காலணா வெற்றிலையும் ஒரு கப் காஃபியும்…

நாம் நம்முடைய நுண்ணுணர்விலும் சுரணையுணர்விலும் ரொம்பவும் மழுங்கிப் போயிருக்கிறோம் என்று தோன்றுகிறது.   நானும் தொடர்ந்து பண விஷயத்தைப் பற்றி அலுக்கவே அலுக்காமல் எழுதிக் குவிக்கிறேன். ஆனால் பணத்தை ஏன் மனிதர்கள் தெய்வமாய்த் தொழுது கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் மட்டும் புரியவே மாட்டேன் என்கிறது.   அமெரிக்கர்கள் பணத்தை மிக முக்கியமாகக் கருதுகிறார்கள். நண்பர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதில் கூட கணக்குப் பார்க்கிறார்கள்.  அவ்வளவு ஏன், காதலிக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதில் கூட கணக்கு.  சமீபத்தில் Meital Dohan தன் காதலர் அல் பச்சீனோவைப் பிரிந்ததற்கு முக்கியக் காரணமாகச் சொன்னது, அல் பச்சீனோ தனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க மாட்டேன் என்கிறார் என்பதுதான்.  அல் பச்சீனோ உலக மகா கோடீஸ்வரர்.  ஏன், தோஹானும் கோடிஸ்வரிதான்.  ஆனால் அவள் இஸ்ரேலி.  கொஞ்சம் ஆசியக் காற்று அடிக்கிறது அவளிடம்.

நான் உங்களுக்குப் பல முறை லூசிஃபர் படம் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.  லூசிஃபர் நரகவாசி என்பதால் பூலோகவாசிகளின் தர்ம நியாயமெல்லாம் புரியாதவன்.  அவனுக்குப் பல தோழிகள்.  ஒரே ஒரு காதலி.  அந்தக் காதலிக்கு அவன் தன்னோடு மட்டுமே பழகினால் தேவலை.  ஆனால் அந்த ராஸ்கலோ சரியான வுமனைஸராக இருக்கிறான்.  அவள் ஒரு போலீஸ் அதிகாரி.  லூசிஃபரின் மதுபான விடுதியில் ஒரு கொலை.  அதை விசாரிக்க வரும் அந்தப் பெண் அதிகாரி – இம்மாதிரி வெப் சீரியல்களில் ஒரு நகரம் என்று எடுத்தால் அதில் ஒரே ஒரு போலீஸ் அதிகாரிதான் இருப்பார்.  அவர்தான் எல்லா கொலைகளையும் விசாரிப்பார்.  வேறு அதிகாரிகளே இருக்க மாட்டார்கள்.  அதையெல்லாம் நாம் கண்டு கொள்ளவே கூடாது – லூசிஃபரின் தோழிகளையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்துகிறாள்.  அந்தப் பெண்களோ லூசிஃபர் படுக்கையில் மிருகம், அரக்கன் என்று சொல்லி அவளைப் படுத்தி எடுத்து விடுகிறார்கள்.  அவளோ லூசிஃபர் அவளைத் தொடுவதற்குக் கூட அனுமதித்ததில்லை.  அந்தப் பொறுக்கிதான் இத்தனை பெண்களோடு படுத்து எழுந்து வருகிறானே, எப்படித் தொட அனுமதிப்பது? 

விசாரணையின் போது அதிகாரி அந்தப் பெண்களிடம் தவறாமல் ஒரு கேள்வி கேட்பாள்.  லூசிஃபர் அவர்களுக்கு லஞ்ச் வாங்கிக் கொடுத்திருக்கிறானா, டின்னர் வாங்கிக் கொடுத்திருக்கிறானா?  ஏனென்றால், இந்தப் போலீஸ் அதிகாரிக்கு அவன் பலமுறை டின்னர் வாங்கிக் கொடுத்திருக்கிறான்.  எல்லாப் பெண்களும் ஒன்று போல் சொல்வார்கள்.  ஒருமுறை கூட அவன் டின்னரோ லஞ்சோ வாங்கிக் கொடுத்தது இல்லை.  அப்பாடா, அவளுக்கு செம நிம்மதி.  அவன் இந்த நாய்களோடெல்லாம் படுத்தாலும் நம்மைத்தான் காதலிக்கிறான்.

ஆக, இதிலிருந்து தெரிந்தது இதுதான்.  காதலிக்குக் கூட டின்னர் வாங்கித் தர மாட்டான்கள்.  ஆனால் அதே அமெரிக்கர்கள் – அதாவது, காசு விஷயத்தில் கறாராக இருக்கும் அவர்கள் – இந்தியர்களைப் போல் ஏமாற்ற மாட்டார்கள்.  டாக்டர் உதாரணம் சொன்னேன்.  பத்து அமெரிக்கவாசிகள் என் நண்பரான ஒரு இந்திய டாக்டரிடம் ஆலோசனை கேட்டார்கள்.  எட்டு பேர் கட்டணம் கொடுக்கவில்லை.  இரண்டு பேர் கொடுத்தார்கள்.  கொடுத்த இரண்டு பேரும் நிஜ அமெரிக்கர்கள்.  எட்டு பேர் அமெரிக்க வாழ் இந்தியர்கள். ஏமாற்றி விட்டார்கள்.  இது போல் அமெரிக்கர்கள் செய்ய மாட்டார்கள்.  அதேபோல் அமெரிக்கர்கள் இந்தியர்களைப் போல் நண்பர்களின் காஃபி செலவையும், பீட்ஸா செலவையும் ஏற்க மாட்டார்கள்.  You owe me one என்று சொல்லி விடுவார்கள். 

இதெல்லாம் எனக்குத் திரும்பவும் பார்க் செல்ல ஆரம்பித்த பிறகு ஞாபகம் வந்தது.  ஏனென்றால், நான் புதிதாக இந்த அறுபத்தெட்டு வயதில் காசு விஷயத்தில் கணக்குப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.  அமெரிக்காக்காரன் வீசா கொடுக்க முடியாது என்று விரட்டியடித்து விட்டதிலிருந்து கணக்குப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். அதனால் யோசனை வந்தது.  போன சனிக்கிழமை ஒரு நண்பர் வந்தார்.  காஃபி என் செலவில் வாங்கிக் கொடுத்தேன்.  ஞாயிறும் பார்க்கில் சந்தித்தோம்.  நாகேஸ்வர ராவ் பார்க் அல்ல.  என் வீடு எதிரே உள்ள மற்றொரு சிறிய பார்க்.  ஞாயிற்றுக் கிழமை இன்னொரு நண்பர் காசு கொடுத்தார்.  மூன்றாம் நண்பர் காசே எடுக்கவில்லை.  காசு எடுக்கவில்லை என்பது முக்கியமே அல்ல.  பில் கொடுக்க வேண்டும் என்ற பிரக்ஞையே அவரிடம் எழவில்லை.  உடம்பில் ஒரு சலனம் கூட இல்லை என்பதுதான் எனக்கு அதிர்ச்சியளித்த விஷயம்.  நான் ஒரு பிச்சைக்காரன் என்பது அவருக்குத் தெரியும். அது மட்டும் அல்ல; என் நைனாவும் என்னைப் போல்தான்.  ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார்.  தனியார்ப் பள்ளியில்.  பிச்சைக்காரனை விடக் கேவலம். ஞாயிற்றுக்கிழமை காசு கொடுத்த நண்பர் என்னை விடப் பெரும் பிச்சைக்காரன்.  அவர் அப்பாவோ என் நைனாவை விட பயங்கரவாதி.  என் நைனாவுக்காவது கடன் இல்லை.  அவர் அப்பாவுக்கு ஊர் பூராவும் கடன்.  காசு கொடுக்காமல் சலனமே இல்லாமல் இருந்த மூன்றாமவரின் தந்தையோ வங்கி மேனேஜர்.  அந்தக் காலத்தில்.  பக்கா மேட்டுக்குடி.  இவர் எப்போதுமே பர்ஸை எடுக்காதது பற்றி நான் “ஓ, இவர் நம்மையெல்லாம் விடப் பிச்சைக்காரர் போல” என்று நினைத்துக் கொண்டிருந்து விட்டேன்.  உண்மையிலேயே.  இந்தக் காலத்தில் எண்பதாயிரம் சம்பளம் வாங்கி, ரெண்டு குழந்தைகளை உயர்நிலைப்பள்ளியில் படிக்க வைப்பவன் பிச்சைக்காரன் தானே?  அப்படித்தான் நினைத்தேன்.  கடைசியில் புலன் விசாரணை செய்தால் அவர் சம்பளம் ஐந்து லட்சமாம்.  ஆமாம், உலகமெல்லாம் சுற்றி விட்டு இங்கே வந்து வேலை பார்த்தால் ஆயிரங்களிலா கொடுப்பான்?  அஞ்சு லட்சம். ஆனால் இரண்டு பிச்சைக்காரர்கள்தான் காசு கொடுக்க வேண்டும்.  அதுவும் பிச்சைக்கார காஃபிக்கு. இத்தனைக்கும் எங்கள் இருவரைப் பற்றியும் நன்கு அறிந்தவர் நண்பர்.  மேலும், எங்களை விட 20 வயது சிறியவர்.  நாங்கள் இருவருமே எழுபதை நெருங்க இருப்பவர்கள். 

ஆனால் இப்படியெல்லாம் யோசிப்பது Silly என்றுதான் சென்ற ஆண்டு வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.  அமெரிக்க எம்பஸியில் நான்காவது தடவையாக “உன்னிடம் காசு இல்லை, பிச்சைக்காரர்களை நாங்கள் உள்ளே விட மாட்டோம்” என்று சொல்லி வீசா மறுத்ததிலிருந்து நான் வேறு ஆளாகி விட்டேன்.  365 நாளும் நான் பணத்தைப் பற்றி ஒரு துளியும் யோசிக்காமல் காஃபி வாங்கிக் கொடுத்தவன்தான்.  அப்படித்தான் 67 வயது வரை இருந்தேன்.  இப்போது மாறி விட்டேன்.  ஐந்தாவது முறையாவது நான் வீசா வாங்கியே ஆக வேண்டும்.  அதனால்தான் இப்படி ஸில்லியாக யோசிக்க ஆரம்பித்தேன்.

இதைக் கூட அந்த நண்பர் படிப்பாரோ இல்லையோ எனக்குத் தெரியாது.  அப்புறம் ஏன் எழுதுகிறேன்?  நீங்கள் நினைக்கலாம், ’ஏன் சாரு இப்படி இருக்கிறார்?  அந்த நண்பரிடம் இதை அவர் நேரிலேயே சொல்லியிருக்கலாமே?’  என்று. எனக்குத் தொழில் எழுத்து.  என்னை பாதிப்பதை நான் எழுதுவேன்.  நுண்ணுணர்வு இல்லாமல் கண்டதையும் செய்வார்கள்.  நான் அதை அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டுமா, சொல்ல?  சாப்பிட்டால் வாயைத் துடைத்துக் கொள்ளவும் சொல்ல வேண்டுமா? இப்படி நான் எழுதுவதைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.  மனம் புண்படுகிறதா?  இந்த ஒட்டு மொத்த விவகாரமே எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது ஐயா.  இத்தனை ஸில்லியாக யோசித்து, இத்தனை ஸில்லியாக எழுத வைக்கிறாரே இந்த நண்பர் என்று. ஏனென்றால், அந்த நண்பரும் சரி, இன்னும் பல நண்பர்களும் சரி, புரிந்து கொள்கிறாற்போல் பல முறை நாகரீகமான முறையில், மனம் புண்படாதபடி எழுதி விட்டேன்.  சொல்லியும் ஆகி விட்டது. பல முறை.  அப்படியும் ஒரு மாற்றமும் இல்லாமல், ஒரு ஆண்டு கழித்து சந்திக்கிறேன், மீண்டும் ஒரு ஆண்டுக்கு முன்னால் நடந்த மாதிரியேதான் நடந்து கொள்வேன் என்றால், இப்படித்தான் நடுரோட்டில் போட்டுக் கிழிப்பேன். 

இத்தனைக்கும் நானும் என் பிச்சைக்கார நண்பரும் அமெரிக்காவில் வசித்ததில்லை.  போனதில்லை.  வேலை பார்த்ததில்லை.  ஆனால் காஃபிக்குக் காசு கொடுக்காத அந்த மேட்டுக்குடி நண்பர் அமெரிக்காவில் பல ஆண்டுகள் வசித்தவர்.  அமெரிக்கர்களின் அடிப்படைப் பண்பை கற்றுக் கொள்ளவில்லையே என வருந்துகிறேன்.  நமக்காக எப்படி ஐயா இன்னொருவன் செலவு செய்யலாம்?  அதிலும் தன் ஊணையும் உயிரையும் உருக்கி உருக்கி எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளன் எப்படி ஒரு குடும்பஸ்தனுக்குச் செலவு செய்யலாம்?  எப்படி அவன் செலவு செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?  எனக்கு என்ன சொந்த வீடு இருக்கிறதா?  என்னிடம் உள்ள இந்த 15000 புத்தகங்களையும் என் காலத்துக்குப் பிறகு என்ன செய்வது?  வீடு இருந்தால் இது அந்த வீட்டில் இருந்து பலருக்கும் உதவும் இல்லையா? 

எழுத்தாளன் என்பவன் துறவியைப் போல என்று எத்தனை முறை எழுதிப் புரிய வைத்திருக்கிறேன்?  அவனைப் போய் பண விஷயத்தில் சுரண்டினால் அது பாவம் இல்லையா?  நீங்கள் நாஸ்திகர் என்றால் சரி.  பாவ புண்ணியத்தில் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் அடுத்த மனிதனை உங்களுக்குக் காசு செலவு செய்ய வைப்பதே பாவம்.  அதிலும் எழுத்தாளன் என்றால் மகா பாவம்.  சொல்லப் போனால் 365 நாளும் நீங்கள்தான் அவனுக்குக் காஃபி வாங்கிக் கொடுக்க வேண்டும்.

உங்கள் பழக்கவழக்கங்களில் மற்றவரைத் துன்புறுத்தாமல் இருத்தல் என்றால் மற்றவரைச் சுரண்டாதிருத்தல் என்றும் பொருள்.  இன்று மாலை ஏழு மணிக்கு என் புத்தகத்தில் கையெழுத்து வாங்க ஒருவர் வந்தார்.  கோவைத் தொழிலதிபர்.  நாற்பது வயது இருக்கும்.  அவருக்கு நான் போன் நம்பர் கொடுத்திருந்தேன்.  நேரம் சொல்லியிருந்தால் நானே கீழ்த்தளத்தில் போய்க் காத்திருந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்து அனுப்பியிருப்பேன்.  ஆனால் சொல்லாமல் வந்ததால் அந்த நேரம் அவந்திகாவின் தியான வகுப்பு.  கடும் அமைதி.  வெளியே கூட ரொம்ப நேரம் பேசாமல் அனுப்பி விட்டேன்.  கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்தேன்.  அதற்குள்ளேயே அவர் மதியம் மந்திரியோடு இருந்ததைச் சொன்னார்.  ஒரு காலணாவுக்கு வெற்றிலை கூட வாங்கி வரவில்லை. 

நண்பர்களே, கையெழுத்து வாங்க வரும்போது நீங்கள் எதுவும் வாங்கி வர வேண்டாம்.  ஆனால் தொழிலதிபர், மதியம் மந்திரியோடு சாப்பிட்டேன் என்பது போன்ற ஜாதக விஷயங்களைச் சொன்னால் நானும் ஒரு பூவன் பழம், ஒரு வெற்றிலை எல்லாம் எதிர்பார்ப்பேன்.  வெற்றிலை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  கிட்டத்தட்ட அடிக்ட்.  இளம் பச்சை வெற்றிலை.  கடும் பச்சை வெற்றிலை அல்ல.  இன்னொரு கோவைத் தொழிலதிபர் ஞாபகம் வந்தார்.  என்னை வந்து பார்த்த அவர் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.  பதினைந்து புத்தகங்களில் கையெழுத்துப் போட்டேன்.  வந்தார்.  போனார்.  அவ்வளவுதான்.  பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு அடுத்த இடம் கோவையில்.  இதெல்லாம் நான் வாங்கி வந்த வரம்.  புகாரே இல்லை.  ஏனென்றால், ஜெயமோகனின் தொழிலதிபர் நண்பர்கள் ஒன்று சேர்ந்து அவருக்காக ஒரு மலைப்பிரதேசத்தில் ஒரு தனித்த பங்களாவை வாங்கி வைத்திருக்கிறார்கள்.  அங்கே நான் இரண்டு நாள் தங்கியிருக்கிறேன்.  பழைய காலத்து அரண்மனை வீடு.  என்னிடம் வரும் கோடீஸ்வரர்கள் வெறும் கையுடன் வந்து என்னிடம் தானம் பெற்றுக் கொண்டு திரும்புகிறார்கள். இதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்தான்.

ஆனாலும் இவர்களின் கலாச்சாரம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.  நம்முடைய மரபு இப்படி இல்லையே?  அமெரிக்கர்களின் மரபும் இப்படி இல்லையே?  ஒருவர் தன் வீட்டுக்கு உங்களை விருந்துக்கு அழைக்கிறார் என்றால் ஒரு விலையுயர்ந்த வைன் போத்தலை வாங்கிக் கொண்டு போவதுதான் அமெரிக்க மரபு.  இந்திய மரபு ஏழையாக இருந்தால் ஒரு அணாவுக்கு ரெண்டு வெற்றிலை.  உங்களுக்குத் தெரியுமா, இன்னமும் அஞ்சு ரூபாய்க்கு ஒரு கை கொள்ளாத அளவுக்குக் கொழுந்து வெற்றிலை தருகிறார்கள்.  எனக்கு அடங்காத ஆச்சரியமாகப் போய் விட்டது.  ஆக, நமக்கு இந்திய மரபும் தெரியவில்லை.  மேற்கத்திய மரபும் தெரியவில்லை.

இதையும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.  வெற்றிலைக்காகவெல்லாம் அலைய வேண்டாம்.  நீங்கள் என் கையெழுத்து வாங்குவதற்காக இவ்வளவு தூரம் என் வீடு தேடி வருவதே பெரிய விஷயம்தான். வெறும் கையோடு வாருங்கள்.  மினிஸ்டர், தொழிலதிபர் என்று அடையாளம் சொன்னதால் நானும் என் அடையாளம் பற்றிச் சிந்திக்க வேண்டியதாயிற்று – நாம் துறவி ஆயிற்றே, துறவிகளை வெறும் கையோடு பார்ப்பது இந்திய மரபு இல்லையே என்று.  அவ்வளவுதான்.  அதோடு அந்தக் காஃபி விவகாரமும் ஞாபகம் வந்தது. 

சென்ற மாத சந்தாவும் நன்கொடையும் ரொம்பவும் சுருங்கி விட்டது. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai