செய்வதற்கு ஒன்றுமில்லாத
தாண்டவராயன்
குழி ஒன்றைத் தோண்டினான்
குழிக்குள் படுத்துக் கொண்டால்
பதமாக இருக்குமென்று
தலைப்பக்கம் கை வைத்துப் படுத்தும் விட்டான்
ஒரு போர்வையும் இருந்தால் சுகமாக இருக்குமே
யென நினைத்தபோது
மேலே ஆளரவம் கேட்டு
கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடும் ஓய்
என்றான்
வந்தவனும் கொஞ்சம் அள்ளிப்
போட்டுவிட்டுப் போனான்
குழி தோண்டிய களைப்பில்
உறங்கிப் போனான் நம் தாண்டவ
ராயன்
பிறகு அந்தப் பக்கமாய் வந்த
வழிப்போக்கர் சிலர்
ஐயோ பாவம் மண்ணள்ளிப் போடவும்
நாதியற்ற பிரேதமெனக்
கொண்டு
மண்ணள்ளி
மண்ணள்ளிப்
போட்டு மூடினர்
இப்படியாய்
முடிவுக்கு வந்தது
தாண்டவராயனின் கதை
கதையென்று ஆரம்பித்தால்
முடிந்துதானே
ஆக வேண்டும்
முடிவு
எப்படியிருந்தால்
யாருக்
கென்ன