பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து…

தற்சமயம் என் எதிரிகள் பா. ராகவன், அபிலாஷ், ஜெயமோகன் மூவரும்தான்.  ஏனென்றால், இந்த மூவரும் எழுதியவைகளுக்குத்தான் உடனுக்குடனே ஆவேசமாக என்னுள் பதில்கள் கிளர்ந்து எழுகின்றன.  அது என் ஔரங்கசீப் வேலையைக் கெடுக்கிறது.  இப்போது சொல்லுங்கள், மூவரும் என் எதிரிகள்தானே?  ஆனால் மூவரும் என் மிக நெருங்கிய நண்பர்கள்.  மூவருக்கும் ஒரு ஒற்றுமையும் உண்டு.  போன்.  இப்போதெல்லாம் பாரா கொஞ்சம் திருந்தி விட்டார்.  காலையில் பண்ணினால் மாலையில் திரும்ப அழைத்து விடுகிறார்.  ஜெயமோகனிடமும் அபிலாஷிடமும் என் தோல்வியை ஒப்புக் கொண்டு நான் போன் செய்வதை நிறுத்தி விட்டு மெஸேஜ் மட்டும்தான் அனுப்புகிறேன்.  மெஸேஜ் அனுப்புவதில் எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை.  24 மணி நேரத்துக்குள் உத்தரவாதமாக பதில் வந்து விடும். 

ஆனால் அந்த மூவரும் எழுதுவதற்கு எனக்குள் தோன்றும் ஆவேசமான பதில்களுக்கு என்ன செய்வது?  படிக்காமல் இருந்து விடுவதுதான் நல்ல உபாயம்.  ஆனால் முடியாதே?  ஒரு அன்பர் தினமும் இரவு பத்தரை மணிக்கு ஜெயமோகன் அன்று அன்று எழுதியதை எனக்கு அனுப்பி விடுகிறார்.  இப்படி ஒரு ஆயிரம் பேருக்கு அனுப்புகிறார் என்று நினைக்கிறேன்.  ஆனால் யாருடைய மெயில் ஐடியும் எதிலும் இருப்பதில்லை.  தனித்தனியாக அனுப்புகிறார்.  அதை நீங்கள் படித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.  ஆனால் பாராவுக்கும் அபிலாஷுக்கும் அப்படிப்பட்ட தொண்டர் படை இல்லாததால் அவர்கள் எழுத்தை நாமேதான் தேடிப் படிக்க வேண்டும். (ம்க்கும், இப்படி போனையே எடுக்காவிட்டால் எவன் கிட்டத்தில் வருவான்?  இவர்கள் வயதில் ஜெ. இருபத்து நாலு மணி நேரமும் கண்ணிமைக்கும் நேரத்தில் போனை எடுத்து விடக் கூடியவராக இருந்தார்!) 

சமீபத்தில் பாரா எழுதியிருந்த ஒரு விஷயம் மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது.  அவர் பொய்யே சொல்வதில்லை.  அதற்கு ஏதோ ஒரு முக்கியமான காரணம் எழுதியிருந்தார்.  ரொம்பவும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு காரணம்.  அதைப் படித்ததிலிருந்து அதற்கு பதில் எழுதாவிட்டால் தூக்கம் வராது என்ற அளவுக்கு மன உளைச்சல் ஆகி விட்டது. 

நான் உண்மையே பேசியதில்லை.  எத்தனை பெரிய அவமானம்.  அதிலும் என் வயதுக்கு.  அதிலும் என் கௌரவத்துக்கு.  அதிலும் எனக்கு இருக்கும் பெயருக்கு.  நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், நான் பொய்யே பேசியதில்லை என்று சொல்பவர் மீது உங்களுக்கு மரியாதை வருமா?  நான் உண்மையே சொன்னதில்லை என்று சொல்பவர் மீது உங்களுக்கு மரியாதை வருமா?

சென்ற மாதம் நடந்ததைக் கேளுங்கள்.  அந்தப் பொய்யை சொல்லியிருக்க வேண்டாம்தான்.  ஆனால் நீங்கள் என்னைக் கொஞ்சம் அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்று கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்.  நான் பொய் சொல்வது மற்றவர்களின் நலன் கருதியே.  நான் உண்மை சொன்னால் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது.  நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?  உனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, நான் உண்மையே சொல்லுவேன் என்பீர்களா?

அவர் ஒரு ஹோமியோ டாக்டர்.  பேரழகி.  வயது முப்பது இருக்கலாம்.  ஹோமியோ பற்றித் தெரியுமா உங்களுக்கு?  நீங்கள் எந்தப் பக்கம் படுக்கிறீர்கள்?  வலது பக்கமா?  இடது பக்கமா?  கனவு வருமா?  என்ன மாதிரி கனவு?  கோபம் வருமா?  பயம் வருமா? எது எதுக்கெல்லாம் கோபம் வரும்?  எது எதுக்கெல்லாம் பயம் வரும்?   

இப்படி ஒரு மணி நேரம் கேள்வி கேட்பார்கள்.  ஏனென்றால், அலோபதி மாதிரி ஜுரத்துக்கு குரோசின் ஷுகருக்கு க்ளைகோமெட் என்று ஹோமியோவில் இல்லை.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மருந்து.  ஆனால் சரியாகி விடும்.  அந்த விதத்தில் ஹோமியோ ஒரு மேஜிக்தான்.  இது என் பொய் பற்றிய கதை என்பதால் ஹோமியோ மகாத்மியத்தை நிறுத்திக் கொள்கிறேன்.  கேள்வி நேரம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஓடியது.  இறுதியில், உங்கள் செக்ஸ் ட்ரைவ் எப்படி என்றார் மருத்துவர்.  நான் மௌனமாக இருந்தேன். 

நார்மல், பிலோ நார்மல், அல்லது அப்நார்மல்?

அவரே எடுத்துக் கொடுத்தார்.

அப்நார்மல் என்றே சொல்லியிருக்க வேண்டும்.  நெளிந்தபடி நார்மல் என்றேன்.  பச்சைப் பொய்.

”மாஸ்டர்பேஷன்?” என்று அடுத்த கணையை எறிந்தார்.

இன்னும் மோசமாக நெளிந்தபடி (ஸூமில் நடக்கிறது பேட்டி) “அஞ்சு வருஷம் ஆச்சு டாக்டர்” என்றேன்.  பொய்யிலேயே வாழ்ந்து வரும் எனக்கே என்னை நினைத்து அந்தக் கணத்தில் கேவலமாக இருந்தது.  அஞ்சு மணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை. 

இப்போது சொல்லுங்கள், பாரா மாதிரி நான் பொய்யே சொல்லாமல் வாழ முடியுமா?