மரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு (2)

பின்வரும் கடிதத்தை மரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

அன்பான சாரு.

உங்களுடைய சமீபத்திய உரை கேட்டேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. உங்களிடம் பேசத் தோன்றியது. நீங்கள் பேசுவீர்களா எனத் தெரியவில்லை. வாய்ப்பிருப்பின் தங்கள் எண்களை அனுப்புங்கள்.

ம.நவீன்

மலேசியா

அன்புள்ள நவீன்,

என் தளத்தில் வெளியாகும் பெரும்பாலான கடிதங்களை அவர்களின் அனுமதி பெற்ற பிறகே வெளியிடுகிறேன்.  ஆனால் உங்களுடைய இந்தத் தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டு, அதற்கு பதில் எழுதும் காரணம் ஒன்று உண்டு.  சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மலேஷியா வந்திருந்தேன்.  அப்போது உங்களையும் சந்தித்தேன்.  அதற்கு முன்பு நான் உங்களுடைய பத்திரிகையிலும் எழுதிக் கொண்டிருந்தேன் என்று எனக்கு ஞாபகம்.  எனக்குப் பல விஷயங்களில் ஞாபகம் தவறாக இருக்கும்.  தவறு எனில் திருத்துங்கள்.  ஆனால் ஒருசில விஷயங்களில் எனக்கு நம்ப முடியாத அளவில் ஞாபகம் இருக்கும்.  மலேஷியா வந்திருந்தபோது நாம் மிக நல்ல நண்பர்களாகப் பழகினோம்.  சுற்றினோம்.  நானும் திரும்ப ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

பிறகு சில காலம் கழித்து ஜெயமோகன் தளத்திலோ அல்லது உங்கள் பத்திரிகையிலோ உங்கள் கட்டுரை ஒன்றில் “உலக இலக்கியத்தைத் தன் கைவிரலில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கும்” சாரு நிவேதிதா என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஜெயமோகனைக் குறித்த அந்தக் கட்டுரையில் அந்த வாக்கியம் அவசியமே இல்லாதது.  அதைப் படித்ததிலிருந்து உங்களை என் மனதிலிருந்து நீக்கி விட்டேன்.  எல்லா எழுத்தாளர்களையுமே என் சகாக்களாக நினைக்கும் எனக்கு உங்கள் வார்த்தைகள் மிகுந்த கசப்புணர்வை ஏற்படுத்தி விட்டன.  நீங்கள் என் படைப்புகளை என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அது எனக்குப் பெருமை.  ஆனால் என்னைப் பற்றிய உங்கள் அனுமானங்களையெல்லாம் பொதுவெளியில் எழுதலாமா?  அதிலும் என் நண்பனாக அடையாளப்படுத்திக் கொண்டு?  எந்த ஒரு எழுத்தாளனுக்குமே நீங்கள் சொல்வது போன்ற ஒரு நினைப்பு வருமா?  அவ்வளவு மடையர்களா எழுத்தாளர்கள்?  உலக இலக்கியம் என்பது ஒரு மகா சமுத்திரம் என்பது கூடவா எழுத்தாளர்களுக்குத் தெரியாது?

மேலும், என்னைப் பற்றி உங்களுக்கு எதன் காரணமாக அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது? அதை விளக்கிச் சொல்ல முடியுமா?  அது தெரிந்தால்தான் நாம் கைகோர்த்தபடி மேற்கொண்டு நண்பர்களாகப் பயணிக்க முடியும். சென்ற ஆண்டு கூட அரூ நடத்திய நேர்காணலில் நீங்கள் கேட்டதாக ஓரிரு கேள்விகள் இருந்தன.  நல்ல கேள்விகள்தான்.  பதில் சொல்லவும் விருப்பம்தான்.  ஆனாலும் நான் கொண்டிருந்த சின்ன மனத்தாங்கல், பிணக்கு காரணமாக பதில் சொல்லாமல் விட்டு விட்டேன்.  எனக்கு உங்கள் மீது கோபமோ வருத்தமோ கூட இல்லை. ஒரு மாதிரி ஏமாற்றம். 

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  என் நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் ஒரு நண்பரைப் பார்க்க ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் போகிறார்.  மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதி. லிஃப்டில் அவர் கூட மூன்று பையன்கள்.  அன்று விடுமுறை தினம் என்பதால் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டுக்குத் திரும்புகிறான்கள்.  ப்ளஸ் டூ படிக்கும் பையன்கள் போல் தெரிகிறது.  அவர்கள் இறங்கும் தளம் வந்ததும் அவர்களில் இரண்டு பேர் சொல்லி வைத்தாற்போல் ராகவனின் பின் மண்டையில் பொளேர் என்று அறைந்து விட்டுப் போகிறான்கள்.  அறைந்து விட்டு அவன்கள் ஓடவில்லை.  லிஃப்ட் கதவு மூடும் வரை நின்று நக்கலாக அவரைப் பார்த்து சிரித்து விட்டுப் போகிறான்கள். 

இதே மாதிரியான ஒரு வன்முறையைத்தான் உங்கள் வார்த்தைகளில் நான் கண்டேன்.  போகிற போக்கில் மண்டையில் போடுவது.  நீங்கள் போட்டதாவது பரவாயில்லை.  இன்னொருத்தர் தமிழின் பிரபலமான சிறுகதை எழுத்தாளர்.  இளைஞர்.  அவர் முகநூலில் சில மாதங்களுக்கு முன்பு, சாரு ஒரு போர்னோ ரைட்டர் என்று எழுதினார்.  இவருக்கு என் கதை வயது கூட இருக்காது.  பொர்னாகிரஃபிக்கும் கலைக்கும் உள்ள தொடர்பு பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா, பொர்னாகிரஃபியே கூட கலையாக மாறும் சாத்தியப்பாடுகள் தெரியுமா, சூஸன் ஸொண்டாக் பெயரை இவர் கேள்விப்பட்டிருக்கிறாரா, ஸொண்டாக் எழுதிய The Pornographic Imagination என்ற நீண்ட கட்டுரை பற்றி நான் எண்பதுகளின் தொடக்கத்திலேயே நண்பர்களுடன் நிகழ்த்திய உரையாடல் பற்றி இவர் அறிவாரா, எண்பதுகளில் இவர் பிறந்தாரா முதலில், யார் கேட்பது?  சாரு ஒரு போர்னோ ரைட்டர் என்று இவர் முகநூலில் எழுத நூறு பேர் அதற்கு விருப்பக்குறி போட ஒரே அதகளம்.  அவர் யார் என்று ஜோஸ்யத்தைப் பார்த்தால் ஜெயமோகனின் தீவிர விசிறி.  அது தப்பில்லை.  ஆனால் இவர் ஜெயமோகனையும் படித்த மாதிரி தெரியவில்லையே? இம்மாதிரி ஆட்களெல்லாம் பிரபலமான சிறுகதை எழுத்தாளர்களாக விளங்கி வருகிறார்கள்.   

இதெல்லாம்தான் போகிற போக்கில் மண்டையில் தட்டுவது என்கிறேன்.  இப்படியெல்லாம் செய்தால் ஏதோ ஜம்பம் என்று நினைக்கிறார்கள்.  இது இவர்களைத்தான் – இவர்களது எழுத்தைத்தான் பாதிக்கும் என்பது இவர்களுக்குத் தெரியவில்லை

எனவே நவீன், நீங்கள் என் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லுங்கள்.  நாம் மீண்டுமே பழையபடி நண்பர்களாகப் பயணிப்போம்.

அன்புடன்

சாரு