பூச்சி 96

அன்பு சாருவுக்கு,

உங்களைப்பற்றிய அற்புதமான கட்டுரை அராத்துவின் கட்டுரை.

“சாரு சொல்வது முற்றிலும் புது வடிவம். ஓர் இலக்கிய ஆளுமையை எடுத்துக்கொண்டு அவருடைய படைப்புகள், அவருடைய பார்வை, அவர் உருவாக்கிய தாக்கம், அவருடைய வாழ்க்கை, அந்த ஆளுமையின் வரலாறு, அவர் வாழ்ந்த காலத்தில் மற்ற கலைஞர்கள் அவரைப்பற்றிச் சொல்லியவைகள், மற்ற கலைஞர்களுடனான அவருடைய சந்திப்புகள், அவருக்கும் அரசுக்கும் இருந்த உறவு அல்லது தொடர்பு, அந்தக் காலத்தில் மக்கள் அந்தக் கலைஞரை எப்படிக் கொண்டாடினார்கள் அல்லது எதிர்கொண்டார்கள் என ஒரு கலைஞனைப் பற்றிய 360 டிகிரி பார்வையை இரண்டு மணி நேரங்களில் சாரு விவரிப்பது முற்றிலும் புதிதான ஒரு கலை வடிவம்.”

இது, உங்கள் உரை எப்படி ஒரு தமிழ் எழுத்தாளரை நாங்கள் உள் வாங்கவேண்டும் என நீங்கள் எங்களுக்குத் தரும் வரைபடம் என்றால், அராத்துவின் கட்டுரை உங்களை எப்படி உணர வேண்டும் என்பதற்கான தெளிவுரை. மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் பதில்களைக் கூட இன்னும் படிக்கவில்லை.

உங்கள், மாத இறுதி உரை, மிக முக்கியமான உரை. ஒருவர் கூட ஏமாந்து செல்லக்கூடாது.

ஒரு கேள்வி. நீங்கள் இப்படி ஒவ்வொரு எழுத்தாளர்களையும் சாறு பிழிந்து எங்களுக்குத் தருவதைப் போல, உங்களது எழுத்தை எங்களுக்கு அதன் நுணுக்கங்களோடு (nuances ) தர, அராத்து தயாராகிவிட்டார் என நினைக்கிறேன். உங்கள் நினைவில் வேறு யாராவது இருக்கிறார்களா?

அன்புடன்
கிருஷ்ணா.

டியர் கிருஷ்ணா,

ஒருமுறை என்னைப் பற்றி நண்பர்கள் எழுதும் கட்டுரைகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார் ஸ்ரீராம்.  அந்தக் கட்டுரைகளில் ஆகச் சிறந்த கட்டுரையாக இருந்தது அராத்துவின் கட்டுரை.  இதுவரையிலும் என்னைப் பற்றி வந்துள்ள கட்டுரைகளிலேயே அரூவில் வந்துள்ள அராத்துவின் கட்டுரையையே என்னைப் பற்றிய சித்திரத்தை அளிப்பதில் முழுமையானது என்று நினைக்கிறேன். 

மாதாந்திரக் கூட்டங்களுக்கு இனிமேல் இடமில்லை என்று யாரும் திரும்பாதபடி சதீஷ்வரன் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்.  மேலும், அதிகாலை ஐந்தரைக்கே வந்து லாக்-இன் செய்து காத்துக் கொண்டிருப்பதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை.  இந்த மாதம் அதையெல்லாம் தவிர்த்து விடலாம். 

***