21. சொற்கடிகை

அவந்திகாவுக்கு வெளியில் எங்கே சாப்பிட்டாலும் அந்த உணவு விஷமாகி விடும் வரத்தைக் கொண்டிருக்கிறாள்.  வெளியில் என்றால் உணவு விடுதியில் மட்டும் அல்ல.  உங்கள் வீட்டில் கூட.  அதனால் மணமான புதிதில் என் பெற்றோரைப் பார்க்கச் சென்றால், அவள் வெறும் பழம் மட்டுமே சாப்பிடுவாள்.    அதனாலேயே என் அம்மாவுக்கு அவளைப் பிடிக்காமல் போய் விட்டது.  மட்டுமல்லாமல் அவள் அப்போது மாதுரி தீட்சித் மாதிரி இருந்தாள்.  அம்மாவுக்கு எப்படிப் பிடிக்கும்?  வேணும்னா அரிசியைக் கொண்டு வாடா ரவி, நான் சமைச்சு தர்றேன் என்பார்கள். 

அவள் வெளியிலேயே செல்லாமல் வீட்டிலேயே இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.  பெங்களூர் செமினாருக்குச் சென்றால் ஒரு இரவும் ஒரு பகலும்தான் தங்கல்.  அப்போதும் பழ உணவுதான்.  அவளுக்கு ஒத்துக் கொண்டா ஒரே உணவு விடுதி மஹா முத்ரா.  அதை மூடி விட்டார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே நான் ஸ்விக்கி மூலம் உணவு சொல்லும் போது அசைவம்தான் எப்போதும்.  மீறி சைவம் சொல்லி விட்டால் அதில் ஏதேனும் ஒரு ஐட்டத்தை இவள் தொட்டு விட்டால் அவள் வயிற்றில் விஷமாகி விடும். 

விஷமானால் என்ன, பெரிய விஷயமா?

அவளுக்குப் பெரிய விஷயம். மரணம் தொட்டு வருவாள். மறு பிழைப்புதான்.  ஏனென்றால், எந்த அலோபதி மருந்தும், ஆயுர்வேத மருந்தும் அவளுக்கு ஒத்துக் கொள்ளாது.   கொடும் ஜுரம் என்று ஒரே ஒரு பாரசிட்டமால் போட்டு வயிறு வெந்து இரண்டு மாதம் திரவ உணவே உண்டாள்.  இரண்டு மாதமும் படுத்த படுக்கை.  இது சென்ற ஆண்டு.

இதையெல்லாம் மறந்து விட்டு ஒரு சைவ ஐட்டத்தை நேற்று வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன்.  அவளும் ஜாலியாகச் சாப்பிட்டாள்.  நானும் பிரித்து மேய்ந்தேன்.  அத்தனை ருசி.  காலையில் இருபது முறை வாந்தி.  லிட்டர் லிட்டராகக் கொட்டியது.  மருத்துவமனை செல்ல முடியாது.  எந்த மருந்து உள்ளே போனாலும் குடல் வெந்து விடும்.   திரவமெல்லாம் வெளியேறி டீஹைட்ரேட் ஆகி ஒரே மயக்கம். 

வீடே அல்லோலகல்லோலம்.  பத்து பூனைகள் வேறு.  அவைகளுக்கு மலஜலம் எடுக்க வேண்டும்.  அப்போது காலை ஒன்பது மணி.

ராஜேஷ் வந்தார்.  குதிரை வால் எழுத்தாளர்.  பார்க்கும் போதே அவர் செங்கல்பட்டிலிருந்து வருகிறாரா செங்குன்றத்திலிருந்து வருகிறாரா என்றுதான் தோன்றியது.  ஒரு நூறு கி.மீ. பைக்கில் வந்தால்தான் அப்படி ஒரு தோற்றம் கிடைக்கும்.  எனக்கோ வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலை.

ராஜேஷ் அப்படி வந்ததும் மனம் உருகி விட்டது.  பல முறை மன்னிப்பு கேட்டுக் கொண்டு வாசலிலேயே அனுப்பி விட்டேன்.  ஒரு நிமிடம் கூடப் பேச முடியவில்லை. 

வேறு யாருக்காக என்றாலும் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்து விடலாம்.  மருத்துவமனை அவளுக்கு சத்துரு.  அவள் வயிறு எந்த மருந்தையும் ஏற்காது.  அதை எந்த மருத்துவராலும் புரிந்து கொள்ள முடியாது.

பிறகு ராஜேஷுடன் பேசினேன். 

அவர் சொன்னது சரிதான்.  நான் முந்தைய சாரு இல்லைதான்.  ஆனால் அவர் சொல்ல நினைத்தது, மேடைப் பழக்கம் இல்லாததால் வேறு அர்த்தம் தொனித்து விட்டது.  நான் பழைய கலகக்கார சாருவிடமே நின்று கொண்டிருக்கிறேன், இன்னும் அதை விட்டே வெளியில் வரவில்லை.  இதுதான் அவர் சொல்ல நினைத்தது. 

இன்று யார் கையிலுமே இல்லாத கருப்புப் புத்தகம் அவரிடம் உள்ளது.  கருப்புப் புத்தகம் என்றால், கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற என் சிறுகதைத் தொகுப்பு அது.  அதிலிருந்து அவர் வரிவரியாக ஃபோனில் ஒப்பிக்கிறார். 

ராஜேஷ், வருத்தம் வேண்டாம்.  ஒரு misunderstanding.  நேற்று முழுதும் மனிதர் அழுதிருக்கிறார். 

எனக்கு ஏன் ஃபோன் செய்யவில்லை, ஒரு ஃபோன் செய்திருந்தால் அந்தப் பதிவை உடனடியாக நீக்கியிருப்பேனே என்றேன்.  பயமும் தயக்கமும் என்றார்.  பல முறை புத்தக விழாவில் தூரத்திலேயே நின்று பார்த்து விட்டுப் போய் விடுவேன்.

ராஜேஷ், உங்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது.

 நான் என்னுடைய மதிப்புரையில் எழுதியதுதான். 

குதிரை வால் அற்புதம் அல்ல, அது ஒரு அதிசயம்.