சிங்கப்பூர்

என் மகன் கார்த்திக் மரீன் எஞ்ஜினியர் என்பதால் அவன் போகாத நாடு இல்லை.  ஆனால் அவன் வசிக்கும் ஊர் மும்பை.  என்னை அடிக்கடி மும்பை வரச் சொல்லுவான்.  நான் மும்பைக்கே சென்று விட வேண்டும் என்பது அவன் ஆசை.  அவன் வீட்டில் அல்ல. தனி விட்டில்தான்.  நான் அதற்கு அவனிடம் பதில் சொல்ல மாட்டேன்.  அவந்திகாவிடம் சொல்வேன்.  ”எங்காவது ஐரோப்பிய நகரிலிருந்து கொண்டோ அமெரிக்காவில் இருந்து கொண்டோ கூப்பிட்டால் இன்றைய தினமே என் ஜாகையை மாற்றிக் கொண்டு விடுவேன்.  இங்கே இருக்கிற மும்பைக்கு எவன் போவான்?  மும்பைக்குப் போவதற்கு நான் செங்கல்பட்டுக்கே போவேனே?  ஆளைப் பாரடா.”   காரணம், மும்பையில் நான் தொடர்பு படுத்திக் கொள்ள எதுவுமே இல்லை.  என் ஆன்மாவின் சுடர் பனி.  பனிக்காடு.  என் அமெரிக்க நண்பர்கள் பனி பற்றி வேதனையாகச் சொல்லும் போதெல்லாம் நான் அங்கே இருக்க முடியவில்லையே எனப் பதறும்.  இலினாய் மாநிலத்தில் வசிக்கும் ஒரு நண்பர் தன் வீட்டு வாசலில் இருந்த பனிப் பாறையில் விழுந்து கழுத்து சுளுக்கிக் கொண்டதாக நேற்று எழுதியிருந்தார்.  இன்னும் பலர் பல விதமாக.  பனிக் கதைகள் என்றே எழுதலாம் போல் இருக்கிறது.  இந்தப் பனி ஒன்றே போதும் நான் தொடர்பு படுத்திக் கொள்ள.  மும்பையில் எனக்கு எதுவும் இல்லை.  கலாச்சார ரீதியாகவும் வேறு விதமாகவும்.  மனித உறவுகளை நான் வசிக்கும் இடத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்வதில்லை.

இப்போது என் வயது 68.  பயணம் என் வாழ்வின் பெருவிருப்பங்களில் ஒன்று.  இத்தனைக் காலமாக வீசா என்ற பூதத்துக்குத் தீனியான பணம் என்னிடம் இல்லை.  பயணத்துக்கு எனக்குப் பணம் தேவைப்பட்டதில்லை.  உலகில் பல நாடுகளில் எனக்கு விமான டிக்கட் எடுத்துக் கொடுத்து தன் வீட்டில் தங்க வைத்து அனுப்ப நண்பர்களும் வாசகர்களும் இருக்கின்றனர்.  இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கனடாவுக்கு வாருங்கள் என அழைத்தார் நண்பரும் கவிஞருமான சக்ரவர்த்தி.   எல்லா செலவும் அவருடையது.  அவர் வீட்டு மா உன் வங்கிக் கணக்கில் காசு இல்லை, நீ கனடாவிலேயே தங்கி விடுவாயோ என சந்தேகமாக இருக்கிறது என்று சொல்லி வீசா மறுக்கப்பட்டது.  அதிலிருந்து தொடங்கி இன்று வரை வீசா மறுக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.  ஒரே காரணம், உன் வங்கிக் கணக்கில் பணம் இல்லை.  கடந்த ஆண்டு ஃபெப்ருவரியில் ஜெர்மனியின் குடியுரிமை பெற்று வசிக்கும் என் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் கிளம்பினேன்.  டிக்கட் எல்லாம் எடுத்து விட்டேன்.  அவருடனேயே மூன்று வாரங்கள் காரிலேயே கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சுற்றுவதாக ஏற்பாடு.  பனிக்காலம் என்பதால் எங்கெல்லாம் பனியால் சாலைகள் மூடப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் ரயிலில் சென்று விடலாம் என்ற அளவுக்கு எல்லாமே திட்டமிட்டிருந்தோம். 

நண்பர் ஏற்கனவே அப்படி ஒருமுறை கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காரில் சுற்றி வந்தவர் என்பதால் முன் அனுபவமும் இருக்கிறது. அப்போதும் என்னிடம் போதிய பணம் இல்லை என்று வீசா மறுக்கப்பட்டேன்.  ஆனால் அப்போது என் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இருந்தது.  மேலும், நண்பர் ஜெர்மன் குரியுரிமை பெற்றவர், அவர் அழைப்பில் செல்கிறேன், அவர் அழைத்த அத்தனை பேருக்கும் அதுவரை வீசா மறுக்காமல் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் எந்த சந்தேகமும் இல்லாமல் டிக்கட் எடுத்து விட்டேன்.  வீசா மறுக்கப்பட்டதால் டிக்கட்டில் பாதி காசு போயிற்று.  ஆனால் ஜெர்மன் தூதரகம் ஒரு சலுகை கொடுத்திருந்தது.  வேண்டுமென்று நினைத்தால் நான் அவர்களின் நீதிமன்றத்தில் என் வழக்கை தாக்கீது செய்யலாம்.  என் நியாயத்தைச் சொல்லலாம்.  வீசா கிடைக்கலாம்.  எனக்கு ஈடுபாடு போய் விட்டது.  எனக்கு வேறு வேலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் தெய்வ சங்கல்பம் என்று சொல்வதா அல்லது என்னவென்று தெரியவில்லை, வீசா கொடுத்திருந்தால் ஆறு ஏழு மாதம் பெர்லினில் நண்பர் வீட்டிலேயேதான் இருந்திருக்க வேண்டியிருக்கும்.  எனக்கும் பிரச்சினை இல்லை.  அவர் வீட்டுக்கு அடுத்த தெருவிலேயே ஒரு தனி வீடு எனக்காக ஏற்பாடு செய்திருந்தார்.  ஆறு ஏழு மாதம் பெர்லின் வாசம் கைவிட்டுப் போனது.  அவந்திகாதான் திண்டாடிப் போயிருப்பாள்.

சிங்கப்பூரில் எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள்.  ஆனாலும் சிங்கப்பூருக்கு அமைப்பு ரீதியான அழைப்பு என்பது எனக்கு ஒரே ஒரு முறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஓவியா சித்ராவின் முயற்சியில் அவரது வாசகர் வட்டம் அமைப்பின் சார்பாக சிங்கப்பூர் சென்று அவர்களது அமைப்பில் பேசினேன். இதைத் தவிர இன்று வரை ஒரு கூட்டத்தில் பேசியதில்லை. 

ஆனால் ஐந்தாறு முறை சிங்கப்பூர் சென்றிருக்கிறேன்.  பல நாட்கள் தங்கியிருக்கிறேன்.  எல்லாமே என் வாசகர்களின் செலவில்.  அந்த வாசகர்களுக்கு என்னைத் தவிர ஒரு இலக்கியவாதியைத் தெரியாது.  சிங்கப்பூரில் உள்ள எந்த இலக்கிய நிகழ்ச்சியிலும் அவர்கள் கலந்து கொண்டதில்லை.  அவர்களுக்குத் தெரிந்த ஒரே இலக்கியவாதி, ஒரே எழுத்தாளர் நான் தான்.  அதனால் அவர்களின் செலவில் செல்லும் நான் எந்த எழுத்தாளரையும் சந்திப்பதில்லை.  15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பரின் வீட்டில் (ஹௌகாங் அவென்யூ) மூன்று வாரம் இருந்தேன்.  அவர் தனியாள்.  சமையலுக்கு ஒரு நண்பர்.  மூன்றே பேர்.  பக்கத்துத் தெருவில்தான் அரவிந்தன் இருந்தார் என்பதால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரவிந்தனைச் சந்திப்பேன்.  இது தவிர நான் சந்தித்த நண்பர் ஸ்ரீ என நான் அழைக்கும் ஸ்ரீ கணேஷ்.  சிங்கப்பூரிலிருந்து என்னை சிங்கப்பூருக்கு அழைத்த நண்பரும் நானுமாக தாய்லாந்தும் ஒரு வாரம் சென்று வந்தோம்.  அதற்குப் பிறகு சில சிங்கப்பூர் பயணங்கள்.  எல்லாமே தனிப்பட்ட முறையில் என் வாசகர்களின் அழைப்பு.  எந்த ஒரு எழுத்தாளரையும் நான் சந்தித்ததில்லை. 

பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மலேஷியாவில் வசிக்கும் என் வாசகர் திருமாறனின் அழைப்பில் அவரது சொந்த செலவில் போய் கே.எல்.லில் தங்கினேன்.  ஓட்டலில்தான் தங்கல்.  அப்போது ‘இவ்வளவு தூரம் போகிறோம், அப்படியே சிங்கப்பூரையும் எட்டிப் பார்க்கலாம்’ என்று நினைத்து, மலேஷியா செல்வதற்கு ஒரு மாதம் முன்பே சிங்கப்பூர் நண்பர்களிடம் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னேன்.  ஒருவரிடமிருந்தும் பதில் இல்லை.  பிறகு மலேஷியாவையும் பினாங்கையும் சுற்றி விட்டு சிங்கப்பூர் செல்லாமலேயே இந்தியா திரும்பி விட்டேன். 

அமைப்பின் மூலமாக எனக்கு அழைப்பு வராததன் காரணம், என் நண்பர்கள் அனைவரும் சிதறிக் கிடக்கிறார்கள்.  ஒருத்தர் ஒரு கடையில் விற்பனையாளராக வேலை செய்கிறார்.  ஒருவர், சமையல்காரர்.  ஒருவர் எஞ்ஜினியர்.  ஒருவர், ஆமாவா ஆமாவா என்று பேசுவார்.  அதனால் அவர் சிங்கப்பூர் குடிமகன் என்று உறுதியாகும்.  பத்து வருடப் பழக்கம்.  அவரிடம் சொன்னால் மாதாமாதம் சிங்கப்பூர் சென்று வரலாம்.  ஆனால் என் நைனாவுடன் உலகச் சுற்றுலா செல்வது போல் இருக்கும்.  நேற்றுதான் அவரிடம் “நீங்கள் எங்கே பணி புரிகிறீர்கள்?” என்று கேட்டேன். 

நீங்கள் என்னிடம் “உங்கள் வாழ்வில் நீங்களே நினைத்து

அவமானம் அடையும்படி ஏதாவது செய்ததுண்டா?” என்று கேட்டால் நேற்று அந்த நண்பரிடம் கேட்டதைத்தான் சொல்வேன்.  ஏன் கேட்டேன் என்று தெரியவில்லை.  ஆனால் கேட்டே ஆக வேண்டும் என்று தோன்றியது.  அதனால்தான் அப்படி ஒரு கேவலமான கேள்வியைக் கேட்டு விட்டேன்.  என்னைப் பொறுத்தவரை இம்மாதிரி கேள்வியெல்லாம் மிகவும் அந்தரங்கமானது. நீங்கள் ஒரு மாதத்தில் எத்தனை முறை உடலுறவில் ஈடுபடுவீர்கள் என்று கேட்பதைப் போன்ற அந்தரங்கமான கேள்வி, நீங்கள் எங்கே பணி புரிகிறீர்கள் என்று கேட்பது. 

அவர் என்ன சொன்னார் தெரியுமா?  ஒரு அரசுத் துறையைச் சொல்லி அதன் செக்ரட்டரி என்றார்.  எப்படி இருக்கிறது கதை?  அவருக்குத் தெரிந்த கடைசி இலக்கியவாதி நா. பார்த்தசாரதி.  அடுத்தது சாரு நிவேதிதா.  இந்த அதிசயம் எல்லாம் எப்படி நடக்கிறது என்பது பெருமாளுக்கே வெளிச்சம். 

இந்தப் பின்னணியில்தான் கடந்த இருபது ஆண்டுகளாக சிங்கப்பூரிலிருந்து எந்த ஒரு அழைப்பும் இல்லாமலேயே வாழ்ந்து விட்டேன்.  இப்போது என் வயது 68.  ஏன் இப்போது இதை நினைக்கிறேன் என்றால், இன்று காலை எனக்கு வந்த ஒரு கடிதம்.  கடிதம் எழுதியவர் பற்றி முந்தைய சிங்கப்பூர் கட்டுரையில் குறிப்பிட்டேன்.  ஒரு ஜெயமோகன் வாசகர்.  அவரைச் சந்தித்ததை மறக்கவே முடியாது.  அவரோடு பேசியது மிகவும் erudite ஆக இருந்தது.  எல்லாம் எழுதி பெயரை எழுதவில்லை.  ஏனென்றால், பெயர் ஞாபகம் இல்லை.  நண்பர்களிடம் விசாரித்திருந்தால் தெரிந்திருக்கும்.  அந்த அளவு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை.  பறந்து கொண்டிருக்கிறேன்.  அவர் இன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  ஜெயமோகன் வாசகர்கள் என்றால், கடிதம் கூட நீளமாகத்தான் எழுதுகிறார்கள்.  பெயர் சரவணன் விவேகானந்தன்.  இனி இந்தப் பெயர் ஒருபோதும் மறக்காது. 

எனக்கு பெயர் மறக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஏதாவது ஒரு சம்பவத்தோடு அல்லது எழுத்தோடு அது தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.   ரமாவை எடுத்துக் கொள்வோம்.  சிங்கப்பூரில் மாயா என்று ஒரு சிறுகதையைப் படித்தேன்.  அதோடு முடிந்தது.  ரமா என் நெருங்கிய சிநேகிதி.  மாயாவை எழுதியவளை எப்படி மறக்க முடியும்?  உமா கதிர் என்று ஒரு நண்பர்.  அவருடைய சிறுகதைகள் எனக்குப் பிடித்தமானவை.  அது மட்டும் அல்லாமல் அவர் இன்னொரு விஷயமும் செய்தார்.  பள்ளம் என்ற ஒரு இடத்துக்கு அழைத்துப் போனார்.  அங்கே ஒரு குறிப்பிட்ட சீனனின் கடையில் fish ball soup வாங்கிக் கொடுத்தார்.  அப்படி ஒரு அற்புதமான சூப்பை என் வாழ்நாளில் குடித்ததில்லை.  அதைச் சொன்னேன்.  சொல்லியிருக்கவே வேண்டியதில்லை.  அவருக்கே தெரிந்திருக்கும்.  சீனர்களைத் தவிர வேறு யாருமே அத்தனை சூட்டை சாப்பிட முடியாது.  ஆனால் நான் காஃபியை சூடாகக் குடிக்க வேண்டும் என்று (நீங்கள் நினைக்கும் சூடு வேறு, நான் குடிக்கும் சூடு வேறு) வெள்ளி டம்ளர் வைத்திருக்கிறேன்.  டம்ளரைக் கையால் தொட இயலாமல் கர்ச்சீஃபால்தான் பிடித்துக் கொள்வேன்.  அல்லது சிறிய துண்டு. சமயங்களில் அந்த சூடும் போதாமல் வெள்ளி டம்ளரிலேயே அண்ணாந்து குடிக்க நேர்வதும் உண்டு.  அப்படி ஒரு சூடு வேண்டும் எனக்கு.  எனக்கே அந்த ஃபிஷ் பால் சூப் செம சூடாக இருந்தது.  ஆனால் உஸ் உஸ் என்று ஒரே பாங்கில் குடித்து விட்டேன்.  ஒரே பாங்கு என்றால், அதே யோசனையில் சூடு ஆறும் முன்பே குடித்து விட வேண்டும்.  தமிழர் யாருமே அப்படிக் குடிக்க மாட்டார்கள்.

அப்போது உமா கதிர் ஒரு விஷயம் சொன்னார்.  அவர் யார் யாருக்கோ அந்த ஃபிஷ் பால் சூப்பை அதே இடத்தில் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.  யாருமே அதை இத்தனை ரசித்துக் குடித்ததில்லை.  அந்தக் கடையில் என்ன விசேஷம் என்றால், மற்ற இடங்களில் ஃபிஷ் பாலை கடைகளில் வாங்கி சூப்பில் போட்டுக் கொடுப்பார்கள்.  இந்தக் குறிப்பிட்ட கடையில் மட்டும் ஃபிஷ் உருண்டையை அவர்களே புதிதாகச் செய்கிறார்கள்.

சரவணன் விவேகானந்தன் கடிதத்தில் ஒரு பகுதியை மட்டும் இங்கே தருகிறேன்.

அன்புள்ள சாரு,


சிங்கப்பூர் சார்ந்த உங்கள் பதிவை பார்த்தேன், சாரு. இந்த “என் நிகழ்ச்சிக்கு வந்தால் வேறு நிகழ்ச்சி எதிலும் பங்குபெறக் கூடாது”  என்ற இந்த விதியை முதலில் கேட்டபோது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. எனக்கு இதன் முதல் அனுபவம் ஞாநி இங்கு வந்திருந்த போது நிகழ்ந்தது. சிங்கப்பூர் வருவது உறுதியானவுடன் ஞாநி இந்தியாவில் இருந்து போன் பண்ணி, “சரண், நான் சிங்கப்பூர் வருவது உறுதியாகிவிட்ட்து, நீங்கள் வேறு ஏதும் நிகழ்ச்சிகள் இருந்தால் ஏற்பாடு செய்யலாம்”  என்றார். நான் Nanyang Technological University உடைய TED Talk  உட்பட மூன்று நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தேன். அப்போதுதான் இந்த “பிரத்யோக” விதிமுறை அவருக்கு சொல்லப்பட்டது. ஞாநி அதை கடுமையாக எதிர்கொண்டார்.  “வேண்டுமானால் நிகழ்ச்சியை ரத்து செய்து விடுங்கள், ஆனால் உங்கள் நிகழ்ச்சியை தவிர நான் என்ன செய்ய வேண்டும் / செய்யக் கூடாது என்று நீங்கள் எனக்கு கண்டிஷன் போட முடியாது,  ஹோட்டல் அறை கூட எனக்கு நீங்கள் புக் பண்ண தேவையில்லை, நான் நண்பர்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிடடார். பெரும் சங்கடங்கள் வேண்டாமே என்று நானே அந்த TED Talk கை கேன்சல் செய்துவிட்டேன். பின் இரு நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டார். அந்த முறைதான் நானும் ஞாநியும் கம்போடியா பயணம் போனோம். 


இங்கு நிகழும் பெரும்பாலான தமிழ் சார்ந்த  நிகழ்ச்சிகளுக்கு அரசு நிதி ஆதரவு உண்டு. அப்படி அரசு நிதி பெற்று தமிழகத்தில் இருந்து இலக்கியவாதிகளை இங்கு அழைத்து வரும்போது, அவர்களை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்து பலதரப்படட வாசகர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதுதானே படைப்பாளிகளுக்கு செய்யும் மரியாதை மற்றும் சிங்கப்பூர் வாசகர்களுக்கும் அது ஒரு நல்ல வாய்ப்பு. மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அல்லது வேண்டாம் என்பது அந்த படைப்பாளியின் தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும். கலைஞர்கள், இலக்கியவாதிகள் எல்லாம் பொது மனிதர்கள். அவர்கள்  எல்லோருக்கும் சொந்தம்.  அவர்களை எப்படி தனியுடைமையாக இவர்கள் கையாள முனைகிறார்கள் என்று தெரியவில்லை. ஜெமோ இங்கு பல பல முறை வந்திருக்கிறார். இதுவரை ஒரு முறை கூட அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது கலந்து கொள்ளக்கூடாது என்று ஒருவரும் அவரிடம்  சொன்னது கிடையாது. சொல்லவும் முடியாது. சொன்னால் அதை எப்படி கடுமையாக எதிர்கொள்வார் என்று என்னால் அனுமானிக்க முடியும். நான் இதையும் சொல்ல வேண்டும்.  இந்த “என் நிகழ்ச்சிக்கு வந்தால் வேறு நிகழ்ச்சி எதிலும் பங்குபெறக் கூடாது” என்ற விதி சிங்கப்பூருக்கான பொது விதி அல்ல. நாஞ்சில், சுனில் கிருஷ்ணன், இசை போன்றவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்றே சென்றிருக்கிறார்கள். எங்கு கலந்து கொள்வது/வேண்டாம் என்பது படைப்பாளிகளின் தேர்வாக மட்டுமே இருந்திருக்கிறது. இசை எல்லாம் வந்திருந்து அவனுக்கு சிங்கப்பூரை முழுமையாக சுற்றிக்காட்ட முடியாத அளவுக்கு  நிகழ்ச்சிகளில் தொடந்து கலந்து கொண்டான். அப்படி பல்வேறு வாசகர்களுடன் கலந்துரையாடுவதுதான் அவனுக்கு மிக மனநிறைவாக, சந்தோசமாக இருந்தது. அவனுக்கு சிங்கப்பூரை இன்னும் முழுமையாக சுற்றிக்காட்ட முடியவில்லையே என்ற மனக்குறை எனக்குத்தான் இருந்தது.

மேலே உள்ள கடிதப் பகுதியைப் பார்த்து விட்டு என் மலேஷியப் பயணம் பற்றி யோசிக்கிறேன்.  என் நண்பரின் செலவில் மலேஷியா போகிறேன்.  திருமாறனுக்கும் மலேஷியாவிலோ சிங்கப்பூரிலோ என்னைத் தவிர வேறு எந்த எழுத்தாளரையும் தெரியாது.  மாணவப் பருவத்தைக் கடந்து வேலையில் சேர்ந்திருக்கிறார்.  என்னை மட்டுமே தெரியும்.  பணம் செலவு செய்து, (எனக்கு வீடுகளில் தங்கப் பிடிக்காது என்பதைத் தெரிந்து கொண்டு) ஓட்டலில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து என்னை வரவழைத்து விட்டார். மலேஷியாவிலிருந்து நான் சிங்கப்பூர் செல்லலாம் என்று யோசித்தால் என்னை அங்கே வரவேற்க ஒரு நாதி இல்லை. 

ஏன் இந்தப் புறக்கணிப்பு என்றும் எனக்குப் புரியவில்லை.  ஆனால் என்னுடைய இப்போதைய நிலை என்னவென்றால், என்னால் இனிமேல் சிங்கப்பூர் அரசாங்கமே அழைத்தாலும் செல்ல முடியாது.  பயணம் செல்லக் கூடிய பலம் இன்னும் ஏழு ஆண்டுகளே இருக்கும்.  அதற்குள் நான் என்னுடைய நீண்ட நாள் கனவான கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சாலை வழியாகக் கடந்தாக வேண்டும்.  அடுத்து மேற்கு ஐரோப்பிய நாடுகள்.  ஸில்ஸ் மரியா.  சுவிஸ்ஸில் உள்ள கிராமம்.  இப்படிப் பலது இருக்கிறது.  முடிந்தால் தென்னமெரிக்காவில் விடுபட்ட நாடுகள்.  முக்கியமாக மெக்ஸிகோ.  முக்கியமாக எல் சால்வதோர், நிகாராகுவா, கூபா.  இதையெல்லாம் விட்டு விட்டு என்னால் நன்னிலத்துக்கும் பொறையாறுக்கும் நாச்சியார் கோவிலுக்கும் நரிமனத்துக்கும் மாயவரத்துக்கும் சுற்றுலா சென்று கொண்டிருக்க முடியாது.  என்னைப் பொறுத்தவரை சிங்கப்பூர் என்பது ஒரு நன்னிலம் மாதிரிதான்.  நாச்சியார் கோவில் மாதிரிதான்.  மாயவரம் மாதிரிதான். 

சிங்கப்பூர் என்பது ஒரு டவுன்ஷிப்.  அந்தக் காலத்தில் 1975இல் நான் திருச்சியில் படித்துக் கொண்டிருந்தபோது திருவெறும்பூரில் ஒரு டவுன்ஷிப் வந்தது.  அந்த மாதிரி ஒரு டவுன்ஷிப்தான் சிங்கப்பூர்.  எனக்கு எப்போதுமே பார்க்குகள் பிடிக்காது.  சிங்கப்பூர் என்னோடு எப்படி சம்பந்தம் என்றால், அதன் வாசகர்கள்.  இப்போது வாட்ஸப் வந்த பிறகு எல்லோருடனும் அதிலேயே நான் உரையாடிக் கொள்கிறேன்.  முடிந்தால் இருக்கவே இருக்கிறது ஸூம்.  ஆனால் ஸாந்த்தியாகோ தெ சீலே அப்படி அல்ல.  அங்கே இருக்கும் ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு கட்டிடமும், ஒவ்வொரு சிலையும் என் குருதியோட்டத்தோடு கலந்தது.  அங்கே எனக்கு நண்பர்கள் இல்லை. ஆனால் அந்த இடம் முக்கியமானது.  அந்த மண்ணும் மலைகளும் முக்கியமானவை. அந்தக் கடல் முக்கியமானது. அந்தக் கடலில் பாப்லோ நெரூதாவின் கவிதை மணம் கலந்திருக்கிறது. சிங்கப்பூர் நேர் எதிர்.  அந்த ஊர் அல்ல, அந்த நண்பர்கள் எனக்கு முக்கியம்.  எனவே இனிமேல் சிங்கப்பூர் செல்லும் சந்தர்ப்பம் நேராது.  அந்த நாட்களை நான் கிழக்கு ஐரோப்பாவுக்கே தர வேண்டும். 

இப்போது நீங்கள் சரவணன் விவேகானந்தன் கடிதத்தின் மீதிப் பகுதியைப் படிக்க வேண்டும். இந்தக் கடிதத்தை உங்கள் பெயர் இல்லாமல் வெளியிடுகிறேனே என்று சொன்னேன்.  அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லி விட்டார் சரவணன்.  மேலும், அப்பா டக்கர் என்ற பெயரில் ஒரு கோழை கிளம்பியிருக்கிறார்.  எழுத்தாளர்தான்.  அவர் யார் என்று எனக்குத் தெரியும். அவர் ஒருத்தர் அல்ல.  ரெண்டு பேர். நக்கிப் பிழைக்கும் தந்திரங்களால் எத்தனை நாள் ஓடும் என்று பார்க்கிறேன்.  நடத்துங்கள் உங்கள் ராஜ்ஜியத்தை. இனி சரவணன் கடிதத்தின் மீதிப் பகுதி:    

”அந்த நண்பர் சொல்லியிருந்த இன்னொரு உண்மையான விஷயம் அரசு அமைப்புகளுக்கு உள்நோக்கத்துடன் தொடர்ந்து கடிதம் எழுதி பிரச்சனை கொடுப்பது. உங்களுக்குக் கடிதம் எழுதி இருந்த நபர் அதை மிகத் தெளிவாக எழுதியிருந்தார்.  சிங்கப்பூரின் எந்த அமைச்சகத்துக்கு/ அரசு அமைப்புகளுக்கு ஒரு கடிதம் எழுதினாலும் அதன் மேல் அவர்கள் நடவடிக்கை எடுத்து அது ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது விதி.  இது ஒரு அமைப்பு வெளிப்படையாக, உண்மையாக,  முறையாக செயல்பட வேண்டும் என்பதற்காகவும், அக்கவுண்டபிலிட்டிக்காகவும் ஒரு நல்ல நோக்கத்தை முன்வைத்து உருவாக்கப்பட்ட ஒன்று. அதுதான் இவர்களுக்கு வசதியாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து இன்னொரு அமைப்பு அழைத்துவரும் ஒரு படைப்பாளி மீது அவதூறுகளை அள்ளி இறைத்து கடிதங்களை எழுதுவார்கள். குற்றசாட்டுகள் எல்லாம் மொக்கையாக இருக்கும், அதெல்லாம் பொருட்டில்லை, அந்தக் கடிதத்தை பெரும் அரசு அதிகாரி, சம்பந்தப்படடவர்களை விசாரித்து, ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கங்கள் பெற்று, அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன் மேல் முடிவு எடுத்து, சம்பந்தப்படடவர்களின் விளக்கங்களை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்து, தமது சீன மேலதிகாரிக்கு அதை விளக்கி, தனது முடிவை நியாயப்படுத்தி, பின் அதை ஆவணப் படுத்த வேண்டும். இது அவர்கள் வேலையின் தரக்குறியீடு. அதை அவர்கள் தவிர்க்கவே முடியாது. ஒவ்வொரு முறை இன்னொரு அமைப்பு ஒரு எழுத்தாளரை அழைக்கும்போது இதேபோல் தொந்தரவு கொடுத்து, அதில் சம்பந்தப்பட்டிருக்கும் அரசு அலுவலருக்கு பணிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் அது ஒரு பிரச்சனைக்குரியதாக ஆக்குவார்கள். இது இருபக்கமும் கூர்மையான கத்தி என்பதை இவர்கள் அறியவில்லை. ஒரு நல்ல நோக்கத்தில் உருவாக்கப்படட விதி இவர்களுக்கு இலக்கிய அரசியலுக்கான கருவியாக இருக்கிறது. ஆனால் எனக்கு தெரிந்து இவர்கள் இப்படி கடிதங்கள் போட்டு ஒரு முறைகூட வென்றதில்லை. இவர்களின் மொக்கை புரிதலைக்கொண்டு மொக்கை குற்றசாட்டுகளை அடுக்கிவிடடால் அதை அறிய முடியா அளவில் இல்லை இதன் மேல் முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கும் அதிகாரிகள். 

ஆனால் இது சிங்கப்பூர் முகம் அல்ல. மிக அர்ப்பணிப்புடன், தனது சொந்த காசை செலவழித்து,  படைப்பாளிகள் மேல் மிகுந்த மதிப்புடன், அவர்களை வரவேற்று, உபசரித்து மிக சிறப்பாக செயல்படுகிறவர்கள்தான் பெரும்பான்மை. எனக்குத்தெரிந்து சிங்கப்பூர் வந்திருந்த படைப்பாளிகள் அனைவரும் இதை வழிமொழிவார்கள் என்று நினைக்கிறேன். சிங்கப்பூர் திரும்ப வர ஆசைப்படுவார்கள். போன வாரம் மனுஷ்யபுத்திரன் 9 வருடங்களுக்கு முன் சிங்கப்பூர் வந்திருந்து இந்தியா திரும்பியபின் “உங்களையெல்லாம் அவ்வளவு நினைக்கிறேன் நண்பர்களே…” என்று தலைப்பிட்டு எழுதிய ஒரு பதிவை ஃபேஸ் புக் “இன்றையநாள்” என்று ஞாபகப்படுத்தியது.  

https://www.facebook.com/notes/5258576354168233/   அதில் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு எந்த அளவு தன்னை பார்த்துக்கொண்டார்கள் என்று எழுதி இருந்தார். அதுதான் சிங்கப்பூர் இலக்கிய வாசகர்களின் முகம். 

 இந்நிலையில் ஒரு முதிர்ந்த சமூகமாக இதுபோன்ற சில்லறை அரசியல் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது யாருக்கும் பயனளிக்கப்போவதில்லை. ஒரு கலைஞன், படைப்பாளி யாருக்கும் தனிப்பட்டு பாத்தியப்பட்டவன் இல்லை.  அவனைக் கட்டுப்படுத்த நினைப்பது, அவனை முன்வைத்து தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். மொட்டைக் கடுதாசி எழுதி இவர்கள் ஒரு முறை கூட இதுவரை வென்றது கிடையாது என்பதை உணர வேண்டும், வெல்ல சாத்தியமும் இல்லை. 

ஒரு படைப்பு அல்லது ஒரு கருத்து நமது அறிவுக்கு, மனதிற்கு இயைந்து வரவில்லை என்பதாலேயே அதை எதிர்ப்பது என்பது ஃபாசிசம். நமது நத்தைக் கூட்டு வாழ்க்கையையும் தாண்டி பெரும் வாழ்வுகளும், பல்வேறு சாத்தியங்களும் அடங்கியதுதான் இந்த உலகம். இலக்கியம் பிரதிபலிப்பது அதைத்தான்.

ஜெமோ சொல்லுவார், இலக்கியம் என்பது சரியான, மனிதாபிமானமுள்ள, ஒழுக்கமான, அழகான, சிறந்த விஷயங்களாலானதல்ல. அது உண்மைகளால் ஆனது என்று.  இலக்கியம் ஒற்றைக்குரல் கொண்ட ஒன்று அல்ல,  உங்கள் குரலை இயைந்து அது எதிரொலிக்கவில்லை என்பதிலேயே அது எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று அல்ல. எந்த மனிதருக்குள்ளும் தன்னைப் பொருத்திக்கொள்ளும் மனவிரிவு அல்லது களங்கமின்மையையே இலக்கியவாசகனின் முதல் தகுதி. அது சிந்தனையை கொடுப்பதல்ல, உங்களை சிந்திக்கவைக்கும் ஒரு மொழிக்களம் மட்டுமே. எனவே அதிலிருந்து எழும் எல்லா சிந்தனைகளும் உங்களில் இருந்து வருபவை. அதற்க்கு பொறுப்பேற்க வேண்டியது நீங்கள்தான். இங்கு வந்த ஒவ்வொரு படைப்பாளியும் மிக சிறந்தவர்கள், தம்மை நிரூபித்துக்கொண்டவர்கள். அவர் எவரொருவரின் பெருமையையும் உங்கள் உள்நோக்கங்கள் கொண்ட அவதூறு கடிதங்களால் கிஞ்சித்தும் தீண்ட இயலாது என்பதுதான் இதுவரையான சிங்கப்பூர் நிதர்சனம்.  சிங்கப்பூர் இலக்கிய வாசகர்கள் சார்ந்து பத்து, இருபது வருடங்களுக்கு முன் எந்த மாதிரி எண்ணங்கள் இருந்தது என்பது வேறு, ஆனால் இன்று  சிங்கப்பூர் இலக்கிய வாசகர்கள் சார்ந்து ஒரு பெருமிதம்/மனநிறைவு நவீன தமிழ்ப் படைப்பாளிகளிடம் உண்டு. அதுதான் சிங்கப்பூரின் உண்மையான முகம். 

அன்புடன் 

சரவணன் விவேகானந்தன்  

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai