பற்றி. நேற்று குறிப்பிட்ட மதன்லால் டிங்ராவுக்கு லண்டனில் வைத்துத் துப்பாக்கிப் பயிற்சியும் மனப் பயிற்சியும் அளித்ததே வ.வே.சு. ஐயர்தான்.  கடைசியாக ஒரு சோதனை செய்தார்.  மேஜையின் மீது டிங்ராவின் கையை வைக்கச் சொன்னார்.   உள்ளங்கை மேஜையில் பட வேண்டும்.  இப்போது ஐயர் ஒரு குத்தூசியை எடுத்து கையின் நடுவே குத்துகிறார்.  குத்தூசியின் முனை மேஜையைத் தொட்டு மீண்டும் குத்தூசி மேலே இழுக்கப்படும் வரை டிங்ரா புன்சிரிப்புடன் இருக்க வேண்டும்.  டிங்ரா இருந்தார்.  பிறகுதான் அந்த ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொல்ல டிங்ராவை அனுப்பினார் வ.வே.சு. ஐயர்.  பிறகு ஐயர் இங்கிலாந்திலிருந்து ஃப்ரான்ஸுக்கு கடல் வழியே நீச்சல் அடித்துத் தப்பி வந்தார்.  அதன் பிறகு அங்கிருந்து கப்பல் மூலம் இந்தியா வந்து சேர்ந்தார்.  அதெல்லாம் பெரிய சாகசக் கதை.  சுதந்திர தாகத்தில் வருகிறது.  சில இடங்களில் முஸ்லீமைப் போலவும்  சில இடங்களில் சீக்கியரைப் போலவும் மாறு வேடம் போட்டு வந்திருக்கிறார்.  முஸ்லீமாக ‘இருந்த போது’ ஐந்து வேளையும் கப்பலின் மேல்தளத்தில் தொழுதிருக்கிறார்.  ஆம், இந்தக் காலத்துக் கணினியைப் போல் விஷயங்களை கிரஹித்துக் கொள்பவர்.  ஒருமுறை கேட்டால் போதும், அவர் மனதில் தங்கி விடும்.  இப்படித்தான் தொழுகையையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.  பனிரண்டு வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர்.  லத்தீன், ஃப்ரெஞ்ச், கிரேக்கம், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெரும் புலமை பெற்றவர்.  நம்பவே முடியாத ஒரு மேதை.  சுதந்திர தாகத்தில் ஒரு இடம் வருகிறது.  மிரண்டு போனேன்.  1881-ஆம் ஆண்டு பிறந்த வ.வே.சு. ஐயர் தன் நாற்பத்து நான்காம் வயதில் ஒரு விபத்தில் அகால மரணம் அடைந்தார்.  தான் நடத்தி வந்த குருகுல மாணவர்களுடன் அம்பாசமுத்திரம் அருவிக்குத் தன் மகள் சுபத்ராவையும், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துச் சென்றார்.  அப்போது அருவிக்கு முன்னே இருந்த நீர்த்தேக்கத்தில் சுபத்ரா விழுந்ததைப் பார்த்து அவளைக் காப்பாற்றுவதற்காக குதித்த ஐயர் அதிலேயே இறந்து போனார்.   என்னவோ ஆல்பெர் கம்யுவின் “அபத்தம்” என்கிறீர்களே, சுதந்திர தாகத்தில் பின்வரும் பகுதியைப் பாருங்கள். 

“லண்டனில் கர்ஸான் வைலியை மதன் லால் டிங்ரா சுட்டுக் கொன்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது இரவில் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் நடுவில் உள்ள இங்கிலீஷ் கால்வாயில் குதித்து இருபத்து மூன்று மைல் நீந்தி பிரான்ஸுக்கு வந்து கரையேறி பிறகு முஸல்மான் பக்கிரி போல வேடம் பூண்டு மத்திய கிழக்கு நாடுகள் வழியாகத் தப்பி பாண்டிச்சேரி வந்தது முதலிய சம்பவங்களை எல்லாம் மறுபடியும் நினைவூட்டினார் அப்பா.  முன்பு கேட்டபோது இருந்ததை விட இப்போது அவர் (ஐயர்) இறந்து போன பிறகு கேட்ட போது அவனுக்கு சிலிர்ப்பாக இருந்தது. 

பிரிட்டிஷ் கால்வாயை நீந்திய ஒரு நீச்சல் வீரனுக்கு ஒரு சின்ன அருவித் தேக்க சுழி நீரிலா சாவு?  இது எப்படி ஏற்படுகிறது?  அந்த ‘ஐரனி’ அவனைத் திகைக்க வைத்தது.”

இது போல் நூற்றுக்கணக்கான இடங்கள் சுதந்திர தாகத்தில் உண்டு.  இன்னும் ஒரு தருணத்தை நேற்றைய உரையில் சொல்லவில்லை.  செல்லப்பாவின் சித்தப்பா பற்றிக் குறிப்பிட்டேன்.  ராணுவத்தில் கேப்டனாக இருந்து 1000 ரூபாய் சம்பளம் பெற்றவர்.  அந்த வேலையை உதறி விட்டு வீட்டில் தக்ளியில் நூல் நூற்றுக் கொண்டு காந்தி பக்தராக மாறியவர்.  அவர் முதல் முறையாக காங்கிரஸ் மாநாட்டுக்கு காந்தி பேச்சைக் கேட்பதற்காக வடநாடு செல்கிறார்.  திரும்பி வரும் போது அவர் வழக்கமாக அணிந்திருந்த வெளிநாட்டு சில்க் சட்டை எல்லாம் இல்லாமல் முரட்டுக் கதராடை உடுத்திருக்கிறார்.  செல்லப்பா அவர் ஆடையை ஆர்வமாகப் பார்க்கும் போது உனக்கும் சித்திக்கும் கூட வாங்கி வந்திருக்கிறேன் என்று சொல்லி, தன் மனைவியை அழைத்து தான் வாங்கி வந்திருந்த கதர்ப் புடவையைப் பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறார்.  அப்போது அவர் மனைவி, இது என்ன கம்பளியா என்று கேட்கிறார்.  பிறகு அதைக் கையில் வாங்கும்போது ”அம்மாடி” என்கிறார்.  போகிற போக்கில் வருகிறது இந்த அம்மாடி.  விளக்கமெல்லாம் இல்லை.  நாமே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.  புடவையின் கனம் அப்படி.  அதுதான் அம்மாடியாக சித்தியின் வாயிலிருந்து வருகிறது.  சித்தியோ பூஞ்சை உடம்பு.  அவர் அந்தப் புடவையை அப்போதே கட்டிக் கொண்டு வந்து காண்பிக்கிறார்.  சித்தப்பா மிகவும் இரக்கத்துடன் “நாளையிலிருந்து நீ இதைக் கட்டிக் கொள்ள வேண்டாம்” என்று சொல்கிறார்.  சித்தியும் அதை குழந்தைக்கு மெத்தையாக வைத்துக் கொண்டு விட்டார் என்று முடிக்கிறார் செல்லப்பா.  இதையெல்லாம் பேசியிருந்தால் கேள்விகளுக்கு நேரம் இல்லாமல் மூன்று மணி நேரமும் உரையிலேயே போயிருக்கும்.

சில பெண்கள் கேள்வி நேரத்தின் போது கிளம்பி விட்டார்கள்.  ஒரு நண்பர் எடுத்த எடுப்பில் கேள்வி கேட்கவே பத்து நிமிடம் எடுத்துக் கொண்ட போது கிளம்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  தயவுசெய்து இனிமேல் யாரும் இப்படிச் செய்யாதீர்கள்.  பத்து நிமிடமெல்லாம் ஒரு கேள்விக்கு எடுத்துக் கொண்டால் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஏனைய 99 பேர் உங்களைத் திட்டுவார்கள் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும்.  தெரிந்திருக்க வேண்டும்.  கேள்வி கேட்க ஒரு நிமிடம் போதும்.  அல்லது, அதிக பட்சம் இரண்டு நிமிடம்.  அது கேள்வியைப் பொறுத்தும் இருக்கிறது.  மூன்று நிமிடம் கூட ஆகலாம்.  பத்து நிமிடம் என்பது சொற்பொழிவு.  உங்கள் சொற்பொழிவை நான் கேட்கத் தயார்.  ஆனால் மற்ற 99 பேர் என்னுடைய சொற்பொழிவை அல்லவா கேட்க வந்திருக்கிறார்கள்?  கவனம் தேவை. 

மேலும், கேள்வி கேட்பவர்கள் சுய அறிமுகம் செய்து கொள்ளலாம்.  ஆனால் அதற்கும் ஒரு மூன்று நிமிடம் எடுத்துக் கொள்ளக் கூடாது.  பெயர் மற்றும் ஊர்.  போதும்.  மற்றும் என்னைப் பற்றிய பாராட்டு உரைகள் எதுவுமே வேண்டாம்.  நான் என்னை ஒரு துறவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  அதை விடவா ஒருவர் என்னைப் பாராட்டி விட முடியும்?  பாராட்டு இருந்தால் கடிதமாக எழுதுங்கள்.  இணையதளத்தில் வெளியிடுகிறேன்.  அதை முன்வைத்து எனக்கு வரும் நாலு வசை கடிதமாவது படிக்கலாம். 

மோடி துபாய் சென்றிருந்த போது அங்கே வாழும் இந்தியக் கோடீஸ்வரரான லூலூ கடை முதலாளியும் மற்ற முதலாளிகளோடு மோடியைச் சந்தித்தார்.  மோடி கேள்வி கேட்கலாம் என்றார்.  உடனே லூலூ கடை முதலாளி மோடியை ஆஹா ஓஹோ என்று புகழ ஆரம்பித்தார்.  அடுத்த கணமே கூட்டத்தை ஒருங்கிணைத்தவர் “தயவுசெய்து கேள்வியைக் கேளுங்கள்” என்று குறுக்கிட வேண்டி வந்தது. 

எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், இந்த உலகத்தில் கோடிக்கணக்காக பணம் சம்பாதிப்பதுதான் இருப்பதிலேயே ஆகக் கடினமான காரியம்.  அந்தக் கடினமான காரியத்திலேயே ஜெயித்தவர்கள் ஏன் இப்படிப் படு சாதாரணமான விஷயத்தில் இன்னொருத்தர் தலையிட்டு புத்தி சொல்லும் அளவில் நடந்து கொள்கிறார்கள்?  புரியவில்லை.  ஏன் இதை இத்தனை வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால், எல்லா இலக்கிய விவாதங்களிலும் கேள்வி கேட்பவர்கள் தவறாமல் இந்தப் பாணியைப் பின்பற்றுகிறார்கள்.  முதலில் தன்னைப் பற்றி மூன்று நிமிடம்.  பிறகு பேச்சாளரைப் பற்றிய புகழாரம் மூன்று நிமிடம்.  கேள்வி ஆறு அல்லது ஏழு நிமிடம்.  அதற்குள் பாதிப் பேர் எழுந்து போய் விடுவார்கள்.  முன்பெல்லாம் நான் ’இதெல்லாம் கூட்டத்தைக் கலைப்பதற்காக எதிரிகள் செய்யும் சூழ்ச்சி’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  இப்போதுதான் ”அப்படியெல்லாம் இல்லை; கேள்வி கேட்பவர்ளே பெரும்பாலும் அப்படித்தான்” என்று புரிந்தது.  ஆனாலும் நேற்று கேள்வி கேட்டவர்களை அந்த ரகத்தில் சேர்க்கக் கூடாது. கேள்வி  நேரத்தை அவர்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.   என் நீண்ட நாள் நண்பரான அஸ்வினியை நேற்றுதான் பார்த்தேன்.  சின்னையா மற்றும் காயத்ரி, வளன் என்று பலர்.  கனடாவிலிருந்து மோகன் உமாகாந்தன். (பெயர் சரியா?)

மீண்டும் ஒருமுறை சதீஷ்வரனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  பல நண்பர்கள் அவரது ஒருங்கிணைப்பு பற்றிப் பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.  ஆறு மணியிலிருந்து ஒன்பது வரை நடந்த நிகழ்ச்சியில் ஒரு பிரச்சினை இல்லை.  இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நூறு பேரும் ஆறு மணிக்கே ஆஜர்.  இதற்காக ராஜேஷ் இரவெல்லாம் கண் விழித்திருக்கிறார்.  இன்னொரு நூறு பேர் காத்திருந்து விட்டு உள்ளே வர முடியாமல் போய் விட்டார்கள்.  இதில் என்னுடைய நெருங்கிய சில நண்பர்களும் அடக்கம்.  ஆறு ஐந்துக்கு வந்திருக்கிறார்கள்.  கிடைக்கவில்லை.  எப்படி ஆனது தாமதம் என்று கேட்டேன்.  ”ஐந்தே முக்காலுக்கு வந்தேன்.  ஆரம்பிக்கவில்லை.  ஆறு ஐந்துக்கு வந்தேன்.  ஹவுஸ்ஃபுல்” என்றார்.  ஒரு எழுத்தாளனின் பேச்சைக் கேட்க இருநூறு பேர் காலை ஆறு மணிக்கு வருகிறார்கள் என்றால், அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்தான். 

புவனேஸ்வரி ஒரு விஷயம் சொன்னார்.  அது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பேச வேண்டியிருக்கிறது.  ”நீங்கள் கொடுப்பது ஞானம்.  அதைப் பெறுகின்றவர்கள்தானே சிரமம் எடுத்துக் கொண்டு வர வேண்டும்?  நீங்கள் ஏன் மற்றவர்களுக்குத் தோதான சமயத்தில் பேச வேண்டும்?  இதற்காக நீங்கள் நான்கு மணிக்கே எழுந்து கொள்ள வேண்டியிருந்திருக்கும் இல்லையா?”   

ஆமாம், நான்கு மணிக்கே எழுந்து கொண்டேன்.  நமது உடம்பின் உள்ளே ஒரு அலாரம் இருக்கிறது.  காலையில் நாலு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று அலாரம் வைத்தால், அந்த அலாரம் அடிப்பதற்குள் நாமே மூன்று ஐம்பத்தைந்துக்கு எழுந்து விடுவோம்.  ஒவ்வொரு முறையும் எனக்கு அப்படித்தான் நடக்கும்.  நேற்றும் அப்படியே. 

எப்போதும் காலையில் எழுந்ததும் ஆயில் புல்லிங் 20 நிமிடம் செய்வேன்.  அதே நேரம் கஷாயத்தை அடுப்பில் போடுவேன்.  அது தயாராக முப்பது நிமிடம் ஆகும்.  அதை முடித்து கஷாயம் குடித்து விட்டு இருபது நிமிடம் தியானம் செய்வேன்.  இதே சமயத்தில் அடுப்பில் சிக்கனைக் கொதிக்க வைப்பேன்.  சிக்கன் இல்லாவிட்டால் மீன்.  பிறகு அதை குட்டிகளுக்குக் கொடுப்பேன்.  இது எல்லாம் முடிந்தவுடன் மொட்டை மாடிக்குக் கிளம்பி விடுவேன்.  ஐந்து மணிக்கு எழுந்தால் மொட்டை மாடிக்குக் கிளம்ப ஆறு அல்லது ஆறேகால் ஆகும்.  ஒன்றரை மணி நேரம் வாக்கிங்.  நேற்று இந்த அட்டவணையில் மாற்றம்.  ஐந்து மணிக்குப் பதிலாக நாலு மணிக்கே எழுந்தேன்.  முந்தின இரவு சுதந்திர தாகத்தைப் படித்துக் கொண்டிருந்து விட்டுப் பனிரண்டு மணிக்குத்தான் படுக்கப் போயிருந்தேன்.  ஆக, வழக்கம் போல் ஆறு மணி நேரம் உறங்க முடியவில்லை.  எழுந்ததும் வழக்கம்போல் ஆயில் புல்லிங் இல்லை.  கஷாயமும் போடவில்லை.  ஏனென்றால், கஷாயம் குடித்தால் பிறகு காஃபி சாப்பிட இரண்டு மணி நேர இடைவெளி வேண்டும்.  அது நேற்று சாத்தியம் இல்லை.  மேலும், கஷாயத்தை மட்டும் குடித்து விட்டு மூன்று மணி நேரம் பேச அமர்ந்தால் பசி கொன்று விடும்.  அதனால் எழுந்தவுடன் குளித்து விட்டு காஃபி போட்டுக் குடித்தேன்.  அது எனக்கு ஒன்பது வரை தாங்கியது.  மற்றபடி வாக்கிங் இல்லை; ஆயில் புல்லிங் இல்லை; தியானம் இல்லை.  பூனைகளுக்கு மட்டும் சிக்கனை அவித்துக் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.  இடையில் கேள்வி நேரத்தில் கொஞ்சம் காஃபி குடிக்கலாம் என்று ஃப்ளாஸ்கில் போட்டுக் கொண்டு வந்து வைத்தேன்.  கேள்வி நேரத்தில் அதை எடுத்தால் பச்சைத் தண்ணீராக இருந்தது.  அடுத்த முறை நல்ல ஃப்ளாஸ்கை  உபயோகப்படுத்த வேண்டியதுதான்.

இதிலெல்லாம் எனக்கு ஒன்றும் பிரச்சினையே இல்லை.  மாதத்தில் ஒரே ஒரு நாள் இதற்கெல்லாம் ஓய்வு கொடுத்தால் என்ன கெட்டு விடும்?  மேலும், இங்கேதான் நான் சொல்லப்போகும் முக்கியமான விஷயம் வருகிறது.  நான் கடிதங்களில் அல்லது கட்டுரைகளில் அடியேன் என்று எழுதுவது ஸ்டைலுக்காகவோ ஃபாஷனுக்காகவோ அல்ல.  உண்மையிலேயே அடியேன்தான்.  உங்கள் ஊழியன்.  காந்தி Your obedient servant என்று எழுதுவார்.  அப்படித்தான் நடந்து கொள்ளவும் செய்வார். அந்த வார்த்தைகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.  என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நாவுக்கரசர் சொன்னதுதான்.  எனவே ஞானத்தை ஒவ்வொருவர் வீட்டுக்கும் கொண்டு போய்க் கொடுப்பதே என் பாணி, என் பணி எல்லாம்.  என் சௌகர்யத்தின்படி பேசுவேன், நீங்கள் சிரமப்பட்டு வந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன்.   

ஒரு மாணவன் குருவிடம் கற்றுக் கொள்ள விரும்பினான்.  மாணவன் வீட்டிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் இருக்கிறது குருவின் வீடு.  அப்போதெல்லாம் வாகன வசதி கிடையாது.  நடந்தேதான் போக வேண்டும்.  முதல் நாள் போனான் மாணவன்.  குரு பார்க்கவில்லை.  மறுநாள் போனான்.  பார்க்கவில்லை.  இப்படியே 17 நாட்கள் குருவைப் பாக்க நடையாய் நடந்தான்  சிஷ்யன்.  கொஞ்ச நஞ்சம் அல்ல.  போக 90, வர 90 கிலோமீட்டர்.  பதினெட்டாவது நாள் மந்திரம் கற்பிக்கப்பட்டது.  அதிலும் ஒரு நிபந்தனை இருந்தது.  இந்த மந்திரத்தை நீ யாரிடம் சொன்னாலும் உனக்கு நரகம்தான் கிட்டும்.  நம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.  மந்திரத்தைக் கேட்டவுடன் அந்த ஊர்க் கோவில் கோபுரத்தின் மேலே ஏறிய சிஷ்யன் அந்த மந்திரத்தை ஊருக்கே சொல்கிறான்.  கடும் கோபமடைந்த குரு உனக்கு நரகம்தான் என்கிறார்.   நான் ஒருத்தன் நரகம் போனாலும் இத்தனை பேர் சொர்க்கம் செல்வார்களே, அது போதும் என்க, நீதான் உண்மையான ஆச்சாரியன் என அவனை ஆலிங்கனம் செய்தார் குரு. 

என்னுடைய கதை அப்படியே உல்டா.  ஒரு மாணவன் வீட்டுக்குப் போவேன்.  ஆட்டோ கிடைக்காது.  நடந்தே போவேன்.  அடடா, இன்னிக்கு என் மனைவியுடன் சினிமாவுக்குப் போவதாக வாக்குக் கொடுத்து விட்டேனே சாரு.  சரி தம்பி, பரவாயில்லை என்று சொல்லி விட்டு வந்து விடுவேன்.  மறுநாள் போவேன்.  அடடா, இன்னிக்கு கராத்தே கிளாஸ் போறேனே சாரு.  சரி தம்பி, பரவாயில்லை என்று சொல்லி விட்டு வந்து விடுவேன்.  மறுநாள் போவேன்.  அடடா, இன்னிக்கு திரும்பவும் சினிமாவுக்குப் போறோமே, என்னமோ தெரில, இந்த வாரம் பூரா ஒரே சினிமா மேளாவா இருக்கு.  பரவால்ல தம்பி, நாளை வருகிறேன்.  மறுநாள் போவேன்.  இப்படியே கால் தேயத் தேய நடந்து கடைசியில் ஒருநாள் கிடைக்கும். அன்றைய தினம் பின்நவீனத்துவம் பற்றியும் ஃபூக்கோ, தெரிதா, ரொலான் பார்த் பற்றியும், Francophone literature பற்றியும் பாடம் எடுத்து விட்டு வருவேன்.  சும்மா கதை விடவில்லை.  இப்படியே நடந்திருக்கிறது. 

வாசகர் வட்ட சந்திப்பிலும் கூட மாலை ஏழு மணிக்குப் பேச ஆரம்பித்தால் காலை ஆறு மணி வரை போகும்.  ஒன்றிரண்டு பேர் உறங்கி உறங்கி விழுவார்கள்.  ஆனால் ஆறு வரை என்னோடு அமர்ந்து பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் உண்டு.  இடையே பேச்சு விவாதமாகவும் போகும்.  ஆனால் ஒருபோதும் சினிமாப் பாட்டு கீட்டு என்ற பைத்தியக்காரத்தனமெல்லாம் இருக்காது.  ஒரே ஒரு சமயம் ஒரு கர்னாடக சங்கீதக் கலைஞரை அழைத்து இரவு முழுவதும் பாடச் செய்தேன்.  என்னைத் தவிர எல்லோரும் தூங்கி விட்டார்கள்.  ஆனால் அவர் பிரமாதமாகத்தான் பாடினார்.  எனக்காகவே பாடினார். 

இப்படி ஞானத்தைக் கொண்டு போய்ச் சேர்ப்பதை நான் செல்லப்பாவிடமிருந்தே பெற்றுக் கொண்டேன்.  புத்தக மூட்டையைத் தோளில் சுமந்து கல்லூரி கல்லூரியாகச் சென்றார் அல்லவா?  நான் கற்ற இன்னொரு இடம், பாதிரியார்களின் ஒப்பற்ற தியாகம்.  மதம் மாற்றுவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத விஷயம்.  ஆனால் அந்தக் கோணத்திலிருந்து பார்க்காமல் நான் அதிலிருந்த மற்றொரு அற்புதமான விஷயத்தை எடுத்துக் கொண்டேன்.  இயேசுவின் நற்செய்தியை உலகத்தாருக்குக் கொண்டு செல்லுதல்.  இதற்காக அவர்கள் பட்ட கஷ்டங்களும் துயரங்களும் கொஞ்சமா நஞ்சமா?  சாந்தோம் நெடுஞ்சாலையில் என் வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளி எதிர்சாரியில் ஒரு தேவாலயம் உள்ளது.  பெயரை மறந்து விட்டேன்.  அதன் வாசலில் ஒரு ஃப்ரெஞ்ச் பாதிரியாரின் சிலை உள்ளது.  அந்தச் சிலையின் எதிரே நான் ஒருநாள் காலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக நின்று விட்டேன்.  அவர் அருகே ஒரு நாயின் சிலையும் உள்ளது.  அவர் குப்பத்து மக்களிடையேதான் எப்போதும் இருப்பாராம்.  ஃப்ரான்ஸ் போன்ற ஒரு வளமான தேசத்திலிருந்து கடல் கடந்து வந்து இங்கே குப்பத்தில் ஏழை மக்களோடு புயலிலும் வெயிலிலும் வாழ்ந்து யேசுவின் செய்தியைச் சொல்வதென்றால் அதற்கு எத்தனை பெரிய தியாக உள்ளம் வேண்டும்! 

பாதிரியார் என்றால் எப்போதும் என் நினைவுக்கு வருவது ஜான் ஆஃப் தெ க்ராஸ்தான் (1542 – 1591).  The Dark Night என்ற அவரது உலகப் புகழ் பெற்ற நெடுங்கவிதை பற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன்.  ஆனால் இங்கே நான் அவரை நினைவுகூரும் தருணம் அதற்காக அல்ல.  தனக்குக் கிடைத்த இயேசுவின் நற்செய்தியை அவர் எப்படி எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்தார் என்பதுதான்.  அவருடைய 49 ஆண்டு வாழ்க்கையில் அவரைப் போல் நடந்து தீர்த்தவர்கள் மிகவும் சொற்பமாகவே இருப்பார்கள்.  ஏழைகளின் இடையே நடந்து கொண்டே இருந்தார்.  தேடித் தேடி நடந்தார்.  அவர் வாழ்ந்த ஸ்பெய்னில் அவரது பாதம் படாத இடமே இல்லை என்று சொல்லலாம்.  அப்படி நடந்தார்.  மொத்தம் 18000 மைல்கள் நடந்தார் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.  அவரைப் பற்றிய ஒரு படம் உள்ளது.  அவசியம் பாருங்கள்.  ”ஏன் ஐயா, ஒரே இடத்தில் இருந்து கொண்டு உங்கள் செய்தியைக் கொடுக்கக் கூடாதா?” என்று அவரிடம் கேட்பார்கள்.  இயேசு என்பது வெறும் பெயரா?  இயேசு சிலுவையில் அறையப்பட்ட படத்தைப் பார்த்துக் கண்ணீர் சிந்துவதா அவருக்கு நாம் செலுத்தும் நன்றி?  அவரது வலியை நாம் உணர வேண்டாமா?  வலி உணர்தல் என்றால் ஆணியை எடுத்து என் உடம்பில் அடித்துக் கொள்வதா?  இல்லை.  அடுத்தவர் வலியை உணர்வதுதான் இயேசுவின் வலியை உணர்வது.  அவரது தேகத்திலிருந்து வடிந்த குருதியின் வாசனையை நீங்கள் உங்களது தேகத்திலே உணர வேண்டும்.  அதனால்தான் ஏழைகளை நோக்கி நடந்து கொண்டே இருக்கிறேன்.  நடந்து நடந்து நடந்து என் தேகம் அந்த வலியை உணர வேண்டும்.  ரத்தம் சிந்த வேண்டும்.  அப்போதுதான் நான் அடுத்தவனின் வலி உணர்கிறேன் என்று சொல்ல முடியும்.

படத்தின் இறுதிக் காட்சியில் ஜான் நடந்து செல்வதை கேமரா காண்பிக்கிறது.  அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பாதம் தெரிகிறது.  க்ளோஸப் காட்சி அல்ல என்பது முக்கியம்.  அவர் பாதங்களில் பாதக்குறடு எதுவும் இல்லை.  வெறும் கால்கள்.  அதைப் பார்த்து விட்டு படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டியிருந்தது.  படத்தில் ஜானாக நடித்திருப்பவர் Leonardo Defilippis.  நீங்கள் ஒரு கிறித்தவர் எனில் இந்தப் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்வேன்.  மற்றவர்களும் பார்க்க வேண்டிய படம்.  இதேபோல் ஜான் பற்றி கார்லோஸ் ஸாரா (Carlos Saura) இயக்கிய The Dark Night என்றும் ஒரு படம் உண்டு.   

இதெல்லாம்தான் ஞானத்தை நானே தேடி வந்து கொடுப்பதற்குக் காரணம்.  அம்மாதிரி மகாஞானிகளோடு என்னை ஒப்பிட்டுக் கொள்ளவில்லை.  தேடிப் போய்க் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தை இவர்களிடமிருந்தெல்லாம்தான் கற்றுக் கொண்டேன்.  ஒரே ஒரு வித்தியாசம், இதற்காக நீங்களே நிர்ணயித்துக் கொள்ளும் கட்டணம் எதையாவது அனுப்புங்கள் என்கிறேன்.  அது கிட்டத்தட்ட ஐரோப்பிய நகரங்களின் தெருவோரங்களில், ரயில் நிலையங்களில் வாசிக்கும் இசைக் கலைஞர்களின் முன்னே கிடக்கும் தொப்பிக்கு இணையானது.  அந்தத் தொப்பியில்தான் காசுகளையும் பணத்தையும் போடுவார்கள் இசைப் பிரியர்கள்.  அதை ஒருவர் பிச்சை என்று சொன்னால் உலகம் பூராவுமே பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வேன்.

நூறு பேரில் இருபது பேர் பணம் அனுப்பியிருந்தார்கள்.  அதில் பதினைந்து பேர் என்னோடு தனிப்பட்ட முறையில் தொடர்பில் இருப்பவர்கள்.  ஐந்து பேர்தான் புதியவர்கள்.  இதெல்லாம் பெரிய விஷயம்.  நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.  வருமானம் இல்லாத housewives, மாணவர்கள், manual labour வேலையில் இருப்பவர்கள் யாரும் எனக்குப் பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்லியும் சில நண்பர்கள் அனுப்பி விடுகிறார்கள்.  அவர்களில் ஒருவர் தக்ஷிணாமூர்த்தி.  போன மாதம்தான் ரேஷன் கடையில் கொரோனா ஊரடங்குக்காகக் கொடுத்த ஆயிரம் ரூபாயை அனுப்பியிருந்தார்.  இப்போது இந்த செல்லப்பா சந்திப்புக்காக 300 ரூ. அனுப்பியிருக்கிறார்.  மேலே குறிப்பிட்ட பதினைந்து பேரில் தக்ஷிணாமூர்த்தியும் ஒருவர்.  இவர்களின் அன்பு என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது.   

இன்று கூட ஸ்ரீராம் கேட்டார்.  இதை எல்லோரும் பார்க்கிறபடி யூட்யூபில் போட்டு விடலாமா?  நான் அவரிடம் கொஞ்சம் பேசினேன்.  சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் சந்திப்பை யூட்யூபில் எத்தனை பேர் பார்த்தார்கள்?  1500 பேர்.  சிறுவனை வைத்துக் கட்டிலில் விளையாடிய நடிகை என்று ஒரு யூட்யூப் இணைப்பை முகநூலில் பார்த்தேன்.  எல்லா வேலையையும் விட்டுவிட்டு அதைப் போய்ப் படித்தால் கட்டில் என்பது படத்தின் பெயர்.  அதில் ஒரு சிறுவன் நடிக்கிறான்.  அந்தச் சிறுவனோடு விளையாடுவது போல் ஒரு காட்சி.  செல்லப்பா பேச்சுக்கு இப்படியெல்லாம் தலைப்பு வைத்தால் என்னை செல்லப்பா ஆவியாக வந்து பிடித்துக் கொள்வார்.  அதெல்லாம் தப்பு.  இலக்கியத்துக்கு 1500 எல்லாம் ரொம்ப ஜாஸ்தி.  சரி, நான் ஏன் செல்லப்பா பற்றிய என் இரண்டு மணி நேர உரையை யூட்யூபில் போட வேண்டாம் என்றேன் என்றால், இந்த 1500-இல் 1000 பேராவது ஆளுக்கு நூறு ரூபாய் அனுப்பினால் அது ஒரு லட்சம் ரூபாய்.  மூன்று மணி நேரப் பேச்சுக்கு நூறு ரூபாய் தரக் கூடாதா?  ஆனால் என்ன நடக்கும் தெரியுமா?  பத்து பேர் அனுப்புவார்கள்.  ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.  இது போல் எல்லாமே காமெடியாக மாறி விடும்.  எல்லாம் கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் நடக்க வேண்டும்.  அதனால் இப்போதைக்கு செல்லப்பா பற்றிய நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதற்காக நீங்களே நிர்ணயிக்கும் ஒரு தொகையை எனக்கு அனுப்பி வைத்தால் பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கிறேன்.

அடுத்த மாதம் இதேபோல் நகுலன் பற்றிப் பேசுவேன்.  என் ஆசிரியர்.  நான் நகுலன் பள்ளியைச் சேர்ந்தவன்.       

ஜூன் 28 இந்திய நேரம் காலை ஆறு மணி.  ஞாயிறு.  சந்திப்போம். 

***

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai